யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி
இந்த புத்தகக் கண்காட்சியில் யுவன் சந்திரசேகர் எழுதிய நாவல்களும் சிறுகதைகளும் சீரோ டிகிரி பதிப்பக மறு வெளியீடுகளாக வெளிவந்துள்ளன. நுண்கதைகளின் ஒரு தொகுப்பும் புதிய நாவலும் வெளிவந்துள்ளது .எல்லாமே அழகான தயாரிப்புகள். தமிழ் நவீன இலக்கியத்தில் ஒரு முக்கியமான நிகழ்வு இது.
யுவன் தமிழ் நவீன இலக்கியத்தில் பிரசுரிக்கப்பட்ட எல்லா பக்கங்களும் சுவாரசியம் குறையாதபடி எழுதும் படைப்பாளி. இலக்கிய வாசகன் அவர் நாவல்களில் மேலே சென்றுகொண்டே இருக்கலாம். வெறும் கதைச்சுவாரசியத்துக்காக மட்டுமே வாசிப்பவர்கள் அதற்காக மட்டுமே அவற்றை வாசிக்கலாம். மர்மக்கதைபோல பகடிக்கதைபோல வாசிக்கவேண்டியவை. உரையாடல்களை, வெவ்வேறு வகையான உரைநடை வடிவங்களை எழுதுவதில் அரிய திறன் வெளிப்படுபவை.
இருபதாம் நூற்றாண்டில் உருவான மதம்கடந்த ஆன்மிகம் ஒன்று உண்டு. அது மத அடையாளங்களை மறுக்கும். ஆனால் அரிதாக மதக்குறியீடுகள் வழியாகவும் பேசும். அது மத நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்வதில்லை. எந்த நம்பிக்கையையும் அது தடையாகவே பார்க்கிறது. மதம் ஒரு நம்பிக்கை வட்டம் மட்டுமல்ல ஒரு பண்பாட்டு வட்டமும்கூட என அது அணுகுகிறது. அரசியல் என்பது அதிகாரத்துக்கான விழைவும் சூழ்ச்சியும். அதுவும் அறிவுத்தளைதான். இந்த வகையான ஆன்மிகம் அடையாளம், ஆதிக்கம் ஆகிய இரண்டிலிருந்தும் விடுபட்ட ஒரு சர்வதேச மனிதனை, தூய மனிதனை உருவகம் செய்து அவனுடன் பேசுகிறது.
அதன் வழி என்பது அடிப்படைசார்ந்த ஐயம், அதன்மீதான தர்க்கபூர்வ வினா, புறவயமான கண்டடைதல், நேரடியாக நடைமுறைக்கு கொண்டுவந்துபார்த்தல், அன்றாடப் பழக்கத்தினூடாக கடந்து செல்லுதல் என்பது. இந்தவகையான ஆன்மிகத்தை முன்வைக்கும் நவீன ஆன்மிகவாதிகள் என ஒரு நீண்ட பட்டியல் உண்டு. அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையானவர்கள். முரண்படுபவர்களும்கூட. ஆனால் இந்த அடிப்படை பார்வை அவர்கள் அனைவருக்கும் பொது.
ஜே.கிருஷ்ணமூர்த்தியும் ஓஷோவும் நாம் அறிந்தவர்கள். குர்ட்ஜீஃப் நாம் அதிகம் அறியாத ஆளுமை. கார்லோஸ் கஸ்டனெடா (Carlos Castaneda) வின் டான் யுவான் மேலும் குறைவாக இங்கே அறியப்பட்டவர். வுல்ஃப் காங் பௌலி (Wolfgang Pauli) ராபர்ட் ஃபிர்சிக் (Robert M. Pirsig) போன்ற பல எழுத்தாளர்கள் உண்டு. அந்த உலகில் ரிச்சர்ட் ரீஸ்டாக், ஃப்ரிஜோ காப்ரா போன்ற அறிவியலாளர்கள் உண்டு. சமூகவியலாளர்கள் உண்டு.அவர்கள் உலகமெங்கும் சிந்தனையில் பெரும் செல்வாக்கைச் செலுத்தியவர்கள்.
