தந்தை மகன் உறவும் இரு படைப்பாளிகளும்

முப்பதாண்டுகளுக்கு முன் ஒரு முறை நீண்ட நடைப்பயணம் ஒன்றில் சுந்தர ராமசாமியுடன் நீலபத்மநாபனைப்பற்றி பேச நேர்ந்தது. அப்போது நீல பத்மநாபனின் முழுப் படைப்புகளையும் பற்றி ஒரு பெருந்தொகுப்பு வந்திருந்தது. நீலபத்மநாபனின் நாவல்களைப் பற்றியும் கதைகளைப் பற்றியும் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட  ஏறத்தாழ அனைத்து கட்டுரைகளுமே அதில் தொகுக்கப்பட்டிருந்தன. அந்த தொகுதியை முதன்மை எடிட்டராக டாக்டர் கே.எம்.ஜார்ஜ் இருந்து ஒருங்கிணைக்க, ஆசிரியர் குழுவில் கே.நாச்சிமுத்து எம்.நயினார் டி.பெஞ்சமின். கே வானமாமலை ஆகியோர் இருந்தனர். பாரதி நேஷனல் ஃபோரம் திருவனந்தபுரத்திலிருந்து வெளியிட்டது. 2001-ல் வெளிவந்தது.

அந்நூல் பற்றி அன்று சொல் புதிது இதழில் வந்த குறிப்பை சுந்தர ராமசாமி கடுமையாக விமர்சனம் செய்தார். ’இதேபோல ஒரு தொகுப்பை இன்றைய சூழலில் இன்னொருவர் முயன்று வெளிக்கொண்ர முடியாது குறிப்பாக 1950களில் இருந்தே நீலபத்மநாபனின் படைப்புகளைப்பற்றி எழுதப்பட்ட ஒவ்வொரு வரியும்  எடுக்கப்பட்டு இவ்வாறு தொகுக்கப்பட்டு சேர்க்கப்படுவது இயல்வதே அல்ல’ என்றார். ’அவை நீலபத்மநாபனால் தொகுக்கப்பட்ட அவருடைய தனிப்பட்ட கோப்புகளில் இருந்தவை. அந்நூல் நீல பத்மநாபனால் தன்னைப்பற்றி தயாரிக்கப்பட்டது இவர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன’ என்றார்.

நான் அது உண்மையாக இருந்தாலும் கூட சிற்றிதழ் சூழலிலிருந்து வரும் ஒரு நவீன எழுத்தாளருக்கு அப்படி ஒரு பெருந்தொகுதி வருவது ஒரு முன்னுதாரணம்தான். எல்லாவகையிலும் அது வரவேற்புக்குரியது. பிற்கால ஆய்வாளர்களுக்கு அது ஒரு மிகப்பெரிய கொடை. சிற்றிதழ் சார்ந்த எழுத்தாளர்கள் என்றால் ஒழுங்கற்றும் ஆய்வுநோக்கற்றும் இருக்கவேண்டியதில்லை. எந்த இடத்திலும் தன்னை முன்னிறுத்தாமல் இருப்பது ஒருவருடைய இயல்பாக இருக்கலாம். ஆனால் அது ஒரு நிபந்தனையாக வேண்டியதில்லை. அது ஒரு தனிச்சிறப்பும் அல்ல. ஒரு கலைஞன் காலத்தின் முன்னும் சமூகத்தின் முன்னும் தன்னை முன்வைப்பதில் ஒன்றும் பிழையில்லை என்று கூறினேன்.

