தந்தை மகன் உறவும் இரு படைப்பாளிகளும் —2

நீல பத்மநாபனின் எழுத்து மிக நேரடியானது. இலக்கிய உத்தி என அவர் எதையும் செய்வதில்லை. அவருடைய இலக்கிய உத்தி என்பது நனவோடை. ஆனால் அது அவருடைய உளம் இயங்கும் இயல்பான வழிமுறை மட்டுமே. அவருடைய நாவல்களில் வரலாறு இருப்பதில்லை. தத்துவமும் இருப்பதில்லை. ஆகவே படிமங்களோ கருத்துருவகங்களோ இல்லை.அவை சாதாரணத்துவத்தின் கலை, அல்லது அன்றாடத்தின் கலை என்று வகுக்கத்தக்கவை.

உண்மையில் தமிழில் நீல பத்மநாபனைப் போல சலிப்பூட்டும் இன்னொரு எழுத்தாளர் இல்லை. இயல்பாக, எந்த அசாதாரண நிகழ்வுகளும் இல்லாமல் ஒழுகும் அவருடைய நாவல்களை பொறுமைகாத்தபடியே வாசிக்கவேண்டும். சிலநாட்கள் ஓர் இடத்தில் நேரடியாக வாழ்ந்த அனுபவம் அவற்றிலிருந்து கிடைக்கும். ஓர் ஆஸ்பத்திரியில் பத்துநாள் இருந்ததுபோல. எப்போது முடியும் என்னும் அலுப்புடன் காத்திருந்து நாள்கள் தீர்வதுபோல.

ஆனால் பெரும் பரபரப்புடன் வாசித்த பல நாவல்கள் அப்படியே நினைவில் இருந்து மறைந்துவிடுகின்றன. ஒரு தடையம்கூடஎஞ்சாமல். காமம், வன்முறை என கொப்பளித்த நாவல்கள்கூட துளியும் மிஞ்சாமலாகின்றன. குறிப்பாக இந்த அறுபது வயதில். ஆனால் நீல பத்மநாபனின் நாவல்களில் அத்தனை கதாபாத்திரங்களும் நேரில் அறிந்தவர்களாக நினைவில் வாழ்கிறார்கள். சொல்லப்போனால் நீல பத்மநாபனில் இருந்து தொடங்கி அவர்களை நானே விரிவாக உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். உறவுகளில் வரும் அப்பாவை நான் உருவாக்கி வைத்திருக்கும் விதம் நீல பத்மநாபன் நினைப்பதைவிட விரிவானது. இப்போது எழுந்து திருவனந்தபுரம் சென்றால் அவரைப் பார்த்துவிடலாமென்று தோன்றும்படி உயிருள்ளது.

நீலபத்மநாபன் தன் கதாபாத்திரங்களாக தன்னை உருவகித்துக் கொள்பவர். ஆகவே அவை பெரும்பாலும் தன்வரலாற்று நாவல்கள். அந்த தருணத்தில் அவர் என்ன உணர்ந்தாரோ அதை பெரும்பாலும் எந்த பாவனையும் இன்றி, எந்த அழகுறுத்தலும் இன்றி, எந்த கதைச் சட்டகமும் இன்றி நேரடியாக சொல்ல முயல்வார். அவருடைய நாவல்கள் எல்லாமே அத்தகையவை. மேலும் துல்லியமான தன் வரலாரான உறவுகள் அவ்வாறுதான் அமைந்திருக்கிறது. உறவுகள் புனைவென்பதை விட முற்றிலும் நேர்மையான உளப்பதிவு ஆவணம் என்றே சொல்லவேண்டும்.

தந்தை உடல்நலமற்றிருக்கும் செய்தியை அறியும் கதாநாயகன். முதலில் அடையும் உணர்வு செலவுக்கு என்ன செய்வது என்பது தான். தொடர்ந்து எத்தனை நாள் விடுப்பு தேவைப்படும் என்பதுதான் அவன் உள்ளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. பிறகு அதைப்பற்றி குற்ற உணர்வு அடைகிறான். தந்தையின் மரணப்படுக்கை அருகே பதினெட்டு நாட்கள் இருக்கும் அவன் அவரிடமிருந்து தன் உள்ளம் விலக்கியது என்ன ஏன் அவரை அகற்றினோம் என்று எண்ணுகிறான்.

