ஜேன் ஆஸ்டன் -பி.கே.பாலகிருஷ்ணன்

இங்கிலாந்தில் உள்ள ஒரு கிராமத்தில்தான் ஜேன் ஆஸ்டன் பிறந்தார். பாதிரியார் ஒருவரின் ஏழு குழந்தைகளில் இவர் ஆறாவது குழந்தை. பிறந்தது 1773ல். 1818ல் இறந்தும் போய்விடுகிறார். அகவாழ்க்கையின் சில ஒளிரும் அம்சங்களை தவிர்த்துவிட்டுப்பார்த்தால், நினைவுகூறத்தக்க சம்பவங்கள் எதுவும் 45வது வயதில் இறந்த, திருமணமாகாத அந்த பெண்ணின் வாழ்க்கையில் இல்லை. நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறந்து, மாற்றமே இல்லாத அதே சூழலில் வாழ்ந்து, ஊர் ஆட்களால் எந்தவகையிலும் வம்பு பேசமுடியாதபடியான சர்வசாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து வந்த ஜேன் ஆஸ்டன்  ஏதோ உடல்நலக் கோளாறால் அற்ப ஆயுளில் இறந்தார். திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதுதான் அவரது வாழ்க்கையின் ஒரே தனித்தன்மை. ஜேன் ஆஸ்டனின் நாவல்களில் வரும் சமூகச் சித்திரத்தை வைத்து பார்த்தால், அன்று எல்லா பெண்களும் திருமண வாழ்க்கையின் இன்பத்திற்காக பார்வதியைப்போல தவம் இருந்திருக்கிறார்கள். அன்றைய சமூகச்சூழலில் பெண்களின் வாழ்வின் தொடக்கமும், முடிவும்  திருமணம்தான். அப்படிப்பட்ட சமூகத்தை எந்த வைராக்கியமும் இல்லாமல் வெடிச்சிரிப்புடன் சித்தரித்த ஜேன் ஆஸ்டன்  திருமணமாகாதவர் என்பது எவ்வளவு பெரிய தனித்தன்மை! ஜேன் ஆஸ்டனுக்கு நிரந்தரமான நோய்தாக்குதல்கள் எதுவுமே இல்லை. நல்ல தோற்றமும், இனிமையான இயல்புகளும் அவரது உடன்பிறப்புகளைப்போல. தன் மானசீகமான மகள்களான எலிசபெத் பென்னெட் (Elizabeth bennette), எம்மா உட் ஹவுஸ் (Emma Woodhouse), ஆன்னி எலியட் (Anne Elliot)  இவர்களின் சுய விருப்பம், இயல்புகளில் உள்ள சிக்கல் இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு அவர்களுக்கு பிடித்தமான கணவனை அமைத்துக்கொடுத்த ஜேன் ஆஸ்டன் , தனக்கு என ஒரு கணவனை காணமுடியாமல் இறந்துவிட்டார். இது இலக்கியத்தின் முக்கியமான முரண்நகையாளர்களின்(ironist) தனிவாழ்க்கையில் விதியின் விளையாட்டாக அமைந்த முரண்நகை(irony) என்றுதான் தோன்றுகிறது.

 

பெண்கள் திருமணம்செய்துகொள்ளாமல் வாழவேண்டும் என்றால் அதற்கு காதல் சார்ந்த பகற்கனவுகள் என்ற விரைவுத்தேரிலிருந்து சிதறிவிழுந்து தங்களை புண்ணாக்கிக்கொள்ள வேண்டும். தன் ’காமதேவன்’ எங்கே?எங்கே? என்று எந்த அரவமும் இல்லாமல் தீவிரமாக அரற்றியபடி, தன்னைத்தேடி வந்த அப்பாவிகளை அவமதித்து, இறுதியாக கையில் எந்த ஒன்றும் எஞ்சாமல் வைராக்கியத்தின் கப்பரையை ஏந்தி பத்ரகாளியைப் போல ருத்ரதாண்டவம் ஆடும் கன்னிப்பெண்கள் இருக்கிறார்கள். என்ன இருந்தாலும், முதிர்கன்னிகள் என்பவர்கள் சந்தைமுனையில் பைபிள் பிரசங்கம் போல புனிதமான குமட்டல்தான். அவர்களில் வைராக்கியத்தின், வெறுப்பின் பாவனைகள் பலவகையில் வெளிப்படும் அவ்வளவுதான். அது பலவீனமான தன்னிரக்கத்திலிருந்து தொடங்கி எரிக்கும் உலகவெறுப்பு வரை பரவிக்கிடக்கும் ஒரு  மனநிலை. எப்படிப்பார்த்தாலும் அந்நிலையில் அன்போ, இணக்கமோ, மகிழ்ச்சியோ இருக்காது என்று உறுதியாகச் சொல்லமுடியும். வாழ்க்கை அனுபவத்தின் இந்த பாலையில் வழிதவறி மாட்டிக்கொள்ளும் பல பெண்கள் அதன் கடுமையான வெம்மையின் மயக்கத்தில், ஆண்களைப்போல வாழ்க்கையை மாற்றிக்கொள்வதையும் காண்கிறோம். ஆனால் ஆண்களின் தன்மதிப்பும் பெண்களுடையதைப் போலவே எளிமையான, ஆர்ப்பாட்டங்கள் அற்ற அடக்கமான மனநிலையில்தான் உருவாகிறது. அதனால் ஆண்களாக தங்களை உருமாற்றிக்கொண்டதாக சுய ஏமாற்றத்தில் மகிழ்ச்சியடையும் இந்த வீரநாயகிகள் ஆபாசமான இருப்புகளாக பரிணாமம் அடைகிறார்கள்.

