எதற்கு இத்தனை நூல்கள்?

கருப்பங்கிளர் ராமசாமிப் புலவர்

நிமிர்பவர்களின் உலகம்

ஒவ்வொரு முறை புத்தகக்  கண்காட்சி அறிவிக்கப்படும் போதும் வாட்ஸப்பில், முகநூல் செய்திகளில் ஒரு குறிப்பிட்ட வகை கிண்டல் பரவலாகிறது. ‘அச்சுத்தொழில் நுட்பம் வளர்ந்த பிறகு சரமாரியாக நூல்கள் வெளிவருகின்றன. கொத்துக்கொத்தாக நூல்களை வெளியிடுகிறார்கள். முன்பெல்லாம் யாரும் இவ்வளவு எழுதியதில்லை. அன்றெல்லாம் மிகக் கவனமாக பல ஆண்டுகளுக்கு ஒரு புத்தகம்தான் எழுதினார்கள். இப்போது எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் புத்தகங்கள் வெளிவருகின்றன.ஆகவே புத்தகக் கண்காட்சியில் தேவையற்ற நூல்கள் குவிந்துகிடக்கின்றன. வெளியாகும் நூல்களில் பெரும்பாலானவை குப்பைகள்தான். இது ஒரு அறிவுலகச் சிக்கல்’

இதைச் சொல்பவர் பெரும்பாலும் ’நல்லவேளை நான் நூல் எழுதவில்லை, நான் மட்டும்தான் புத்தகம் எழுதாதவன் போலிருக்கிறது, இத்தனை புத்தகங்கள் எழுதினால் வாசிப்பவன் நான் மட்டும்தானா?’ என்ற பாணியில்  தன்னை முன்நிறுத்துவார். புத்தகங்கள் எழுதவில்லை என்பதையே ஒரு தகுதி என முன்வைப்பார். அடுத்த படிக்குச் சென்று ‘நான் எதையும் வாசிப்பதில்லை’ என அதை தன் தகுதியாக முன்வைப்பவர்களும் உண்டு. உலகில் வேறு எங்காவது ‘நான் ஒரு மொண்ணை’ என தன்னை பெருமிதத்துடன் அறிமுகம் செய்துகொள்பவர்கள் உண்டா என தெரியவில்லை. எனக்கென்னவோ இந்த மொண்ணைகளை ஆவணப்படுத்தி அட்டவணை இடவேண்டும் என்று தோன்றுகிறது. விந்தையான இந்த உயிரினமாதிரிகளை பாதுகாக்க ஏதாவது அமெரிக்க பல்கலைக் கழகம் நிதிக்கொடையும் அளிக்கக்கூடும்

எதற்கு இத்தனை நூல்கள் என ஒருவன் பிலாக்காணம் வைத்தால் அந்த கூற்று உடனடியாக ஒரு ஏற்பை அடைவதையும் பார்க்கிறேன். ஏனேன்றால் இதை வாசிப்பவர்கள் எவரும் ஆழமாகப் படிப்பவர்களோ, இலக்கிய வரலாறும் இலக்கியச் சூழலின் இயல்பும் அறிந்தவர்களோ அல்ல. பெரும்பாலானவர்கள் மிக மேலோட்டமான சமூக வலைத்தள அரட்டையர். அவர்களுக்கு ஏற்கனவே வாசிக்கும் வழக்கம் இருக்காது. இயல்பாகவே புத்தகங்களைப்பற்றிய ஓர் ஒவ்வாமை இருக்கும்.

