புத்தகக் கண்காட்சியில் நான்

 அன்பின் ஜெ.

சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு 1991/92 முதல் இடைவிடாமல் வந்து கொண்டிருக்கிறேன். இது அனேகமாக எனக்கு முப்பதாவது ஆண்டு. விஷ்ணுபுர அமைப்பில் வாசகர்களாக தொடர்ந்து பயணித்த பலரும் இன்று அறியப்பட்ட எழுத்தாளர்களாக, மொழிபெயர்ப்பாளர்களாக மாறியுள்ளதை வெவ்வேறு பதிப்பகங்களின் வெளியீடுகளிலிருந்தும், அளிக்கப்படுகிற விருது பெற்றோர் பட்டியலிலிருந்தும் எவரும் அறியக்கூடிய வெளிப்படையான உண்மை.

விஷ்ணுபுர நண்பர்களும் வெவ்வேறு ஊர்களிலிருந்து இந்தப் புத்தக கண்காட்சிக்கு வந்துகொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதில் தங்களுடன் இலக்கிய நிகழ்வுகளில் அணுக்கமாக இருக்கும் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது தாங்கள் வந்தீர்களா, அல்லது ஏதும் பிறிதொரு நாள் வருவாரா எனக்கேட்டேன். தாங்கள் சென்னையிலேயே இருந்தாலும் இங்கெல்லாம் வரமாட்டீர்கள் என்று சொன்னார். நானும் தங்களை ஒருமுறை சென்னையிலும், இன்னுமொரு முறை கோவை கொடிசியாவிலும் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் பார்த்த நினைவு மட்டுமே உள்ளது. பிற எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் இங்கு கிட்டத்தட்ட நாள்தோறும் வருகின்றனர், தங்களுக்கு வேண்டிய அளவைவிட படிக்க முடிகிற அளவுக்கும் மேல் நூல்கள் திகட்ட, திகட்ட கிடைத்துவிடுகிறதோ – மதிப்புரை கேட்டு, அணிந்துரை கேட்டு அனுப்பப்பட்டு விட்டிருக்கலாம் – அவ்வாறெனில் இங்கு வருவது வீண் தான், இது இந்த கொரொனா பெருந்தொற்று நோயச்ச தவிர்ப்பு மாதிரியும் தெரியவில்லை. அதுவும் – தங்களின் படைப்பை மட்டுமே அறிந்திருக்கிற எனக்கு தாங்கள் புத்தக கண்காட்சிக்கே வருவதில்லை என்று திட்டவ்ட்டமாக ஒரு வாசகர் சொல்லும்போது ஏன் – நாம் ஜெ.வை தனிப்பட்ட முறையில் அறிந்து வைத்திருக்கவில்லையோ, நட்பு பேணவில்லையோ, பிரதிக்கும் வாசகனுக்குமான உறவே பிரதானம். அங்கு படைப்பாளி எழுதி முடித்த பின்னர் பிறிதொரு ஆளுமையோ,

https://www.jeyamohan.in/162359/

பிறிதொரு சுழல் – கட்டுரையில் குறிப்பிடுவது போல எழுதி முடித்த பின்னர் அதிலிருந்து தாங்கள் விலகி விடுவதும், இந்த திருவிழா மனநிலையை விரும்பாததற்கு தங்களுக்கு இருக்கும் துறவு, ஆன்மிகம் குறித்த ஈடுபாடு தான் காரணமா, அல்லது புறக்கணித்தல், வெளிநடப்பு போன்ற அரசியல் / செயல்பாட்டுக் காரணம் ஏதும் உள்ளதா?

கடந்த மாதம் ஜனவரியில் திடீரென்று புத்தகக் கண்காட்சிக்கு அனுமதி மறுத்து அரசாணை வெளிவந்த போது ஏராளமான பதிப்பகங்கள் மனம் தளர்ந்து அதிகமான தள்ளுபடியை, சலுகை அளித்து விலைக் குறைப்பு செய்தன. நானும் அதனால் கொஞ்சம் அதிகமாகவே (தேவையில்லாத நூல்களையும்) வாங்கிவிட்டேன். இப்பொழுது அடடா, வேறு நூல்களைப் பார்க்கும்போது இதை வாங்க வேண்டுமே என்று தோன்றுகிறது. மற்றபடி இந்த புத்தக கண்காட்சிக்கு வருவதும், வெவ்வேறு ஊர்களிலிருந்து வரக்க்கூடிய நண்பர்களில் பலரை சந்திக்க அமைந்த வாய்ப்பாகவும் இது பயன்படுவதால் வெறுமனே சுற்றிக் கொண்டிருக்கிறேன். தங்களுக்கு இருக்கும் பணிகளுக்கு மத்தியில் இதில் ஏதேனும் சொல்வதற்கு இருந்தால் கூறவும், நன்றி

கொள்ளு நதீம், ஆம்பூர்.

அன்புள்ள கொள்ளு நதீம்,

நான் புத்தகக் கண்காட்சிக்கு, அது முன்பு உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டலுக்குள் சிறிதாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் முதல் வந்துகொண்டிருக்கிறேன். சென்னை புத்தகக் கண்காட்சிக்கு ஓரிருமுறை தவிர பெரும்பாலானவற்றுக்கு வந்துள்ளேன். மதுரை, கோவை, ஈரோடு புத்தகக் கண்காட்சிகளுக்குச் சென்றிருக்கிறேன். நாகர்கோயில், நெல்லை புத்தகக் கண்காட்சிக்கும் சென்றுள்ளேன். வரும் நெல்லை புத்தகக் கண்காட்சிக்கும் செல்லவிருக்கிறேன்.

எனக்கு ஒரு நாளுக்கு சராசரியாக இருபது நூல்கள் தபாலில் வருகின்றன. இருந்தும் நூல்களை வாங்கிக் குவிக்கிறேன். இந்த புத்தகக் கண்காட்சியிலும் எனக்கான புத்தகப்பட்டியலுடன் நண்பர்கள் வந்தனர்.

ஆனால் நான் கொஞ்சம் ரகசியமாகவே வருவேன். அதிகமாக எவரையும் சந்திப்பதில்லை. புத்தகக் கண்காட்சியில் கொஞ்சநேரம் வசந்தகுமாருடன் தமிழினி ஸ்டாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பேன். புத்தகங்களை பார்த்து அலைய விரும்புவேன். என்னை பிறர் பார்ப்பது அதற்குத் தடையாக அமைவது.

இப்போது என் நிகழ்ச்சிகள் மிகச்செறிவாக அமைக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய அறிவுப்பணி ஒன்றில் இருக்கிறேன். கூடவே பல சினிமா வேலைகள். இலக்கியப்பயணங்கள். ஆகவே திட்டமிடா நிகழ்ச்சிகளுக்குச் செல்வது இயலாது. சென்னைக்கு எப்போதுமே மிகக்கறாராக திட்டமிடப்பட்ட பயணங்கள்தான். சினிமாச்சந்திப்புகள். அவற்றில் இருந்து நேரம் எடுத்து புத்தகக் கண்காட்சிக்கு வருவது பலசமயம் நடைபெறுவதில்லை. இம்முறை சென்ற ஞாயிறு வருவதாக இருந்தேன். உடனடியாக திரும்பவேண்டியிருந்தது. நண்பர்கள் வந்திருந்தனர். நான் வந்திருந்தாலும் எவரையும் பார்க்காமல் புத்தகங்களைப் பார்த்துவிட்டு திரும்பியிருப்பேன்.

ஜெ

முந்தைய கட்டுரைசோர்பா
அடுத்த கட்டுரைஎதற்கு இத்தனை நூல்கள்?