தே- ஓர் இலையின் வரலாறு- வெளியீடு

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி

மதிப்பிற்குரிய ஆசிரியர்.ஜெயமோகன் அவர்களுக்கு,

இந்த  நாள்(19.2.22) என் வாழ்வில் மிக முக்கியமான நாள் நான்கு தினங்களுக்கு முன்பு சிறில் அலெக்ஸ் அண்ணாவிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது உப்புவேலி புத்தகம் 20 எண்ணிக்கை வேண்டும் என்று அண்ணா கேட்டிருந்தார்கள். தே ஒரு இலையின் வரலாறு புத்தகத்தின் அறிமுக கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.அதற்கான அரங்கினை அண்ணா தேடிக் கொண்டிருந்தார்..

எனக்கு தெரிந்த சில அரங்குகளை அண்ணாவிற்கு சொன்னேன்.தேர்தல் சமயம் மேலும் நேரம்  ஒத்துவரவில்லை பின்னர் அண்ணனின் முகநூலில் அந்த  அழகிய அழைப்பிதழ் பார்த்தேன்.

நிகழ்வில் கலந்துகொள்ளும் அத்தனை பேச்சாளர்களும் என் மனதிற்கு மிக விருப்பமானவர்கள் இந்த நிகழ்விற்காகவே மதுரையிலிருந்து நேற்று இரவு கிளம்பி வந்து விட்டேன் .புத்தக கண்காட்சி சென்று விட்டு  மாலை தன்னறத்தின் சில நூல்களும் எடுத்துக்கொண்டு நிகழ்வு நடக்கும் அரங்கிற்கு 5 மணிக்கு வந்து சேர்ந்தேன்.

அகரமுதல்வன் சிறில் அலெக்ஸ் அண்ணா அரங்கின் பணிகளே தொடங்கியிருந்தார்கள்.அஜிதன்,பாரதி பாஸ்கர்  அக்கா,விஷ்ணுபுரம் நிகழ்வின்போது பார்த்த மேலும் சில நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள். நிகழ்வு நடக்கும் அரங்கின் வெளியே புத்தகங்களை பார்வைக்கு வைத்துவிட்டு மனிதர்களின் முகங்களை ஆசையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அழைப்பிதழில் புகைப்படம் பதிவு செய்திருந்ததால் கார்த்திக் புகழேந்தியையும் அடையாளம் கண்டு கொண்டேன்.

சிறில்  அண்ணா  பாரதி பாஸ்கர் அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தவுடன் அவர் குக்கூ தன்னறம் பற்றி ஏற்கனவே நன்கு தெரியும் என்று சொன்னது சந்தோஷமாக இருந்தது.தன்னறம் பதிப்பகத்தின் புதிய நூல்கள் பற்றியும் புத்தக கண்காட்சியில் விற்பனை குறித்தும் நண்பர்கள் ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.யுவன் சந்திரசேகர் ,தங்கவேல் ,காளி பிரசாத் மேலும் புதிய நண்பர்களும் வந்து சேர நிகழ்வு துவங்கியது.

சிறிய ஆனால் ஒரு செறிவான கூட்டம் என என்னால் உணர முடிந்தது.கடைசி இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டேன். அகரமுதல்வன்  பேசத்  துவங்கிய ஒரு ஐந்து நிமிடங்களுக்கு பிறகு என்னால் உணர முடிந்தது இந்த நிகழ்வு ஒரு தீவிரமான  மனநிலைக்கு  எடுத்து செல்லும் என்று.

காளி பிரசாத் மற்றும், கார்த்திக் புகழேந்தி பேசிய பிறகு குளிரூட்டப்பட்ட அந்த அறைக்குள் ஒரு வெம்மையை உணர்ந்தேன்.இது தே என்னும் நூலின் அறிமுக கூட்டம் என்றபோதிலும் சரி நிகர் உப்பு வேலி  நூல்  பற்றி அனைவரும் பேசினார்கள்.ஒரு நூல் என்பது மரம் போல அத்தனை வேர்கள் பரப்பி தரையினுள் ஆழ்ந்து நீரை தேடுவது போல இந்த நிகழ்விற்கு வந்த ஒவ்வொருவரும் ஒரு தளத்திலிருந்து இந்த நூலினை குறித்துப் பேசிக் கொண்டே சென்றார்கள். குழந்தை அசைவுரும்  பந்தை பார்த்தால் உயர்வது போல நான் இந்த நிகழ்வினை பார்த்து எனக்குள் வியந்து கொண்டே இருந்தேன்.

