தன்னறம் வெளியீடுகள்

எழுதுக

“எல்லா தலைமுறையிலும் இளம் வாசகர்களும் எழுத்தாளர்களும் அடிப்படையான ஐயங்களை அடைந்துகொண்டே இருக்கிறார்கள். வாசிப்பின் தடைகளைப்பற்றி, வாசிப்பில் இருக்கும் வழிச்சிக்கல்கள் பற்றி அவர்கள் உசாவுகிறர்கள். இளம் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தின் இயல்புகள் குறித்தும் எழுத்தாளனாக வாழ்வதைப்பற்றியும் குழப்பம் கொண்டிருக்கிறார்கள். எழுத்து ஓர் இலட்சியவாதம், எந்த இலட்சியவாதமும் அதற்குரிய ஐயங்களும் தயக்கங்களும் கொண்டது. எனக்கு அவ்வண்ணம் எழுதப்பட்ட கடிதங்களுக்கு நான் அளித்த பதில்கள், அவற்றினூடாக நிகழ்ந்த விவாதங்களின் தொகுதியே இக்கட்டுரைகள். இவற்றில் எழுத்திலும் வாசிப்பிலும் நுழைபவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பேசப்பட்டுள்ளன.”

~ ஜெயமோகன்

இளம் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களுக்கும், எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கும் இடையே நிகழ்ந்த கடிதவழி உரையாடல்களின் சிறுதொகுதியே ‘எழுதுக’ என்னும் இப்புத்தகம். இத்தனை ஆண்டுக்காலம் எழுத்துலகிலும் விமர்சனவுலகிலும் தன் பார்வையைத் தொடர்ந்து பதிவுசெய்தும், இலக்கியவோட்டத்தை பொறுமையுற அவதானித்தும் வருகிற ஓர் மூத்த எழுத்தாளர், தன் சமகால இளைய மனங்கள் எழுத்தின் மீது கொண்டுள்ள படைப்புத்தயக்கங்களை நீங்கியெழ இந்நூலின் கட்டுரைகள் நிச்சயம் உதவக்கூடும். எழுதத் துவங்கிற, எழுத்தின்வழி துலங்க விரும்புகிற எல்லோருக்குமான திசைச்சொற்களை தன்னகத்தே கொண்டுள்ளது இந்நூல்.

தன்னைக் கடத்தல்

“காதில் தீராத ஒலி கேட்டுக்கொண்டிருக்கும் டின்னிடஸ் என்னும் நோய்கொண்ட ஒருவர், தூக்கத்திற்கான நேரம் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கும் நோய் கொண்ட ஒருவர் என இருவர். அவர்களின் வெற்றியின் கதையை அவர்கள் சொல்கிறார்கள். தங்கள் சிக்கலை தீர்த்துக்கொண்டதுடன் மற்றவர்களுக்கு உதவுபவர்களாகவும் அவர்கள் ஆகிறார்கள். தங்கள் தனிவாழ்க்கைச் சிக்கல்களால் தங்களை முற்றாகவே சமூகத்தில் இருந்து ஒளித்துக்கொள்ள விரும்பும் மூவரின் குறிப்புகள் இதிலுள்ளன. அவர்களைப் போன்ற பல்லாயிரவர் நம் சமூகத்தில் உண்டு. அவர்களின் உளவியலும் சிக்கல்களும் அவர்களின் சொற்கள் வழியாகவே இதில் பதிவாகியிருக்கின்றன. இந்நூல் வெவ்வேறு வகையில் வெளியே தயங்கி நின்றிருப்பவர்களுக்கு தன்னம்பிக்கையை, ஊக்கத்தை அளிப்பதாக அமையும். ஏனென்றால் இது, தன் எல்லைகளைக் கடந்தவர்கள் மற்றும் கடக்க முற்படுபவர்களின் கதை.”

~ ஜெயமோகன்

‘விழிப்புணர்தலே குணமாகுதலின் முதற்படி’ என்ற கூற்று வாழ்வின் அனைத்து அகக்கேள்விகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு பொதுப்பதில். மீளவே முடியாது என நாம் நம்பிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தடைகளையும், எங்கோ யாரோ ஒருவர் மீண்டெழுந்து வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். அதேபோல, நமக்கு மட்டுமே உண்டான தனிச்சிக்கல் என யூகித்திருந்த ஒரு விசயத்திற்கு, இன்னொரு மனிதன் தன் வாழ்விலிருந்து தீர்வுரைக்கும் போது நம் மனம் மறுபரிசீலனைக்கு உள்ளாகிறது.

அவ்வகையில் இன்றைய நவீன சமூகத்தின் உளநிலையில் மெல்லமெல்ல ஆதிக்கம் செலுத்திவரும் டின்னிடஸ் எனும் காதிரைச்சல், உறக்கமின்மை, உளச்சோர்வு ஆகிய பிறழ்வுகளால் பாதிப்படைந்தவர்கள், அதிலிருந்து தங்களை எவ்வாறு மீட்டுக் கொண்டார்கள் என்பதை அவர்களின் கடித மொழியிலேயே பதிவுசெய்த நூலாக ‘தன்னைக் கடத்தல்’ புத்தகமடைந்துள்ளது. நிச்சயம் இந்தச் சிக்கல்கள் பொதுச்சமூத்தில் உரையாடப்படுவதைக் காட்டிலும், சிக்கலுக்குள்ளானோரின் அகத்தில் ஓர் தீர்வுரையாடலாகத் துவங்கப்பட வேண்டுமென ஜெயமோகன் விழைகிறார். தன்னறம் வாயிலாக இதற்கு முன்பு வெளியாகிப் பரவலடைந்து ‘தன்மீட்சி’ நூலின் இன்னொரு நீட்சிப்பரிமாணம் என்றும் இந்நூலைக் கருதலாம்.

