தார் குழையும் தருணம்

அன்புள்ள ஜெமோ,

உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும், ஜெமோ. அது சிறு வயதில் பள்ளியில் படித்த, புரிந்து கொண்டிருந்த ஒரு புறநானூறு பாடல், அதன்  அர்த்தம் மட்டும் மிக ஆழமாக மனதில் பதிவாகியிருந்தது.

முதலில் அது மன்னன் நெடுஞ்செழியனின் வஞ்சினம் உரைத்தலாக எனக்கு மனதில் பதிவாகியிருந்தது.

அந்த வஞ்சினம் இப்படி இருக்கும், “இந்த போரில் நான் அந்த எதிரி நாட்டு மன்னைனை வெல்லவில்லை எனில் தன் மனதில் என் மேல் சிறிதும் அன்பு இல்லாத ஒரு பெண்டிரை கட்டி அணைத்த பாவம் என்னை வந்து சேரட்டும்” என்று போருக்கு போவதற்கு முன் வஞ்சினம் உரைத்ததாக. அந்த வயதில் அது ஒரு பெரிய செய்தி சொல்லலாக எனக்கு இருந்தது.  “கங்கை கரையில் காரம் பசுவை கொன்ற பாவம் என்னை வந்து அடையட்டும்” என்பது போல் பெரும் குற்றத்தை அல்லது பாவத்தை முன்வைத்தே அரசர்களால் போருக்கு போவதற்கு முன் வஞ்சினங்கள் சொல்லப்பட்ட காலத்தில், தன் மேல் விருப்பம் இல்லா ஒரு பெண்ணை கட்டி அணைப்பதை, இன்னும் சொல்லப்போனால் “consent இல்லாமல் ஒரு பெண்ணை தொடுதல்” என்பதை எவ்வ்ளவு பாவமாக ஒரு மன்னன் கருதி இருக்கிறான் என்ற எண்ணம் ஒரு சிலிர்ப்பை உண்டு பண்ணி இருந்தது.

ஆனால் அந்த குறிப்பிட்ட பாடல் முற்றிலும் மறந்து விட்டிருந்தது. கண்டுபிடிக்க முடியவில்லை. நீண்ட நாள் தேடி பார்த்து கிடைக்காமல் விட்டுவிட்டேன். அதன் அர்த்தம் மட்டும் மனதில் இருந்தது. போன வாரம் நாஞ்சிலிடம் பேசும்போது கேட்க, அவர் இதுவா, அதுவா என்று சிலவற்றை சொல்ல, அவர் சொன்னவற்றில் இருந்து குறிச்சொற்களை  இட்டு தேடி கடைசியில் அந்த பாடலை கண்டுபிடித்துவிட்டேன்.

இதுதான் அந்த பாடல்.
மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி,
ஈயென இரக்குவர் ஆயின், சீருடை
முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்;
இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென், இந்நிலத்து
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது, என்
5
உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல,
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக்
கழைதின் யானைக் கால் அகப் பட்ட
வன்றிணி நீண்முளை போலச், சென்று அவண்
10
வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்திய
தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்லிருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே!

சோழன் நலங்கிள்ளி சொல்கிறான். என் நாட்டை விரும்புபவர் மெதுவாக என்னிடம் வந்து, என் கால்களைப் பிடித்து, உன் நாட்டைக் கொடு என்று பிச்சையாகக் கேட்டால் முரசு முழங்கும் என் ஆட்சியையும், வேண்டுமானால் என் உயிரையும் அவருக்கு உரிமை ஆக்குவேன். இந்த நிலத்தில் என் ஆற்றலைப் போற்றாமல், என் உள்ள உரத்தை எள்ளி நகையாடிய மடவோன் தூங்கும் புலிமேல் கால் தடுக்கிய குருடன் போல தப்பிச் செல்லமாட்டான். மூங்கிலைத் தின்னும் வலிமை மிக்க யானையின் காலடியில் பட்ட மூங்கில் முளைக்குருத்து போல அவனைப் போரிட்டு நசுக்குவேன். அப்படி நசுக்காவிட்டால், என் மாலை நெஞ்சில் காதல் இல்லாமல் ஒப்புக்குத் தழுவும் கூந்தல் பகட்டுக்காரியின் தழுவுதலில் குழைவதாகுக.

