அன்புள்ள ஜெ
எனக்கு வாட்ஸப்பில் வந்த ஒரு செய்தி இது. ஓர் எழுத்தாளர் புத்தகக் கண்காட்சி பற்றி இப்படி எழுதியிருந்தார்
சில எழுத்தாளர்கள் திருவிழாவில் பந்தாவாக சுற்றிக் கொண்டிருப்பார்கள். உங்கள் வாசிப்புக்காக புத்தகம் எழுதவே அவதாரம் எடுத்தவர் போலவும், ஏதோ பெரிய தியாகம் செய்து விட்டவர் போலவும், நீங்கள் அவருடைய நூல்களை வாங்குவது உங்களுடைய கடமை என்பது போலவும் அவருடைய பாவனைகள் இருக்கக்கூடும். அவருடன் பேசியபிறகு அவர்மீதான உங்கள் மதிப்பு சரியக்கூடும். அதனால்தான் திரும்பவும் சொல்கிறேன், எழுத்தாளனின் எழுத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது. எழுத்தும் வாழ்க்கையும் ஒன்றாய் இருப்பவர்கள் அரிதிலும் அரிது.
இந்த வரிகள் அளித்த எரிச்சலுடன் இதை எழுதுகிறேன். முதல் விஷயம் இதை எழுதியவர் தன்னை சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கும் சான்றோன் என நினைத்துக் கொள்கிறார். இன்னொன்று இலக்கியவாதி அயோக்கியன், பந்தா செய்பவன் என்றால் இவர் சான்றோன் எனச் சொல்பவர் யாராக இருக்கும்? கண்டிப்பாக ஏதாவது அரசியல்வாதி அல்லது மதத்தலைவராக இருக்கும். இந்த வகையான கிரிஞ்ச் செய்திகள்தான் வாட்ஸப்பில் அதிகமாக வரும் என்றாலும் இது பயங்கர எரிச்சலை அளித்தது
ஆர்.சரவணக்குமார்
அன்புள்ள சரவணக்குமார்,
வாட்ஸப் சுற்று என்பது சராசரிகளின் உலகம். தமிழகம் சராசரியாக நம்பும், சொல்லும் விஷயங்களே அதில் வெளிவரும். இந்த வாட்ஸப் சுற்றி வருவதில் இருந்தே இந்த வரிகளுக்கு இருக்கும் ஏற்பு புரிகிறது. இவை ஒரு சாமானிய- சராசரிக்கு உடனடியாக பிடிக்கும் வரிகள். அவன் தன் அனைத்து அயோக்கிய அற்பத்தனங்களுடனும் தன்னை நல்லவன், தூயவன் என நம்ப விரும்புகிறான். வெட்கமே இல்லாமல் சாமானியர்கள் அதை எல்லா பேச்சுக்களிலும் சொல்வதை நீங்களே கேட்டிருக்கலாம்.
அவன் தான் சாமானியனாக இருப்பதன் காரணம் தன்னுடைய எளிமை, நேர்மை, சொல்லும் செயலும் ஒன்றேயான பெருநிலை ஆகியவைதான் என்று நினைக்கிறான். ஆகவே எவ்வகையிலேனும் அறியப்பட்ட, வெற்றிபெற்ற, சாதித்த அனைவர்மேலும் அகத்தே சீற்றம் கொண்டிருக்கிறான். அவர்களை அயோக்கியர்கள் என்று சொல்லும் எல்லா பேச்சையும் அவன் உடனடியாக ஏற்றுக்கொள்வான். அவன் அகத்தில் புண்பட்ட ஆணவம் சற்றே குளிர்கிறது. அவர்களின் பொருட்டு எழுதப்பட்ட வரிகள் இவை.
தமிழ்ச் சூழலில் பத்துநாட்களுக்கு ஒருமுறை எழுத்தாளர்களை வசைபாடி, இழிவு செய்து எழுதப்படும் ஒரு கட்டுரையோ குறிப்போ வெளிவந்துவிடும். ‘ஆமாங்க மெய்தானுங்க’ என அதை ஒரு ஆயிரம்பேர் ஆதரித்து பகிர்வார்கள். எல்லா இடங்களிலும் அறிவுச்செயல்பாடுகள் மேல், இலக்கியம் மேல் அதை அறியாதவர்களுக்கு ஒரு மிரட்சியும் விலக்கமும் உண்டு. ஆனால் வெறுப்பும் காழ்ப்பும் தமிழ்ச்சூழலுக்கே உரிய மனநிலை. தவறாமல் புத்தகக் கண்காட்சி வரும்போது எழுத்தாளனை வசைபாடி ஒரு கட்டுரை எழுதப்பட்டு சுற்றில் இருக்கும்.
