அன்புள்ள ஆசிரியருக்கு,
உங்கள் தளத்தில் வரும் அயோத்திதாசர் பற்றிய விவாதங்களை பற்றி தொடர்ந்து படித்து வருகின்றேன். கற்றுக் கொள்ள பெரும் உதவியாக உள்ளது.
நண்பர்களால் இந்து மதம் இந்திய மண்ணோடு தொடர்பள்ளதை பற்றி பல கேள்விகள் விதவிதமான வடிவில் கேட்கப்பட்டும் பதிலளிக்கப்படும் வருகிறது.இந்து மதம் என்பதை ஹிஸ்டாரிக்கல் டைம் லைன் என்ற வரலாற்று காலக் கோட்டில் ஏதாவது ஓரிடத்தில் அமைப்பது பற்றி பல நண்பர்கள் பல கோணத்தில் கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்த கேள்விகள் சில நேரம் இந்து மதம் என்பது ஒரு டைனோசர் எலும்புக் கூடு போல கருதி அதனை கால ஆராய்ச்சி செய்கிறன. இந்து மெய்யியல் பார்வையில் இது போன்ற கால ஆராய்ச்சியின் இடம் என்ன? இந்து மெய்யியல் தரிசனங்கள் காலத்தினை எவ்வாறு அணுகுகின்றன?
இந்து மெய்யியல் காலம் சார்ந்த வரலாற்று ஆராய்ச்சிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது? சர்வதேச அளவில் பொதுவாக கால ஆய்வுகள் என்னென்ன நோக்கங்களுக்காக உருவாக்கப்படுகின்றன? அவை உருவாக்கும் தாக்கங்கள் என்னென்ன? சர்வதேச அளவில் உள்ள பல நாகரீகங்களில் எவை எவை கால ஆய்வு செய்வதன் வழியே மெய்யியல் பக்குவத்தினை வளர்த்து மனித மீட்சிக்கு உதவியுள்ளதுன?
அன்புடன்
நிர்மல்.
பொதுவாக கால ஆராய்ச்சி என்பது ஒரு தலைப்பை வரலாற்று ரீதியாக புரிந்துகொள்ள அவசியமானது. வரலாறென்பது என்ன என்றால் அது ’காலவரிசைப் படுத்தப்பட்ட கடந்தகாலம்’ என்றுதான் குறைந்தபட்ச வரையறை கூற முடியும். கால அடையாளப்படுத்தப்படாத ஒன்றுக்கு வரலாறு இல்லை என்றுதான் பொருள்.
ஒன்றை உட்பொருள் சார்ந்து குணவயமாக புரிந்துகொள்வதற்கு காலவரையறைப் படுத்துவது இன்றியமையாததா என்ற கேள்வி எழுகிறது. பெரும்பாலான தருணங்களில் அவ்வாறு தேவையில்லை என்ற பதிலே நித்ய சைதன்ய யதி போன்ற மெய்யியலாளர்களால் சொல்லப்படுகிறது.
இந்துமதத்தை ஆன்மிகமாக அணுகுபவர்களுக்கு அதிலுள்ள தத்துவக் கருத்துக்களும் குறியீடுகளும் மட்டுமே போதுமானவை. அவை காலம் கடந்தவை. இந்தக் காலத்திற்கு எந்த வகையில் அவை பொருந்துகின்றன, எவ்வாறு பொருள் கொள்கின்றன என்பது மட்டும்தான் முக்கியமே ஒழிய அவற்றின் தொன்மையோ காலப்பரிணாமமோ எந்த வகையிலும் ஒரு ஆன்மீகப்பயணிக்கு அல்லது பக்தனுக்கு முக்கியமானதல்ல. அவன் கால அடுக்கைப்பற்றி கவலைகொள்ள வேண்டிய தேவையும் இல்லை.
இந்தியாவில் உள்ள பலகோடி இந்துக்கள் எவரும் இந்துக்கள் எவரும் இந்து மதத்தின் காலப்பரிணாமம் பற்றி பிரக்ஞை உள்ளவர்களோ அதன் வரலாற்றுச் சித்திரத்தை உணர்ந்தவர்களோ அல்ல. மெய்யியல் சார்ந்த பயிற்சிகளில் இருப்பவர்கள், பக்தர்கள் வரலாற்று விவாதங்களில் ஈடுபடலாகாது. அவை அவர்களின் அகத்தைச் சிதைத்து எதிர்மறை உளநிலைகளை உருவாக்கக் கூடும்.