அத்தகைய ஒரு பெருந்தொகை சுந்தர ராமசாமிக்கு வருமெனில் அதை நான் வரவேற்பேன் என்று சொல்லி அவரும் தன்னுடைய தனிக்கோப்புகளில் ஏராளமான கடிதங்களையும் குறிப்புகளையும் பிரசுரமான படைப்புகளையும்  ஆவணப்படுத்தி வைத்திருப்பதை நான் கண்டிருப்பதையும் குறிப்பிட்டேன். தனிப்பட்ட முறையில் ஆவணப்படுத்தும் வழக்கம் எனக்கில்லை. என்னுடைய அலைந்து திரியும் இயல்புக்கு அது ஒத்துவருவதுமில்லை. ஆனால் அது ஒரு உயர்ந்த பண்பல்ல என்றேன். பின்னாளில் சுந்தர ராமசாமியின் ஆய்வடங்கல்கள் அவருடைய சொந்த சேகரிப்பை ஒட்டியே வரப்போகின்றன என்றும் குறிப்பிட்டேன். சுந்தர ராமசாமி அதிருப்தியுடனேயே இருந்தார்.

சுந்தர ராமசாமி நீலபத்மநாபனைப் பற்றி உயர்வான கருத்து கொண்டவரல்ல. எதிர்மறையாகவே கடுமையாக பேசுவார். ஆனால் தலைமுறைகள் பள்ளிகொண்டபுரம்  இருநாவல்களைப்பற்றி அவருக்கு மதிப்புண்டு. அவற்றைப் பற்றி  சிறப்பாக எழுதியிருக்கிறார். உறவுகள் நாவல் அவருக்குப் பிடிக்கவில்லை. அன்று அதைப்பற்றி பேச்சு திரும்பியது. நான் எழுதிய ஒரு கட்டுரையில் உறவுகள் முக்கியமான நாவல் என்று சொல்லியிருந்தேன். சுந்தர ராமசாமி அதைக்கடுமையாக மறுத்தார். அது வழக்கமான அப்பா செண்டிமெண்ட் வெளிப்படும் ஒரு சாதாரணமான படைப்பு என்று சொன்னார்.

அதில் உள்ள உணர்வு நிலைகள் இயல்பாகவே எல்லாக் குடும்பங்களிலும் பெற்றோர் மேல் மகன்களால் வெளிப்படுத்தப்படுபவை. பொதுவழிப்பாதையில் வெளிப்படும் அவ்வுணர்வுகளை அப்படியே பதிவு செய்வது இலக்கியத்தின் பணி அல்ல என்று சுந்தர ராமசாமி சொன்னார். அதற்கப்பால் உளவியல் ஆழங்களுக்குச் சென்று தந்தையின் மகனின் உறவுகளின் உள்ளடுக்குகளை ஆராய்வதே இலக்கியத்தின் பணி. உண்மையில் தந்தை மகன் எனும் உறவு இந்நாவலில் சொல்லப்படுவது போல ஒற்றைப்படையானது அல்ல என்றார் சுந்தர ராமசாமி.

நீலபத்மநாபனின் நாவலில் தந்தைக்கும் ராஜகோபாலுக்கும் இடையே எந்த கருத்து முரண்பாடும் இல்லை. ஆளுமை மோதல் எங்குமே இல்லை. தந்தையின் மீதான ஒவ்வாமைகள் என்று எதையும் மகன் நினைவுகூர்வதுமில்லை. இப்படி முழுமையான வழிபாட்டுணர்வு என்பது செயற்கையானது வலிந்து புனையப்படுவது தந்தை மகனும் இரு காலகட்டங்களைச் சார்ந்தவர்கள். தந்தை மகனைத் தன் நீட்சியாக கருதுகிறார். மகன் அதை எதிர்க்கிறான். தன் தனித்தன்மைக்காக அவன் போராடுகிறான். ஆகவே அவர்களுக்குள் இருக்கும் மோதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. பிராய்டிய நோக்கில் அது இரு ஆண்களுக்கிடையேயான மோதலும் கூட. அவ்வாறு பிராய்டிய இருத்தலிய அடிப்படையில் ஆண்பெண் உறவையும் தந்தை மகன் உறவையும் நுணுகி ஆராய்வதே இன்றைய இலக்கியவாதிகள் செய்ய வேண்டியது. பிராய்டு நூறு கிலோமீட்டர் ஓடி வந்துவிட்டபிறகு மூன்றாவது கிலோமீட்டரில் ஒற்றைக்காலில் தத்தி தத்தி வந்துகொண்டிருப்பவர் நீல பத்மநாபன் என்று சுந்தர ராமசாமி சொன்னார்.