இதன் மறுஎல்லையில் சாத்வீகமான, அபலைப் பெண்கள். பிறப்பிலேயே குரூரமான தோற்றம் போன்ற காரணங்களால் திருமணம் சாத்தியமற்ற கன்னிப்பெண்களில் படர்ந்து எரியும் தன்னிரக்கம் உலகைக்காப்பாற்ற வேண்டிய பொறுப்பாக, பரிவாக, கண்ணீராக மாறுகிறது. அவர்களின் இதயத்தில் ’நிறைவேறாத ஆசை’ முள் போல தைத்திருக்கிறது. ஆனால், அந்த முள் தன்னைத் தவிர உலகிலுள்ள மற்ற எல்லா மனிதர்களிலும் தைத்திருக்கிறது, அவர்கள் அனைவருமே அதை முள்கிரீடம் என சூடியிருக்கிறார்கள் என்று  கற்பனைசெய்துகொள்ளும் கன்னிப்பெண்களின் உலகம் அழகுணர்வும், மகிழ்ச்சியும் அற்ற இருண்ட உலகம். ஆனால், இங்கு ஒரு திருமணமாகாத பெண் விஷயத்தில் அப்படி எதுவுமே நடக்கவில்லை. வஞ்சம், வைராக்கியம் போன்ற  மனநிலைகள் உலகில் இருப்பதைக்கூட அவர் அறிந்திருக்கவில்லை. அவர் தன் சொந்த தந்தையை நேசித்தார். தன் சொந்த சகோதரர்களை, அவர்களின் மனைவிகளை நேசித்தார். எல்லாவற்றையும்விட தன் சொந்த சகோதரி கசாண்ட்ராவை(Cassandra) நேசித்தார். தன்னுடைய சுற்றுப்புறம், தன் சமூகச்சூழல் இவற்றுடன் இயைந்து எந்த ஆரவாரமின்றி உற்சாகமாக வாழ்ந்தவர் ஜேன் ஆஸ்டன். சமூகத்துடனான தனிமனித உறவு குலையும்படியான நிலைக்கு ஜேன் ஆஸ்டன் நகரவே இல்லை. பொதுவாக ஒரு மனிதனின்  தனித்தன்மைகளை அவனது தனிவாழ்க்கையிலும், குணாதிசய அமைப்பிலும் காண முடியும். ஆனால் நாம் எதிர்பார்க்கும் தனித்தன்மைகள் எதுவுமே ஜேன் ஆஸ்டனின் வாழ்க்கையில் இல்லை என்பதுதான் அவரின் வாழ்க்கையின் தனித்தன்மை. கவனிக்கவேண்டிய எதுவுமே இல்லாத மிகச்சாதாரணமான மனநிலை அபூர்வமாக சிலசமயம் அசாதாரணமான ஏதோ ஒன்றின் உறைவிடமாக ஆவதுண்டு. தன் சொந்த அம்மாவோ, குழந்தையோ துர்மரணப்பட்டுக்கிடப்பதை திடீரென காணும் ஒருவன் தன் வழக்கமான நிலையிலிருந்து இம்மிகூட பிசகாமல் அந்த தருணத்தில் எதிர்வினையாற்றுகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த ‘சாதாரணத்தன்மை’யை நீங்கள் எப்படி வகைப்படுத்துவீர்கள்? ஜேன் ஆஸ்டனின் வாழ்க்கையின், அவரது மனதின் சர்வசாதாரணத்தன்மை கிட்டத்தட்ட அதே மாதிரிதான்.