வயதுக்கு வந்தபிறகு தந்தையிடமிருந்து ஒரு தொலைவை இயல்பாக உருவாக்கிக்கொண்டவன் அவருடைய சொற்களை செவி கொள்ளாதபடி தன்னை ஆக்கிக்கொண்டவன். இறுதியாக அவர் உடல்நலம் பற்றி சொல்வதைக்கூட பொருட்படுத்தாதவன். மிகுந்த உணர்வு வீச்சுடன் தந்தையை நோக்கித் திரும்பி வந்து அவரைக் கண்டடைகிறான். அவர் வழியாக தனக்கொரு மாபெரும் உறவு வலை உருவாகியிருப்பதை அதில் ஒருவனாக மட்டுமே தான் இருப்பதை உணருகிறான். தன்னை ஒரு தனி மனிதனாக வகுத்துக்கொள்ள முயன்றவன், உறவு பெரும்பின்னலிலுள்ள ஒரு சிறு கண்ணி மட்டுமே தான் என்றும், அக்கண்ணி தன் தந்தையிடமிருந்து தனக்கு வந்ததென்றும், தன்னிடமிருந்து தன் மைந்தருக்குச் செல்லும் என்றும் உணருகிறான்.

தன்னுணர்விலிருந்து பொதுமை உணர்வு நோக்கிச் செல்லக்கூடிய பதினெட்டு நாட்கள் குற்றஉணர்வு, விலக்கம், நெகிழ்வு, கண்டடைதல், வகுத்துக்கொள்ளுதல், கடந்து செல்லுதல் என பல படிநிலைகளில் அவனுடைய உணர்வுகள் மாறிவருவதை அந்த பதினெட்டு நாட்களின் உள ஓட்டங்களாக பதிவுச் செய்திருக்கிறார் நீல பத்மநாபன்

இது அவன் தன்னை பாசமான மைந்தனாக உருவகப்படுத்தி முன்வைக்கும் செயற்கையான முயற்சியும் அல்ல. தந்தையை புனிதப்படுத்தி தியாகியாக்கும் முயற்சியும் அல்ல. ஆனால் அவரை அவன் கடவுளாக்கியே தீரவேண்டும். மூதாதையரின் பெருநிரையில் கொண்டு வந்து அமரவைத்தாக வேண்டும். மாலை போட்டு ஊதுவத்தி வைத்து வணங்கியாக வேண்டும். அது இந்தியாவில் ஒவ்வொரு சராசரிக்  குடும்பத்திலும் நிகழ்வது. அந்தச் சராசரி நிகழ்வின் உளவியல் என்ன என்றுதான் இந்த நாவல் ஆராய்கிறது.

அந்த தெய்வமாக்கல் நிகழ்வதற்கான பல படிநிலைகளை இந்நாவல் விளக்குகிறது. அவனடையும் குற்ற உணர்வு, அதிலிருந்து சென்றடையும் தன்னிலையும், அதன் விளைவான தன்விளக்கங்களும், அத்தன்னிலையை கொண்டுசென்று அவன் பொருத்திக்கொள்ளும் உறவுவலை. அந்த உறவுவலை மாபெரும் மரபென ஆவது. அம்மரபின் முகமென தந்தை மாறுவது. இந்த நுண்ணிய பாதையே இந்நாவலில் உள்ளது. தந்தை இறந்தபிறகு நாவல் முடிகிறது. மேலும் நாற்பத்தொன்றாவது நாள் மரபான முறையில் நீர்ச்சடங்குக்குப் பிறகு அவர் தெய்வமாகிவிடுவார். அவ்வண்ணமே நீடிப்பார்.

