பேராசிரியர் ஜேசுதாசனும் சடங்குகளும்

கிறிஸ்து, கம்பன், புதுமைப்பித்தன்…பேராசிரியர் ஜேசுதாசனுடன் ஒரு பேட்டி

கிறிஸ்து கம்பன்,புதுமைப்பித்தன் – பேராசிரியர் ஜேசுதாசனுடன் பேட்டி-2

வணக்கம்,

நீங்கள் பேராசிரியர் யேசுதாசனை பேட்டி கண்ட பதிவுகளை வாசிக்கும்போது எழுந்த சந்தேகம் இது. அவரின் நோக்கில் அறம் ஒழுக்கம், சடங்குகள் போன்ற படிநிலையில் சடங்கு குறித்த மதிப்பீடு தவறு அல்லது தவறான கோணம் என்றே எண்ணுகிறேன். அவர் சடங்குகளை கீழ்நிலையில் வைக்கிறார், நான் சடங்குகளை அறத்தை அடையும் வழியில், ஒருவன் எடுத்து வைக்கும் முதல் அடியாகவும், அந்த ஏணியின் முதல் படியாகவும் காண்கிறேன்.

உதாரணமாக, இன்று வெற்றுச்சடங்காக மாறியிருக்கின்ற,  ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயம் செல்லும் பழக்கத்தை எடுத்துக்கொள்ளலாம். திட்டவட்டமாக அது ஒரு சடங்கே. ஆனால், அதனை பின்பற்றும் ஒருவர் தேவாலய கூடுகைக்கு பரிசுத்த அலங்காரத்துடன் செல்ல வேண்டுமானால், அவர் செய்ய வேண்டிய முன் தயாரிப்புகள் அவருக்கு ஒழுக்கத்தினை அளிக்கும். அதேபோல் தேவாலயத்தில், விவிலியம் வாசிக்கப்படும் போது அங்கிருக்கும் மெய்த்தேடல் கொண்ட ஒருவருக்காவது  விவிலியத்தில் உள்ள ஏதேனும் ஒரு புள்ளி அல்லது கண்ணி ஒருவித அறவுணர்வை சீண்டும் அல்லவா? அவ்வாறு அறம் சீண்டப்பட்ட பின்பு அவர் அந்தச் சடங்கை தவிர்க்கலாம். ஆனால், அதற்கு காரணமான சடங்கினை தவறு என்றோ, மிகக்குறைவாக மதிப்பிடுவதோ சரியான பார்வைக்கோணமா?

பழங்குடிமரபுகளுக்குள் ஒன்றான சடங்குகளுக்கு எதிரான பார்வையை பேராசிரியர் அவரது மதத்தில் இருந்து பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது.  அது புரிந்து கொள்ளக் கூடியதுதான். சடங்கில் தொடங்கி, ஒழுக்கத்தில் ஒழுகி, சென்றடையும் இலக்கே “அறம்”  என தொகுக்கலாமென்று நினைக்கிறன். எனது இந்த நோக்கு சரியா? அல்லது குறைந்தபட்சம் கணக்கில் எடுத்துக் கொள்ளத்தக்க ஒன்றா? சடங்குகளை முற்றாக மறுப்பதோ  அழிப்பதோ பேரழகு கொண்ட இலக்கை நோக்கிய ஒரு பயணத்தின் தொடக்கத்தையை நிறுத்தி முடங்க வைப்பது போலாகாதா?

சடங்குகளை மட்டும் பற்றிக் கொண்டிருக்கும் சமூகத்திலிருந்து மேலெழுந்த ஞானிகள் பலர்.உங்கள் தளத்திலேயே உதாரணங்கள் உண்டு. அவர்கள் வந்த வழி அதுவே அதை ஒருபோதும் எவரும் அடைக்கலாகாது. அப்படி சடங்குகளை நிராகரிப்பதன் மூலம், அதை மூர்க்கமாக பற்றிக்கொண்டு அதிலிருந்து முன் செல்லும் கதவுகளை அடைக்கும் ஒரு சமூகம் உருவாகிவிடாதா?

இலட்சுமி நாராயணன்

கீழநத்தம், திருநெல்வேலி

அன்புள்ள இலட்சுமிநாராயணன்

அது அவருடைய பார்வை. நான் சடங்குகளுக்கு எதிரானவன் அல்ல. சடங்குகள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை. பெரும்பாலான சடங்குகள் மிகமிகத் தொன்மையானவை. நம் பழங்குடி வாழ்வுடன் தொடர்புள்ளவை. அவை குறியீட்டுச் செயல்பாடுகள். குறியீட்டுச் செயல்பாடுகள் நம் அறிவை தொடுபவை அல்ல. அவை நம் அக ஆழத்தை, நனவிலியை நேரடியாகச் சென்றடைகின்றன. உலகியலில் நாம் சில விழுமியங்களை சடங்குகள் வழியாகவே நம் அக ஆழத்திற்குச் சொல்லிக்கொள்கிறோம். திருமணம், நீத்தார்கடன்கள் போன்றவை சடங்குகளாக செய்யப்படுபவை. அவை இல்லையேல் நாம் இவ்வாழ்க்கை சார்ந்த உறுதிப்பாடுகளை அடைய முடியாது. கட்டிடங்களை திறந்துவைப்பது, நூல்வெளியிடுவது போல ஏராளமான புதுச்சடங்குகளும் உள்ளன. ஆன்மிகத்தில் சடங்குச்செயல்பாடுகள் வழியாகவே அடிப்படையான எண்ணங்களை நம் நனவிலிக்குச் செலுத்த முடியும்.

ஆனால் நூறாண்டுகளுக்கு முன்பு இந்து மதம் வெறுமே சடங்குகள் மட்டுமாக இருந்தபோது கிறிஸ்தவப் போதகர்கள் அது தத்துவம் இல்லாத வெற்றுச்சடங்குமதம் என்றனர். அதனால் சீண்டப்பட்ட இந்துச் சீர்திருத்தவாதிகள் சடங்குகளைக் கண்டித்து தத்துவத்தை முன்வைத்தனர். இன்று சடங்குகளும் தத்துவமும் இணைந்த பார்வைகள் உருவாகியிருக்கின்றன. பேராசிரியர் ஜேசுதாசன் தத்துவங்களை மட்டுமே முன்வைக்கும், சடங்குகளுக்கு எதிரான பார்வை கொண்டவர். அவர் வாழ்ந்த காலகட்ட நம்பிக்கை அது. தன் மதம் சார்ந்தும் அவருடைய பார்வை அதுவே

ஜெ

முந்தைய கட்டுரைபுனைவுக் களியாட்டு நூல்கள் புத்தகக் கண்காட்சியில்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைநிமிர்பவர்களின் உலகம்