அந்த ரோஜா- கடிதம்

 

அன்பு ஜெயமோகன்,

தன்னறம் விருது வழங்கும் நாளன்று நானும் வந்திருந்தேன். காலை பத்து மணிக்கு வந்தபோது குமார் சண்முகமும், மணவாளனும் எதிர்கொண்டனர். அருகில் இருந்த டீக்கடையில் டீ சாப்பிட்டோம். வெளியே நின்று டீ கேட்டுக் கொண்டிருந்த யாசகர் ஒருவருக்கும் குமார் சண்முகம் டீ சொன்னார்.

டாக்டர் ஜீவாவின் நினைவில்லத்துக்கு நாங்கள் வரும்போது விழா துவங்குவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. உள்ளே வந்து நண்பர்களுடன் அமர்ந்து கொண்டோம். தேவிபாரதி, பார்ப்பதற்கு திருமண வரவேற்பு நிகழ்வின் புதுமாப்பிள்ளை போல இருந்தார். பற்றாக்குறைக்கு நீங்கள் அணிவித்த மாலை வேறு. புதுமாப்பிள்ளையேதான். விருது பெறும் நேரம், அவர் முகம் முழுக்க குதூகலம் நிரம்பிச் சொரிந்தது.

தேவிபாரதியின் கதைகளில் எனக்குப் பிடித்தது பிறகொரு இரவு. காந்தியைப் பற்றிய புனைவு என்பதாலேயே அதைப் படித்தேன். இன்றளவும் அது எனக்குப் பிடித்தமான ஒன்று. அவரின் ஆக்கங்களில் அக்கதையை மட்டுமே படித்திருக்கிறேன். சமீபமாய் தன்னறம் கொண்டு வந்திருந்த தொகுப்பின் வழியாகவே அவரின் முக்கியமான சிறுகதைகளை வாசிக்கும் வாய்ப்பு. பல கதைகளின் ஆழத்தில் தென்பட்ட இருண்மையை அவரின் விருது உரையிலும் காண முடிந்தது. வாழ்வை கடுஞ்சலிப்புடன் நேர்கொண்டு களைத்திருந்த அவரின் உரையில்.. குரல் தடுமாற்றத்தை விட மனத்தடுமாற்றமே மிகுந்திருந்தது. இப்படியான ஒரு நிகழ்வில் பேசுவது அவரே ஏற்றுக்கொள்ள முடியாத அல்லது நம்ப முடியாத ஒன்றாக இருக்கலாம். அப்படியான வாழ்வைத்தான் அவர் வாழ்ந்திருந்தார். இது என் வகையிலான ஊகம்.

தேவிபாரதியுடன் வந்திருந்த காலச்சுவடு கதிர்வேல் அண்ணனை நெடுநாட்களுக்குப் பிறகு சந்தித்தேன். அவரைச் சந்தித்து பல ஆண்டுகள் இருக்கும். ஈரோடு புத்தகக் கண்காட்சி ஒன்றில் எனக்கு அறிமுகமானவர். அவரும் தேவிபாரதியும் ‘தலைமறைவாளர்களாக’ இருந்தவர்கள் என்பதைத் தேவிபாரதியின் ஆவணப்படம்(தன்னறம்) வழியே அறிந்து ஆச்சர்யப்பட்ட நிலையில், அவருடனான சந்திப்பு. அவரைக் காலச்சுவடு விற்பனை முகவராக மட்டுமே எனக்குத் தெரியும். அவரின் புரட்சி முகம் எனக்கு ஆச்சர்யம் அளித்த ஒன்று.

