ஆசான் – கடிதம்

ஆசான் என்னும் சொல்

ஆசான் – கடிதங்கள்

அன்புள்ள  ஜெ..

புரட்சித் தாய் ,   பிரபஞ்ச  நாயகன் ,  தமிழினக் காவலர் என அரசியல்வாதிகளை  ,  நடிகர்களை அழைப்பதை இயல்பாகவும்  பிடித்த எழுத்தாளர்களை  தனக்கு உகந்தபடி போற்றுவதை நெருடலாகவும் படித்தவர்கள் (?!)  நினைப்பதும் இது சார்ந்த விவாதமும் கிராமத்துப் பின்னணி கொண்டவர்களுக்கு காமெடியாக இருக்கிறது

எங்கள் கிராமங்களில் எல்லாம் எப்பேற்பட்ட தலைவர் என்றாலும் அவன் இவன்தான். ஆனால்  கல்வி சார்ந்தவர்கள் என்றால் அவர் என அழைப்பதேகூட  மரியாதைக்குறைவாகத்தான் கருதப்படும்.

வெகு இயல்பாக பேச்சு வழக்கில் கணக்கு சார் அவர்கள் என்பார்கள்.  சாருஹ வந்துட்டாஹகளா  ( சார் அவர்கள் வந்து விட்டார்களா )  என்று மெத்தப்பணிவாக கேட்க வேண்டும்.    கணக் கு சார் வந்துட்டாரா என்று கேட்பது  வந்துட்டானா என கேட்பதற்கு சமம்

அதன்பிறகு இளமைப்பருவத்தில் ஐயா , ஆசானே ,  வாத்தியாரே என தொழில் சார்ந்த நெருக்கத்தின் அடிப்படையில் அழைப்பதும் வழக்கம்தான்.ஆனால் இதை நகரப்பள்ளிகளில் படித்து கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகி அப்படியே செட்டில் ஆகி விட்ட நண்பர்களுக்கு புரிய வைக்கவே முடிவதில்லை.மேடையில்தானே அவர்களே என்று விளிப்பார்கள்?   நேர்ப்பேச்சில் − அதுவும் சிறுவர்கள் − அப்படியா அழைப்பார்கள்?  சார்தானே இயல்பாக இருக்கிறது?  ஐயா ,  ஆசான் , வாத்தியாரே இவை நாடகத்தனமாக இல்லையா என்று கேட்போரிடம் உரையாடவே முடிவதில்லை

வட இந்தியாவில் பெரியோரின் பாதம் பணிதல் சர்வ சாதாரணம். பொது இடம் , வீடு என்ற பிரிவினைகளெல்லாம் இல்லை.  அந்த அடிப்படையில் புத்தகக்கண்காட்சியில் நான் பாலகுமாரன் பாதம் பணிந்தேன். அதற்காக இணையத்தில் கடுமையான கேலிகளுக்கும் கண்டனங்களுக்கும் உள்ளானேன்.

சாரு நிவேதிதா நூல் வெளியீடு ஒன்றில் அல்ட்டிமேட் ரைட்டர் என்ற அடைமொழியோடு அடித்த போஸ்டரும் விமர்சனத்துக்கு உள்ளானது.ஆனால்  தனக்குப்பிடித்த  எழுத்தாளர்களை தன் மனநிலைக்கு ஏற்ப கொண்டாடுவது இயல்பான ஒன்றுதான்.

இணைய சலசலப்புகளுக்கு அப்பால் நமது சமூகம் எழுத்து , கல்வி சார்ந்தவற்றை சரஸவதி , தட்சிணாமூர்த்தி என சில தொன்மங்களை இணைத்து போற்றியே வருகிறது

அன்புடன்

பிச்சைக்காரன்

அன்புள்ள ஜெ

ஆசான் என்ற சொல் வாசித்தேன். உண்மையில் அந்த கட்டுரையை வாசிக்கும் வரை அந்தச் சொல்லை கேலி செய்து சுயமரியாதை பேசுபவர்கள் தங்கள் தலைவரின் பெயரை ஒருவர் சொன்னாலே கொந்தளிப்பவர்கள் என்பதை உணரவே இல்லை. ஆச்சரியமாக இருந்தது. உண்மையிலேயே இவர்களுக்கு மரியாதைக்குரியவர்கள் என்றால் அது அதிகாரத்தில் இருப்பவர்கள், பணபலம் கொண்டவர்கள் என்ற எண்ணம்தான் இருக்கிறது. மற்றவர்களுக்கு மரியாதை வந்தாலே திகைப்பு அடைகிறார்கள்.

சரவணக்குமார்

முந்தைய கட்டுரைஊழலின் புதிய முகம்
அடுத்த கட்டுரைதந்தை மகன் உறவு -கடிதங்கள்