அதை எழுதியவன் எவனாக இருந்தாலும் அவனுக்கு இலக்கியத்துடன் தொடர்பில்லை. அந்த அற்பன் வாசிப்பற்ற பாமரன் அல்ல. பாமரனுக்கு இந்த அறிவுலகம் இருப்பதே தெரியாது. இவன் பெரும்பாலும் இலக்கியச் சூழலில் புழங்குபவன், ஆனால் இலக்கியம் என்னும் மானுடமளாவிய பேரியக்கத்தை உணரமுடியாதவன். அது உருவாக்கும் அகஎழுச்சியை ஒரு கணமேனும் உணர்ந்திராதவன். ஆனால் அதைக் கண்டு பொருமிக்கொண்டிருப்பவன். பெரும்பாலும் தன்னை எழுத்தாளன் என நம்பும் ஒரு குற்றெழுத்தாளன். அவன் அடைந்துள்ள இந்த அகச்சிறுமையால் என்றும் அவ்வண்ணமே இருக்கவேண்டிய தீயூழ் கொண்டவன். அந்த அகச்சிறுமையாலேயே தன்னை உள்ளும்புறமும் நிறைந்த மாமனிதன், பிறர்மேல் தீர்ப்பு சொல்லும் தகைமைகொண்டவன் என பாவனை செய்து கொள்கிறான்.
தன் பலவீனங்களை, முரண்பாடுகளை, இழிவுகளை, சரிவுகளை தானே உணர்வதென்பது ஓர் அரிய இயல்பு. அவ்வியல்பில் இருந்தே எழுத்தாளன் உருவாகிறான். அதுவே அவன் முதல் பண்பு என்றே சொல்லவேண்டும். அதை முன்வைப்பதனால் அவனை ஓர் அற்பன், அயோக்கியன் என முத்திரை குத்துவதென்பது அறியாமையில் உழல்வோர் செய்வது. ஆனால் அவர்கள்தான் நம்மைச்சுற்றிச் சூழ்ந்திருக்கிறார்கள். தன்னை பிம்பமாக ஆக்கி முன்வைக்கும் அரசியல், மதம் சார்ந்த ஆளுமைகளை அப்படியே நம்பி ஏற்க அந்த அறியாமை கொண்ட சாமானியர்களுக்கு எந்த தடையும் இல்லை. தன்னை அப்படியே முன்வைக்கும் எழுத்தாளனே அவர்களால் பெரும்பாலும் வெறுக்கப்படுகிறான். இது இங்கல்ல, உலகம் முழுக்க உள்ளதுதான். இங்கே இலக்கியவாசிப்பாளர் மிகக்குறைவு, பாமரர் மிக மிக அதிகம். அதுவே வேறுபாடு.
மேலும் எழுத்தாளன் இருநிலை கொண்டவன். எழுதும்போது, அந்த உளக்கூர்மையின் நிலையில், அவனுடைய அறவுணர்வும் நுண்ணுணர்வும் உச்சமடைகின்றன. அல்லாதபோது அவனும் சாமானியனே. தன்னை சாமானியன் என்று சொல்லாத எழுத்தாளனே இல்லை. சாமானியர்களில் ஒருவனாக இருக்கையிலேயே அவனால் சாமானியர்களின் உள்ளத்தையும் வாழ்வையும் எழுத முடியும். அவன் எழுதிய உச்சங்களைக் கொண்டு அச்சாமானியனை மதிப்பிடக்கூடாது. அந்த முரண்பாடு நடிப்பு அல்ல. அவன் தவிர்க்கவே முடியாத இருநிலை.
எழுத்தாளர்களின் குணக்கேடுகள் என பரவலாக அறியப்படும் பல இயல்புகள் இந்த முரண்பாட்டில் இருந்து உருவாகின்றவை. எழுதும்போது இருக்கும் உச்சநிலை, ஒருமைநிலை, மெய்நிலை எப்போதும் அப்படியே தொடரவேண்டும் என எண்ணி மயக்கங்களில் ஆழ்பவர்கள் உண்டு. சாதாரண நிலையில் இருக்க முடியாமல் அதை செயற்கையாக உக்கிரப்படுத்தவேண்டும் என முயன்று எதிலெதிலோ முட்டிமோதி அழிபவர்கள் உண்டு. எழுதும்போது அமையும் தீவிரநிலையை அப்படியே அன்றாடத்தில் தொடரும்போது பலவகையான மிகைவெளிப்பாடுகளில் சென்று சேர்கிறார்கள் படைப்பாளிகள்.