நான் அதை கடுமையாக மறுத்தேன். சுந்தர ராமசாமிக்கும் நீலபத்மநாபனுக்கும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவன் நான். முறையாக பிராய்டை படித்திருந்தேன். சுந்தர ராமசாமி உட்பட தமிழ் எழுத்தாளர்களைப் போலன்றி பிராய்டிய  உளவியல் ஆய்வாளர்களுடன் சிலருடன் நேரடி தொடர்பும் உண்டு. பிராய்டிய சிந்தனை கொண்ட பேராசிரியர் எம்.என்.விஜயனுடன் அடிக்கடி தொடர்பு கொண்டிருந்தேன்.  டாக்டர் ரிதுபர்ணன் டாக்டர் என்.சந்திரசேகரன் ஆகியோரை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன்.அத்துடன் உளவியல் அறிஞரான நித்ய சைதன்ய யதியுடன் அணுக்கமாகி இருந்தேன். உளவியல் மறுப்பாளரான ஆர்.டி.லெய்ங்-ஐ ஊட்டியில் நேரில் சந்தித்து உரையாடியிருந்தேன்.

ஆகவே நான் ஃப்ராய்டை ஒர் அறிவியலுண்மையை முன்வைத்தவராக நினைக்கவில்லை. அவருடையது ஓர் ஆய்வுக்கருவி, அல்லது ஒரு வகை ஊக முறை – அவ்வளவுதான். நித்ய சைதன்ய யதி வழியாக நான் அன்று கார்ல் யுங்கை படித்துக்கொண்டிருந்தேன். சொல்புதிது இதழில் சி.ஜி.யுங் எழுதிய கட்டுரைகளின் மொழியாக்கங்கள் அன்று வெளிவந்தன. மேலும் அன்று நரம்பியல் துறை மனம் என்பதையே மறுவரையறை செய்து ஃப்ராய்டை வெறும் இலக்கிய ஆசிரியனாக தள்ளிவிட்டிருந்ததை நான் வாசித்து அறிந்துகொண்டிருந்தேன். சொல்புதிதில் ஆலிவர் சாக்ஸ் போன்றவர்களின் கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருந்தன.

இதற்கப்பால் எனக்கு என் தந்தையுடன் முரண்பாடும் கசப்பும் கொண்ட  உறவுதான் இருந்தது. நீலபத்மநாபன் உறவுகளில் சொல்லப்படுவதுபோல அல்ல என்னுடைய உறவு. சுந்தர ராமசாமிக்கும் அவரது தந்தைக்குமான உறவும் என் தந்தையுடனான உறவுபோலத்தான். ஆனால் எங்கள் மதிப்பீடுகளை நீலபத்மநாபன் மேல் ஏற்றவேண்டிய தேவை இல்லை என்று நான் சொன்னேன். இந்திய சூழலில் தந்தை மகன் உறவை தீர்மானிப்பதென்பது பிராய்டிய உளச்சிக்கல்கள் அல்ல. அவை பிராய்டின் பார்வைகளே ஒழிய மனித குலத்துக்கு எப்போதைக்குமான வரையறுக்கப்படும் அறிவியல் உண்மை அல்ல சில நுட்பங்களைப் புரிந்துகொள்ள் அத்தகைய உளவியல் கருத்துகள் உதவியாக இருக்குமே ஒழிய அவற்றை அறுதியாக கொள்ள வேண்டிய தேவை இல்லை. நவீனத்துவம் சார்ந்த எதிர்மறை உளநிலையே ஃப்ராய்டிசம் முன்வைக்கப்பட்டதுமே அதை அப்படியே ஏற்கச்செய்கிறது. அதைவிட பலமடங்கு விரிவான, ஆழமான உளஅவதானிப்புகள் இந்திய யோகமுறைகளில் உண்டு என்றேன்.