இதை நாம் கவனித்திருக்கலாம். வாசகர்களாகிய நாம் நூலகத்திற்குச் சென்று புத்தகங்கள் எடுக்கும்போது இயல்பாகவே பெரிய புத்தகங்களை நோக்கித்தான் கை நீளும். நான் சிறிய புத்தகம் என்பதனாலேயே பல முக்கியமான நூல்களை பல ஆண்டுகளுக்குத் தவிர்த்திருக்கிறேன். ஒரு புத்தகத்திற்குள் சென்று அமிழ்ந்து வாழ்ந்து நிறைவுற்று மீள்வதற்கான இடம் அதில் இருக்கவேண்டும் என்று நான் எண்ணுவேன். சிறிய புத்தகங்கள் என்னை ஏமாற்றுகின்றன என்ற எண்ணமே எனக்கிருந்தது. இதை இப்போது கூட நூலகங்களில் இளம் வாசகர்களின் மனநிலையாக இருப்பதைக் காண்கிறேன். இதுவே வாசிப்பவனின் இயல்பு.

வாசகன் வெறிகொண்டு பசித்திருக்கிறான். அவனுக்கு உள்ளே எத்தனை போட்டாலும் நிறையாத இடமிருக்கிறது. ஆகவே அவன் பெரிய புத்தகங்களை நாடுகிறான். மேலும் மேலும் புத்தகங்களை நாடுகிறான். ஒரு நல்ல வாசகன் நூலகத்துக்குச் சென்று அல்லது புத்தகக் கண்காட்சிக்குச் சென்று புத்தகங்களை பார்ப்பான் என்றால் பெரும்பரவசத்தை அடைவான். இவற்றையெல்லாம் எப்போது படிக்கப்போகிறோம் என்ற ஏக்கத்தையே கொள்வான். எப்படியாவது படித்துவிடவேண்டும் என்று வெறி எழப்பெறுவான். ஒவ்வொருமுறை நூலகத்திற்கு செல்லும்போதும் இன்றும் நான் அந்த ஆவேசத்தை அடைகிறேன்.

அது ஓர் அடிப்படையான மனநிலை. அறிவின் இயல்பு அதுதான் அது தன்னைத் தானே கட்டமைத்துக்கொண்டு, ஒன்றிலிருந்து ஒன்று தொட்டுப்பெருக்கி வளர்ந்துகொண்டே செல்வது. பருகுந்தோறும் விடாய் பெருகும் நீரொன்று உண்டு. உலகம் முழுக்க தொன்மங்களில் அந்த நீரைப்பற்றிய வெவ்வேறு வகையான கதைகளைக் காணலாம் அறிவென்பது அதுதான்.

நேர்மாறாக அறிவில் ஆர்வமற்றவர்களுக்கு புத்தகங்களின் அளவும் எண்ணிக்கையும் திகைப்பூட்டுகிறது. ஒரு பெரிய புத்தகத்தை பார்த்ததுமே இதை யார் படிப்பார்கள் என்று ஒருவன் கேட்கிறான் என்றால் அக்கணமே முடிவு செய்துவிடலாம், அவன் எப்போதுமே முதன்மை வாசகனாக ஆகக்கூடியவன் அல்ல. அறிவுக்களத்தில் அவனுடைய பங்களிப்பென ஏதுமில்லை. அதற்கான அடிபப்டை உளநிலையே அவனிடம் இல்லை. அவன் சும்மா, ஆசைக்கு ஒன்றிரண்டை கொறித்துவிட்டு, எளிமையான கருத்துக்களை உருவாக்கிக்கொண்டு, தனக்கென சிறு அடையாளங்களைத் தேடிக்கொண்டு அதில் ஒடுங்கி அமர்ந்துகொண்டிருப்பவன். அவனுடைய எல்லை அதுதான்.

சிறு குழந்தைகள் உணவைப்பற்றிக் கொண்டிருக்கும் உளநிலையைக் கவனிக்கலாம். பசித்து அமர்ந்திருக்கும் ஒரு குழந்தையிடம் உனக்கு எவ்வளவு உணவு வேண்டும் என்று கேட்டால் ’அவ்வ்வ்வ்வ்வளவு!!!” என்று கையைக் காட்டுகிறது. இதுதான் வாசகனுடைய மனநிலை. நான் யானையளவு என்று கையைக்காட்டி உணவைக் கோருவேன் என்று என் அக்கா அடிக்கடி சொல்வதுண்டு. யானைத்தீனி என்ற சொல் அதிலிருந்துதான் வந்தது என்று தோன்றுகிறது. என்னையை ஆனத்தீனி என்றே சிறுவயதில் அழைத்தனர். நெஞ்சில் இருக்கும் பசி அது. அந்தப் பசி பிறகு வாசிப்பில் திரும்பியது.