அதைவிட ஒன்றுண்டு, எழுதும்போதிருக்கும் பெருநிலையே தான் என எண்ணி செருக்கு கொள்கிறார்கள். ஓர் எல்லைவரை அந்தச் செருக்கு இன்றியமையாதது. அது இல்லையேல் அவனால் அவனைச் சூழ்ந்திருக்கும் பாமரர் நடுவே வாழ முடியாது. அவர்களின் ஏளனங்கள், அறிவுரைகளை தாளமுடியாது. இங்கே எழுதுபவன், கலைஞன் என்றுமே இளக்காரமாகத்தான் சூழலால் பார்க்கப்படுகிறான். அவனை வாசிப்பவர், அவனை அறிபவர் மிகக்குறைவு.இங்கே செல்வமும் அதிகாரமும் மரபும்தான் வழிபடப்படுகின்றன. அவற்றுக்கு எதிராக நிலைகொள்ள எழுத்தாளனுக்கு செருக்கு இன்றியமையாதது. புதுமைப்பித்தனையும் ஜெயகாந்தனையும் பிரமிளையும் நிமிர்வுகொள்ளச் செய்தது அச்செருக்குதான்.
ஆனால் அந்தச் செருக்கு அன்றாடத்தில் எல்லை கடக்கக்கூடும். எங்கே அதை நிறுத்திக் கொள்வதென்று தெரியாமலாகும். தான் எழுதியது படிக்கப்படாதபோது, தான் புறக்கணிக்கப்படும்போது சீற்றம் கொள்ளச் செய்யும். சங்ககாலம் முதல் அந்த உளநிலை இங்குள்ளது. வரிசையறியாமல் பரிசில் கொடுத்தமைக்குச் சீறும் சங்ககாலக் கவிஞனில் வெளிப்படுவது அதுவே. புலமைக்காய்ச்சலாக வெளிப்படுவதும் அதுவே, அதை கட்டுப்படுத்துவது கடினம். எழுதுவது தன்னுள் அமைந்த வேறொரு ஆளுமை என தனக்குத்தானே சொல்லிச் சொல்லி நிறுவிக்கொள்ளவேண்டியதுதான். அது ஒன்றே வழி.
இசை கேட்பவருக்கு தெரியும். தொடர்ந்து நாட்கணக்கில் இசை கேட்கையில் மெல்லமெல்ல நம் உள்ளம் ஓர் ஒருமையை அடைகிறது. அதுவரை இயல்பாக ஒலித்த அன்றாட ஓசைகள்கூட துணுக்குறலையும் எரிச்சலையும் அளிக்கின்றன. அதுவே இலக்கியவாதிக்கும் நிகழும். அவன் தன்னகத்தே ஒருமையும் ஒழுங்கும் கொண்ட ஓர் உலகை உருவாக்கிக் கொண்டிருக்கையில் வெளியுலகின் இயல்பான கட்டற்றதன்மை, பிசிறுகள் எரிச்சலடையச் செய்கின்றன. சட்டென்று மிகையாக எதிர்வினையாற்றச் செய்கின்றன.
கம்பனோ காளிதாசனோ ஷேக்ஸ்பியரோ ஷெல்லியோ தல்ஸ்தோயோ தஸ்தயேவ்ஸ்கியோ அத்தனை இலக்கியமேதைகளும் அப்படித்தான் இருந்தனர். அவர்களின் வாழ்க்கைக்கதைகள் காட்டும் சித்திரம் அதுவே. அவர்கள் எவரைப் பற்றியும் ‘சான்றோர்’ என்ற சித்திரத்தை வரலாறு காட்டவில்லை. அப்பழுக்கற்ற ஆளுமைகள் அல்ல அவர்கள். அப்பழுக்கற்ற ஆளுமையில் இருந்து இலக்கியம் உருவாகாது. நிலைகுலைந்த, தன்னைத்தானே மீட்டுக்கொள்ள முயன்று அலைபாய்ந்தபடியே இருக்கும், கட்டற்று பாயும் அகம் கொண்ட ஆளுமையில் இருந்தே இலக்கியம் உருவாகும். இன்றுவரை மானுடம் உருவாக்கிய படைப்பாளிகளில் ஒருவர்கூட இதற்கு விதிவிலக்கில்லை.