அதைப்போலத்தான் இலக்கியமும் என்றால் அது சற்று மிகையாகத் தோன்றும் எனினும் அது உண்மை. இலக்கியத்தை உணர்வதற்கு அது உருவாக்கும் வரலாற்றுச் சித்திரம் முக்கியமானது அல்ல. இலக்கியம் மொழியில் புனைவாகப் பதிவு செய்யப்பட்ட வரலாறு என்னும் பார்வை ஒரு பக்கத்தில் இருந்தாலும் கூட ஓர் இலக்கியப்படைப்பு காலங்கடந்து இன்று வந்து எவ்வண்ணம் நிலைகொள்கிறது என்பதே இலக்கிய வாசகனுக்கு முக்கியமானது.
உதாரணமாக, சங்கப்பாடல்களை இன்று புதுக்கவிதையை எப்படிப் படிப்போமோ அப்படிப்படிக்கவேண்டும் என்பதுதான் ஒரு இலக்கியவிமர்சகனாக நான் என்றும் சொல்லி வருவது. அத்தகைய வாசிப்புக்கு சங்கப்பாடல்கள் எந்த காலகட்டத்தை சேர்ந்தவை என்ற வினாவிற்கே பொருளில்லை.
அழகுணர்வுக்கு வரலாறு மேலதிகமாக எதுவும் அளிப்பதில்லை, ஆன்மிகத்திற்கும் பக்திக்கும் போலவே. அப்படியானால் வரலாறுகளின் பயன் என்ன?
பொருள்கொள்ளல் என்னும் செயல்பாடு வழியாகவே நாம் வரலாற்றையும் பண்பாட்டையும் உயிருள்ளவையாக, செயல்படுபவையாக ஆக்குகிறோம். உதாரணமாக, ஒரு நாட்டார்த் தெய்வத்தை பார்க்கிறோம். அதை நாம் எவ்வகையிலும் அறியாதபோது அது ஒரு சிற்பம் மட்டுமே. அதை பொருள்கொள்ளத் தொடங்கும்போது அது ஒரு பண்பாட்டுச் சின்னம் என ஆகி நம்முள் வளர்கிறது. அதை சாஸ்தா என அறிந்ததுமே நம்முள் அது வளர்கிறது. இந்த ‘பொருள்கொள்ளுதல் என்னும் செயல்பாடு’ நம்முள் தொடர்ச்சியாக, நம்மையறியாமலேயே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அச்செயல்பாட்டை கூர்மையாக, தெளிவாக அமைத்துக்கொள்ள வரலாற்று அறிதல் உதவுகிறது.
பொருள்கொள்ளுதல் இரண்டுவகை. அகவயமான பொருள்கொள்ளுதல் புறவயமாக பொருள் கொள்ளுதல். புறவயமாக பொருள்கொள்வதற்கே வரலாற்றாய்வு தேவைப்படுகிறது. அகவயமாகப் பொருள்கொள்வதே உண்மையில் முக்கியமானது என நான் நினைக்கிறேன். மேலைநாட்டு ஆய்வாளர்கள் அகவயப் பொருள்கொள்ளுதலை முழுமையாகவே நிராகரித்து முழுக்கமுழுக்க புறவயமாகப் பொருள்கொள்ள முயல்பவர்கள். அவர்களுக்கு பண்பாடுகள் என்பவை ஆய்படுபொருட்கள் மட்டுமே. சான்றுகளை அளிக்கும் களம் மட்டுமே. நமக்கு நம் பண்பாடு அப்படி அல்ல. அது நம் அகம். ஆகவே நம்முடைய அணுகுமுறை வேறு.