அளவற்ற பசியே ருசியை உருவாக்குகிறது. பஷீரைப் பற்றி கல்பற்றா நாராயணன் எழுதிய கட்டுரையில் ’எந்த இலையும் இனிக்கும் காட்டில் பஷீரின் ஆடு உலவுகிறது’ என்கிறார். அந்தத் தீராப்பசியாலேயே அனைத்து இலையும் இனிப்பாக ஆகும் வரம் கொண்டது அது. வாசகன் என நான் எண்ணுபவன் அத்தகையவனே. அவன் ஒருபோதும் புத்தகங்களின் எண்ணிக்கையை, அளவை பழிக்கமாட்டான். இன்னும் புத்தகங்கள் என்றே அவனுக்குத் தோன்றும்.

அமெரிக்காவின் பிரம்மாண்டமான புத்தக விற்பனைக்கடைகளில் நடந்துகொண்டு இருக்கையில் அலையலையாக வந்து கொண்டே இருக்கும் அந்தக் கடைகளின் வரிசை ஒருபோதும் முடியலாகாது என்றுதான் எனக்குத் தோன்றும். முடிந்ததுமே ஏமாற்றம் தான் எழும். சென்னை புத்தகக் கண்காட்சியைப் பார்க்கையிலேயே கல்கத்தா புத்தகக் கண்காட்சி இதைவிடப் பெரிது என்று சொல்லப்படுவதுதான் என் நினைவில் எழுகிறது. ‘இதையெல்லாம் யார் படிப்பார்கள்?’ என்ற அசட்டு கேள்வியை  என் அகம் கேட்டதில்லை. ஒவ்வொரு நூலுக்கும் அதற்கான வாசகன் இருப்பான் என்றுதான் எண்ணிக்கொள்கிறேன்.

வாசகன் இல்லை என்றே வைத்துக்கொள்வோம். அதனாலென்ன? ஒருவனுக்கு தன்னை வெளிப்படுத்தவேண்டும் என்று தோன்றுகிறது. அந்த வெளிப்பாட்டை பதிவு செய்யவேண்டும் என்று தோன்றுகிறது. அவன் அதை எழுதி பிரசுரிக்கிறான். எத்தனை புனிதமான உளவிசை அது! மானுடன் தோன்றிய காலம் முதல் இருந்துவரும் அடிப்படையான உந்துதல் ஒன்றின் வெளிப்பாடு அல்லவா அது? துளித்துளியாக மானுடம் தன் அறிவை சேர்த்து திரட்டி புறவயமாக ஒன்றாக்கிக் கொண்டே இருக்கிறது. அந்த மானுட அறிவின் பிரம்மாண்டப் பெருக்கில் ஒரு துளியென தானும் சேர விரும்புவதைப்போல மகத்தான பிறிதொன்றுண்டா என்ன?

அன்றி, வேறு எது பொருள் உள்ள செயல்? திரும்பத் திரும்ப ஒன்றையே செய்து பொருளீட்டுவதா? அதை பிள்ளைகளுக்கு எழுதி வைத்துவிட்டு செத்துத் தொலைவதா? அர்த்தமற்ற கட்டிடங்களைக் கட்டி எழுப்பி, அவற்றை வாழ்நாள் சாதனை என்று  எண்ணிக்கொள்வதா? சேர்த்து வைத்த பணத்தை வங்கிக்கணக்கில் அடிக்கடி எடுத்துப்பார்த்து மனம் மலர்வதா? என் எதிரியைவிட நான் ஒரு படி மேலாக ஆகவேண்டும் என்னும் விழைவால் இரவுபகலாக வேலைசெய்வதா? வெல்ல வெல்ல புதிய எதிரியை கண்டடைந்து காரட்டை தொடரும் குதிரைபோல நெஞ்சடைக்க வாழ்நாள் முழுக்க ஓடி களைத்து விழுந்து சாவதா? வேறெதை அர்த்தமுள்ள செயல் என்று சொல்வீர்கள்?