இந்திய சூழலில் தந்தை மகன் உறவென்பது உபநிஷத் காலத்திலிருந்தே பல்வேறு வண்ணங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சாந்தோக்ய உபநிடதத்தில் வரும் ஆருணியாகிய உத்தாலகருக்கும் அவர் மகன் ஸ்வேதகேதுவுக்குமான உரையாடல் ஒரு உதாரணம். நசிகேதனின் தந்தைக்கும் அவனுக்குமான உறவு இன்னொரு உதாரணம். மகாபாரதம் தந்தை மகனுறவின் பல தளங்களாக விரித்துரைக்கும் ஒரு பெரும் படைப்பு.இங்குள்ள தந்தை மகன் உறவென்பது எளிய ஈடிபஸ் காம்ப்ளெக்ஸால் விளக்கத்தக்கது அல்ல. அது மேலும் விரிந்தது. யயாதிக்கும் புருவுக்குமான உறவு பிராய்டு கற்ப்னை செய்ததை விட மேலும் சிக்கலானது. மேலும் பல தளங்கள் கொண்டது.

மகாபாரதத்தில் வரும் உத்தாலகன் ஸ்வேதகேது உறவும் சரி,  தேவிபாகவதத்தில் வரும் ஹிரண்யாக்ஷனுக்கும் பார்வதிக்குமான உறவும் சரி மிக நேரடியாகவே ஈடிபஸ் உளச்சிக்கலை சொல்லுவன. சொல்லப்போனால் ஃப்ராய்ட் நினைத்ததை விட விரிவாகவும் கூர்மையாகவும். ஆனால் அதற்கப்பாலும் இந்திய மரபில் தந்தை மகன் உறவென்பது ஆசிரியன் மாணவன் என்ற தளமும் கொண்டது. இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுடைய முதல் ஆசிரியர் தந்தையே. பழைய காலகட்டங்களில் குலக்கல்வி தந்தையிடமிருந்தே பெறப்பட்டது. குலமுறையாக வரும் கலைகளும் அவ்வாறே அளிக்கப்பட்டன. இன்றும் கலைகளில் தந்தையிடமே முதல் அறிமுகத்தை பெறுகிறார்கள். அங்கு முதன்மை பெறுவது ஆசிரியர் மாணவர் என்ற உறவே ஒழிய உயிரியல் உறவல்ல.

தந்தை மகனின் உறவென்பது இந்திய சூழலில் வழித்தொடர்தல், வாரிசாதல் (Inheritance)என்னும் இன்னும் சிக்கலான உணர்வைச் சார்ந்தது. தந்தையின் தொடர்ச்சியாக தன்னை உணர்வதும், தந்தையின் ஆளுமையிலிருந்து மாறுபட்டு ஒரு ஆளுமையை தனக்கென உருவகித்துக்கொள்வதும், அதிலிருக்கும் முரண்பாடுகளும் தான் இந்தியாவில் தந்தை மகன் உறவை தீர்மானிக்கின்றன. எந்த வகையில் தந்தையை எடுத்துக்கொள்வது, எந்த இடத்தில் பொருத்திக்கொள்வது என்பதே இந்திய மகனின் சிக்கல். தந்தை இருக்கும் வரை அவருடைய வளரும் ஆளுமையை முழுமையாக தொகுத்துக்கொள்ள முடியாததனால் அவன் எப்பொழுதும் உளச்சிக்கலுக்கு ஆளாகிறான்.