ஆய்வாளர்கள் பறவையின் பாறைப்படிவை ஆய்வுசெய்கிறார்கள். மெய்யியலாளர்கள் பறக்கும் பறவையில் மட்டுமே ஆர்வம் கொண்டவர்கள். பாறைப்படிவில் உள்ள பறவையையும் அவர்கள் பறக்க வைக்க முயல்கிறார்கள். நான் இரண்டுக்கும் நடுவே ஒரு வழியை தேர்வுசெய்கிறேன். ஏனென்றால் நான் ஆன்மிகவாதி, கூடவே அறிவியக்கவாதி. என்னால் முடியும் என்றால் இந்த அறிவியக்க களத்தை உதறிவிடுவேன்.
சாஸ்தா என நாமறியும் அத்தெய்வத்தை அதன்பெயர், அதன் சிலைவடிவத்தின் தனித்தன்மை, அதைச்சார்ந்த தொன்மங்கள் மற்றும் நம்பிக்கைகள் வழியாக அறிவது அகவய அணுகுமுறை. அது நம் தியானம் வழியாக அகத்தே வளர்த்துக் கொள்வது. அதற்கு முடிவே இல்லை. சாஸ்தா செண்டாயுதம் ஏந்தியவர். முழுக்க மலராத மொட்டு போன்றது அந்த ஆயுதம். ஓர் ஆயுதமே மலர்மொக்கு என இருப்பது நம் அகத்தை திகைக்கச் செய்து மேலெழசெய்யலாம்.
சாஸ்தா யானைமேல் அல்லது புலிமேல் அமர்ந்திருக்கிறார். யானை என்பது நீர், புலி என்பது நெருப்பு. அவர் அரையோகநிலை அல்லது முழு யோகநிலைகளில் அமர்ந்திருக்கிறார். அரையோகநிலையில் இருப்பவர் இன்னும் செயலில் இருந்து முழுக்க விடுபடாதவர். முழுயோகநிலையில் இருப்பவர் செயலில் இருந்து முற்றும் அகன்ற பெருநிலை கொண்டவர். இவ்வாறு நம்முள் சாஸ்தா பெருகுவதே அச்சிலை உருவாக்கப்பட்டதன் மெய்யான நோக்கம்.
ஒருகை ஓசை என இதையே சொல்கிறார்கள். சிலை நமக்கு அளிக்கும் திகைப்பு ஒரு கை. நம்முள் இருந்து இன்னொரு அறியாத கை சென்று அதை முட்டி ஓசையாகிறது. சிலைகள் நேரடியாகவே கனவுக்குள் எழக்கூடியவை, முடிவிலாது வளரக்கூடியவை. அவை அளிக்கும் அர்த்தவிரிவு நாம் தர்க்கபூர்வமாக அறிவதைவிட மிகமிக ஆழமானது. அன்றாடம் சாஸ்தாவை நேரில் கண்டு வழிபடும் ஒரு பக்தன் ஒரு தொல்லியலாளர் அறிந்ததை விட சாஸ்தாவை உள்ளூர அறிந்திருப்பான். ஒருவேளை அவனுக்கே அது தெரியாமல் இருக்கும்.
ஆனால் வரலாற்று ரீதியாக மதத்தையும் பண்பாட்டையும் இலக்கியத்தையும் புரிந்துகொள்வது மேலதிகமான சில தெளிவுகளை அளிக்கிறது. ஒரு சிலையை அதன் பீடத்துடன் அறிந்துகொள்வது போல. வரலாற்று காலவரிசை, வரலாற்றுப் பரிணாமம் ஒவ்வொன்றையும் மிக விரிவான சமூக சித்திரத்தில் பொருத்துகிறது. அதற்கிணையான வேறு வரலாற்று களங்களுக்குள் இணைக்கிறது. இவை இரண்டும் கூடுதலான அர்த்தங்களை அளித்துக்கொண்டிருக்கின்றன.
