புனைவுக்களியாட்டு- தொகுப்புகள்- கடிதங்கள்

புனைவுக் களியாட்டு நூல்கள் புத்தகக் கண்காட்சியில்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

புனைவுக்களியாட்டுச் சிறுகதைகளுள் மொழி எனக்கு மிகவும் பிடித்தமான கதை, நண்பர்களிடம் ஒருநூறு தடவையாவது சொல்லியிருப்பேன். சுக்கிரியிலும், சிறுகதைக்கூடலிலும் நண்பர்கள் இக்கதையை பேசியிருந்தார்கள். எளிய மொழியாலானது, பாத்திரங்களை மேலும் அணுகிக்காண்பிப்பது என்றெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தேன். பைபிளின் பாபேல் கோபுரக்கதையோடு கூட ஒப்பிட்டதுண்டு.

திடீரென தோன்றியது, அந்தக் கதையிலேயே அந்த அறையைப் பற்றிய பழங்கதை ஒன்றிருக்கிறது. அந்தக் குடும்பத்தின் பெண்ணொருத்தி தீவட்டிக் கள்வர்களின் மொழிக்கு செவிசாய்த்து வெளிவரும் நிகழ்வு. ஏன் என் மனம் இவ்வளவு நாளாக இந்த கிலுக்காம்ப்பெட்டியை அவளோடு சேர்த்துப் பார்க்கவில்லை என்று தோன்றியது. இதை உணர்ந்ததும் அந்தக்கதையின் மையமே இடம் மாறிவிட்டது. நானிக்குட்டிக்கு வெளியே நின்ற கள்வனின் மொழி புரிந்து வெளியே வருகிறாள், அவள் மற்றவர்களை காக்கவும்தான் வருகிறாள். ஏறத்தாழ ஒரு நாட்டார் தெய்வம்போல. இந்தக்குழந்தையும் மொழிக்கு செவி சாய்ப்பாள் என்று அங்கேயே உணராது கரடிநாயரைப்போலத்தான் பதறிக்கொண்டிருந்தேன். வெளிவந்தவள் எல்லோரையும் காப்பவளாகவும் ஆகிப்போகிறாள்.

தாமரைக்கண்ணன்
புதுச்சேரி

அன்புள்ள ஜெ

புனைவுக்களியாட்டுச் சிறுகதைகளில் நூல்களாக வந்த ஆறு தொகுப்புகளையும் வாங்கிவிட்டேன். இவற்றை ஒன்றாகச் சேர்த்து படிக்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன். புனைவுக்களியாட்டுக் காலகட்டம் ஒரு அபாரமான மன எழுச்சியின் தருணம். அப்போதிருந்த மனநிலை வேறு. ஒவ்வொன்றும் ஒரு உலகம். சீட்டுக்கட்டுகளை விரித்து விரித்து மந்திரவாதி காட்டுவதுபோல. அடுத்து என்ன அடுத்து என்ன என்று மனசு குதித்துக்கொண்டிருந்தது. ஆனால் தொகுப்புகள் அப்படி அல்ல. அவை ஒரே வகையான கதைகளின் தொகுப்புகள். எனக்கு நான் ஏற்கனவே சிந்தே முதலிய பல கதைகளை சரியாக வாசிக்கவில்லையோ என்ற எண்ணம் இருந்தது. அனலுக்குமேல் என்ற கதையை சமீபத்தில் வாசித்தபோது அதை புதிசாக வாசிப்பதுபோல இருந்தது. ஏனென்றால் புனைவுக்களியாட்டில் ஒரு கதை ஒரு மாதிரி. அந்த மனநிலை மாறுவதற்குள் அடுத்த கதை வந்துவிட்டது. இப்போது ஒரேவகையான கதைகளை தொகுப்பாக படிக்கும்போது ஒரு தொகுப்பு உருவாக்கும் ஒட்டுமொத்த மனநிலை எல்லா கதைகளையும் ஆழமாக உள்வாங்க வைக்கிறது.

எஸ்.பாலகிருஷ்ணன்

முந்தைய கட்டுரைவௌவால் தேசம் சோ. தர்மன்
அடுத்த கட்டுரைபின்தொடரும் நிழலின் குரலின் முன்னுரை