கனவில் கேட்டது…

கார்லே மாபெரும் குடைவரை
கார்லே

அன்புள்ள ஜே,

நலம்தானே ? இன்று பல நாட்களுக்கு பிறகு ஒரு கிளாஸ் ஒயின் அருந்தி மதிய உறக்கம் . அதில் ஒரு கனவு . நீங்கள் சாரம் உடுத்தி லட்சுமி மணிவண்ணன் வீட்டில் அவருடன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் . உடன் சில வாசகர்கள். அவர்களில் ஒருவனாக நான். ஆனால் அது நாகர்கோவில் அல்ல . பனைமரங்கள் சூழ்ந்த செம்மண் படிந்த எங்கள் நெல்லை பூமி . உரையாடல் முடிந்த உடல் தாங்கள் பேருந்து பிடிக்க கிளம்புகிறீர்கள். வாசகர்கள் எல்லோரும் எழுகிறார்கள். நீங்கள் ஒருவர் போதும் என்கிறீர்கள். நான் குதித்துக்கொண்டு தங்களுடன் ஓடி வருகிறேன்.

தங்களுடன் கேட்கவேண்டும் என்று நான் மனதில் வைத்திருக்கும் கேள்விகளில் ஒன்றை கேட்கிறேன். பூர்வபவுத்தம் குறித்து தாங்கள் எழுதியது . இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெருமத கடவுள்களுக்கான சிலையோ அல்லது கோவில் இருந்ததற்கான தொல்லியல் தரவுகள் இருக்கின்றனவா என்ற கேள்வி உங்களிடம் கேட்டேன். உடனே உறக்கம் கலந்துவிட்டது . பதில் வராவிட்டாலும் நீங்கள் கனவில் வரும் நாள் எல்லாம் உற்சாகமான தினம்தான்.

அன்புடன்
கிஷோர்

கருடத்தூண் விதிஷா

அன்புள்ள கிஷோர்,

கனவுகளிலும் உரையாடல் தொடர்வது நல்ல விஷயம்தான். நான் என் ஆசிரியர்களுடனும் நண்பர்களுடனும் கனவில் நிறையவே உரையாடுவதுண்டு. (அதற்கு ஒயின் ஒரு குறுக்குவழி அல்ல)

உங்கள் கேள்விக்கான பதில். பெருந்தெய்வங்கள் என நீங்கள் உத்தேசிப்பவை எவை? சிவன்,விஷ்ணு, புத்தர், மகாவீரர்- இல்லையா?

எனில் நமக்கு பொமு 3 ஆம் நூற்றாண்டில், சந்திரகுப்த மௌரியர் காலத்தில் இருந்தே சிலைகளும் கோயில்களும் சைத்தியங்களும் கிடைக்கின்றன. விதிஷாவிலுள்ள கல்தூண் கொடிமரம் ஹிலியோடாரஸ் தூண் (Heliodorus pillar) என அழைக்கப்படுகிறது. இது பொமு 113 ஆம் ஆண்டைச் சேர்ந்தது (2013 ஆண்டுகள் தொன்மை) என கல்வெட்டுகள் வழியாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன் உச்சியில் கருடன் இருக்கிறான். விஷ்ணு ஆலயம் ஒன்றுக்கு அலக்ஸாண்டர் வழிவந்த கிரேக்க அரசப்பிரதிநிதி அளித்த கொடை அது. கல்வெட்டில் தெய்வங்களின் தெய்வமான வாசுதேவனின் ஆலயத்திற்கு அளிக்கப்பட்டது அந்த தூண் என பிராமி லிபியில் அமைந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது. அதாவது நீங்கள் குறிப்பிடும் பெருந்தெய்வம்

இச்சான்று விஷ்ணு வழிபாடும் விஷ்ணுவுக்கான கோயில்களும் இரண்டாயிரத்தி இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே மிகச் செல்வாக்காக இருந்துள்ளன என்பதற்கான சான்று.

மகாராஷ்ட்ராவிலுள்ள கார்லே பௌத்த விகாரம் பொமு 2 அல்லது 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அதாவது 2300 ஆண்டுகள் தொன்மையானது. மிகமிக அழகாக முழுமையாகச் செதுக்கப்பட்ட குகைவிகாரம் அது. அருகே உள்ள குகைகளான ஃபாஜா போன்றவையும் அதே காலகட்டத்தைச் சேர்ந்தவை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல் தொன்மையான புத்தர் சிலைகள் உள்ளன.

குஜராத்தில் பாலிதானா சமணர்களின் வழிபாட்டு மையம். அங்கே 2500 ஆண்டுகளாக ஆலயங்கள் இருந்ததை அகழ்வுகள் காட்டுகின்றன. இந்தியாவெங்கும் ,தமிழகம் உட்ப்ட சமணர்கள் தங்கிய இயற்கைக் குகைகள் உள்ளன அங்கே புடைப்புச் சிற்பங்களாக உள்ள தீர்த்தங்காரர்கள் பலர்.

சிலப்பதிகாரம் பொயு 2 ஆம் நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்டது. அதில் மணிவண்ணன் கோட்டம் போன்று பல பெருந்தெய்வக் கோயில்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. திருவரங்கம், வேங்கடம் போன்ற கோயில்கள் பேசப்படுகின்றன.

நமக்கு இன்று கிடைக்கும் பெரும்பாலான சிற்பங்களும் ஆலயங்களும் கல்லால் ஆனவை. கல்லில் கட்டிடங்கள் செய்யத் தொடங்குவது பொயு ஒன்றாம் நூற்றாண்டில்தான். உண்டவில்லி குகைகள்தான் தென்னகத்தில் தோன்றிய தொன்மையான குடைவரைகள். பொயு ஏழாம் நூற்றாண்டில்தான் தென்னகத்தில் கல்லில் கட்டிடங்கள் கட்ட ஆரம்பிக்கிறார்கள்.

அதற்குமுன் மரம், மண்ணில் கட்டப்பட்ட ஆலயங்கள் போர்களிலும் காலத்திலும் அழிந்துவிட்டன. சோழர்காலத்தில் சுடுமண்செங்கல் கோயில்கள் பெரும்பாலானவை கற்கோயில்களாக ஆக்கப்பட்டன. செங்கற்றளியை கற்றளியாக்குதல் பல்லவர், சோழர், பாண்டியர்களின் திருப்பணியாக ஐநூறாண்டுக்காலம் இங்கே நடைபெற்றது. ஆகவே அதற்கு முந்தைய ஆலயங்கள் கிடைக்க வாய்ப்பில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைபின்தொடரும் நிழலின் குரலும் ரெஜி சிரிவர்த்தனேயும்
அடுத்த கட்டுரைபுத்தகக் கண்காட்சி -கடிதங்கள்