இவை எவருக்கு தேவை? விஷ்ணுபுரம் நாவலில் இப்பிரச்சினை எழும். (இத்தகைய ஆன்மிகப்பிரச்சினைகள் எல்லாமே அதில் பேசப்பட்டிருக்கும்) ‘உனக்கு கேள்விகள் எழுந்துவிட்டது, இனி கேள்வியற்ற நிலை என்பது இல்லை. ஆகவே கேள்விகளுக்கான சரியான பதிலை தேடிச்செல். அதுவே உன் வழி. அதிலுள்ள சவால்களால் நீ பின்னால் திரும்பி வரமுடியாது’ என பிங்கலனிடம் அவன் குரு சொல்வார். வினா எழுவது ஓர் அறிவுள்ளத்தின் இயல்பு. வரலாற்றுவினா மெய்யாகவே எழுந்தால் வரலாற்றாய்வே அந்த வினாவுக்கு பதிலை அளிக்கும்.
சங்க இலக்கியத்தை இன்று வாழ்க்கைச் சித்திரங்களாகப் படிக்கலாம். ஐவகை நிலங்களில் நிகழும் உருவகத்தன்மை கொண்ட வாழ்க்கைக் கணங்களினூடாக என்றென்றைக்கும் பொருள்படும் மானுட உணர்வுகளையும் தரிசனங்களையும் முன்வைப்பவை சங்கப்பாடல்கள். இன்று அவற்றை கவிதையென உணர்வதற்கு நமக்கு இன்றைய வாழ்க்கையே போதுமானது. ஆனால் அவற்றை கால வரலாற்றில் பொருத்தினால் அவை கொள்ளும் அர்த்தவிரிவாக்கம் குறிப்பிடத்தகுந்தது.
சங்கப்பாடல்கள் பொமு இரண்டாம் நூற்றாண்டு முதல் பொயு இரண்டாம் நூற்றாண்டு வரையிலான நானூறு ஆண்டுகளுக்குள் எழுதப்பட்டவையாக இருக்கலாம் என்பது பொதுவான வரலாற்று ஊகம். சங்கப்பாடல்களில் மௌரியர் குறிப்பிடப்படுவது, சங்கப்பாடல்களில் உள்ள அரசர்களை குறிக்கும் வெவ்வேறு கல்வெட்டுகள் தமிழகத்தில் கிடைத்திருப்பது ஆகியவற்றை ஒட்டி இந்தக் கணிப்பு செய்யப்படுகிறது.
இவ்வாறு கணித்த உடனேயே அன்றைய சமூக சித்திரம் என்ன என்கிற கேள்வியை நோக்கி நம் உள்ளம் செல்கிறது. அன்று தமிழகம் மூவேந்தர்களால் ஆளப்பட்டது. சங்கம் முதிர்ந்த காலகட்டத்தில் அம்மூவேந்தர்களும் பேரரசர்களாக உருமாறியிருக்கின்றனர். சங்க காலத்தின் தொடக்கத்தில் அவர்கள் இங்கிருந்த பலநூறு சிற்றரசர்களுடன் தொடர் போரில் இருந்தனர். பேரரசுகள் படிப்படியாக உருவாகி வந்த ஒரு காலகட்டத்தில் எழுதப்பட்டவை சங்க இலக்கியங்கள். அப்போதே தமிழகத்தில் மாபெரும் நகரங்கள் உருவாகிவிட்டிருக்கின்றன. வணிகம் உருவாகிவிட்டிருந்தது. சுங்க வரி கொள்வதைப்பற்றி சங்க கால கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கடல்வணிகம் பற்றிய குறிப்புகள் உள்ளன.
ஆகவே சங்க கால அகத்துறைப் பாடல்கள் காட்டும் நாட்டுப்புறப் பழங்குடித்தன்மை உள்ள வாழ்க்கை என்பது அதற்கும் பல ஆண்டுகளுக்கும் முன்பு இங்கே இருந்து, பின்னர் அவர்களின் பண்பாட்டு நினைவுகளிலிருந்து உருவகத்தன்மையோடு புனைவுக்குள் உருவாக்கப்பபடுவதே ஒழிய நேரடி வாழ்க்கைச் சித்திரம் அல்ல என்கிற எண்ணம் நமக்கு கிடைக்கிறது. இச்சித்திரம் உருவானதுமே நாம் சங்க அகப்பாடல்களை பொருள்கொள்ளும் முறை மாறிவிடுகிறது.
