அறிவியக்கவாதியின் உடல்
அன்புள்ள ஆசிரியருக்கு,
உங்கள் குரலையே பிரதிசெய்கிறேன். நலம்தானே?கடந்த 2021ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து உங்கள் தளத்தை தினமும்படித்துவருகிறேன். எனது அன்றாடக் கடமைகளில் அது தவிர்க்கஇயலாததாகிவிட்டது.கிண்டிலில் கூட உங்களுடைய பெரிய பெரிய நாவல்களை மட்டும்தான் படிக்கிறேன்.இப்போது பின்தொடரும் நிழலின் குரல் முடியும் தருவாயில் இருக்கிறது. தினமும் வெண்முரசில் ஒரு அத்தியாயத்தையும் படிக்கத் தவறுவதில்லை. மதம் தொடர்பான உங்கள் கட்டுரைகள் என் நாத்திகப்பார்வையை அடியோடு பிடுங்கிப்போட்டது.
உங்களின் தன் மீட்சிக் கட்டுரைகள் எனது அன்றாடத்தை சமநிலையோடு பேண உதவியிருக்கிறது.மாற்றுத்திறனாளிகள் தொடர்பான அன்றாட செய்திகளைத் தொகுக்கும் நோக்கத்தோடு கடந்த நான்கு ஆண்டுகளாக savaalmurasu.com என்ற தளத்தை வடிவமைத்து அதில் எழுதிவருகிறேன்.அவ்வப்போதைய தொய்வுகளிலிருந்து அந்த தளத்தை நான் மீட்டுக்கொண்டது உங்களின் தளத்தைப் படித்துத்தான். அதனால்தான் அதையும் உங்கள் தளம் போலவே வடிவமைக்க முயன்றுள்ளேன்.
என் 38 வயதுவரை என்னுள் கிளர்ந்தெழுந்த பெரும்பாலான வினாக்களுக்கு நீங்கள் ஒரு தந்தையாய், ஆசிரியராய், வழிகாட்டியாய் விடையளித்துக்கொண்டே இருக்கிறீர்கள். இப்போது எனக்குள் நிறைய மாற்றங்கள்வந்தபடியே இருக்கின்றன. எனக்கு ஏதேனும் அகச் சிக்கல்கள் நேரும்போதெல்லாம் உங்கள் தளத்தில் உலவி விடை காண்கிறேன். ஐயா! எனக்கு ஒரு ஐயம். பொதுவாக பார்வையற்ற நாங்கள் பிறரின் பரிதாப உணர்ச்சி, இறக்க மொழிகளை வெறுக்கிறோம். ஆனால், அன்றாடத்தில் சாலை கடப்பது தொடங்கி, பல உதவிகளையும் பிறரிடம் பெற்றபடியே இருக்கிறோம். சமநோக்கு, சம பார்வை, no sympathy have empathy என்று பேசினாலும் அந்த empathy க்கு தொடக்கப்புள்ளி sympathy தானே. அதை ஏன் வெறுக்க வேண்டும்?
அப்படிநினைத்தாலும்,இரக்க மற்றும் பரிதாப மொழிகளை எதிர்கொள்கையில் கூசித்தான் போகிறோம். எப்படி எதிர்கொள்வது? இதை எப்படி வரையறைசெய்துகொள்வது?
நேரம் இருந்தால் விளக்குங்கள்.
ப. சரவணமணிகண்டன்
பட்டதாரி ஆசிரியர்
***
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
பூவிருந்தவல்லி.
***
அன்புள்ள சரவணன்,
நலம் என நினைக்கிறேன்.
உங்கள் தளம் பார்த்தேன். மிகச்சிறப்பாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். எழுத்து போல நம்மை தொகுத்துக்கொள்ளவும் நம்மை விடுதலை செய்யவும் உதவும் பிறிதொன்றில்லை.
நீங்கள் கேட்ட கேள்வி உண்மையில் மிக எளிமையான நம் சமூக மனநிலை ஒன்றின் சான்று அன்றி வேறல்ல. இங்கே எளிய மனிதர்கள் இன்னொருவருடன் ஒப்பிட்டு தன்னை மேம்பட்டவனாக எண்ணிக்கொண்டு மகிழ்ச்சியடைய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்கென எந்த அடையாளமும் இல்லாதவர்கள். தங்களைத் தாங்களே எண்ணி பெருமிதம் கொள்ளும் எதையும் செய்யாதவர்கள். இப்படித்தான் அவர்கள் மகிழ முடியும்.
