அறிவியல் சிறுகதைகள் -கடிதங்கள்

 அன்புள்ள ஜெ

நான் உங்கள் சிறுகதைகளை இப்போதுதான் தொட்டுத்தொட்டு வாசித்துக் கொண்டிருக்கிறேன். அறிவியல்சிறுகதைகளிலுள்ள பித்தம் ஓர் அற்புதமான கதை. அது ஒரு ரியலான உலகைச் சொல்கிறது. எல்லாமே யதார்த்தம். ஆனால் அறிவியல்புனைவும்கூட. அப்படி ஓர் அறிவியல்புனைவை எழுதுவதுதான் உண்மையான சவால் என நினைக்கிறேன்.

அந்தக்கதையின் ஆழமே தங்கம் -இரும்பு என இரண்டுக்கும் இடையே உள்ள முரண்பாடுதான். தங்கமாக உலகையே மாற்றவேண்டும் என்னும் துடிப்புதான் அதில் சாராம்சம். அது ஆன்மிகமான ஓர் உண்மையைச் சொல்கிறது

அந்த தங்கத்தின் கீற்று சிலருக்கு கிடைக்கிறது. வந்து வந்து மாயம் காட்டுகிறது. நான் நினைக்கிறேன். தங்கம் வந்திருந்தால் பண்டாரம் எனன் செய்திருப்பார்? அப்படியே கிளம்பிச்சென்று சித்தர் ஆகியிருப்பார்

செந்தில்குமரன்

 

வணக்கம். தங்களின் ஐந்தாவது மருந்து வாசித்தேன்.. வாசகர்களின் கடிதங்கள் வழிதான் கதைகளைப் பிடிக்கிறேன்.. ஈர்த்துக் கொண்ட கதை….

தளவாய் எனும் சோலைச் சித்தரின் உயர் மனநிலைக்கு எத்தனை நோபலும் இணை கிடையாது.. 100 ஆண்டுகளுக்குப் பிறகு  எனது கதிரியக்க மருந்தே எய்ட்ஸ் வைரஸ் பல்கிப் பெருக காரணமாகும் எனும் உண்மையை உணர்ந்து,  தனது கண்டுபிடிப்பையே வெளியிட மறுக்கும் அந்த மனநிலை மலைக்க வைக்கிறது.. இது சாத்தியமா.. சாத்தியமே.. அவர் சித்தர் மரபர் அல்லவா.. சாதாரண நபருக்கு சாத்தியமில்லை…. அலோபதி வைத்தியத்தில் கூட இன்று மனசாட்சி மருத்துவர்கள் உள்ளனர்.. ஆகையால் சித்தர் மரபில் நோபல் போன்ற புகழ்ச்சிகளைப் புறக்கணிப்பது ஆச்சர்யம் இல்லை….

சித்த வைத்தியம் என்பதை ஏதோ காலத்தால் பின்தங்கிய ஒன்று, கடந்த நூற்றாண்டுகளில் ஒளிந்துக் கொண்டிருக்கிறது என எண்ணினேன்.. அதில் இவ்வளவு  காலத்திற்கு ஏற்ப புதுப்பித்தல்களா… போகர், அஜீவத்தை ஜீவமாக்குகிறார். அதாவது குரங்கு ரத்தம்  மனித சிறுநீர் கலவையில் எய்ட்ஸ் மருந்து காண்கிறார்.. பிறகு மாம்பழச்சித்தர், ஈயம் தங்கம் கலவையில் அடுத்த கட்ட எய்ட்ஸ் மருந்தைக் காண்கிறார்….பிறகு வரும் தளவாய், கதிரியக்க மருந்தென அடுத்தக் கட்டத்திற்குப் பாய்கிறார். தொடர் சவால்களுக்கு ஏற்ப தொடர் ஆராய்ச்சிகள்..வைரஸ்க்கு பெரிய நெருக்கடி தருகிறார்கள். இனி சித்த வைத்தியம்  காலத்திற்கு பொருந்தாத வைத்தியம் என்ற எண்ணம் வராது.. அப்படியொரு மனநிலை பொது புத்தியில் உண்டென்பது அறிந்ததே. என்னதான் ஆராய்ச்சி வெற்றிகள்  கண்டாலும், ஐந்தாவது மருந்தென நிரந்தர மருந்தைச் சிந்திக்கும் சித்த மனம் அதற்கு வைரஸோடு ஒத்துப் போதல் எனும் தீர்வு தரும் இடத்தில்தான் சித்த வைத்தியம் தான் எவ்வளவு பெரிய ஆள் என்பதைக் காட்டுகிறது.

வைத்தியத்தோடு தொடர்புடைய, ஆயுர்வேதக் கட்டுரைகள் தங்களுடையதை வாசித்தவை நினைவில் எழுகின்றன…. நோய் காரணமென ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்க ஆயுர்வேதம் நோயாளிமின் மனநிலையே முடிவான காரணம் என சொன்னது பெரிய திறப்பு… அடுத்து ஆரோக்கிய நிகேதனம் நாவலைத் தாங்கள் அறிமுகப்படுத்தி இருந்தீர்கள்.. நாவலை ஒரு முறை வாசித்து விட்டேன்.. மறுமுறை வாசிக்க தயாராகி வருகிறேன்… அலோபதி ஆயுர்வேத முட்டல் மோதல்களைப் பேசும் படைப்பல்லவா.. ஆயுர்வேதம் உண்மை மருத்துவம் என்பதும், அலோபதி நிறைய நாடகம் போடும் வைத்தியம் என்பதை மனம் அறிந்தது அந்த படைப்பில்.

இப்படி சிறந்த சிகிச்சை முறைகள் கொண்டது நம் மண்.. சித்த வைத்தியத்தை மேலும் புரிந்து கொள்ள, அதன் சேவை குணத்தை, அறப் பொதிவை அறிய ஐந்தாவது மருந்து உதவியது

முத்தரசு

வேதாரண்யம்

முந்தைய கட்டுரையுவன் வருகை…
அடுத்த கட்டுரைபொன்னுலகம்- சுரேஷ் பிரதீப்