பள்ளிகளில் மாணவர்கள் கழிப்பறைத் தூய்மை செய்வது…

வணக்கம். தினமணியில் இந்த செய்தியை படித்தேன்

கழிவறையை மாணவர்களைக்கொண்டு தூய்மைசெய்யவைத்த ஆசிரியை பணியிடைநீக்கம் 

நான் படித்த காலத்தில் மிக சாதாரணமாக எங்கள் ஆசிரியர்கள் எங்களை அழைத்து கழிவறைகளை சுத்தம் செய்வதும், குப்பைகளை பெறுக்குவதும் அனுதினமும் நடக்கும்.எங்களுக்குள் குழுக்கள் பிரித்து விடப்படும். முறைவைத்து நாங்கள் குழுவாக வேலைசெய்தோம். இப்போது அந்த நாளை நினைக்கையிலும் ஒரு குதூகலம்தான்.

என் நண்பன் ராமகிருஷ்ணா மடத்தின் பள்ளியில் தான் தங்கி படித்தான். அவன் என்னுடன் பகிர்ந்துகொண்ட அவனது அனுபவங்கள் மிக சுவாரசியமானவை. முறை வைத்து சமைப்பதும், சுத்தம் செய்வதும், தோட்ட வேலை செய்வதும் என.

எனது கேள்வி என்னவென்றால் இது எப்படி தவறாகும்?

எங்கள் ஊரின் பள்ளிகளின் கழிவறைகளை பற்றி பல முறை என் வீட்டருகில் இருக்கும் மாணவ மாணவிகளை விசாரித்திருக்கிறேன் . பல மாணவிகள் மிக கமியாக தண்ணீர் குடித்து முடிந்த அளவு வீட்டிற்கு சென்றுதான் urine செல்வதாக சொல்கிறார்கள். two Toilet போவதை கற்பனைகூட செய்யமுடியாது என்று ஒரு மாணவி சொன்னால்.

இது நடக்க கூடாது என்று தான் அந்த தலைமை ஆசிரியர் இதை செய்திருக்கிறார். அரசும் ஆட்களை வைத்து சுத்தம் செய்யாது, சுத்தம் செய்கிறவர்களையும் இவர்கள் இடைநீக்கம் செய்வார்கள்.

இவர்கள் அந்த தலைமை ஆசிரியரை இடைநீக்கம் செய்து ஒரு ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்குகிறார்கள் என்பதே என் எண்ணம்.

அன்புடன்

பன்னீர் செல்வம் ஈஸ்வரன்

***

அன்புள்ள பன்னீர்

பழையகாலக் கல்விமுறையில் வகுப்பறைகள், கழிப்பறைகள் எல்லாவற்றையும் மாணவர்களே தூய்மைசெய்யவேண்டும். அது ஒரு பயிற்சி. என் ஆசிரியர் எனக்கு முறையாக கழிப்பறை தூய்மைசெய்யவேண்டிய விதத்தைச் சொல்லித் தந்தார்.

ஆனால் அன்றெல்லாம் வீட்டிலும் நாமே செய்துகொண்டிருந்தோம். இன்றைய உயர்நடுத்தர சூழலில் வேலைக்காரர்களே அதைச் செய்யவேண்டும். நான் கழிப்பறையை தூய்மை செய்வதை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என ஒருவர் ஒருமுறை டிவியில் சொல்வதை கேடேன். நடுத்தர குடும்பங்களில் அது அம்மாவின் பணி. பிள்ளைகள் எதையும் செய்வதில்லை. இழிவாகவும் நினைக்கின்றன. ஏனென்றால் நாம் பிள்ளைகளை இப்போதெல்லாம் சக்கரவர்த்திகளின் குழந்தைகள் மாதிரி வளர்க்கிறோம்.

ஆகவே கல்விநிலையங்களில் அவற்றைச் செய்யவைத்தால் குடும்பத்தவர் சீறி கொலை,செய்ய வருவார்கள். தனியார்ப் பள்ளிகளில் இன்று பெரும்பணம் கட்டி பள்ளிக்கு அனுப்புகிறார்கள். கல்வி அவர்கள் விலைகொடுத்து வாங்கும் பொருள்.அங்கே தூய்மைசெய்யும் வேலைக்கெல்லாம் இடமில்லை.

அந்த ஆசிரியை தேசியக் கழிப்பறை தினம் பற்றியெல்லாம் சொல்லி, ஒவ்வொருவரும் கழிப்பறைகளை தூய்மை செய்யவேண்டியதை வலியுறுத்தி, அத்தனை மாணவர்களையும் தூய்மைசெய்ய பயிற்றியிருந்தால், அவரும் முன்னின்று அதைச் செய்யவைத்திருந்தால், அது உயரிய செயல். ஆனால் நம் நடுத்தரவர்க்கத்தின் அற்பத்தனம் அதை ஏற்காது. ஆகவே அவர் தண்டிக்கப்படுகிறார்.

ஆனால் ஒன்றுண்டு, கழிப்பறைத் தூய்மை உட்பட அனைத்தும் அனைத்து மாணவர்களாலும் செய்யப்படவேண்டும். நான் படித்தபோதெல்லாம் அப்படித்தான். சாதிபார்த்து செய்யவைப்பது வன்கொடுமை. அதையும் இதையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதில்லை

ஜெ

***

முந்தைய கட்டுரைபின்தொடரும் நிழலின் குரல்- சு.கார்த்திகேயன்
அடுத்த கட்டுரைவெண்முரசு, கடிதங்கள்