ஆனால் இந்த பாடலை படித்த பின் என் “மனதில் இருந்த கருத்து தீவிரத்துக்கு” இந்த பாடல் இயைந்து வருகிறதா  என்று சந்தேகமாக இருந்தது. இந்த பாடலில் சோழன் நலங்கிள்ளி ‘தன்  மனதில் சிறிதும் காதல் இல்லா மகளிரை தழுவுவதில் என் மாலை குழைவதாக’ என்று வஞ்சினம் உரைப்பதாக அர்த்தம் கொள்கிறேன். ஆனால் அதை ஒரு “பெரும் பாவத்துக்கு” அவன் இணைவைத்ததாக கொள்ள இடம் இருக்கிறதா?  ‘என் மாலை குழைவதாக’ என்பதற்கு நான் நினைத்திருந்த பொருள் தீவிரம் வருமா?

அந்தப்புரத்தில் நூறு பெண்களை வைத்திருப்பார்கள், ஒவ்வொரு பக்கத்து நாட்டு அரசுகளுடனான போர் சமரசங்களும் அந்த நாட்டு பெண்ணை மணம் முடித்து வருவதில் முடியும் அல்லது போரில் வென்று ஆநிரை, பெண்டீர் கவர்தல் என்பதையெல்லாம் அறமாக கொண்ட காலகட்டத்தில் Consent இல்லாமல் ஒரு பெண்ணை தொடுதலை ஒரு மன்னன் வஞ்சினம் உரைக்கும் அளவுக்கு பெரும் பாவமாக கருதினான் என்று சொல்வதற்கான இடம் உண்டா?

இல்லை, அது அந்த வயதில் அது என் மனதில் இருந்த அர்த்தம் மட்டும்தானா?  நீண்ட நாளாக மனதில் அர்த்தமாக மட்டும் உருக்கொண்டிருந்த இருந்த ஒரு பாடல்  உண்மையில் அதே தீவிரத்துடன் இல்லையோ என்று நினைக்கத் தோன்றியது. அதனால்தான் உங்களிடம் கேட்க நினைத்தேன்.

சரவணன் விவேகானந்தன்

*

அன்புள்ள சரண்

உங்கள் கவிதையுடன் இணையக்கூடிய ஒரு வரி ‘அதனினும் கொடிது அன்பிலாப்பெண்டிர்’ என்ற அவ்வையின் கவிதை. அன்பிலாது பெண்டிரை அணைதல் ஆண்மைக்கு இழுக்கு என்னும் கருத்து வெவ்வேறு வகையில் தொடர்ந்து தமிழிலக்கியத்தில் வந்துகொண்டிருக்கிறது. அது ஒருவகையான அத்துமீறுதல் என்றே நம் மரபு கருதுகிறது. ஒருவன் தன் ஆண்மையை இழிவு படுத்திக்கொள்ளுதல் அது.

அன்பைப்பெறுவதற்கு மடலூரலாம் என்று சங்க இலக்கியம் சொல்கிறது. தன்னை அனைத்துக்கும் கீழாக இழிவுபடுத்திக்கொண்டு ,எந்த எல்லைக்கும் தான் செல்வதற்கு தான் தயார் என்று அந்தப்பெண்ணுக்கும் அவள் உற்றாருக்கும் காட்டி அதனூடாக அவளது அன்பைப் பெறுவதுகூட ஏற்கப்பட்டிருக்கிறது. காதலை மறுக்கும் பெண்ணின் உள்ளத்தை இளகச் செய்வதற்காக அவள் கால்களைத் தன் தலையில் சூடுவது ஆண்மைக்கு சிறப்பென்று சொல்லப்பட்டிருக்கிறது. கம்பன் ராவணனைப் பற்றியே அவ்வாறு பாடுகிறான். ஆனால் எவ்வகையிலேனும் அவள் அன்பை ஈட்டவேண்டுமேயொழிய அன்பிலாது அணைதல் என்பது அனைத்து வகையிலும் கீழ்மை. அன்பைப் பெறுவதற்கு இதையெல்லாம் அனுமதிக்கும் பண்பாடு அன்பிலாமல் பெண்ணை அடைவதை கடுமையாக அருவருத்து விலக்குவது இயல்புதானே? நீங்கள் சுட்டிய பாடலும் அதைத்தான் சொல்கிறது.

இயல்பாக எழும் கேள்வி, அந்தப்புரத்தில் நூற்றுக்கணக்கான பெண்களை வைத்திருத்தல், பெண்களை கவர்ந்து கொண்டு வருதல் ஆகியவற்றை செய்தவர்களால் இதை சொல்ல முடியுமா என்பது. என் வாசிப்பில் சங்க காலத்தில் அவ்வாறு ஆயிரக்கணக்கான பெண்கள் கொண்ட அந்தப்புரங்கள் இருந்ததற்கான சான்றுகள் இல்லை. உரிமை மகளிர் என்ற வார்த்தை சங்க இலக்கியங்களில் தென்படுகிறது. அது அடிமைகொள்ளப்பட்ட அல்லது உரிமைகொள்ளப்பட்ட பெண்கள். ஆனால் அவர்கள் பாலியல் அடிமைகள் என்றோ அவர்கள் மன்னர்கள் வலுக்கட்டாயமாக அடையலாம் என்றோ சங்க இலக்கியம் காட்டவில்லை.