அன்றிருந்தது உருவாகிவரும் நகர்ப்பண்பாடு. சமீபகாலம் வரைக்கும் சங்க இலக்கியத்தில் இருக்கும் அந்த நகரச் சித்திரங்கள் எல்லாம் பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பட்டவை மட்டும் தான் என்றும், அன்றிருந்த நகரங்கள் எதுவுமே தோண்டி எடுக்கப்படவில்லை என்றும், தொல்லியல் சான்றுகள் ஏதும் இல்லாத நிலையில் சங்ககாலத்தில் நகரங்கள் இருந்தன என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆய்வாளர்கள் கூறிவந்தார்கள். ஆனால் கீழடிக்குப்பிறகு அந்நிலை மாறிவிட்டது. கீழடி சங்ககாலத்தைச் சேர்ந்த ஒரு சிறு நகரம். இன்னும் இதைப்போன்ற நகரங்கள் தமிழகத்தில் இருக்க வாய்ப்பிருக்கிறது.
இந்திய வரலாற்றுக் காலத்தில் சங்க காலத்தை பொருத்தும்போது அது மைய இந்தியாவில் சதகர்ணிகளின் அரசு இருந்த காலகட்டத்தை சேர்ந்தது. நாகனிகா அரசியின் கல்வெட்டு காட்டும் சதகர்ணிகள் மத்திய இந்தியாவை கிழக்குமுதல் மேற்குவரை முழுமையாகவே ஆண்ட மாபெரும் பேரரசுகள். அதற்கும் வடக்கே மௌரியப்பேரரசு இருந்தது. புத்த மதம் சமணமதமும் தோன்றி வளர்ந்து கொண்டிருந்த காலத்தை சேர்ந்தது சங்க இலக்கியம்.
அம்மதங்களின் செல்வாக்கு வணிகத்தினூடாக இங்கு வந்திருக்கலாம். ஏனெனில் சங்க காலம் என்று நாம் வகுக்கக்கூடிய காலகட்டத்தில் இந்தியாவில் மிகத் தொன்மையான வணிக வழிகள் உருவாகிவிட்டிருந்ததை நானே கட் கல்வெட்டுகள் போன்றவை காட்டுகின்றன. ஆகவே சங்க காலத்தில் புத்த சமண வைதிக செல்வாக்குகள் இங்கு இருந்திருக்கலாம்.
இவ்வாறு நாம் சங்க காலத்தின் சமூக உள்ளடக்கம், அரசியல் உள்ளடக்கம் ஆகியவற்றை மிக விரிவாக விரித்துக்கொள்ள அந்த வரலாற்றுப்புரிதல் உதவியாக இருக்கிறது. அதை ஒரு வரலாற்றுக்காலத்தில் பொருத்திய உடனேயே அது மேலும் அர்த்தத்தை கொடுக்க ஆரம்பிக்கிறது. அந்த கூடுதல் அர்த்தம் சங்கப்பாடல்களின் கவித்துவத்தை மேலெடுக்கக்கூடும்.
இவ்வாறுதான் இந்து மதத்தை பற்றிய காலக்கணிப்புகளும் .இந்து மதத்தை நூல்களைகொண்டும் தொல்லியல் சான்றுகளைக் கொண்டும் வரலாற்று விவரிப்பு செய்யவேண்டியிருக்கிறது. கிறிஸ்துவுக்கு முன்பு இருநூறு ஆண்டுகள் தொன்மை கொண்ட ஹிரோடிடஸ் கருடத்தூண் பிராமி கல்வெட்டுடன் இங்கே கிடைக்கிறது. அது இங்கே வாசுதேவ (விஷ்ணு) வழிபாடு மிக வேரூன்றி இருப்பதை காட்டுகிறது. அதற்கு எப்படியும் முந்நூறு முன்னூறு ஆண்டுகள் முன்பே வைணவம் இங்கே ஒரு வலிமையான மதமாக இருந்தது என்று சொல்ல முடியும்.