தமிழ் நவீன இலக்கியத்தில் நாம் செய்யும் பெருந்தவறு ஒன்று உண்டு.நவீன இலக்கியம் என்னும் சிறிய வட்டத்திற்குள் நின்றுகொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துச் சிந்திப்பது. இங்கே பெரிதும் பேசப்படுபவை ஐரோப்பிய நவீன இலக்கிய அலைகள். அவை பெரும்பாலும் எழுத்தின் வடிவம் சார்ந்த புதியபோக்குகள் மட்டுமே. அரிதாக சில அழகியல் கோணங்கள். அவ்வப்போது அரசியல் ,சமூகவியல், உளவியல் சார்ந்த சில ஊடுருவல்கள் நிகழும். இந்த வட்டத்திற்குள் இலக்கியத்தில் இருந்து இலக்கியத்தை அள்ளுவதன் எல்லா குறுகல்களும் தமிழ் நவீன இலக்கியத்தை தென்னைக்கு மண்டரி நோய்போல பாதித்திருக்கின்றன. கொட்டைப்பாக்கு சைசில் தேங்காய்கள் காய்ப்பதன் ரகசியம் இதுதான்.
அமெரிக்க- ஐரோப்பியச் சூழலிலும் இதைப்போல ஒரு தளக்குறுகல் உண்டு. அங்கே இலக்கியம் இரண்டாகப் பிரிந்துவிட்டது. ஒன்று வணிகரீதியான பிரசுரம் மற்றும் பெருந்திரள் வாசிப்பு. இன்னொன்று ,அதற்கு எதிராகவும் மாற்றாகவும் உள்ள கல்வித்துறை சார்ந்த எழுத்து மற்றும் ஆய்வு (அங்கும் இங்கும் கல்வித்துறையில் வாசிப்பே இல்லை, ஆய்வு மட்டும்தான்) நவீன இலக்கியம் என்னும் சிறு அழகியல் வட்டம் ஐரோப்பாவில் எண்பதுகளுடன் அழிந்து அந்த இடத்தை கல்வித்துறை எடுத்துக்கொண்டுள்ளது.
விளைவாக இன்று இலக்கியத்தில் தீவிரமான சோதனைகள், தத்துவமும் வரலாறும் ஊடாடும் புனைவுகளை கல்வித்துறையினரே வாசிக்கிறார்கள். அவர்களுக்கு கற்பனை அரிது. ஆய்படுபொருள் சிக்கலாக இருக்க இருக்க அவர்களின் மூளை மகிழ்ச்சி அடைகிறது. அவர்கள் புனைவை நாடவில்லை, ஒருவகை குறுக்கெழுத்துப் போட்டியை விரும்புகிறார்கள். அவர்களுக்காக வடிவச்சோதனைகள் உருவாக்கப்படுகின்றன. புதியவகை எழுத்து என அவை அவர்களால் மட்டும் கொண்டாடப்படுகின்றன.
நவீன இலக்கியச் சூழலில் கல்வித்துறையின் செல்வாக்கு ஐரோப்பாவின் பெரும் நோய்க்கூறு. கலையின் தன்னியல்பான எழுச்சி நிகழாமல் அது தடுத்துவிடுகிறது. முன்னரே கல்வித்துறை தயாரித்துள்ள பின்நவீனத்துவம், பின் அமைப்பியல் இன்னபிற ‘டெம்ப்ளேட்டு’களுக்கு ஏற்ப படைப்புகள் உருவாக்கப்படுகின்றன. அதற்கான கையேடுகளும் கிடைக்கின்றன. பயிற்சி வகுப்புகளும் நிகழ்கின்றன
அவை அனைத்திலும் சிக்கலான மேல்தளத்துக்கு அடியில் மிகமிக எளிய, மிகப்பொதுப்படையான சமூகவியல் புரிதல் அல்லது அரசியல் புரிதல் அல்லது குறியீட்டு ஆய்வு இருக்கும். இலக்கியம் எந்தவகையான எளிமையாக்கலுக்கும் எதிரானது. அதன் வழி சிக்கலாக்கம். ஆனால் இந்தவகை எழுத்துக்கள் வடிவத்தை சிக்கலாக்கி, உள்ளே பார்வையை எளிமையாக்கிக்கொண்டவை. இலக்கியத்தின் புதிய அலை என நம்மை வந்தடைபவை இவையே.