தந்தையை வகுத்துக் கொள்ளுதற்கு அவருடைய அணுக்கம் தடையாக இருப்பதனால் வயது வந்த பிறகு அவரிடமிருந்து விலகிச் செல்லத்தொடங்குகிறான். உளத்தாலும் உடலாலும் விலகுகிறான் அவர் மேல் கேலியையோ விமர்சனத்தையோ வளர்த்துக் கொள்கிறான். அவரிடமிருக்கும் தீவிரமான பற்றை குறைத்துக் கொள்ளும் பொருட்டு கேலி, விமர்சனம் போன்ற உளவியல் நாடகங்களை அவன் ஆடுகிறான்.ஆனால் அகலமுயன்று அணுகும் உறவு அது.

இந்திய சூழலில் தந்தை மகன் உறவு மேலும் சிக்கலாக்குவது இங்குள்ள கடுமையான வாழ்க்கைப் போட்டி பிற நாடுகளைப் போலன்றி இந்தியாவில் ஒரு தந்தை தன் முழுவாழ்நாளையும் மைந்தருக்கு செலவழித்தாலன்றி மைந்தரை சமூகத்தில் முதன்மைப்படுத்த முடியாது .அவையத்து முந்தியிருப்பச் செயல் என்பது  தந்தையின் கடமையாக ஔவையால் சொல்லப்படுகிறது. தன்னையே தன் மைந்தருக்கு பலியிடுதல் என்பது இங்குள்ள தந்தைக்கான முன்னுதாரணமான வடிவமாக முன்வைக்கப்படுகிறது. மகனென்னும் நீ நானேதான் என்று உபநிஷத் கூறுகிறது. அந்த கொடையைப் பெற்றுக்கொள்ளும் மகனின் குற்றவுணர்வும் அதை வெல்லும் பொருட்டு அவன் உருவாக்கும் பலவிதமான உளநாடகங்களும்தான் முதன்மையாக இந்தியத் தந்தைமகன் உறவை  தீர்மானிக்கின்றன. பிராய்டு சொல்வது போல அற்பமான பாலியல் முக்கோணம் அல்ல. ஒருவேளை அது அவ்வுறவில் இருந்தாலும் கூட மிக குறைவானதே. புறக்கணிக்கப்படும் அளவுக்குச் சிறியது.

இந்தியக் குடும்பங்களின் உறவென்பது இன்று தனிக்குடும்பங்களானாலும் கூட கூட்டுக்குடும்ப தன்மை உடையது தனிவீடுகளுக்குள் இருக்கும் ஒரு பெருங்கூட்டுக்குடும்பம் என்று இந்தியாவுடைய குடும்பங்களைச் சொல்ல முடியும். தந்தை மட்டுமல்ல தந்தையின் உடன்பிறந்தார்களும் தந்தையின் இடத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய நண்பர்களும் தந்தையின் இடத்தில் இருக்கிறார்கள். அதற்கிணையாகவே தாய்மாமன் இங்கு தந்தையின் இடத்தில் இருக்கிறார். இங்கு ஒருவனுக்கு தந்தை என்பது தந்தையர் என்றே பொருள் படுகிறது தந்தையர் நிரை என்ற சொல்லையே நாம்  கவிதைகளில் பார்க்க முடியும். அங்கு ஒரு தனி மனிதன் தந்தையாக இருக்கிறான், கூடவே தந்தையர் என்னும் பெரும் கருத்துருவின் வடிவமாகவும் இருக்கிறான்.

தந்தை என்பவன் ஒரு கூட்டு ஆளுமையாக ஒரு தொகுப்பு அடையாளமாகவே இருக்கிறான். ஒரு கருத்துருவமாகவே அவனை அணுக முடிகிறது. தந்தை மரபின் அடையாளமாக சென்ற காலத்தின் அடையாளமாக சமூகத்தின் ஒட்டுமொத்தத்தின் அடையாளமாகவே இருக்கிறான். ஆகவே அவன் இங்கே ஒரு மாபெரும் அதிகாரம். ஒருநவீன மேலைநாட்டுச் சூழலில் மைந்தன் மேல் தந்தையின் அதிகாரம் இத்தனை முழுமையானதோ அனைத்து திசைகளிலிருந்தும் சூழ்ந்து கொள்வதோ அல்ல.