ஆனால் இது உங்களுக்கு அல்ல. அனைவருக்குமே நிகழ்வதுதான். வேலை என்ன என்பார்கள். நீங்கள் வேலையைச் சொன்னதும் தன் வேலையுடன் ஒப்பிட்டு உங்கள் வேலை ஒரு படி குறைவானது என்றால் மகிழ்வார்கள். குழந்தைகள் உண்டா என்பார்கள். குழந்தை இல்லை என்றால் ஆழ்ந்த அனுதாபத்துடன் ஆலோசனைகள் சொல்வதுபோல மகிழ்ச்சியில் திளைப்பார்கள். குழந்தைகளின் மதிப்பெண், வேலை எல்லாமே அவர்கள் இதன்பொருட்டு கேட்டறிவதுதான்.
அவர்கள் நம் வாழ்க்கையில் எங்கே ஊடே புகுகிறார்கள்? அவர்கள் எளியவர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் வென்றவர். நீங்களே நிறைவுறும் செயல்களைச் செய்பவர். அறிவியக்கவாதி. உங்கள் பார்வையில் அவர்கள் அனுதாபத்துடன் பரிவுடன் பார்க்கப்படவேண்டியவர்கள். பாமரர்களை பொருட்படுத்தக்கூடாது. ஆனால் அவர்கள்மேல் விலக்கமும் எரிச்சலும் வரவும்கூடாது. அவர்கள் அறிவியக்கத்தில் தலையிட்டால் அவர்களை அடையாளம் கண்டு அகற்றுவது வேறு. ஆனால் அன்றாடத்தில் அவர்கள் நம் முன் வந்துகொண்டேதான் இருக்கிறார்கள். அவர்களை நாம் மென்மையான, நட்பான புன்னகையுடன் கடந்துசெல்லவேண்டியதுதான். நான் எழுதுவதும் சிந்திப்பதும் உனக்கும், உன் சந்ததிகளுக்கும்தான் என சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்.
அறிவியக்கவாதிக்கு எவருடைய அனுதாபமும் தேவையில்லை. ஏற்கனவே அவன் பிறருக்கு இல்லாத பல கொடைகளை பெற்றுக்கொண்டு பலபடிகள் மேலே இருப்பவன். அவன் அளிக்கவேண்டியவனே ஒழிய பெற்றுக்கொள்ளவேண்டியவன் அல்ல.
அப்படியென்றால் உங்களுக்குக் கிடைக்கும் உதவிகள்? அவை மனிதன் மனிதனுக்கு இயல்பாகச் செய்யவேண்டியவை. அப்படி ஏதேனும் ஒரு உதவியைப் பெறாமல் எவருடைய ஒருநாள்கூட கடந்துசெல்வதில்லை. ஒரு தகவல் கேட்கிறோம், ஒருவரிடம் அறிமுகம் கேட்கிறோம். ஒரு நாளில் எத்தனை உதவிகள். பார்வையில்லாமையால் நீங்கள் சில மேலதிக உதவிகளைக் கேட்கலாம். அவை இயல்பாக உங்களுக்குச் செய்யப்படவேண்டும். அவற்றை கோர மனிதனாக, அறிவியக்கவாதியாக உங்களுக்கு உரிமை உண்டு. அவற்றை நானும் ஒவ்வொருநாளும் எவரிடமிருந்தேனும் பெற்றுக்கொண்டேதான் இருக்கிறேன். நடந்துசெல்கையில் வண்டியை நிறுத்தி ஏறிக்கொள்கிறீர்களா என்பவர் என்னிடம் இரக்கமோ பரிவோ காட்டவில்லை. இயல்பாக ஓர் உதவியைச் செய்கிறார் அவ்வளவுதான்.
அவற்றை அளிப்பவர் கருணையால் அவற்றைச் செய்கிறார் என அவரே எண்ணிக்கொண்டால் அது அவருடைய பிரச்சினை. நீங்கள் அதன்பொருட்டு நன்றி காட்டவேண்டியதில்லை. இயல்பாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
ஜெ
***