இதெல்லாம் இலக்கியம் பற்றிய ஆரம்பப் பாடம். ஒருவன் ஓராண்டு இலக்கியம் வாசித்தாலே தெரியவரும் உண்மை. ஆனால் இங்கே நாம் அதைச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. ஏனென்றால் இன்றைய சமூகவலைச் சூழலில் அரைவேக்காட்டுக் கருத்துக்களின் பரவல்வேகம் மிகமிக அதிகம்.
இலக்கியவாதி தன்னுடைய இடம் என உணரும் ஒரே களம் புத்தகக் கண்காட்சிதான். அங்கே அவன் அடையும் நிமிர்வுதான் அவன் இச்சூழலில் ஈட்டிக்கொள்ளும் ஒரே விருது. அரசியல்வாதிகள் துணையாட்கள் சூழ உலவுவதை இயல்பாகப் பார்க்கும் பாமரனுக்கு இலக்கியவாதியின் அந்த நிமிர்வு எரிச்சலை ஊட்டுகிறது.
ஆனால் எனக்கு அங்கே ஒவ்வொரு புதிய எழுத்தாளனும் பரவசத்துடன், பரபரப்புடன், உலகமே தன்னை நோக்குகிறது என்ற பிரமையுடன் உலவுவதைக் காணக்காண உளம் நெகிழ்கிறது. ’அப்படியே இரு, உனக்கு கிடைக்கும் வெகுமதி இதுவே, இந்த நிமிர்வில் இருந்தே இந்த வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கும் தைரியத்தையும் நம்பிக்கையையும் நீ அடையவேண்டும்’ என்றுதான் நான் உளத்தே சொல்லிக்கொள்வேன். எந்த இளம் எழுத்தாளனிடமும் வாசகனாகச் சென்று கையெழுத்து வாங்கிக்கொள்ள, படம் எடுத்துக்கொள்ள எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அவர்கள் என்னவர்கள். அவர்களை விட நான் உயர்ந்த ஒழுக்க பீடத்திலோ அறிவுமேடையிலோ இல்லை.
ஓர் எழுத்தாளனைப் பார்த்து மகிழ்வுடன் அருகே செல்லும் வாசகன், அவனிடம் ஓரிரு சொற்கள் பேசி படம் எடுத்துக்கொள்பவன், நூலில் கையெழுத்து வாங்கிக் கொள்பவன் இருக்கும் நிலை இலக்கியம் அளிக்கும் பரவசத்தில் ஒன்று. அந்த எழுத்தாளன் தன்னை நினைவில் வைத்திருக்கவேண்டும், தன்னை ‘மதிக்கவேண்டும்’ என்றெல்லாம் அந்த வாசகன் எதிர்பார்ப்பதில்லை. அது அவனுக்கு அவனே அளித்துக்கொள்ளும் வெகுமதி. இலக்கியத்தைக் கொண்டாடுவது அது.
நான் இன்றும் என்னை ஆட்கொண்ட எழுத்தாளர்களை கண்டால் ஓடிச்செல்பவன்தான். மூன்று ஆண்டுகளுக்கு முன் கோழிக்கோட்டில் ஒரு நிகழ்ச்சியில் எம்.டி.வாசுதேவன் நாயர் காரில் வந்து இறங்கும்போது உள்ளே பேசிக்கொண்டிருந்த நான் என்னை மறந்து அவரை நோக்கி ஓடினேன். அவர் அருகே சென்று பரவசத்துடன் நின்றேன். முதுமையால் சற்று நடுக்கம் கொண்டிருந்த அவர் என்னை மட்டுமல்ல எவரையும் கவனிக்கவில்லை. அதனாலென்ன?