இங்கே மற்றவர்கள் என்னதான் செய்கிறார்கள்? ஏதேனும் அரசியல் தலைவரின் அதிகார வெறிக்கு காலாட்படையாக பின்னணியில் திரள்கிறார்கள். ஏதாவது மத அமைப்பின் உறுப்பினராக அடையாளம் தாங்கி அவர்கள் அளிக்கும் அத்தனை வெறிகளையும் ஏற்றுத் திருப்பிச் சொல்கிறர்கள். இரவுபகலாகப் பிள்ளைகளை வளர்த்து, பிறகு அந்தப் பிள்ளைகளிடம் நன்றியை எதிர்பார்த்து சாய்வு நாற்காலியில் சாய்ந்து பிலாக்காணம் வைக்கிறார்கள். வாய் ஓயாமல் எதைத் தின்னலாம், எந்த மருந்து எதற்கு நல்லது என்று பேசிப்பேசி மாய்கிறார்கள். அதெல்லாம் பொருள் உடைய ‘இயல்பு வாழ்க்கை’ என எடுத்துக்கொள்ளும் அற்பன் புத்தகம் எழுதுவதை கேலி செய்து பல்லைக்காட்டுகிறான். புத்தகங்களை பழித்து வாட்ஸப் சுற்று விடுகிறான்.

அறிவுச் செயல்பாடு மேல் அடிப்படை நம்பிக்கை கொண்ட எவனும் எந்நிலையிலும் நூலை நூல் வெளியீட்டை நூல் எழுதுபவனை ஏளனம் செய்ய மாட்டார்கள். அந்த ஏளனம் அடிப்படை அறிவுச் செயல்பாட்டுக்கு எதிரான உளம் கொண்டவர்களிடமிருந்து. அந்த அடிப்படையான உணர்வுநிலையைப் புரிந்துகொள்ள முடியாதவர்களிடமிருந்து எழுவது. நம் இயலாமையால்,

இவர்களுக்கு யார் சொன்னது பழைய கால எழுத்தாளர்கள் எல்லாம் குறைவாக எழுதினார்கள் என்று? ஆண்டுக்கு ஐந்துமுறை விக்கிப்பீடியாவைப் பார்ப்பவர்களுக்குக் கூடத் தெரியும். பழங்கால எழுத்தாளர்கள் எழுதிய அளவுக்கு இன்றைய எழுத்தாளர்கள் எவரும் எழுதவில்லை ,எழுதுவது மிகக்கடினம் என்று.

க.நா.சு எழுதிய நூல்களை, வெளியிட்ட கட்டுரைகளை, எழுதி வெளியிடாமல்  வைத்திருந்த கைப்பிரதிகளை தொகுக்கும் பணியில் ஈடுபட்ட தஞ்சை பிரகாஷ் அது எவராலும் செய்து முடிக்க முடியாத பணி என்று உணர்ந்ததை சாகித்ய அக்காதமி இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசைக்காக அவர் எழுதிய நூலில் குறிப்பிடுகிறார். பல ஆயிரம் கட்டுரைகள். வெளியிட்ட நூல்களே முன்னூறுக்கு மேல். ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளுக்குரிய கணக்கே இன்னும் தெரியவில்லை. அச்சில் வராமல், உள்ள நாவல்கள் கைப்பிரதியாக திருவாலங்காடு (4 பாகம், 1000 பக்கத்துக்கு மேல்), மால்தேடி, வக்கீல் ஐயா, ஜாதிமுத்து, சாலிவாஹணன், சாத்தனூர் போன்ற பதினைந்துக்கும் மேற்பட்ட நாவல்கள் உள்ளன என்கிறார். வல்லிக்கண்ணன் எழுதிய நூல்களின் பட்டியலைப் பாருங்கள். சி.சு.செல்லப்பா முதுமையில் எழுதிய நூல்களின் அளவைப் பாருங்கள்.