இந்தியா மூத்தோர் வழிபாடு நிறைந்த நாடு. அகவை முதிர்ந்த ஒவ்வொருவரும் தந்தையின் இடத்திற்கு செல்கிறார்கள். துறவியர் அரசியல் தலைவர்கள் தந்தை வடிவமாக போற்றப்படுகிறார்கள். இறைவன் அப்பனே அப்பனே என்று தந்தைவடிவமாக இங்கு நிறுவப்பட்டிருக்கிறான். பெருந்தந்தை என்னும் கருதுகோள் இந்திய உள்ளத்தை ஆட்டுவிக்கிறது. காந்தியோ காமராஜோ ஈ.வெ.ராமசாமியோ தந்தை வடிவமாகவே வந்து அடைகிறார்கள். இரட்டைமலை சீனிவாசன் அயோத்திதாசரோ இங்கே தந்தை உருவம்தான்.

இந்தக்கருத்துருவை எதிர்கொள்வதிலுள்ள சிக்கல்கள் என்ன உளத்தயக்கங்கள் என்ன என்பதை இன்று ஒரு நவீன இந்திய எழுத்தாளன் ஆராய வேண்டும். மாறாக துருப்பிடித்துப்போன பிராய்டிய உளப்பகுப்பாய்வு முறைகளையோ இருத்தலியல் கருதுகோள்களையோ கொண்டு இவ்வுலகுக்குள் அவன் நுழைவானாயின் அபத்தமான ஒற்றைப்படையான நாவல்களையே எழுதமுடியும்.

மார்க்சியக்கொள்கைகளையே சட்டகமாகக் கொண்டு எழுதப்படும் முற்போக்கு எழுத்திற்கும் பிராய்டிய கொள்கையைச் சட்டகமாகக்கொண்டு எழுதப்படும் நவீனத்துவ எழுத்திற்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு? அது தட்டையான கருத்துப் பிரச்சாரமாக ஆகும்போது இது எப்படி கலைப்படைப்பாகவும், உள ஆய்வாகவும் ஆகமுடியும்?

எழுத்தாளன் ஒன்று வரலாற்றுப் பிரக்ஞையுடன் தத்துவப்பிரக்ஞையுடன் தந்தை எனும் கருதுகோள் பல்லாயிரம் வருடங்களாக இங்கு எவ்வாறு நிலை பெற்றது ஆட்கொள்கிறது நீடிக்கிறது என்பதை உசாவி எழுதலாம். பிரதர்ஸ் கரமசோவ் போன்ற ஒரு பெரும்படைப்பாக அது மாறலாம். அன்றி நீலபத்மநாபன் எழுதுவது போல எந்த மேலதிக வாசிப்பும் தத்துவ உசாவலும் வரலாற்றுணர்வும் இன்றி தன்னை மட்டுமே நேர்மையாக வைக்கும் கள்ளமற்ற ஒரு வகையான எழுத்துமுறைக்குச் செல்லலாம்.

அத்தகைய ஒரு படைப்பு உருவாகும்போது அதன்மேல் எளிமையான ஃப்ராய்டிய ஒற்றைச்சட்டகத்தைப் போடுவதென்பது மார்க்ஸியர் எந்த நூல் கையில் கிடைத்தாலும் தங்கள் கருத்தியல் அளவுகோல்களை போட்டுப்பார்க்கும் இயந்திரத்தனத்திற்கு நிகரானது. நான் அன்று சுந்தர ராமசாமியிடம் விவாதித்துவிட்டு வீட்டுக்கு வந்தபின் விரிவாக அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். நாகர்கோயிலில் இருந்தே நாகர்கோயில் விலாசத்துக்குக் கடிதம். அதெல்லாம் அன்று சாதாரணம்

(மேலும்)  

முந்தைய கட்டுரைபனிமனிதன் – வாசிப்பு
அடுத்த கட்டுரைபன்னிரு படைக்களத்தின் திருதராஷ்டிரர்