ஜடம், கடிதங்கள்

சடம் [சிறுகதை] ஜெயமோகன்

அன்புள்ள ஜெ

சடம் கதை வாசித்தேன். சமீபத்தில் எழுதிய இந்தக்கதைகள் எல்லாம் புனைவுக் களியாட்டு கதைகளின் அதே மனநிலைகளின் நீட்சிகள். எல்லாவற்றிலும் கண்டடைதலின் பரவசம் உள்ளது. நேர்மறையாக, அல்லது வேறெவ்வகையிலோ. மிகக்குறைவாகத்தான் துக்கமும் கசப்பும் உள்ள கதைகள். ஆனால் அந்தக்கதைகளில்கூட இறுதியில் ஒரு நிறைவும் நீட்சியும் உள்ளது. பேசாதவர்கள் என்னும் கதைபோல. இக்கதைகள் நீங்கள் இன்று இருக்கும் நிலையை காட்டுகின்றன. வழக்கமான தமிழ்க்கதைகள் அளிக்கும் இருட்டும் சலிப்பும் இல்லாத கதைகள்.

இவற்றையும் சேர்த்து நூலாக்கவேண்டும்

மகேந்திரன்

***

அன்புள்ள ஜெயமோகன்,

தங்களது “சடம்” கதை படித்தேன்.

தத்துவ விளக்கமாகவே வாசகர்கள் கதையை அணுகும்போது எனக்கு இது மீண்டும் காட்டை எழுதுவது போல் உள்ளது.

பேச்சிப்பாறை அணைக்கட்டு சமீபத்திலிருந்து கதை நகர்ந்து வடக்கு பகுதிலுள்ள காட்டினுள்  எல்லாம் நிகழ்கிறது.

காட்டை எழுதும்போது தங்கள் விரல்கள் காடு எனும் கவிதை மலர்கிறது.இப்போது பாறையில் உராயும் சிரட்டை சத்தம் காட்டிலும் கிராமங்களிலும் ஒலிக்க துவங்கி விட்டது, குரங்கு கூச்சல்.இப்போது கரடியும் புலியும் கதை களத்தில் உண்மையில் நடமாட துவங்கி விட்டது.

அந்த போலீஸ்காரர்  சுடலை பிள்ளையின் மனம் வக்கிரமானது.இதுபோன்ற போலீஸ்காரர்கள் ஏராளமாக உண்டு.வாச்சாத்தி போன்ற எத்தனையோ இடங்களில் இவர்கள் கட்டுக்கடங்காத கொடூரங்கள் செய்தவர்கள் தானே.இந்த பரம்பரையை பார்த்தவருக்கு காடு என்றால் கேட்கவா வேண்டும்.?

படிக்கவே நெருடல்கள் தரும் நிகழ்வுகள் இன்றும் காணகிடைப்பவை.இதை ஐபிசி கொண்டு அளவிடுவதற்கு பதில்  கதையாக பார்ப்பதே சிறந்தது.

கதை மொழியும் உரையாடல் மொழியும் அழகே.கதை நிகழுமிடம்  எப்போது கண்முன்னே உள்ளதால் அந்த மொழியும் ரீங்காரமிடுகிறது.பேச்சிப்பாறைக்கு மேலே கோதையாறு காட்டில் கண்ட ஜடம் வெறும் ஜடம் அல்ல.

“சுற்றி நின்ற மரங்கள் எல்லாம் விரைப்படைந்தன.பாறைப்பரப்புகள் சருமம் போல் உயிர் பெற்றன.இலைகள் கண்ணிமைகள் என ஆயின.

சட்டென்று ஒரு முனகலோசையுடன் அவள் உடல் அசைவுகொண்டது.கைகள் அவரை வளைத்து இறுக்கிக் கொண்டன”

என்று கதை முடியும்போது காட்டில் நிகழ்த்திய அதர்மத்திற்கு காடு ஜடம் வழியாக தண்டனை வழங்குகிறது என்று  வாசிக்கும்போது தான் மனம் அமைதி கொள்கிறது.

மலையாள இலக்கிய உலகின் “இலக்கிய வாரபலன்” தொடர்ச்சியாக எழுதிவந்த எம்.கிருஷ்ணன் நாயர் “ஒரு இலக்கியத்தை படித்தபின்பு படித்தவை  இதயத்தை கிளற  செய்யவேண்டும்,அதுவே சிறந்தது”என அடிக்கடி எழுதிவந்தார்.சடம் அந்த வகையிலான கதை.

கதைபற்றிய கடிதங்களும் அதை நிரூபிக்கிறது.

நன்றி.

அன்புடன்

பொன்மனை வல்சகுமார்

முந்தைய கட்டுரைLast Machine
அடுத்த கட்டுரைகோல்டிகா- தங்கபாண்டியன்