இந்த செயல்பாட்டை யோசித்துப்பார்ப்பது சுவாரஸியமான விஷயம். வாழ்க்கை அனுபவங்கள் சுத்தமாகவே இல்லாத, சுயஎள்ளல் நிறைந்தவரான ஜேன் ஆஸ்டன்  ஏதோ சில நாவல்களை எழுதினார். ஒருவன் வாழ்க்கை அனுபவங்களின் மூட்டையை சுமக்காமல் இலக்கியம் என்ற ஆலயத்தின் நுழைவாயிலுக்கு சென்றால், இலக்கியத்தின் புரோகிதர்கள் ஒரு பரிகாசமான சிரிப்புடன் அந்த வாழ்க்கை அனுபவங்கள் என்ற பொதிமூட்டையை சுமக்காமல் அங்கு நுழைந்திருக்கும் பைத்தியக்காரனை அன்றும் இன்றும் வழிமறித்து நிற்பார்கள். அதுவும் ஜேன் ஆஸ்டன் என்ற ‘பட்டிக்காட்டு’ பெண்ணைப்போல இவ்வளவு சுருங்கிய அனுபவங்கள் கொண்ட வேறெதாவது வாழ்க்கை இருக்கிறதா என்ன? ஜேன் ஆஸ்டனுக்கு பெரும்பாலான வாழ்க்கை அனுபவங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒழுக்கில்  இயல்பாகவே விலக்கப்பட்டன என்பதுதான் சங்கடமான உண்மை. பெண் என்று சொன்னவுடன் காதல் என்ற சொல்லும் அதன் வேறுவேறு அர்த்தங்களும் நம் மனதில் உடனே தோன்றுகின்றன. 19ம் நூற்றாண்டின் நிலப்பிரபுக்களின் ஒழுக்கநெறிக்கு கட்டுப்பட்ட ஜேன் ஆஸ்டனுக்கு காதல் சார்ந்த அனுபவங்கள் ஒன்றுகூட இல்லை. மனித இயல்புகளின், மனிதனின் பண்பாட்டுப்பரப்பின் கருவறைத்தெய்வமான ‘காமம்’ பற்றிய எந்த அனுபவமும் இந்த பெண்மணிக்கு இருப்பதை காண முடியவில்லை. திருமணவாழ்க்கையின் தோசை போன்ற காமமோ, திருமணத்திற்கு அப்பால் இருக்கும் உணர்வுகள் கொப்பளிக்கும் உலகில் காமம் கிடைக்கும் கடைகளிலுள்ள பல்வேறு திண்பண்டங்களின் மிச்சம் மீதிகள். பாவம், இப்படி எதையும் ஜேன் ஆஸ்டன் சுவைத்துப்பார்த்ததில்லை.

ஆனால், ஜேன் ஆஸ்டனின் வாழ்க்கை அனுபவங்களில் உள்ள ’இல்லாமை’களின் பட்டியல் இத்துடன் முடிந்துவிடுவதில்லை. நடுத்தரவர்க்கத்தினர் நிறைந்த அந்த உள்கிராமத்தில் வயது முதிர்ந்த, திருமணமாகாத பெண் ஒருத்தியின் தினசரி வாழ்க்கை என்பது விலக்கப்பட்டவைகளால், செய்யக்கூடாதவைகளால் நிறைந்தது. அதனால் ஜேன் ஆஸ்டனின் வாழ்க்கை என்பது செறிவான அனுபவங்களை அடைய விதிக்கப்பட்டது அல்ல. ஒரு திருமணமாகாத பெண் சமூகத்தின் அவமதிப்பிற்கு உள்ளாகாமல், தன்மதிப்புடன், புழங்கக்கூடிய இடங்கள் மிகமிக குறைவு. இளைஞர்களுடன் பழகுவது என்பது திருமண நோக்கம் கொண்ட காதல் மட்டுமாகத்தான் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இளைஞர்களுடனான வெறும் நட்புறவு பெண்ணுக்கு விலக்கப்பட்டிருந்தது. இதற்கெல்லாம் அப்பால், செல்வி ஜேன் ஆஸ்டனின் வாழ்க்கை என்பது என்றுமே சொந்த கிராமம், குடும்பம் அது சார்ந்த வட்டம் மட்டும்தான். இப்படியான வாழ்க்கை வாழும் ஒரு ஜீவனுக்கு நாவல் எழுதியே தீரவேண்டும் என்று தோன்றினால் அதற்கான தடைகள் வேறு சில இருக்கின்றன.