அதற்கு முன்பு செல்லும்போது மகாபாரத காலத்தைச் சென்றடைகிறோம். மகாபாரத காலத்தைச் சேர்ந்த சிறு தொல்லியல் தடயங்கள் தான் இங்கே கிடைக்கின்றன. ஆனால் மகாபாரதத்தில் உள்ள குறிப்புகளை வைத்துப்பார்த்தால் அது இரும்பு பயன்படுத்தப்பட்ட காலம். குறிப்பாக உறையடுப்புகள் வைக்கப்பட்டு இரும்பு உருக்கி பயன்படுத்தப்பட்ட காலம். ஆகவே மூவாயிரம் ஆண்டுகள் தொன்மையான. காலகட்டத்தில் நிகழ்ந்ததாக இருக்கலாம்.
இவ்வாறு அதை ஒரு காலத்தில் பொருத்தும்போது அதன் அர்த்த விரிவு எவ்வண்ணம் நிகழ்கிறது? பொதுயுகத்திற்குமுன் மேலும் ஆயிரம் ஆண்டு தொன்மை கொண்டது மகாபாரத நிகழ்வு என்றால் அக்காலத்தில் சீனப்பண்பாடு என்னவாக இருந்தது? ஷாங்(Shang) ஷௌ (Zhou) அரசவம்சங்கள் உருவாகி சீனா இந்தியப்பெருநிலத்தில் எக்காலத்திலும் உருவானவற்றை விட பலமடங்கு பெரிய பேரரசுகளாக ஒருங்கிணைந்து வணிகம், பண்பாடு ஆகியவற்றில் மிகமிக முன்னேறியிருந்தது. அதற்கும் மகாபாரத கால நாடுகளுக்குமான உறவென்ன?
இந்தியா உட்பட அப்பகுதிகளில் வணிகப்போக்குவரத்து எப்படி இருந்தது? துறைமுகங்கள் என்னென்ன? அதற்கு முந்திய காலகட்டத்தை சேர்ந்தவை ஹரப்பா நாகரீகங்கள். மேலும் இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மை கொண்டவை அவை.. அந்நாகரிகத்தின் நீட்சியோ தொடர்ச்சியோ எப்படி மகாபாரதத்தில் உள்ளது?
இவ்வாறு இந்துமதத்தின் குறியீடுகள் தொன்மக்கதைகள் ஆகியவற்றுக்கு நாம் அளிக்கும் அர்த்தங்கள் பெருகத் தொடங்குகின்றன. இந்த வரலாற்றுப்புரிதல் ஆன்மிகமாகவோ அழகுணர்வு சார்ந்தோ கூட நமக்கு கூடுதல் பொருள் அளிப்பதுதான். ஆனால் அது அறிவின் பாதை. உள்ளுணர்வை, உணர்ச்சியை நம்பிச்செல்பவர்கள் அதை பொருட்படுத்த வேண்டியதில்லை. அவர்களின் பயணத்துக்கு இந்த வரலாற்றுணர்வு தடையென ஆகுமென்றால் அவர்கள் தவிர்ப்பதே நல்லது.
இங்கே எழும் சிக்கல் என்னவென்றால் வரலாற்றின் மீதான சார்புநிலைப் பார்வைதான். இவர்கள் வரலாற்றை முறையாக அறிவதில்லை, அதை தவிர்க்கும் அகவயப் பார்வையும் அவர்களிடம் இல்லை. அதை வசதிப்படி திரிக்கிறார்கள். அதை தமிழ்த் தொன்மையோ, வேதகாலம் அல்லது மகாபாரதகாலத்தின் தொன்மையையோ உணர்வுநிலை ஒன்றே. இந்து பக்தர்களும் சரி, தமிழுணர்வாளர்களும் சரி மிகையுணர்ச்சியுடன், வெறும் பற்று வழியாக வரலாற்றை புரிந்து கொள்கிறார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை அவர்களின் வரலாறு ஒரு தொன்மகாலத்தைச் சேர்ந்தது. காலமிறந்தது. அந்தக் காலமிறந்த தன்மையைத்தான் அவர்கள் புராணம் என்றோ தொல்காலம் என்றோ சொல்கிறார்கள். கல்தோன்றி மண் தோன்றாக் காலம் என்கிறர்கள். வேதங்கள் ஔபௌருஷேயங்கள் ,மனிதர்களால் சொல்லப்படாதவை என்று சொல்லும்போது காலமின்மையைத்தான் உத்தேசிக்கிறார்கள்