தமிழில் தந்தை தெய்வமாவதைப்பற்றிய உள பரிணாமத்தின் மாபெரும் சித்திரம் என்று உறவுகள் நாவலைச் சொல்லலாம்.  அதை மிக மெதுவாக, மிக மிக எதார்த்தமாக வந்தடைந்த நாவல் இந்தக் கோணத்தில் படிப்பவர்களுக்காக மட்டுமே உகந்ததாக இருக்க முடியும். அதை சுந்தர ராமசாமிக்கு எழுதினேன். மறுநாள் எஸ்.எல்.பி பள்ளி மைதானத்தில் அவரைச் சந்தித்து விரிவாகப் பேசினேன். அந்திவெயிலில் நடந்தபடி நான் பேசிக்கொண்டே சென்றேன். கொந்தளிப்புடன், சீற்றத்துடன், பின்னர் கண்ணீருடன்

அன்று இத்தனை தெளிவாக இதை நான் யோசிக்கவில்லை என்றாலும் எனக்கும் என் தந்தைக்குமான உறவைப்பற்றி மிக விரிவாக சுராவிடம் கூறினேன். ‘தெய்வமாக ஆக்கப்பட்ட தந்தை செரிக்கப்பட்ட உணவு போல. குற்றவுணர்வாலோ அல்லது வேறேதேனும் காரணத்தாலோ அவ்வண்ணம் ஆகாத தந்தை செரிக்கப்படாத இரும்புக்குண்டு போல உள்ளே இருந்து நோயென்று ஆவார். உயிர்ப்பலி கொள்வார். நீல பத்மநாபனின் நாவல் அந்த தெய்வமாக்கலின் படிகளை அற்புதமாகச் சொல்கிறது.

‘ஆனால் இன்னொசென்ஸ் என்பது நாவலாசிரியனின் தகுதி அல்ல’ என்று சுந்தர ராமசாமி சொன்னார். ‘அப்படியென்றால் ஒரு மனநோயாளியின் வாக்குமூலமும் கூட இலக்கியமாக ஆகிவிடக்கூடும்’. நான் அதை மறுத்தேன். நவீனத்துவம் இலக்கியவாதியை அறிஞனாக, ஆய்வாளனாக எண்ணுகிறது. இலக்கியவாதி வெறும் ஊடகமே. தன் ஆழுளம் வெளிப்பட தன்னை கருவியாக்கிக் கொள்பவன். தன்னை அதற்கு ஒப்பளிப்பவன், அதுவே பின்நவீனத்துவ நிலைபாடு. அதற்கு கள்ளமின்மை என்பது மிகமிக உதவியான ஒன்றுதான்

ஆனால் அது ஓர் எளிய வாக்குமூலம் அல்ல. அதில் மொழி உள்ளது. இலக்கிய வடிவம் உள்ளது. அவையிரண்டும் பண்பாட்டால் உருவாக்கப்ப்ட்டவை. ஓர் எளிய வாக்குமூலத்தில் அவையிரண்டும் இல்லை. ஆகவே அது இலக்கியம் அல்ல. உண்மையில் மொழி பலவகையான பாவனைகளையே அளிக்கிறது. வடிவம் கூறவந்ததை மறைக்கிறது. அவற்றைப் பற்றிய தன்னுணர்வே இல்லாமல் தன்னை அளிப்பதும், எந்த தடையுமின்றி தன் அகம் தன் புனைவில் திகழவிடுவதும் பெரும் படைப்பூக்கம். அறிந்து எழுதிய நூலை விட ஆழமானது அறியாமல் எழுதிய நூல். இலக்கியம் உருவாவது  மொழியும் வாழ்வும் ஒன்றாகும் அறியாக்கணத்தில்தான் என நான் சொன்னேன்.