ஆயுதப்போராட்டம்தான் புரட்சிக்கான சரியான வழிமுறை எனத் தமிழகத்தில் ஒரு அலை உருவாகி இருந்த காலகட்டத்தை இன்றைய நவஇளைஞர்கள் கேள்விப்பட்டிருக்கக் கூட வாய்ப்பில்லை. அக்காலகட்டப் பின்புலத்தைத் தனது சமீபத்திய நேர்காணலில் தோழர் தியாகு(சவுக்கு வலைக்காட்சியில்) புனைவைப்போல விவரித்திருப்பார். மிகச்சிறப்பான நேர்காணல். ’தோழர் புரட்சி சீக்கிரம் வந்திடும்.. நாம தயாரா இருக்கணும்” எனும் சகதோழர் தன்னிடம் சொல்லிக் கொண்டே இருந்ததைத் தியாகு பலமுறை குறிப்பிட்டுச் சிரிப்பார். அதைக்கொண்டு அப்போதைய புரட்சி இயக்கங்களின் உளநிலைத் தீவிரத்தை அனுமானிக்கலாம். ‘தலைமறைவு’ இயக்கங்களில் பங்குகொள்ள இளைஞர்கள் துடித்த காலகட்டம் அது. அக்காலச் சூழல் பற்றிய அனுபவங்களை தனது ஆவணப்படத்தில் தேவிபாரதி பகிர்ந்து கொண்டிருப்பார். அவை பற்றி கதிர்வேல் அண்ணனிடம் பேச நினைத்தேன். ஏனோ, பிறகு பேசிக்கொள்ளலாம் என விட்டு விட்டேன்.

புரட்சிக்குழுக்களில் இயங்கி வந்த பலரை நான் அவர்களின் முதுமைக்காலங்களில் சந்தித்திருக்கிறேன். அச்சந்திப்புகள் திட்டமிட்டு அமைந்தவை அல்ல. ஒருமுறை கவிஞர் புவியரசு அவர்கள் சொன்னதன் பேரில் புலவர் இராசியண்ணனைச் சந்தித்தேன். முருகவழிபாடு தொடர்பான பழைய நூல்களைத் தேடிக் கொண்டிருந்த காலகட்டம் அது. ஒருமணி நேரத்துக்கும் மேலாக என்னோடு உரையாடிக் கொண்டிருந்தார். அச்சந்திப்பு பற்றி நண்பர் ஒருவரிடம் பகிர்ந்து கொண்டேன். அப்போதே அவர் ஆதி எனும் பெயரில் புரட்சிக்குழுக்களில் இயங்கி வந்தவர் எனத் தெரிய வந்தது. அவரைப் பற்றி மேலதிகமாய்த் தகவல்களை அறிந்து கொஞ்ச நாட்கள் திகைத்திருந்தேன். புரட்சி நமக்கு முந்தைய தலைமுறையினரை எவ்வாறு ஆட்டிப்படைத்திருக்கிறது என்பதைப் பல நூல்களாகக் கொண்டு வரலாம். யாராவது செய்வார்கள் என நம்புவோம்.

பால்யகாலத்தில் எனக்கு முன்னோடிகளாக அமைந்த பலரும் புரட்சி இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை என என்னிடத்தில் தொடர்ந்து சொல்லி வந்திருக்கின்றனர். புரட்சிக்காக நாம் நம்மை அர்ப்பணிக்கத் தயங்கக் கூடாது என வாய்கிழியக் கூவவும் செய்திருக்கின்றனர். அவர்களில் பலரின் வாழ்வைக் கடந்த இருபது வருடங்களாகக் கவனித்துப் பார்த்தேன். வாய்ச்சொல் வீரர்களாக மட்டுமே இருக்க அவர்கள் விரும்புகின்றனர் எனப் புரிந்தது. இவர்களாலேயே போலி நாத்திகர்களும், போலிப்புரட்சியாளர்களும் உருவாகி இருக்கக்கூடும் என்றும் யோசிக்கத் தலைப்பட்டிருக்கிறேன். புரட்சிக்குழுக்களின் மீது உளப்பூர்வமாய் ஈர்ப்பு கொண்டு அதற்குத் தங்களை ஒப்பு கொடுத்த பலரின் வாழ்வு அவர்களுக்கு மேலும் சலிப்பையும் கசப்பையுமே அளித்து இருக்கிறது. அப்படியான அலுப்பையும் சலிப்பையுமே தேவிபாரதியிடம் நான் பார்த்தேன்.