அந்த காலமின்மையை மிக நெடுங்காலம் என மாற்றிக்கொள்வதுதான் இவர்களின் வரலாற்றாய்வின் நோக்கம். சமணர்கள் லட்சக்கணக்கான ஆண்டுகளை தங்கள் தீர்த்தங்கரர்களின் வாழ்க்கைக்கு அளிக்கிறார்கள். இந்துக்கள் யுகக்கணக்குகளை அளிக்கிறார்கள்.தமிழுணர்வாளர்கள் தமிழிலக்கியங்களின் காலங்களை டைனோசர்கள் வாழ்ந்த காலத்துக்கு, மனிதகுலம் தோன்றுவதற்கு முந்தைய ஜுராசிக் காலங்களுக்கு கொண்டு செல்கிறார்கள். பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துறை போன்றவர்கள் கண்டத்திட்டுகள் விரிசலிட்ட காலத்திற்கு, அதாவது பலகோடி ஆண்டுகளுக்கு முன் தமிழர்களின் தொன்மையைக்கொண்டு செல்கிறார்கள். இந்த வகையான பற்றுகொண்ட பார்வைக்கு வரலாறு முற்றிலும் எதிரானது.
மனிதர்களுக்கும் முன்னால் ,டைனோசர்களும் உருவாவதற்கு முந்தின காலத்தில், தமிழ் இருந்தது என்றும் நம்பும் ஒருவரிடம் சங்க காலத்தின் காலம் மிஞ்சிப்போனால் பொமு இரண்டாம் நூற்றாண்டாகத்தான் இருக்க முடியும் என்று நாம் சொன்னால் அதிர்ச்சி அடைகிறார்.. இப்போது கூட கீழடியைப் பற்றிய விவாதங்களில் கூட இந்த வேடிக்கை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கீழடி அங்கு கிடைக்கும் சான்றுகளை அப்படியே எடுத்துக்கொண்டாலும் கூட, அதை ஆதரிப்பவர்கள் கூறுவதை ஐயமின்றி ஏற்றுக்கொண்டால் கூ,ட பொதுயுகத்துக்கு முன்னால் இருநூறாண்டுகளுக்குள் தொன்மை கொண்டது, சங்க காலத்தைச் சேர்ந்தது,
அதற்கு இணையான அதே காலத்தில் தான் இந்தியாவில் சதகர்ணிகள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய கல்வெட்டுகள் கிடைக்கின்றன. நானேகட போன்ற வழிகள் இருக்கின்றன. கார்லே குகைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. காரவேலரின் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கிறது.. ஹாத்திக்கும்பா குகைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன.. அதற்கு முன்னால் முன்னால் என இந்திய வரலாறு சென்று கொண்டே இருக்கிறது. ஆனால் இங்கிருக்கும் தமிழுணர்வாளர்கள் இனி இந்திய வரலாற்றையே கீழடியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்,. உலகத்திலேயே தொன்மையான நாகரிகம் தமிழ் என்று கீழடி நிரூபித்துவிட்டது என்று கூறுகிறார்கள்.
வரலாறு இந்தப் புராண நம்பிக்கைகளுடன் மோதும்போது அவற்றை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கிறது. மகாபாரதத்தை இரும்புக் காலகட்டத்துடன் பிணைக்கும்போது ஒரு பக்தன் அடையும் கொதிப்பும் சங்க காலத்தை பொமு இரண்டாம் நூற்றாண்டு என்று சொல்லும்போது தமிழுணர்வாளருக்கும் வரும் கொதிப்பும் ஒன்றே. வரலாறு சார்ந்து அவர்களுடன் விவாதிக்க முடியாது. அவர்கள் தங்கள் தொன்ம -புராண நம்பிக்கைகளின் உலகில் வாழவேண்டியவர்கள். வரலாற்றை அவர்கள் தங்களுக்கேற்ப திரித்து தொன்மமாக்கி கொள்வார்கள்.. விவாதத்துக்கு அப்பாற்பட்ட மூர்க்கத்தை அதில் காட்டுவார்கள். வரலாற்று ஆசிரியர்களை மிரட்டி அடிபணிய வைப்பார்கள்.