ஒப்புநோக்க நவீன இலக்கியவாதிகள் மிக குறைவாக எழுதுகிறார்கள். பழந்தமிழ் அறிஞர்கள் ஒவ்வொருவருடைய நூல்பட்டியலும் நூற்றுக்கணக்கில்தான் இருக்கின்றன. கருப்பங்கிளர் சு.அ.ராமசாமிப் புலவர் என்னும் பழந்தமிழ் ஆய்வாளரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை தெரியுமா? இன்று கிடைப்பவையே கிட்டத்தட்ட இருநூறு. எவையுமே ‘போகிறபோக்கில்’ எழுதப்பட்டவை அல்ல. இலக்கிய ஆராய்ச்சிகள், இலக்கண நூல்கள். அவர் உருவாக்கிய தமிழ்ப்புலவர் வரிசை என்னும் நூல் 31 பகுதிகள் கொண்டது. அகரவரிசையில் அத்தனை தமிழ்ப்புலவர்களையும் தொகுத்தளிப்பது. அது ஒன்றே ஒரு வாழ்நாள் சாதனை.

சென்ற தலைமுறை எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தையே வாழ்க்கை என பிறவிப்பணி என செய்தவர்கள். நாற்பது ஐம்பது ஆண்டுகாலம் ஒவ்வொரு நாளும் எழுதியவர்கள். அச்சகத்திலிருந்தே எழுதி பிழை நோக்கி, செம்மை செய்து வெளியிட்டவர்கள். பலர் தங்கள் நூல்களுக்காக அச்சகங்களையே நடத்தினார்கள். நூல்களை எழுதும் பொருட்டு இதழ்களிலும் அச்சகங்களிலும் பணி புரிந்தவர்கள் உண்டு. நூல் எழுதுவதைத் தவிர பிற வேலைகள் எதையும் செய்ய மாட்டேன் என்று சூளுரைத்து அதன்பொருட்டே கடும் வறுமையைத் தாங்கிக்கொண்டவர்கள் உண்டு, சு.சு.செல்லப்பா, வல்லிக்கண்ணன் போன்று பலர் அரசு வேலையைத் துறந்து முழுநேர எழுத்தாளராகி வாழ்நாள் முழுக்க அரைப்பட்டினியில் வாழ்ந்து எழுதினார்கள். வல்லிக்கண்ணன் திருமணம்கூட செய்துகொள்ளவில்லை.

மறைமலை அடிகளோ, மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளையோ எழுதிக்குவித்த தமிழாய்வுகளைக் காண்கையில் அவர்கள் எவருக்காக எழுதினார்கள் என்ற எண்ணம் சிலபோது நமக்கு எழும். ஏனென்றால் இன்று அவற்றில் 99 சதவீதம் நூல்கள் வாசிக்கப்படுவதில்லை. பெரும்பாலானவை கிடைப்பதுமில்லை. ஆனால் அவர்கள் ஓர் ஒற்றைப்பேரியக்கம். தமிழியக்கம் என்று இன்று நாம் சொல்லும் அந்த மரபுமீட்பு இயக்கம்தான் தமிழ் நூல்களை பிழை நோக்கி அச்சுக்குக்கொண்டு வந்தது. அவற்றுக்கு உரை எழுதியது. அவற்றை மிக விரிவாக பொதுக்களத்தில் அறிமுகம் செய்தது. அவற்றுக்கு அட்டவணைகளை விளக்கங்களையும் உருவாக்கியது. அவற்றை ஒப்புநோக்கி மதிப்பீடுகளைச் செய்தது. அவற்றிலிருந்து இலக்கிய வரலாறுகளை உருவாக்கியது. அதன்பொருட்டு பெரும் விவாதங்களை நடத்தியது. அவர்கள் இல்லையேல் தமிழனுக்கு மரபோ பண்பாடோ இல்லை. பள்ளிக்கூடத்தில் படிக்கக்கூட வரலாறு இல்லை.