அன்று இன்னொரு மலையாள எழுத்தாளர் நெகிழ்ந்த நிலையில் சொன்னார். ‘ஜெயமோகன், உங்களுடைய குன்றாத ஊக்கம் எங்கிருந்து வருகிறது என்று தெரிகிறது. இலக்கியம் என்னும் செயல்பாட்டில் இருக்கும் பற்று அது. இங்கிருந்து அந்த எல்லை வரை பரவசத்துடன் ஓடிய ஜெயமோகன் மாபெரும் படைப்பாளி. இங்கே தயங்கி நின்ற நான் ஒரு சின்ன கவிஞன். என்னை மறந்த அந்த பெரும்பரவசம் எனக்கு வரவில்லை. வராதவரை இந்த தேவதை எனக்கு அருளப்போவதுமில்லை’
நான் வைக்கம் முகமது பஷீரை கண்டவன். க.நா.சுப்ரமணியத்தை கண்டிருக்கிறேன். சி.சு.செல்லப்பாவை, எம்.கோவிந்தனை, சிவராம காரந்தை, தகழி சிவசங்கரப் பிள்ளையை, வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனனை, அதீன் பந்த்யோபாத்யாவை, ஓ.வி.விஜயனை லா.ச.ராமாமிர்தத்தைக் கண்டிருக்கிறேன். நான் வழிபட்ட அத்தனைபேரையும் தேடிச்சென்று சந்தித்திருக்கிறேன். ஓரிரு சொற்கள் பேசியிருக்கிறேன். பெரும்பாலும் அர்த்தமற்ற அறிமுகச் சொற்கள். நெஞ்சு படபடக்க அவர்களை வெறுமே பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறேன்.
அவர்கள் என்னை அறிந்திருக்கவோ நினைவில் வைத்திருக்கவோ வாய்ப்பில்லை. ஏனென்றால் அப்போது நான் மிக ஆரம்பநிலை வாசகன். க.நா.சுப்ரமணியத்திடம் நான் ஓரிரு சொற்களே பேசினேன். சி.சு.செல்லப்பா என்னை பொருட்படுத்தவே இல்லை. வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன் என்னை திட்டி அனுப்பினார்.ஆனால் என் நினைவுகள் இன்று ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. பெரும் பரவசத்துடன் அவர்களைப் பற்றி எண்ணிக் கொள்கிறேன். அச்சந்திப்புகள் என் அருங்கணங்கள், அந்நினைவுகள் என் செல்வங்கள்.
ஏனென்றால் மெய்யான இலக்கிய வாசகனுக்கு எழுத்தாளனின் தோற்றமே முக்கியமானதுதான். இக்கணம் சட்டென்று அசோகமித்திரனை நினைவுகூர்ந்து நெஞ்சு நெகிழ்கிறேன். அந்த மெலிய முகம். இதோ என் நூலக அடுக்கின் முன் அவர் படம் இருந்து என்னை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒருநாளில் ஒருமுறையாவது சுந்தர ராமசாமி பெயரைச் சொல்கிறேன். ஆற்றூர் ரவிவர்மாவை பற்றி பேசுகிறேன். நான் யார் என்றால் இதோ இவர்கள் அனைவரையும் என் முன்னோராக வரித்துக்கொண்ட ஒருவன் என்றே சொல்வேன்.
நானறிந்த பேராளுமைகள் பெரும்பாலும் அனைவருமே எழுத்தாளர்கள்தான். நான் காந்திய இயக்கத்தவரை, ஆன்மிக ஞானியரை, பொதுச்சேவையாளர்களை சென்று கண்டிருக்கிறேன். கேளுச்சரண் மகாபாத்ரா, கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர், பூபேன் கக்கர் போன்ற பெருங்கலைஞர்களை சந்தித்திருக்கிறேன். ஆதிமூலம் போன்ற கலைஞர்களை நன்கறிவேன். ஆயினும் எழுத்தாளர்களே எனக்கு பேராளுமைகளாக தெரிகிறார்கள்.
எழுத்தாளர்களின் சிதறல்களும், சிக்கல்களும் எனக்கு தெரியும். அவர்கள் எழுந்த கணங்களை அவர்களின் எழுத்துக்களில் கண்டபின் அவர்களின் இயல்பான கணங்களை அன்றாடத்தில் காணும் வேறுபாட்டையும் அறிந்திருக்கிறேன். அவர்களை ஒழுக்கம், அறம், கருணை ஆகியவற்றின் உச்சத்தில் நின்ற சான்றோர்களாக எண்ணுவதில்லை. சொல்லும் செயலும் ஒன்றானவர்களாக காண்பதுமில்லை. அப்படிப்பட்ட அறத்தோர்கள் பெரும்பாலும் உறைந்துநின்றுவிட்டவர்களாக, சலிப்பூட்டும் ஒற்றைப்படைத்தன்மை கொண்டவர்களாகவே தோன்றுகிறார்கள்.