இன்று ஒவ்வொரு ஜாதியும் இதே போல ஒரு புராண வரலாற்றை உருவாக்க ஆரம்பிக்கிறது. தங்களுடைய தொன்மையை பெரும்பாலான ஜாதிகள் இன்று குமரிக்கண்டம் வரைக்கும் கொண்டு செல்வதை இன்று காணலாம். இவர்கள் தங்கள் ஜாதியில் கதாநாயகர்களை உருவாக்கும்போது கற்பனையான ஆளுமைகளை செயற்கையான வரலாற்றுக்காலத்தில் கொண்டு வைப்பதைக் காணலாம்.
வரலாற்றாய்வில் ஈடுபாடு கொண்டவர்கள் இவர்களுடன் விவாதிக்க, இவர்கள் முன் எதையேனும் நிறுவ முயலக்கூடாது. வரலாற்றாய்வு என்பது நமக்கான தெளிவை நாம் அடைவதற்குரியது. ஒற்றை வரியில் இவ்வாறு சொல்லலாம். வரலாறு அறிஞர்களுக்கு உரியது. தொன்மங்கள் நம்பிக்கையாளர்களுக்குரியவை. அவர்களுக்கிடையே உரையாடல் நிகழ முடியாது.
சாஸ்தாவுக்கே வருகிறேன். வரலாற்று ஆய்வாளன் சாஸ்தாவை ஆராய்ந்தால் மேலதிகமாக என்ன கிடைக்கும்? சாஸ்தா என்னும் உருவகத்திற்கும், இன்று கிடைக்கும் சிலைகளுக்கும் பௌத்த மதத்தின் போதிசத்வர்களுக்கு இருக்கும் ஒற்றுமையை கண்டடைவான். போதிசத்வ வஜ்ரபாணிக்கும் புலிமேல் அமர்ந்திருக்கும் புத்தருக்கும் ஒற்றுமை உண்டு. போதிசத்வ பத்மபாணியே யானைமேல் அமர்ந்த சாஸ்தா. அந்த இரு போதிசத்வர்களும் வெவ்வேறு வகையில் இந்தியாவெங்கும் செதுக்கப்பட்டுள்ளனர். யானையும் தாமரையும் நீரும், புலியும் மின்னலும் நீரும் ஒன்றே என தொன்மங்களின் பரிணாமம் காட்டுகிறது.
மேலும் பின்னால் சென்றால் அந்த போதிசத்வர்களே தொன்மையான இந்திரனின் உருவங்களை ஒட்டி விரிவானவை என்று கண்டடைய முடியும். மின்னலின் இறைவன். தாமரையின் தலைவன். வெள்ளைவாரணம் ஊர்பவன். வெம்புலியை ஆள்பவன். அவனுக்கு முன்னால் என்ன? எங்கிருந்து தோன்றியது அந்த உருவகத்தின் முதல் கற்பனை? அதை மானுட உள்ளத்தில் உருவாக்கியது எந்த விசை?
இங்கும் இருவகை தெரிவுகள் நம் முன் உள்ளன. இந்திரன் என்ன மதம், போதிசத்வர் எந்த மதம், சாஸ்தா ஏது மதம் என சழக்கிடலாம். அல்லது நம்முள் சாஸ்தாவை பெருக்கிப்பேருருவாக்கி மேலும் அணுகிச் செல்லலாம். வரலாறு இரண்டுக்கும் வழிகாட்டுகிறது.
வரலாற்றுணர்வு மெய்யுணர்வுடன் இணையும் தருணங்கள் சில உண்டு. என் பாதை அதுவே. நான் காட்டில் பார்த்த புலியின் கோடுகளின் நெளிவில் தழல் எழுந்து சாஸ்தா தோன்றினார். மின்னலின் துடிப்பில் இந்திரன் என எழுந்தவரும் அவரே. வரலாற்றிலும் நனவிலியிலும் சாஸ்தா எழுந்தருள்வார். இந்து பௌத்த சமண பண்பாடுகளில் எல்லாம் அவர் பெருகி நிறைவார்.
ஜெ