வழக்கம்போல எனது கருத்துக்களை சுரா ஏற்றுக்கொள்ளவில்லை. ’ஐரோப்பியப் பார்வையின் இரக்கமற்ற புறவயத்தன்மை, அதன் அறிவியல் அணுகுமுறை இந்திய உள்ளத்தை சீண்டுகிறது. அதை வெல்வதற்காக இந்தியா போட்டுக்கொள்ளும் பாவனைகள் தான் இவை’ என்று மிக எளிதாக அதைக் கடந்து சென்றார். வழக்கம்போல அது நவீனத்துவதற்கும், அதன் முடிவுக்காலகட்டத்தில் தோன்றி தன்னனுபவம் வழியாக அதைக் கடந்து செல்லும் இன்னொரு காலகட்ட எழுத்தாளனுக்குமான உரையாடலாக மாறி முடிவுற்றது.

இக்கட்டுரையை நான் எழுதவேண்டியிருப்பது ஏனென்றால் அந்த உரையாடல் நிகழ்ந்து சிறிது காலத்திற்குப் பிறகு சுந்தர ராமசாமி அவருடைய புகழ் பெற்ற நாவலான குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என்னும் நாவலை எழுதினார். அதில் அவருடைய தந்தை எ.ஆர்.சுந்தரம் ஐயர் உருமாறியிருக்கும் விந்தை அந்த உரையாடல்களை என் நினைவில் தொகுத்துக் கொள்ளச் செய்தது. 2004ல் என் குறிப்புகளில் அதைப்பற்றி எழுதியிருக்கிறேன். சமீபத்தில் அக்குறிப்பு கையில் சிக்கியது.

நான் பதினைந்து ஆண்டுகளாக சுந்தர ராமசாமியிடமிருந்து அவரது தந்தையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். எஸ்.ஆர்.எஸ் என்ற பெயரில் அவருடைய எல்லா நாவல்களிலும் வந்து கொண்டிருக்கும் எஸ்.சுந்தரம் ஐயர் சுந்தர ராமசாமியால் ஒரு குறிப்பிட்ட வகையில் வரையறுக்கப்பட்டவர். குற்றாலத்தில் அருவிநீரில் கல் விழுந்து சிலர் பலியான செய்தி கேட்டதும் பிராமணாள் யாரும் அதில் உண்டோடோ என்று கேட்டவர் அவர் என்று திரைகள் ஆயிரம் கதையில் அவரைப்பற்றி கேலியாக பதிவு செய்கிறார்.

ஜே.ஜே.சில குறிப்புகளில் வரும் எஸ்.ஆர்.எஸ் ஓர் ஓவியனை உயிருடன் பார்ப்பதே ஜே.ஜே.வரைவதை பார்க்கும்போதுதான். பக்கத்தில் வந்த அப்பா போன்ற பல கதைகளில் வரும் எஸ்.ஆர்.எஸ் லௌகீகமானவராக, வணிக ஈடுபாடு மட்டுமே கொண்டவராக, மகனைப்பற்றிய கவலைகள் நிறைந்தவராக, உலகியலில் தேர்ச்சி இல்லாமல் பெரும்பதற்றத்துடன் முட்டி மோதுபவராக சித்தரிக்கப்பட்டிருக்கிறார். பழமையானவராகவும் கலை இலக்கிய சிந்தனைகளிலும் அடிப்படை புரிதல் இல்லாதவராகவும் மட்டுமே ஜே.ஜே. சிலகுறிப்புகள் உட்பட அனைத்து நாவல்களிலும் எஸ்.ஆர்.எஸ் வருகிறார். அவருக்கும் சுந்தர ராமசாமிக்குமான உறவு மோதல் மட்டுமே கொண்டது. அவருடைய நினைவுக்குறிப்புகளில் கூட அவை பதிவாகியிருக்கின்றன.

சுந்தர ராமசாமி சொன்ன ஒரு நினைவு. இலக்கிய ஆர்வம், அரசியல் ஈடுபாடு காரணமாக சுந்தர ராமசாமி வணிகத்தில் தோற்றுவிடுவார் என அவர் அப்பா அஞ்சுகிறார். அதை அவர் அம்மா சுந்தர ராமசாமியிடம் சொல்ல ராமசாமி தொழிலில் இறங்கி தந்தையைவிட வெற்றிகரமாக அதை நடத்துகிறார். ஆனால் அவர் அப்பா சீண்டப்படுகிறார். கடைக்கு சுந்தர ராம்சாமி இல்லாதபோது வந்து பலவகை பிரச்சினைகளை உருவாக்குகிறார். ‘நல்லவேளை இறந்துவிட்டார். இல்லையேல் சுதர்சனில் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கியிருப்பார்’ என்று கிருஷ்ணன் நம்பி கேலியாகச் சொன்னார் என்று சுந்தர ராமசாமி சொன்னார்.