அக்காலத்தில் தமிழறிஞர்கள் பெரும்பாலானவர்கள் தங்களுக்குள்ளேயே படித்து எழுதிக்கொண்டிருந்தார்கள் என்று நூல்களை வாசிக்கையில் தோன்றுகிறது. ஏனெனில் பெரும்பாலான நூல்களை இன்னொரு தமிழறிஞர் மட்டுமே படிக்க முடியும். ஆனாலும் குன்றாத ஊக்கத்துடன் அவர்கள் எழுதினார்கள். அவர்களின் பெரும்பாலான நூல்கள் இன்று மறைந்துவிட்டிக்கலா, பலநூல்கள் இன்று பயனற்றவையாக இருக்கலாம். மறைமலை அடிகள் எழுதிய நூல்களிலேயே மிஞ்சிப்போனால் ஐந்து நூல்கள் மட்டுமே இன்று வாசிப்புக்குரியவை. ஆனால் அவர் எழுதிய பிற நூல்களெல்லாம் பயனற்றவை அல்ல. அவை அன்று ஒரு மாபெரும் பொதுவிவாதத்தை உருவாக்கின. அவ்விவாதத்தின் உச்சத்திலிருந்தே பெரிய நூல்கள் உருவாயின.

நான் எப்போதும் சொல்வதுதான். மகாராஷ்டிராவே கிரிக்கெட் விளையாடினால்தான் சச்சின் டெண்டுல்கர் உருவாக முடியும். ஒட்டுமொத்தமான பெரும் அறிவியக்கங்களே வரலாற்றுச் சாதனைகளை உருவாக்க முடியும். அதன் உச்சத்தில் பேரறிஞர்கள், பெரும்புகழ்பெற்றவர்கள் இருக்கலாம். ஆனால் அவ்வியக்கத்தில் இணையும் ஒவ்வொருவரும் அதற்கு பங்களிப்பாற்றுகிறார்கள். அவ்வியக்கமே அந்தப்

தமிழில் தமிழ் மீட்பு இயக்கம், சைவ மீட்பு இயக்கம் சார்ந்து எழுதப்பட்ட நூல்களின் அட்டவணையை ஒருவர் ஒரு கலைக்களஞ்சியத்தில் சென்று பார்த்தாலே திகைத்து அமைதியடைந்துவிடுவார். கலைமகள் இரண்டாவது இதழில் அதில் எழுதப்போகிறவர்களுடைய ஒரு பட்டியல் அளிக்கப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ நூறு எழுத்தாளர்கள். அதில் பத்து எழுத்தாளர்கள்தான் இன்று விரிவாக வாசிக்கும் எனக்கே தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் எஞ்சியோரும் எழுதியிருக்கிறார்கள். கலைமகள் முன்வைத்த அறிவியக்கத்தில் அவர்களுடைய பங்களிப்பு உள்ளது. அவர்கள் ஒட்டுமொத்தமாக இணைந்துதான் அவ்வியக்கத்தை நிலைநிறுத்தினார்கள். அவ்வாறுதான் எந்த அறிவியக்கமும் நிகழமுடியும்.

அச்சுப்புத்தகங்கள் தோன்றிய பதினேழாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இலக்கியத்தைப் பார்க்கையில் எத்தனை ஆயிரம் நூல்கள் வந்திருக்கின்றன என்ற எண்ணம் எழுந்து பெரும்பரவசத்தை அளிக்கிறது. அத்தனைபேர் சேர்ந்து ஒரு பெரும் ஊர்வலம் போல அந்த சுடரை ஏந்திக்கொண்டு வந்திருக்கிறார்கள். அத்தனை பேர் சேர்ந்து ஒன்றாகி ஒரு கோபுரம் போல் மேலெழுந்து ஒரு சிலரைத் தூக்கியிருக்கிறார்கள். உலகுக்கே சிலரை காட்டியிருக்கிறார்கள். உலகம் முழுக்க பண்பாட்டுக்கும் இலக்கியத்திற்கும் வழிகாட்டியிருக்கிறார்கள். இன்று பலர் வாசிக்கப்படாமல் மறைந்திருக்கலாம். ஆனால் ஒவ்வொருவரும் அதில் பங்களிப்பாற்றியவர்களே