உங்கள் உரையின்போது தஸ்தாயெவ்ஸ்கியைக் குறிப்பிட்டீர்கள். முழுக்க முழுக்க இருண்மையை எழுதியவனின் பாக்கெட்டில் இருந்த ரோஜாவையும் தொட்டுக் காட்டினீர்கள். அச்சமயத்தில் மார்க்ஸ் என் நினைவுக்கு வந்தார். கட்சி கம்யூனிசமும், புரட்சிகரக் குழுக்களும் அறிமுகப்படுத்தி இருந்த மார்க்ஸ் ஒரு புனிதப்புரட்சியாளர். அவரால் எல்லாம் முடியும். அவரில்லாமல் எதுவும் சாத்தியம் இல்லை. மார்க்ஸ் இல்லாவிட்டால் நாமெல்லாம் நாசமாகப் போய் இருப்போம். இப்படியான கருத்துப்பரவல்களால் மார்க்ஸை நான் தவறாகவே புரிந்து கொண்டிருந்தேன். 1818-இல் இருந்து துவங்கும் அவர் வாழ்வின் தருணங்களை நானே தேடிக் கண்டடைந்த போது குறுகிப் போனேன். ஒரு தத்துவ மாணவனாக, இதழியலாளராக, களச்செயல்பாட்டாளராக.. அவரின் செயல்பாடுகளை விளங்கிக் கொண்டபோது நெகிழ்ந்து போனேன்.

மார்க்ஸை இந்நவீனகாலப் பின்புலத்தில் வைத்துப் பார்க்கக் கூடாது. அவர் வாழ்ந்த கால-வெளியில் இணைத்தே நோக்க வேண்டும். நாம் அதைச் செய்யத் தவறவிடுகிறோம். அவரை நான் தேடிச்சென்ற போது இலண்டன் தெருக்களில் கூட்டம் கூட்டமாகச் செல்லும் ஆயிரக்கணக்கான மனிதர்களைக் கண்டேன். வாடி வதங்கிய உடல்களாய் அவர்கள். எதற்காக உழைக்கிறோம் என்பது தெரியாமலே ஒரு சலிப்புச்சுழற்சியில் சிக்கிக் கொண்ட அவலம். வாழ்வுக்காகவே வாழ்வையே தொலைக்கும் அபத்தம். என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. ஏதாவது செய்தாக வேண்டும் என முடிவுசெய்தேன். அப்போது அங்கு ஒரு குரல் கேட்டது. “உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள். நம்மிடம் இழப்பதற்கு இனி எதுவும் இல்லை. அடைவதற்கு ஒரு பொன்னுலகம் காத்திருக்கிறது” எனும் அக்குரல் மார்க்ஸ் அவர்களுடையது. அச்சமயத்தில் அக்குரல் இப்போது நமக்குச் சொல்லப்படுவது போன்ற சர்வாதிகாரப் புரட்சிக்குரல் அன்று; சகமானுடர்களின் அவலங்களைத் தீர்க்க முனையும் நம்பிக்கைக்குரல்.

தொழிலாளர்களிடம் நம்பிக்கையையும் கனவையும் விதைப்பது பகுத்தறிவுக்குத்தகுமா என உட்கார்ந்து விவாதித்துக்கொண்டிருக்கும் இன்றைய காம்ரேட்களை நோக்கி அவர் தனது குரலை எழுப்பவில்லை. தோழர் என்றால் என்னவென்று அர்த்தம் தெரியாத, தாங்கள் யாரென்று அறிய இயலாத ஒரு துயரச்சுழலில் சிக்கித்தவிக்கும் அன்றாடங்காய்ச்சிகளை நோக்கியே தனது குரலை மார்க்ஸ் எழுப்பினார். அக்குரலை எழுப்பும் சூழலில் மார்க்ஸின் வாழ்வும் துன்பத்திலேயே இருந்தது. கடுமையான வாழ்வுச் சிக்கல்களுக்கு நடுவே பொன்னுலகம் பற்றிய கனவை நம்பிக்கையாகத் தனது சகமனிதர்களிடம் பகிர்ந்து கொண்டவராகவே மார்க்ஸை நான் பார்த்தேன். அவரை வாசிக்கத் தலைப்பட்டிரா விட்டால், அவர் பாக்கெட்டில் வைத்திருந்த ரோஜாவைப் பார்க்கத் தவறியவனாகி இருப்பேன். இன்றைக்கு, மார்க்ஸ் என் முன்னோடிகளில் மிக முக்கியமானவர். அவர் வாழ்வுச் சம்பவங்களைத் தொடர்ந்து நானாகத் தேடி வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு புனைவாக்கத்தைப் போல பெருந்திகைப்புகளைக் கொண்டிருக்கிறது அவரின் வாழ்வு. இப்போதுதான் துவங்கி இருக்கிறேன். இன்னும் நிறைய இருக்கிறது, வாசிக்க.