ஆனால் தன்வரலாற்றுத் தன்மை கொண்டதாக கருதப்படும் ’குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ எஸ்.ஆர்.எஸ்ஸின் ஆளுமை முழுமையாகவே மாற்றி புனையப்பட்டுள்ளது. அவர் தன் வீட்டுத் தோட்டத்தில் கொட்டகை அமைத்து அறிஞர்களிடம் ஷெல்லியைப் பற்றி உரையாடுபவராக, இந்திய சுதந்திரப் போராட்டத்தைப்பற்றிய ஆர்வமும் பதற்றமும் கொண்டவராக, சுதந்திரத்துக்குப் பின்னர் இந்தியா அடையும் மாற்றங்களைப் பற்றிய கவலை கொண்டவராக, ரஸல் உட்பட சமகால தத்துவங்களைப்பற்றிச் சிந்திப்பவராக சித்தரிக்கப்படுகிறார். இந்த எஸ்.ஆர்.எஸ் முழுக்க முழுக்க சுந்தர ராமசாமியின் கற்பனை. சுந்தர ராமசாமியின் தந்தையை நேரில் அறிந்தவர்கள் என் நண்பர் வட்டத்தில் உண்டு. அவர்கள் அனைவரும் இந்த சித்திரத்திற்கும் எஸ்.ஆர்.எஸ்ஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றே சொல்கிறார்கள்.

எனில் இத்தகைய ஒரு கதாபாத்திரத்தைப் புனைந்து கொள்ளும் தேவை சுந்தர ராமசாமிக்கு ஏன் வந்தது? அவர் தன்னுடைய ஆளுமையை எஸ்.ஆர்.எஸ்ஸுக்கு அளிக்கிறார். தான் விரும்பிய ஒரு தந்தையை அவர் புனைந்து கொள்கிறார். அந்த வடிவத்தில் தன்வரலாற்று நாவல் ஒன்றை நிறுவுவதன் மூலமாக அவர் உள்ளம் எதைக் கண்டடைகிறது? நீலபத்மநாபனின் உறவுகள் நாவலில் கதாநாயகன் தந்தையை தெய்வமாக்குவதற்கு இணையான ஒரு செயல்பாடுதான் இது. பிராய்டிசத்தின் பிடியிலிருந்து சுந்தரராமசாமி மீண்டு வந்ததை நான் குழந்தைகள் பெண்கள் ஆண்களில் கண்டேன்.

சுந்தர ராமசாமியிடம் ‘சார் நீங்களும் கடைசியில் எஸ்.ஆர்.எஸ்ஸுக்கு படம் வைத்து மாலை போட்டு ஊதுவத்தி ஏற்றிவிட்டீர்கள். நீலபத்மனாபன் நாவலில் கதாநாயகனுக்கு பதினெட்டு நாட்கள் தான் தேவைப்பட்டன. உங்களுக்கு முப்பது ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது’ என்று சொன்னேன். எச்.எல்.பி.பள்ளி வளாகம். சுரா அவ்விமரிசனத்தை ஏற்கவில்லை.என் சொற்களை அவருடைய அந்தரங்கத்திற்குள் நிகழ்ந்த ஓர் அத்துமீறலாகவே அதை உணர்ந்தார் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் முகம் சிவந்திருந்ததை நினைவுகூர்கிறேன்

(நிறைவு)

முந்தைய கட்டுரைஇரா.முருகனின் ’மிளகு’
அடுத்த கட்டுரைஅன்னையின் பயணம்- கடிதங்கள்