உண்மையில் சங்க இலக்கியம் போன்ற தொடக்க காலத்தில் அவ்வாறு பெண்கள் பாலியல் அடிமைகளாக இருந்திருக்க வாய்ப்பு மிகக் குறைவு. அது பேரரசுகள் உருவாகிக் கொண்டிருந்த சூழல் எனினும் பழங்குடி மதிப்புகள் நீடித்த காலம். அன்று அவ்வாறு நூற்றுக்கணக்கான பெண்களுடன் கூடிய அந்தப்புரங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. உரிமை மகளிர் என்று சொல்லப்படுபவர்கள் கூட அவர்களுக்கு அன்றைய ஆசாரங்களும் நெறிமுறைகளும் அளித்த வசதிகளையும் வாழ்க்கை முறைகளையும் அனுபவித்து அவர்களுக்குரிய வாழ்க்கைதான் வாழ்ந்திருப்பார்கள். பழங்குடிச் சமூகத்தில் அடிமை முறை உண்டு .ஆனால் அது ஒரு வளர்ந்த நகர சமுதாயத்திலுள்ள வாழ்க்கை போன்றதல்ல. அந்த அடிமையும் ஒருவகையான குடிமகனே. அவனுக்கு வேறு வகையான வாழ்க்கை முறை, இன்னொரு வகையான உரிமை முறை வகுத்தளிக்கப்பட்டிருக்கிறது என்பது மட்டும் தான் வேறுபாடு

அன்று போர்களில் பெண்களைக் கவர்ந்தார்கள் என்றுதான் கொள்ளவேண்டியிருக்கிறது. ஏனெனில் அது ஆநிரை கவர்தலில் இன்னொரு வழி. ஆநிரை கவர்தல் என்பது இயல்பான ஒரு அரசியல் நடவடிக்கையாக கருதப்பட்டிருக்கிறது. ஆனால் பெண்ணை திருடிக் கொண்டுசெல்வது ஏற்கப்பட்டிருந்தது என்றால் ஏன் பேரரசர்கள் வந்து சிற்றரசர்களின் வீட்டுமுன் பெண் கேட்டு மன்றாடி நின்றிருக்கும் ஒரு துறை – மகடூ மறுத்தல்- சங்கப்பாடல்களில் உள்ளது? குழப்பம்தான். ஆய்வாளர்தான் சொல்லவேண்டும்

அன்றைய பெண்கள் அவ்வாறு கவரப்படுதலை இயல்பானதாக, ஒருவேளை தங்களுடைய மதிப்பிற்கு ஒரு சான்றாகக் கூட எடுத்துக்கொண்டிருக்கலாம். பல பழங்குடிச் சமூகங்களில் தாங்கள் கவரப்படுவதைப்பற்றி பெண்களுக்கு எந்த தன்மானச் சிக்கலும் இல்லையென்பதைக் காணலாம். அவர்கள் அதுவே இயல்பானதென்று எடுத்துக்கொள்கிறார்கள். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட மதுரைப் பகுதிகளில் கவரப்படும் பெண்கள் அதை அவமதிப்பாக எடுத்துக்கொண்டதில்லை. பெருமிதமாகவே எடுத்துக்கொண்டார்கள். என் நண்பரின் பாட்டி களவுசெய்து கொண்டுவரப்பட்ட பெண். அவருக்கு நினைக்க நினைக்க பெருமிதம் அதில்.அன்று மன்னனால் கவரப்படும் பெண் அவனை விரும்புவதற்கும் அவனுடைய பெண்ணாக தன்னை கற்பனை செய்துகொள்வதற்கும் எந்த தடையும் இருந்திருக்காது.

பொதுவாகவே அற ஒழுக்க விஷயங்களில் நம்முடைய முந்தின தலைமுறையுடைய உளநிலைகளைக் கணிப்பது கடினம். பல மனைவியர்களில் ஒருவராக இருப்பதற்கு இன்றைய ஒரு பெண் மிகப்பெரிய உளவியல் சிக்கலை அடையலாம். ஆனால் நேற்றைய காலத்து பெண் அதை இயல்பாகவும் மகிழ்வாகவும் தான் எடுத்துக்கொண்டிருக்கிறாள். பல அரசியரில் ஒருவராக இருப்பதென்பது உயர்ந்த விஷயமாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கலாம்.