மூலதனம் எனும் பிரதியை ஒரு பொருளாதாரப்பிரதியாக அல்லது அரசியல் பிரதியாகவோதான் நாம் புரிந்து வைத்திருக்கிறோம். உண்மையில், அது வரலாற்றுப் புனைவுப் பிரதி. சமகால முதலியப்(முதலாளித்துவம் எனும் பதமே தவறானது. முதலியம் அல்லது முதலீட்டியம் என்பதே சரி) போக்குகளை விளங்கிக் கொள்ள முற்பட்ட போது எழுந்த ஆக்கமே மூலதனம். அதன் அத்தியாயங்கள் மேம்போக்காக கணக்கியல், பொருளாதாரத் தரவுகளைக் கொண்டதாகவே புலப்படும். ஊன்றிக் கவனிக்கும் ஒருவருக்கு அதன் சாரமாய் அவர் முன்வைக்கும் மனித உறவுகள் மீதான அன்பும் நம்பிக்கையும் புலப்படும். ”மனிதர்களுக்கு இடையேயான உறவு எப்படி பொருட்களுக்கு இடையேயான உறவாகத் திரிபானது” என்பதற்கான வியாக்கியானமே மூலதனம். மார்க்சியத்தைக் கற்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது இதைத்தான்.

மார்க்ஸ் தொழிலாளர்கள் மட்டும் அந்நியப்பட்டிருப்பதாகச் சொல்லவில்லை. முதலாளிகளும் சந்தையால் அந்நியப்பட்டு இருப்பதைச் சுட்டிக் காட்டி இருக்கிறார். மேலும், இருவருயுமே அந்நியப்படுத்தலில் இருந்து விடுவித்தாக வேண்டும் என நினைக்கிறார். அதையே தனது நூல்களின் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார். எஸ்.வி.ராஜதுரையின் அந்நியமாதல்(க்ரியா வெளியீடு) நூலை வாசகர்கள் ஒருமுறையேனும் வாசிக்க வேண்டும். கட்சி மார்க்சியர்களால் குறுகித் தவித்த மார்க்சை விரிவாக்கி அளித்த பெருமை தமிழ்ச்சூழலில் ராஜதுரையைச் சாரும். ஜார்ஸ் தாம்சனின் மூன்று முக்கியமான நூல்களையும் எஸ்.வி.ஆர் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை, முதலாளித்துவமும் அதன் பிறகும் மற்றும் மனித சாரம் போன்ற அந்நூல்களை மார்க்சிய அடிப்படைகளைக் கண்டுகொள்ள விரும்பும் ஒருவர் கட்டாயம் வாசிக்க வேண்டும். எஸ்.வி.ஆரோடு கோ.கேசவன் மற்றும் தியாகு போன்றோரின் ஆக்கங்களும் மார்க்சியத்தை நுணுக்கிப் பார்க்க உதவும்.

மார்க்ஸ் 1818-ல் பிறந்து 1883-ல் மறைந்தார். அவருக்கு பின்பு பிறந்து(1821) முன்பே இறந்தார்(1881) தஸ்தாயெவ்ஸ்கி. இருவரின் வாழ்விலும் இருண்மைத் தருணங்களே அதிகம். அதற்காக அவர்கள் இருண்மையையே நமக்களித்து நம்மை மேலும் சோர்வடைய வைக்கவில்லை. அவர்கள் கையளித்த நம்பிக்கையைப் பகுத்தறிவு கொண்டு பார்க்கும்போது அவை காலாவதி ஆகி இருப்பதாகத் தோற்றம் தரலாம். இன்றைய நடைமுறைக்குப் பொருந்தாத ஒன்றாகவும் தெரியலாம். உள்ளுணர்வில் தரிசிக்கும் போது அவை என்றும் கையளிக்கப்பட வேண்டிய நம்பிக்கை ரோஜாவாகப் புலப்படும். இங்கு நம்பிக்கை என்பது அறிவு, அறியாமை எனும் இருசொற்களையும் கடந்த பதமாகும்.

முருகவேலன்

கோபிசெட்டிபாளையம்.

முந்தைய கட்டுரைஎதற்கு இத்தனை நூல்கள்?
அடுத்த கட்டுரைநிமிர்வு- கடிதங்கள்-2