இலக்கியத்திற்கு புதிய காற்று போன்றவை மெய்த்தேடல், கலை ஆகியவற்றில் நிகழும் புத்தியக்கங்கள். மெய்யாகவே இலக்கியத்தில் எதையேனும் புதியவற்றை எழுதுபவர்கள் தங்கள் வேர்களை இலக்கியம் கடந்து வெளியே நீட்டுபவர்கள் மட்டுமே. எஞ்சியோர் தொட்டிச்செடி போல வேர்கள் ஒடுங்கியவர்கள்.
யுவன் சந்திரசேகரின் தேடல் சென்று நீளும் மாற்று ஆன்மிகத்தின் உலகம் மிகப்பிரம்மாண்டமானது. அதன் தொடக்கம் பதினேழாம் நூற்றாண்டின் குவாக்கர்கள் போன்ற வெவ்வேறு சுதந்திரக் கிறிஸ்தவ இயக்கங்கள். அதன்பின் பிரிட்டனில் உருவான இயற்கைவாதம் .இயற்கையில் ஆன்மிகசாரத்தை கண்டடையும் கற்பனாவாதக் கவிஞர்களின் உலகம். அதன்பின்னர் ஆழ்நிலைவாதம். எமர்சனும் தோரோவும் முன்வைத்தது. அதன் பின் டால்ஸ்டாய், காந்தி…
அந்த அடித்தளம் மீது எழுந்தவர்கள் இன்றைய நவீன மதம்கடந்த ஆன்மிகவாதிகள். இன்றைய அறிவியல் சிந்தனைகளை உள்ளடக்கிக் கொண்டு பிரபஞ்சம் தழுவிய ஒரு முழுமைநோக்கை உருவாக்கி கொள்ள முயல்பவர்கள் அவர்கள். இயற்கை, மானுட வாழ்க்கை அனைத்தையும் பொருத்திச் சிந்திக்கும் ஒரு கோணம் அது. மானுடன் என நின்று அனைத்தையும் அறியமுயலும், உணரந்து நிறையும் ஒரு நிலையை அவர்கள் உருவகிக்கிறார்கள்.
அந்தக் களத்தில் இருந்து வெவ்வேறு கோணங்களில் வாழ்க்கைமேல் வந்து படியும் பார்வைகளை யுவன் எழுதுகிறார். அவருடைய கதைகள் குள்ளச்சித்தன் சரித்திரம், பகடையாட்டம் போல நேரடியாக வரலாற்று உருவகத்தன்மைக்குச் செல்கின்றன. அல்லது வெளியேற்றம் போல எளிய அன்றாடத்துக்கு வருகின்றன. ஆனால் இந்த மாற்று ஆன்மிகம் அல்லது மதம்கடந்த ஆன்மிகத்தின் தேடலையும் கண்டடைதலையும் முன்வைக்கின்றன. ஆகவே அவை ஒருபோதும் நவீன இலக்கியத்தின் பல படைப்புகள் அளிக்கும் உள்ளீடற்ற வடிவத்தை வாசிக்கும் நிறைவின்மையை அளிப்பதில்லை. அவை மேல்மட்டத்தில் எளிமையானவை, தேடல்கொண்டவர்களுக்கு ஆழத்தில் மேலும் மேலும் சிக்கலான பார்வையை அளித்துக்கொண்டே செல்பவை.
தமிழில் தனக்கென நிற்க ஒரு பீடம் கொண்ட படைப்பாளி யுவன் சந்திரசேகர். இன்றைய வாசகன் வழக்கமான இலக்கியப் பிலாக்காணங்களை விட்டு ஒதுங்கி சென்றடையவேண்டிய புனைவுலகு அவருடையது.