இவர்கள் எல்லாம் பேச பேச எரியும் பனிக்காடு புத்தகமும் பாலா அவர்களின் பரதேசி திரைப்படமும் என் கண்முன்னே விரிந்தது.சருகில் பற்றிக்கொண்டு மெல்லிய சத்தத்துடன் எரியத் தொடங்கிய தீ மளமளவென்று கொழுந்துவிட்டு ஆக்ரோஷத்துடன் எரிவது போல இருந்தது பாரதி பாஸ்கர் அக்கா பேசி முடித்த சமயம் உணர்ந்தேன்.

அத்தனை உணர்வுப் பூர்வமாக இருந்தது.உப்பு,பருத்தி,தேயிலை இந்த மூன்று பொருட்களும் இந்திய தேசத்தில் விளையக் கூடியவை.ஆனால் இதன் பின்னால்இருக்கும் வரலாறு எவ்வளவு முக்கியம் என இவர்கள் அனைவரும் பேசிய சமயத்தில் உணர்ந்து கொண்டேன்.பிரிட்டிஷ் காலத்திற்கு முந்தைய நமது மரபு பிரிட்டிஷ் காலம் அதன் பின்னர் சுதந்திர இந்தியாவின் இன்றைய நிலை என எல்லா தளத்திலும் உப்பும் தேயிலையும் பயணித்துள்ளது உருமாறி உள்ளன.அதனால் உருவாகியிருக்கும் ஒரு பெரிய வியாபார சாம்ராஜ்யம் அதனை  விளைவிக்க பாடுபடும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை அதன் பின்னர் இருக்கும் உலக அரசியல் ஐரோப்பா சீனா மற்றும் அமெரிக்காவின் சுதந்திரப் போராட்ட காலம் என இந்த உரையாடல் ஒரு பெரும் ஊசலாட்டத்தை நிகழ்த்திக் காட்டியது.ராய் மாக்ஸம் என்னும் ஒரு பயணி எத்தனை அதிர்வலைகளை உருவாக்கியுள்ளார்அவரும் இந்த நிகழ்வில் இருப்பது போலவே உணர்ந்தேன்.

நிகழ்வு நடக்க நடக்க இன்னும் நிறைய நண்பர்கள் வந்து அமர்ந்தனர்.இரு பெண் குழந்தைகளுடன் வந்தமர்ந்த அக்கா அவர்களின் முகத்தில் இருந்த தீவிரம் இந்த நிகழ்விற்கு சம்பிரதாயமாக அழைப்பின் பேரில் வந்திருந்த நண்பர்களின் நிலைகொள்ளாமை, அனைத்தையும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருந்தேன்.ஏனெனில் நிகழ்வு  2 மணி  நேரத்திற்கு கூடவே நடைபெற்றது.ஏனெனில் நானே அப்படி தவித்து இருக்கிறேன் வேறு சில நிகழ்வுகளில். ஆனால் இந்த நாள்  இது எனக்கான தளமாக உணர்ந்தேன்.

வரலாறு,மேலும் எந்த ஒன்றை எடுத்தாலும் அதன் ஆதி என்னஅது இன்று எப்படி உருமாறியுள்ளது மேலும் பல தேசத்திலும் அது எப்படி உள்ளது என்று அறிந்து கொள்ள விருப்பப்படும் மனது என்னுடையது.என் மேல் வெகுநாளாக படிந்து இருந்த சோர்வும் அயர்ச்சியும் இந்த நிகழ்வில் பாம்பு சட்டை உரிப்பது போல நானே கழட்டி வைத்து விட்டேன். புதிய பாதை, உற்சாகம் ஒரு திறப்பு அடைய பெற்றேன். ஆறாவது வகுப்பில் சைக்கிள் நன்றாக ஓட்ட கற்றுக் கொண்ட நாளில் இருந்த அந்த உற்சாகம் இந்த நிகழ்வு முடிந்து செல்லும் போது எனக்கு இருந்தது…

யுவன் சந்திரசேகர் பேசியது முற்றிலும் வேறு ஒரு தளத்தில் நிதானத்துடன் இருந்தது.அவரின் நுண்ணுணர்வு,வெளிப்படைத்தன்மை மேலும்  மேடையில் மற்றவர்கள் பேசும் போது அவரின் உடல் மொழி என ரசித்து பார்த்து கொண்டு இருந்தேன்.