 

இயற்கையை அறிதல்

எமர்சன் (தமிழில்: ஜெயமோகன்)

“எல்லா இயற்கை உண்மையும் ஓர் ஆன்மீக உண்மையின் குறியீடேயாகும்.” எழுத்து, சொற்பொழிவு என்ற இரு படைப்பாக்க நிலைகளிலும் உலகில் சிறந்த படைப்புவாதிகளுள் ஒருவராக அறியப்படுபவர் எமர்சன். தனிமனித அகத்தின் ஆழ்நிலைகளை முன்னிலைப்படுத்திய முன்னறிவு கொண்டவராக எமர்சன் இன்று உலகறியப்படுகிறார். ‘பிரபஞ்சம் என்பது இயற்கை மற்றும் ஆன்மாவின் தொகுப்பு’ என தன்னுடைய தத்துவத்தளத்தை விஸ்தரித்துக் கொண்ட எமர்சன் இறுகிய மெய்யியல் கோட்பாடுகள் எதையுமே ஏற்காதவர். எமர்சனிடம், அவருடைய சிந்தனையின் மையம் என்ன என்று கேட்டபோது அவர், “தனிமனிதன் எல்லையற்ற தன்மையினன் என்பதே எனது மையக்கொள்கை” என்றுரைத்தார்.

1836ம் ஆண்டில் ‘இயற்கை’ என்னும் தலைப்பில் புகழ்மிக்க ஒரு கட்டுரையை அவர் வெளியிட்டார். இக்கட்டுரை சுமந்திருக்கும் உள்ளடக்கச் செறிவும், அகவிடுதலை முழக்கமும் இன்றுவரை வியக்கப்படக்கூடிய ஒன்றாக உள்ளது. வரிக்கு வரி மேலும் மேலும் கூர்மை கொண்டு வாசிப்பவரின் அகத்தில் இயற்கையைப் பற்றிய தன்னுணர்தலையும் தெளிவினையும் தத்துவநோக்கில் உண்டாக்கும் படைப்பு என்றும் இதைச் சொல்லலாம். உண்மையில் எமர்சனின் எழுத்துவளமும், கருத்துவளமும் ஒருசேர இதில் வெளிப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலக்கியம் மற்றும் தத்துவப்பரப்பில் பெரும் அலையை உருவாக்கியது இக்கட்டுரை.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் பல ஆண்டுகள் முன்பு தமிழில் மொழிபெயர்க்கப்ட்டு, தமிழினி பதிப்பகம் மூலம் வெளியாகிய இந்நூல் ‘இயற்கையை அறிதல்’ என்னும் அதே தலைப்பில், தன்னறம் நூல்வெளி வாயிலாக தற்போது மறுவெளியீடு அடைகிறது. இந்நூலை வடிவமைத்து அச்சாக்கும் வாய்ப்பு அமைந்ததில் எல்லையற்ற மகிழ்வு கொள்கிறோம். ஒவ்வொரு தனிமனித அகக்குரலும் சம அளவு பிரபஞ்சத்தகுதி உடையவை; ஆன்ம நிலையில் எல்லாவுமே ஏற்றத்தாழ்வுகளற்றது என்பதனையும், தனிமனித மனம் இயற்கையை அணுகும் தரிசனத்தை தனிமை, நுகர்வு, அழகு, மொழி, கட்டுப்பாடு, கருத்துமுதல் வாதம், ஆத்மா, சாத்தியக்கூறுகள் என்னும் எட்டு உபதலைப்புகளின் வழியாக விவரித்துரைக்கிறது இந்நூல்.

தன் உள்ளடக்கத்தின் கட்டுமானத்தாலும், அதன் அர்த்த ஆழச்செறிவினாலும் நம்மை நோக்கி ஓர் அறைகூவலை எழுப்பும் ஒவ்வொரு படைப்பும், நம்முடைய அகவிடுதலையை வார்த்து சீர்திருத்துகிறது. அவ்வகையில், தமிழில் நிகழ்ந்த முக்கியமான மொழிபெயர்ப்பில் இக்கட்டுரையும் தனிச்சிறப்பு கொள்கிறது. ஒவ்வொரு வாசக மனதும் அவசியம் வாசித்து விவாதிக்க வேண்டிய நற்படைப்பு இது.

~

சென்னைப் புத்தகக் கண்காட்சியின் தும்பி-தன்னறம் நூலரங்கில் இம்மூன்று நூல்களும் வாசக மனங்களுக்காகக் காத்திருக்கின்றன. தோழமைகள் வாய்ப்பமைத்து வர வேண்டிக்கொள்கிறோம். அன்பின் நன்றிகள்!

 

தும்பி – தன்னறம் நூல்வெளி

புத்தகக் கண்காட்சி அரங்கு எண்: 392

www.thannaram.in  /  9843870059

முந்தைய கட்டுரைகளிற்றியானை நிரை
அடுத்த கட்டுரைபுதிய வாசகர் சந்திப்பு- ஈரோடு