நிமிர்வு- கடிதங்கள்-2

நிமிர்பவர்களின் உலகம்

அன்புள்ள ஜெ., அவர்களுக்கு,

இன்று “நிமிர்பவர்களின் உலகம்” கட்டுரையில் படித்த வரிகள்…

“ஓர் எழுத்தாளனைப் பார்த்து மகிழ்வுடன் அருகே செல்லும் வாசகன், அவனிடம் ஓரிரு சொற்கள் பேசி படம் எடுத்துக்கொள்பவன், நூலில் கையெழுத்து வாங்கிக் கொள்பவன் இருக்கும் நிலை இலக்கியம் அளிக்கும் பரவசத்தில் ஒன்று. அந்த எழுத்தாளன் தன்னை நினைவில் வைத்திருக்கவேண்டும், தன்னை ‘மதிக்கவேண்டும்’ என்றெல்லாம் அந்த வாசகன் எதிர்பார்ப்பதில்லை. அது அவனுக்கு அவனே அளித்துக்கொள்ளும் வெகுமதி. இலக்கியத்தைக் கொண்டாடுவது அது.”…

இது முற்றிலும் உண்மை… என் அனுபவத்தில் இதுவே நிகழ்கிறது திரும்பத் திரும்ப.. உங்களை கோவையில் பல முறை வந்து தொலைவில் நின்று பார்த்துச் செல்பவன் நான்.. அதுவே ஒரு வெகுமதிதான்.. எழுத்து வழியாக வெளிப்படும் ஆளுமைகள், நனவிலும் அவ்வாறே இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு என்று தெளியும்போதுதான், வாசிப்பவன் வாசகனாக மாறத்தொடங்குகிறான..

அன்புடன்,

தயானந்த்

அன்புள்ள ஜெ

நிமிர்பவர்களின் உலகம் ஓர் அற்புதமான கட்டுரை. இங்கே எழுதுபவர்கள் வாசிப்பவர்கள் இருவருக்குமே ஓர் இலட்சியவாத அணுகுமுறை தேவையாகிறது. இல்லாவிட்டால் இங்கே செயல்பட முடியாது. நாம் எழுதியும் வாசித்தும் நமக்கு அப்பாற்பட்ட ஓர் உலகை உருவாக்கிக் கொள்கிறோம் என்பது எவ்வளவு அற்புதமான வார்த்தை. நாம் ஒருவரை ஒருவர் உணரும் தருணம்தான் அந்த சந்திப்புகள், புன்னகைகள், கைகுலுக்கல்கள்.

சுஜாதா தி.ஜானகிராமனைச் சந்தித்ததைப் பற்றி எழுதியிருப்பார். ஒரு மேடையில் இருந்து தி.ஜா. இறங்கிச் செல்லும்போது சுஜாதா அவரைப் பார்க்கிறார். ஒரு புன்னகை, அவ்வளவுதான். ஆனால் அதை பத்திரமாக வைத்துக் கொண்டேன் என்று சொல்கிறார்.

மறைந்த ஃப்ரான்ஸிஸ் கிருபா என் தோளில் தொட்டு தமிழினி ஸ்டால் எங்கே இருக்கிறது என்று கேட்டார். அந்த தொடுகை இப்போதும் என் தோளில் இருக்கிறது

செல்வக்குமார்

முந்தைய கட்டுரைஅந்த ரோஜா- கடிதம்
அடுத்த கட்டுரைரா.கிரிதரன் நூல்கள்