இன்று ஒப்புநோக்க எழுதுவதற்கான சூழல் இல்லை. இன்று ஒருவர் எழுதும்பொருட்டே வாழ முடியாது. எழுதுபவனை ஆதரிக்கும் வள்ளல்கள் இன்றில்லை. பாண்டித்துரைத் தேவரோ உமாமகேஸ்வரனாரோ சைவ ஆதீனங்களோ இன்றில்லை. இன்றைய மாபெரும் தொழிலமைப்புகள் எவையும் கலையிலக்கியத்துக்கு ஒரு காசுகூட கொடுக்க தயாராக இல்லை.அவர்கள் தங்கள் எப்பயனும் அற்ற சந்திப்புகளில் சாப்பிடும் சமோசாவின் பணம் இருந்தாலே போதும், தமிழில் பண்பாட்டுச் சாதனைகளை உருவாக்கிவிட முடியும். ஆனால் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் எவருக்கும் எந்தவகையான பண்பாட்டுப் பயிற்சியும் இல்லை. (கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பார்த்தால் நல்லி குப்புசாமி மட்டுமே ஒரே விதிவிலக்காக தெரிகிறார். குறிஞ்சிவேலனின் மொழியாக்கப் பணிகள் மற்றும் திசை எட்டும் இதழின் பணிகளுக்கு அவருடைய உதவி மதிக்கத்தக்கது. வரலாற்றில் பதிவுசெய்யப்பட வேண்டியது)

இன்று எழுத்தாளர்கள் ஆலைகளில் வேலை செய்கிறார்கள். அலுவலகங்களில் வேலை செய்கிறார்கள். அந்நிய நாடுகளில் வாழ்வை வீணடிக்கிறார்கள். அதற்கு மிஞ்சி தங்கள் எஞ்சிய நேரங்களைச் சேர்த்து நூல்களை எழுதுகிறார்கள் என்றால் அது அந்த அடிப்படையான விசையின் தீவிரத்தையே காட்டுகிறது. ஒருபோதும் அறிவியக்கம் அழிந்துவிடாதென்ற நம்பிக்கையை உருவாக்குகிறது. அதை எழுதுவதன் வழியாக அவன் அடைவதொன்றுமில்லை. வாசகப்பெருக்கம் இங்கில்லை. மதிப்புரைகள் கூட சிலசமயம் வராமல் போகலாம். பிறிதொரு எழுத்தாளன் அன்றி எவருமே தன்னைக் கவனிக்காமலாகலாம் என்று அவனுக்குத் தெரியும். ஆயினும் எழுதுவது என்பது எழுத்தெனும் செயலில் இருக்கும் பெரும் கவர்ச்சியால்தான். எந்த அடிப்படை விசை மனிதகுலம் முழுக்க வாசிப்பை நிலைநிறுத்தியிருக்கிறதோ அந்த விசைதான் அவனையும் இயக்குகிறது.அது தெய்வங்களை உருவாக்கியது.பண்பாட்டை கட்டமைத்தது. சமூக ஒருங்கிணைப்பை உருவாக்கியது. எது மனிதர்களை மானுடமென ஒன்றாகத் தொகுக்கிறதோ அந்த விசை தான் அது.