நாவல் எழுதுவது இருக்கட்டும்- நாவல் வாசிப்பதுகூட நல்ல குலப்பெண்களுக்கு அன்று அவமரியாதையான செயல். (அவ்வாறான அவமரியாதை பற்றிய சித்திரம் ஜேன் ஆஸ்டனின் Northanger  Abbeyயிலேயே காணமுடியும்). மானம், மரியாதையுடன்  பெண்களை வளர்க்கும் பெற்றோர் தன் சொந்த பெண் நாவல் வாசிப்பதை சம்மதிப்பதில்லை. ராட்க்ளிஃப் (Miss radcliff) போன்ற ’அவமரியாதையான’ பெண்கள் த்ரில்லர் நாவல்கள் எழுதி அன்று சர்ச்சைக்குள்ளாயினர், பணம் சம்பாதித்தனர்; அப்படி நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் நாவலெழுத்து என்பது மாண்புள்ள குடும்பங்களில் விலக்கப்பட்ட விஷயம் என்றுதான் நான் சொல்லவருகிறேன். ஒரு பொழுதுபோக்கிற்காக நாவல்கள் எழுதுவது உண்டு என்றாலும் ’நான் மாண்புள்ள மற்ற பல வேலைகளை செய்து வாழும் கௌரவமான மனிதன்தான்’ என்று vanity fair நாவலை எழுதிய தாக்கரே ஆணையிட்டு சொல்லி மதிப்பை காப்பாற்றிக்கொண்ட காலம்தான் அது. பாழாய்போன குடும்பவாழ்க்கையின் சலிப்பை வெல்ல நோட்டு புத்தகங்களில் மலைமலையாக எழுதிக் குவிக்கப்பட்ட நாவல்களை தன்மானத்தையும், குடும்ப கௌரவத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்காக ஆண்களைப்போன்ற புனைபெயர் வைத்து பிரசுரித்த ப்ராண்டி சகோதரிகள் (Emily Bronte) காலகட்டம். கிட்டத்தட்ட அதே காலத்தில்தான் தன் வாழ்க்கையை வைத்து நாவல் எழுதுவதற்கு எந்த அருகதையுமெ  இல்லாத ஜேன் ஆஸ்டன் நாவல் எழுதினார். செல்வி ஜேன் ஆஸ்டனின் ’விலகல்தன்மை’ ஆஸ்டன் குடும்பத்திற்கு பொதுவாகவே உள்ள இயல்புதான் என்றுதான் தோன்றுகிறது. அந்த ‘விலகல்தன்மை’ இல்லாவிட்டால் வீட்டுச்சூழலில், பொழுதுபோக்கிற்காக என்றாலும் கூட, குடும்பங்களில் மறுக்கப்பட்ட ஒரு கலையை முயற்சித்துப்பார்க்க வீட்டில் இருப்பவர்கள் சம்மதித்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால், இந்த குழப்பங்களையெல்லாம் கடந்து அந்த பெண் நாவல் எழுதினார். அன்றைய சூழலில் ரிச்சர்ட்ஸன் (Samuel Richardson) போன்றவர்களின் நாவல்களில் உள்ள மிகையுணர்ச்சி (sentiment), ராட்கிளிஃப் (Miss Radcliff) போன்றவர்களின் பரபரப்பு, மர்மம் போன்ற கூறுகள் அன்றைய வாசகனின் ரசனையை புயல்போல ஆட்கொண்டிருந்தது. இந்த பின்னணியில் இந்த இரண்டு பிரபல முறைகளையும் (மிகையுணர்ச்சி, மர்மம்) பகடிக்குள்ளாக்கும்  ‘சாதாரணக்கதைகளை’ ஜேன் ஆஸ்டன் எழுதினார். கண்ணீர் சிந்த வைக்கும் கடுமையான உணர்வெழுச்சிகளை கறாராக தன் புனைவுக்கு வெளியே நிறுத்திய, மர்மமும் பரபரப்பும் ஒரு இடத்தில்கூட இல்லாத வெறும் கதைகள். அதனால் அன்று பதிப்பகத்தார் ஜேன் ஆஸ்டனின்  ’pride and prejudice’ நாவலை பதிப்பிக்க மறுத்துவிட்டனர்.