இறுதியாக சிறில் அலெக்ஸ் அண்ணன் பேச ஆரம்பித்த சிறிது நேரத்தில் எனக்கு ஏனோ  காட்சன் சாமுவேல் பாதர் அவர்களின் நினைவு வந்து சென்றது.உண்மையில் எல்லோரும் இந்த நிகழ்வில் சொன்னது போல சிறில் அலெக்ஸ் அண்ணா இவ்வளவு ஆர்ப்பாட்டமான நிகழ்வுக்குப் பிறகும் அதே அமைதி தன்னிலை மாறாமல் பேசினார்.

 

ஒரு  எளிய வாசகராக பதிப்பகத்தை சார்ந்தவனாக புத்தகம் விற்பனை செய்பவனாக மொழிப்பற்றாலானக மாணவனாக எழுத்தாளனாக தலைவராக ,இந்திய தேசத்தின் ஒரு பிரதிநிதியாக,வாக்காளராக பல தளங்களில்  என்னை கற்பனை செய்து கொண்டேன்.ஏனெனில் வந்திருந்த அனைவரும் ஒரு துறை சார்ந்து மிக நீண்ட நெடிய காலம் பணியாற்றி இருந்தார்கள் அவர்கள் இந்த நூலினைப் பற்றி அதிலிருந்து சில பிழைகள் பற்றி அவற்றில் இருந்த சரி தவறு நேர்த்தி என பலவற்றை பற்றி சொன்னார்கள் இதுவெல்லாம் எனக்கு மிகப் பெரிய படிப்பினையாக இருந்தது.

ஆனால் எனக்கு முன்பு எப்பொழுதும் இல்லாத அளவு இந்த நிகழ்வு முழுவதுமாக உள் சென்றதற்கான காரணம் என்ன என என்னால் உணர  முடிந்தது. நிகழ்வு முடிந்து ஆட்டோவில் வீடு செல்லும்போது கூட என் மனது உற்சாகத்தில் வைத்துக் கொண்டிருந்தது ஒன்று தன்னறம் பதிப்பகம் பற்றி நண்பர்கள் பாராட்டுக்களையும் இந்த நிகழ்வில் நண்பர்கள் தெரிவித்தார்கள் மேடையில். அதுவும் காரணமாக இருக்கலாம் இல்லை ஏதோ ஒரு கண்டடைவை என் மனம் பெற்றுவிட்டது.

நிச்சயமாக உப்பு வேலி மற்றும் தே புத்தகத்தை எத்தனை தீவிரத்துடன் படிக்க வேண்டும் என உணர்ந்தேன்.அதன் மொழிபெயர்ப்பாளர் எவ்வளவு மென்கெட்டுள்ளார் மேலும் தன்னை வேறு ஒன்றை உணர வைத்த நூலை எல்லோர் கைக்கும் கொண்டு போய் சேர்த்த கார்த்திக் புகழேந்தி மீண்டும் இந்த நூலை வாசிப்பு வட்டத்துக்குள் கொண்டு வர மெனக்கெட்டு இந்த நிகழ்வினை ஒருங்கிணைத்த அகர முதல்வன் ,மூல கணபதியான ராய் மாக்சிம்  மற்றும் ஆசிரியர் உங்களையும் நன்றியோடு நினைத்து கொள்கின்றேன்.

என்றும்  அன்புடன்

ஸ்டாலின்.பா,  

காரியாபட்டி.

முந்தைய கட்டுரைஇயற்கையின் ஆசீர்வாதங்கள் -நாராயணன் மெய்யப்பன்
அடுத்த கட்டுரைஉக்ரேன், உண்மை உருக்கப்படுவது பற்றி…