அன்று விரும்பாத பெண்ணை அணைவதென்பது இருந்திருக்கிறதா? அந்த வன்முறை ஆணின் இயல்பு. வன்முறையே வாழ்வெனக் கொண்ட அச்சூழலில் அது சாதாரணமாக நடந்துகொண்டிருக்கலாம். அது அத்தனை சாதாரணமாக நடந்தமையால்தான் அத்தனை கடுமையான கண்டனத்தை கவிதை முன்வைக்கிறது. அன்றாடத்தில் இயல்பான ஒருநடவடிக்கை, ஆனால் உயர்விழுமியங்கள் அதை ஏற்கவில்லை. அதைத்தான் சோழனின் இந்தப்பாடல் சொல்கிறது.

பொதுவாக ஒன்றைச் சொல்லவேண்டும். சங்கப்பாடல்கள் காட்டும் சமூகச்சூழலில் ஒரு முக்கியமான பண்பாட்டுக்கூறு உள்ளது. அதன் உச்சம், அதன் சிந்தனையின் மேல்மட்டம், மிக உயர்ந்த அறமும் விழுமியங்களும் கொண்டதாக உள்ளது. அதன் அடித்தளம் பழங்குடிப் பண்பாடுகளுக்குரிய கட்டற்ற வன்முறையும் பகைமைகளும் கொண்டதாக இருக்கிறது. தலைக்கும் வாலுக்கும் நடுவே அவ்வளவு தொலைவு.

கொல்லாமை உள்ளிட்ட நெறிகள் தனிமனித விடுதலை போன்ற கொள்கைகள் அன்று வந்துவிட்டன. அவையே புறநாநூற்றின் பாடல்களில் வெளிப்படும் விழுமியங்கள். ஆனால் புறநாநூறு காட்டும் சமூகச்சூழலில் அந்த விழுமியங்கள் இறங்கிச் சென்றிருக்கவில்லை. அங்கே கைப்பற்றிய நாட்டின் மன்னனுக்கு குடிநீர் கொடுக்காமல் சாகவிடுகிறார்கள். அவன் பற்களைக் கொண்டு கோட்டையில் பதிக்கிறார்கள். எரிபரந்தெடுத்தல் என்ற பெயரில் நகரங்களை அழிக்கிறார்கள். குடிநீர்ச் சுனையை சிதைக்கிறார்கள்.

இன்னமும் பழங்குடித்தன்மை அகலாத அப்பண்பாட்டை தத்துவத்தால் உருவகிக்கப்பட்ட ஓர் உயர்நிலை நோக்கி இழுக்கிறார்கள் கணியன் பூங்குன்றனும், கபிலரும், பரணரும், ஔவையாரும். மன்னனாக இருந்தாலும் சோழன் நலங்கிள்ளி அவர்களில் ஒருவனாக நிலைகொள்கிறான் என்பதே அவனுடைய மாண்பு.

சங்கப்பாடல்களில் ‘வரிகளுக்கிடையே வாசிக்கும்’ ஒரு நுண்வாசிப்பு நமக்குத் தேவை. இதில் நேர்ப்பொருளாக விரும்பா மாதரை அணைந்த கீழ்மையை அடைவேனாக என்னும் வஞ்சினம் உள்ளது என்பது பொழிப்புரை. பொழிப்புரை கவிதை அல்ல. கவித்துவமாக இப்பாடல் ஒரு படி மேலே செல்கிறது. கீழ்மை அடைவேனாக என்று சோழன் நலங்கிள்ளி சொல்லவில்லை. அவர்களுடன் இணைகையில் என் மாலை வாடிக்குழையட்டும் என்கிறான்.

அந்த மாலை, ஆண்மகனின் ஆழத்திலுள்ள மிகமிக மென்மையான ஒன்று. அது வாடுவதென்பது அவன் மட்டுமே அறியும் ஓரு நுண்நிகழ்வு. அது புறவுலகின் பார்வையில் பெரிய கீழ்மையோ, தோல்வியோ அல்ல என்றாலும்கூட அவனுக்கு மிக அந்தரங்கமான ஓர் இழப்பு, ஒரு கசங்கல்.மீளமுடியாத ஒரு வீழ்ச்சி. எந்த ஆணும் அந்த மென்மலர்தாரை தன்னுள்ளே உணர முடியும். மலரினும் மெல்லிய ஒன்று, அதன் செவ்வி தலைப்படுவோர் சிலரே.

அந்த மாலையை எண்ண எண்ண விரியும் இப்பாடல் தமிழில் எழுதப்பட்ட மிகமிக நுட்பமான, மகத்தான கவிதைகளில் ஒன்று.

ஜெ

முந்தைய கட்டுரைஅறம் வழியாக நுழைவது…
அடுத்த கட்டுரைஊழலின் புதிய முகம்