அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
நான் கடந்த பல மாதங்களாக கீதை, வேதாந்தம், மதம் சம்பந்தமாக ஆர்வம் கொண்டு தங்கள் உரைகள், கட்டுரைகள் ஆகியவற்றை படித்து வருகிறேன்.
நான் வேதங்களை படிக்க எண்ணுகிறேன். எங்கிருந்து ஆரம்பிப்பது? சரியான பதிப்பு எங்கு கிடைக்கும்? உங்களால் வழி காட்ட முடியுமா?
வேதாந்தத்தில் வேதத்திற்கு அளிக்கப்படும் இடம் என்ன? வேதத்தை சேர்த்துக் கொள்கிறதா அல்லது நிராகரிக்கிறதா?
அன்புடன்
முருகேஷ்
*
அன்புள்ள முருகேஷ்,
வேதங்களை இருவகையில் கற்கலாம்.
வேதங்களை மரபாகக் கற்பவர்கள் அதை முறையாக ஓதும்பொருட்டு கற்கிறார்கள். அது பல ஆண்டுகள் கடுமையான பயிற்சி எடுக்கவேண்டிய ஒன்று. புரோகிதப் பணிக்கானது அந்தக் கல்வி. வேள்விச்சடங்குகளைச் செய்வதற்கு உரியது. பொருளுணர்ந்து கற்பதில்லை, அதற்கான தேவையும் இல்லை. அந்தவகை கல்வியில் வேதங்கள்மீதான முழுமையான பக்தியே தேவை. அதற்கு ஆன்மிகமாகவோ அறிவார்ந்தோ அழகியல்நோக்கிலேயோ வேதங்களை ஆராய்வது முற்றிலும் தடையாக அமையக்கூடியது
அந்தணர் அல்லாதோருக்கு வேதம் கற்பிக்கும் ஒருசில அமைப்புகளே இந்தியாவிலுள்ளன. தேடிச்செல்லவேண்டும். இன்றைய சூழலில் அதற்காக முழுமையாகவே வாழ்க்கையை அளிப்பவர்களுக்கே அந்த வாய்ப்பு உள்ளது.
வேதங்களை மெய்யியல் அறிதலின் பொருட்டு கற்கவேண்டும் என்றால் அதற்கு இணையத்திலேயே ஆங்கில நூல்கள் உள்ளன.
http://cakravartin.com/wordpress/wp-content/upoads/2008/08/vedas.pdf
என்னும் தளம் பிடிஎஃப் வடிவில் அளிக்கிறது. பலரும் அதை பரிந்துரைப்பதை கண்டிருக்கிறேன். ஆனால் இந்த தளமே பெரிதும் உதவியானது.
http://www.sanskritweb.net/rigveda/griffith-p.pdf
https://www.hinduwebsite.com/sacredscripts/rigintro.asp
வேதங்களின் மொழியாக்கத்துக்கு இன்றும் கிரிஃபித்தின் வடிவமே அழகானது, உதவியானது.
இணையத்தில் சில பழைய மொழியாக்கங்கள் உள்ளன
https://shaivam.org/tamil/sta-rigveda-samhita-ashtaka-first.pdf
https://eegarai.darkbb.com/t147975-topic
ம.ரா.ஜம்புநாதன் மொழியாக்கத்தில் அலைகள் வெளியீட்டகம் தமிழில் வெளியிட்டிருக்கும் வேதங்களின் மொழியாக்க நூல்களும் உதவியானவை.
ஆனால் வேதங்களை அப்படி நேரடியாகச் சென்று படிப்பதில் பயனில்லை. ஏனென்றால் அவை தொல்நூல்கள். அவற்றில் பெரும்பாலும் வேண்டுதல்களும் துதிகளுமே உள்ளன. அவற்றைப் பற்றிய ஆய்வுநூல்களையே முதலில் பயிலவேண்டும்.
கைலாசநாத குருக்கள் எழுதிய சம்ஸ்கிருத இலக்கிய அறிமுக நூல் உதவியான ஒரு நல்ல தொடக்கம் ( இணைய நூலகம்)
வேத மந்திரங்கள் ஸ்ரீராமகிருஷ்ண மடம் மயிலாப்பூர்
நற்றமிழில் நால்வேதம் (இணையநூலகம்)
ஆழி பெரிது: வேதப் பண்பாடு குறித்த உண்மையான தேடல் அரவிந்தன் நீலகண்டன்
ஒரு நல்ல துணைநூல். அதன்பின் வேதங்களை பயிலலாம். குறிப்பாக ரிக்வேதம் இறுதிப்பகுதிகள்
வேதாந்தத்திற்கு வேதங்களே மூலநூல்கள் என பிற்கால வேதாந்த முதலாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் கீதையின் கொள்கைப்படி வேதாந்தம் வேததரிசனத்திற்கு எதிரானது. வேதம் வழிபாட்டையும் சடங்குகளையும் முன்வைப்பது. உலகியல்தன்மை கொண்டது. வேதாந்தம் அடிப்படையில் அறிவார்ந்தது. அகவயமான தேடலை முன்வைப்பது.
தொடக்கத்திலேயே எந்த வகையான முன்முடிவுகளையும் உருவாக்கிக் கொள்ளவேண்டியதில்லை. படியுங்கள்
ஜெ