அவ்வளவு பதற்றம் நிலவும் நாடு என்பது முதல் பார்வைக்குக் கொஞ்சம்கூடத் தெரியாது. தூதரக அதிகாரி ஒருவருடன் காலைச்சிற்றுண்டியோடு பேசிக்கொண் டிருக்கையில், அவர் சொன்னாராம்:
இந்த அமைதியின்மையின் பின்புலம், ஆட்சி அதிகாரத்துக்கான போட்டி அல்ல. உள்நாட்டு நிலவரத்தைக் குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் வல்லரசுக்கு யார் அதிக நெருக்கமாக இருந்து கனிமவளத்தைச் சுரண்டித் தருவது என்பதையொட் டிய தகராறு மட்டுமே.
இல்லையே, உலக ஊடகங்கள் தரும் செய்திகள், ஒரே மதத்தின் இரு பிரிவுகளுக் கிடையில் பிரச்சினை என்றல்லவா சொல்கின்றன?
மனிதக் குழுக்களுக்கிடையிலான விரோதங்களில் கடவுள் எங்கே வந்தார்? பார்க் கப்போனால், இந்தமாதிரி உள்நாட்டு யுத்தங்களில், பாவம், அவர்தான் முதல் பலி ஆவார்…
முன்னுரை
கதையாட்டம்- யுவன் சந்திரசேகரின் கதைகள் ஜெயமோகன்
மாற்று மெய்ம்மையின் மெய்த்தன்மையைவிட அதில் கலந்திருக்கும் ஃபேன்ட்டஸி அம்சம் எனக்குக் கவர்ச்சியூட்டுகிறது. வேற்றுக் கிரகங்கள் அல்லது வேறு காலங்களுக்குப் பயணிக்கும் விஞ்ஞானப் புனைகதைகளுக்கு ஈடான சுவாரசியத்தைக் கொண்டிருக்கிறது இந்தவிதமான சிந்தனைப் போக்கு.
இந்த மாற்றுத் தளத்துக்கும் முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட கணித சூத்திரங்கள், கருதுகோள்கள், தர்க்க நியாயங்கள், மரபுவழி வளர்ச்சி ஆகியவை உள்ளன. தவிர, அறிவியலின் வழிப்பட்ட காண்முறைக்கு பதிலியானது அல்ல இது; தன்னளவிலேயே
முழுமையான ஒரு அனுபவப்புலம் என்பதற்கும் நிரூபணங்கள் தரப்படுகின்றன.
இதுபோன்ற தர்க்கபூர்வ ஆதாரங்களை விடவும், என் எதிரில் இருக்கும் மனிதனுக்கும் எனக்கும் பகிர்ந்துகொள்ளக் கிடைத்த காலவெளி அனுபவம் ஒன்றேயானதோ, சமமானதோ அல்ல என்பது சுவாரசியமான விஷயமாய் இருக்கிறது.
பின்னட்டை
மாற்றுமெய்மையின் மாயமுகம், யுவன் சந்திரசேகரின் குள்ளச்சித்தன் சரித்திரம் ஜெயமோகன்
கண்ணுக்குத் தெரியாத அழிரப்பர் ஒன்று எல்லாவற்றையும் அழித்துக்கொண்டே போக, தன் முயற்சியில் தளராத மாயப் பென்சில் பின்தொடர்ந்து எழுதிப் போகிறது என்று தோன்றியது செல்லச்சாமி வாத்தியாருக்கு. ஆனாலும், ரப்பரின் சக்திதான் பெரியது. மீண்டும் அதே மாதிரி எதையும் எழுத முடியவில்லை பென்சிலால்.