தமிழ் இன்று கல்விக்கூடங்களிலிருந்து அகன்று கொண்டிருக்கிறது. இன்று தமிழ் பேசுபவர்களே   பெருநகரங்களில் குறைந்து வருகிறார்கள். அடுத்த தலைமுறை தமிழ் படிப்பது அரிதினும் அரிதாகிவருகிறது. இச்சூழலிலும் இத்தனை நூல்கள் வருவதென்பது எந்த தமிழனுக்கும் உளநிறைவை அளிக்கவேண்டிய ஒன்றல்லவா? நம்பிக்கையும் நிறைவும் அளிக்கவேண்டிய ஒன்றல்லவா? அதில் ஒருவன் உளச்சோர்வு கொள்கிறான் என்றால், சலிப்புறுகிறான் என்றால், ஏளனம் செய்கிறான் என்றால் அவன் யார்?. அந்த உளநிலையை ஒரு வேடிக்கைக்காக கூட நுண்ணுணர்வுள்ளோர் பகிர்ந்து கொள்ளவேண்டியதில்லை. அது நம்முள் செலுத்தக்கூடிய ஒருவகை அகச்சிறுமை நம்மை மேலும் சிறியவர்களாக்குகிறது.

நீர்த்துளியை  வானம் போல நாம் ஒவ்வொரு திசையிலிருந்தும் அழுத்தி சிறிதாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். சூழலில் இருக்கும் சிறுமைகள், உலகியல் அற்பத்தனங்கள் நம்மை அழுத்தி சுருக்கிக்கொண்டிருக்கின்றன. நம் அகத்திலிருந்து எழும் விசையால் நம்மை விரித்து பெருகவைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இச்சூழலில் இதேபோன்ற சிறுமைகளுக்கு காது கொடுப்போமென்றால், வெறும் வேடிக்கைதானே என்று அவற்றை நம்மில் நிறைப்போமென்றால் நம்மை அறியாமலே நாம் அந்த அகச்சிறுமையை அடைய ஆரம்பிக்கிறோம். அவநம்பிக்கையும் கசப்பும் கொண்டவர்களாகிறோம்.

அந்த அவநம்பிக்கையையும் கசப்பையும் ஈட்டிக்கொண்டு என்ன செய்யப்போகிறோம்? முதுமையில்  அகம் சுருங்கி அமர்ந்து உலகை சபித்துக்கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கைக்காகவா அத்தனை கஷ்டப்பட்டு முயல்கிறோம்? அந்தச் சிறுமையை அத்தனை உழைத்து ஈட்டிக்கொள்ள வேண்டுமா? நாம் நம் காலகட்டத்து அறிவியக்கத்தின் பிரம்மாண்டத்துடன் நம்மைப் பொருத்திக்கொள்ளும்போது நாம் பெருகுகிறோம், திசைகள் என அகல்கிறோம், அகஅழுத்தம் கொள்கிறோம். நம் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். அதற்கான வாய்ப்பு நம் முன் இருக்கையில் நாம் ஏன் அற்பத்தனங்களை தெரிவுசெய்யவேண்டும்?

இங்கே பெரும்புகழ் பெரும் ஒரு நூலுக்கும் எவரேனும் படிக்காத ஒரு நூலுக்குமான வேறுபாடென்பது ஆயிரம் பிரதிகள் மட்டும்தான். ஒட்டுமொத்தமாக அனைவருமே எவருக்கும் தெரியாமல் ஒரு சின்ன சிமிழுக்குள் தான் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். இங்கு ஈட்டுபவனும் இழப்பவனும் எவரும் இல்லை. அனைவருமே அளிப்பவர்கள் மட்டுமே. அந்த தன்னுணர்வு இருக்குமெனில் இங்கிருக்கும் ஒவ்வொரு எழுத்தும், ஒவ்வொரு புத்தகமும், தன்னளவில் முதன்மையானது என அறிவோம். தமிழ் அறிவியக்கத்திற்கு ஒரு கொடை என உணர்வோம். ஆகவே புத்தக கண்காட்சிக்கு செல்லுங்கள். அங்கு வெளியிடப்பட்டு பரந்திருக்கும் பல்லாயிரம் நூல்களை வெறுமே பாருங்கள். அப்பெருவுணர்வில் திளையுங்கள். நம்முடைய கோயில், நமது தெய்வம் அதுதான்.

முந்தைய கட்டுரைபுத்தகக் கண்காட்சியில் நான்
அடுத்த கட்டுரைஅந்த ரோஜா- கடிதம்