எழுத்தாளர்கள் என நான் கண்டவர்கள் மிகச்சிக்கலான மின்பொறி போன்றவர்கள். நாமறியாத மர்மம் கொண்டவர்கள். மிகமிக நுண்மையானவர்கள். ஆகவே அவர்கள் எப்படி எதற்கு எதிர்வினையாற்றுவார்கள் என்றே சொல்லமுடியாது. அவர்களைக் கையாள்வதே கடினம். கண்ணிவெடிகள் போன்றவர்கள் அவர்களில் பலர். ஆனால் அவர்களின் சொற்களே என் சிந்தனையைச் சொடுக்குகின்றன.என் நுண்ணுணர்வை தொட்டு எழுப்புகின்றன. அவர்களுடன் இருக்கையிலேயே நான் முழுவிழிப்புடன் இருக்கிறேன்.
என் பார்வையில் அவர்களின் தோற்றமேகூட முக்கியமானது. தேவதேவனின் தோற்றம்போல இனிய பிறிதொன்று உண்டா? இந்த தலைமுறையில் நம்முடன் வாழ்பவர்களில் பேரழகன் என நான் சொல்வது அவரையே. அவருடைய எந்தப் படத்தையும் பெரும் மோகத்துடன் மீண்டும் மீண்டும் பார்க்கிறேன். பாருங்கள், பெரும்பாலான எழுத்தாளர்கள் அழகான உடல்கொண்டவர்கள் அல்ல. இளமையில் அவர்கள் அழகாக இருந்ததுமில்லை. ஆனால் பெரும்பாலான மனிதர்கள் சோர்ந்து சலித்துவிடும் வயதில், முடிக்கு ஆபாசமாக கருவண்ணமெல்லாம் அடித்து செயற்கையாக இளமையை நடித்து அருவருப்பூட்டும் வயதில், எழுத்தாளர்கள் எத்தனை அழகாக ஆகிறார்கள். அது சொல்லின் அழகு. அவர்கள் உபாசித்த இலக்கியத்தின் கொடை.
அந்த இலக்கியமே வாசகனையும் எழுத்தாளனையும் இணைக்கிறது. அது ‘தேவையான நூல்களை வாசித்து அறிவை விருத்தி செய்துகொள்வது’ அல்ல. அது ஒரு பெரும் களியாட்டு. அத்தனை பரவசங்களும் மயக்கங்களும் கொண்டது. அப்படி அதை அணுகுபவர் மட்டுமே இலக்கியத்தை மெய்யாக அறியமுடியும். உலகம் எங்கும் அப்படித்தான். உலகில் பலநாடுகளில் புத்தகக் கடைகளில் பெரும்பரவசத்துடன் பதறும் உடலுடன் உலவுபவர்களை கண்டு நான் நெகிழ்ந்து புன்னகைத்ததுண்டு. ஒரு சொல்கூட வாசிக்கமுடியாத இந்தோனேசிய மொழி நூல்கள் கொண்ட நூலகத்தின் நடுவே அதே பரவசத்தை அடைந்து நான் சுற்றி வந்திருக்கிறேன்.
புத்தகக் கண்காட்சியில் திமிர்த்து அலையும் ஒவ்வொரு எழுத்தாளனும் என்னவன். நூல்களையும் ஆசிரியனையும் கண்டு பரவசமடையும் ஒவ்வொரு வாசகனும் என்னவன். என் இனம் அவர்கள். என் குருதி அவர்கள். நாங்கள் இவ்வுலகில் எழுதியும் வாசித்தும் ஓர் உலகை உருவாக்கி கொண்டிருக்கிறோம். இவ்வுலகை அர்த்தப்படுத்தும் ஒன்றை, இவ்வுலகை விட மேலான ஒன்றை. அதை பிறிதொருவர் அறியவே முடியாது.
ஆகவே எழுத்தாளர்களை வழிபடுவோம். அதில் நாம் தயங்க வேண்டியதில்லை. அதைச் செய்யாதே என ஆலோசனை சொல்லவரும் அற்பனிடம் ‘ஆமடா, அப்படித்தான் செய்வோம். இது எங்கள் உலகம். வாசிப்பவனும் எழுதுபவனும் சேர்ந்து உருவாக்கும் உலகம். நீ உள்ளே நுழையாதே. அப்பால் போடா. போய் உன் சாமிகளைக் கும்பிடு. உனக்கு விதிக்கப்பட்டது அதுவே’ என்று சொல்வோம்.
ஜெ