பி.கெ பாலகிருஷ்ணன்

ஜேன் ஆஸ்டன் ஏன் நாவல் எழுதினார் என்பதற்கு ஒரே ஒரு விளக்கம்தான் அளிக்கமுடியும். அவர் பிறப்பிலேயே ஒரு நாவலாசிரியர் தான். அந்த பெண்மணியின் கூடவே பிறந்த ’மேதைமை (genius)’ என்ற அம்சத்தால் அவர் எங்கே பிறந்திருந்தாலும், எந்த சூழலில் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருந்தாலும் கலைப்படைப்பு வழியாக தன் ஆன்மாவை வெளிப்படுத்திவிட்ட நிறைவை அடைந்திருப்பார். ’O’ போன்ற சுருங்கிய வட்டத்தில் வாழ்ந்த, வாழ்க்கை அனுபவங்கள் சுத்தமாகவே இல்லாத சுயஎள்ளல் நிறைந்த ஜேன் ஆஸ்டன் நான்கு குடும்பங்களின் அன்றாட வாழ்க்கைமுறையை மட்டும்  அடிப்படையாகக்கொண்டு எழுதிய வீட்டுவிஷயங்கள் மட்டுமே கொண்ட நாவல்கள் உலக இலக்கியத்தின் விந்தையான இயல்பு கொண்ட நாவல்களாக ஆனதற்கான பதில் ‘மேதைமை(genius)’ என்ற ஒற்றைச்சொல்லில் இருக்கிறது. உலக இலக்கியத்தின் மகத்தான நாவலாசிரியர் யார்? இந்த கேள்விக்கான பதில் வாசகர்களின் வெவ்வேறான அபிப்பிராயங்களைப் பொறுத்து மாறக்கூடியதுதான். தங்கள் அனுபவம் சார்ந்த எல்லை, இலக்கிய ரசனை இவற்றைப் பொறுத்து பலர் பல பெயர்களை சொல்லலாம். ஆனால் உலகின் மிக சிறந்த ஆளுமைகொண்ட நாவலாசிரியர் யார்? எந்தவகையிலும் போலிசெய்ய முடியாதபடியான தனியாளுமை சார்ந்த நாவலை யார் எழுதியிருக்கிறார்? இந்த கேள்விக்கு பதில் ஒன்றுதான் – ஜேன் ஆஸ்டன். ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன் வால்டர் ஸ்காட்டின்(walter scott), பைரனின்(Byron),நெப்போலியனின் காலத்தில் வெளிவந்தவை ஜேன் ஆஸ்டனின் நாவல்கள். அந்த காலகட்டத்திற்கு பிறகு இங்கிலாந்து, ஏன் உலகமே பெரிய மாற்றத்திற்கு உள்ளானது. இன்று கிளாஸிக்குகளாக மாறிய பெரும்பாலான நாவல்கள் இந்த மாற்றத்திற்கு பிறகுதான் எழுதப்பட்டன. கிளாசிக் நாவல்கள் இன்றும் ஆர்வத்துடன் வாசிக்கப்படுகின்றன. ஆனால், உங்களால் சமகாலத்தில் வெளிவந்த நல்ல நாவலை வாசிக்கும் அதே சுவாரஸியத்துடன் நல்ல ஒரு கிளாசிக் நாவலை வாசிக்க முடியுமா? ஜேன் ஆஸ்டனின் கலைப்படைப்புகளின்  தனித்தன்மையை இங்குதான் உணரமுடியும். மனதிற்கு நெருக்கமான சமகால இலக்கியத்தை வாசிக்கும் சுவாரஸியத்துடன் ( ஒரு கிளாசிக்கை வாசிக்கிறோம் என்ற பிரக்ஞையை, மதிப்பை நம்மில் ஏற்படுத்தாமல்) செல்வி ஜேன் ஆஸ்டனின் படைப்புகளை நாம் இன்று வாசிக்க முடியும். கிளாசிக் நாவல்களின் உயர்ந்த சிம்மாசனத்தில் ஏறி கௌரவமான இடத்தை பெற்றுக்கொள்ளாமல், எல்லா காலங்களிலும் ஜேன் ஆஸ்டனின் நாவல்கள் மட்டும்தான் சமகால ரசனையில் முதன்மையான இடத்தைப் பெறுகின்றன.

தமிழில் அழகிய மணவாளன்

முந்தைய கட்டுரைகோவையில்..
அடுத்த கட்டுரைஇரா.முருகனின் ’மிளகு’