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத அத்தியாயங்கள். ஊன்றிக் கவனித்தால் மட்டுமே தொடர்பின் இழை புரியும் எழுத்து லாகவம். சிறு மணல் துகளோ, அண்ட வெளியோ எதையும் முழுப் பரிமாணத்துடன் விவரிக்கும் ஆற்றல். முதல் வரியிலிருந்து இறுதி அத்தியாயம் வரை வாசகனை பிரமிக்க வைக்கிற சம்பவங்கள்.
நேர்ப் பார்வையுடன் நடந்து கொண்டிருக்கும் சிறுவனின் பின்னால் அரவமில்லாமல் தொடர்கிறது ஒரு கரடி. நீண்ட கூர் நகங்கள் கொண்ட இரண்டு முன்னங்கால்களையும் அரவணைக்க நீளும் கைகள் போல நீட்டியபடி அவனை நெருங்குகிறது… இன்னும் இரண்டு தப்படிகள்தாம் பாக்கி. கரடி பாய்கிறது…
சுவாரஸ்யம், விறுவிறுப்பு என்பதெல்லாம் வெற்று வார்த்தைகள். வாழ்க்கை கற்றுத் தரக்கூடிய அனுபவங்களைவிடச் சிறந்த மர்ம நாவல் வேறு எதுவும் இருக்க முடியாது. மேலும் மேலும் மெருகேற்றி ஒவ்வொரு பாத்திரத்தையும் உலவவிடும் கணங்களில் யுவன் சந்திரசேகர் மிக அழுத்தமாகத் தெரிகிறார்.
யுவன் சந்திரசேகர் -பின்னட்டை குறிப்பு
கதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ‘ பகடையாட்டம் ‘ ஜெயமோகன்
நம்பகமான, நேர்மையான வரலாற்றாசிரியர்கள் எத்தனைபேர் இருந்திருக்கிறார்கள்! அவர்களுக்கெல்லாம் கோவில் கட்டித்தான் கும்பிட வேண்டும் – தமக்குத் தென்பட்ட விதமாகத்தான் அடுக்கித் தந்திருக்கிறார்கள்; மனச்சாய்வில்லாத ஒரு வரலாற்றாசிரியன் என்பது அமாவாசையில் முழுநிலா என்கிற மாதிரி அசாத்தியம்; அல்லது நிசப்தம் போட்ட சப்தம் என்பதுபோன்ற கவிக்கிறுக்கு என்பதெல்லாம் சரிதான். என்றாலும், எத்தனை நூற்றாண்டுப் பழைய வரலாற்று நிகழ்வுகளைத் தங்கள் மானசீகத்தில் எவ்வளவு தீர்க்கமாக மீட்டுருவாக்க முடிந்திருந்திருக்கிறது அவர்களால். அவற்றில் ஒரு தர்க்கத் தொடர்ச்சியை நிறுவிக்காட்டவும் முடிந்திருக்கிறது… வரலாற்றுத் தொடர்ச்சியைக் கட்டமைக்கும்போது, அவர்களுக்குப் புராதன நாட்களிலும், சமகாலத்திலும் ஒரே சமயத்தில் காலூன்றி நிற்க வாய்த்திருக்கும்தானே….
– நாவலிலிருந்து
யுவன் சந்திரசேகரின் ‘கானல் நதி’- அனங்கன்
யுவன் சந்திரசேகரின் புனைவுலகம்- உரைகள்
யுவன் என்னும் கதைசொல்லி ஜெயமோகன்
யுவன் சந்திரசேகரின் ‘கானல்நதி’- கலைச்செல்வி
நினைவுகளைத் தொடுத்தெழுதும் வரலாறு – யுவன் சந்திரசேகரின் சிறுகதைகள்
யுவன் சந்திரசேகரின் ஊர்சுற்றி – கடலூர் சீனு
யுவன் சந்திரசேகரின் வெளியேற்றம் ஒரு மதிப்புரை
சொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள்
மாற்றுமெய்மையின் மாயமுகம், யுவன் சந்திரசேகரின் குள்ளச்சித்தன் சரித்திரம்
கதையாட்டம்- யுவன் சந்திரசேகரின் கதைகள்
கதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ‘ பகடையாட்டம் ‘