ஒளிரும் ஒரு சிறுவட்டம்

அடாது மழை பெய்யினும் விடாது நிகழ்ச்சி நடக்கும் என்று பழைய காலத்தில் நாடக நிறுவனங்கள்  விளம்பரம் செய்வதுண்டு. அக்காலத்தில் ஒரு மேடையை மட்டும் மூங்கிலாலும் பலகையாலும் அமைப்பார்கள். அதற்கு மேலே மட்டும் நனையாமல் ஓலைக்கூரை அமையும். எஞ்சிய முன்பகுதி திறந்த வானம் கொண்டது. மூங்கில் நட்டு ஓலைப்படல்களால் ஒரு வேலி மறைப்பு அமைத்து வளைத்திருப்பார்கள் அதுதான் அரங்கு. இரவு ஒன்பது அல்லது பத்து மணிவாக்கில் தொடங்கும் நாடகம் விடியற்காலை இரண்டு மூன்றுமணி வரைக்கும் தொடரும். அத்தனை நேரமும் பார்வையாளர்கள் பனியில் தான் அமர்ந்திருக்கவேண்டும்.

அதற்கான முன்னேற்பாடுகளுடன் தான் அவர்கள் வருவார்கள். பெரும்பாலும் சேர்த்து தைத்த கோணிப்பைகள். அரிதாக கம்பளிகள் .பழைய நினைவொன்றில் பனையோலை சேர்த்து இறுக்கமாகப் பின்னி உருவாக்கிய ஒன்றைக்கொண்டு வந்து அதைக் குடையும் போர்வையும் போலப் போர்த்திக்கொண்டு நாடகம் பார்ப்போம் என்று எழுதியிருக்கிறார்கள். ஒரு குட்டிக்குடிசை, அதற்குள் வெதுவெதுப்பாக அமர்ந்துகொண்டு நாடகத்தைப்பார்க்கலாம். பெரும்பாலானவர்கள் காலணா போன்ற கட்டணங்களைக்கொடுத்துவிட்டு தரையில் குந்தி அமர்ந்துதான் நாடகம் பார்க்க வேண்டும். முக்கிய நபர்களுக்கு மட்டும் முன்வரிசையில் ஒரு சின்ன வளைப்பிற்குள் நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். அவர்கள் பின்னால் நிற்பவர்களுக்கு மறைக்காதபடி பக்கவாட்டில் அமரவைக்கப்படுவார்கள்.

இந்த நாடகத்திற்கு மிகப்பெரிய எதிரி என்பது மழைதான். மழையால் நிகழ்ச்சி நின்றுவிடுவதென்பது தமிழகத்தின் பல இடங்களில் நிகழ்வது. குறிப்பாக கோடைமழை நாடகத்திற்கு மிக எதிரி. மழைக்காலத்தில் பெரும்பாலும் நாடகக்குழுக்கள் பெருநகரங்களுக்கு வந்துவிடுவார்கள். ஒற்றைவாடை தியேட்டர் போன்ற கூரையுள்ள உள்ளரங்குகளில் நாடகங்கள் நடக்கும் .பெருந்திரளாக மக்கள் பார்க்கும் வெளிஅரங்கு நிகழ்ச்சிகள் எல்லாமே கோடைகாலங்களில் தான், சித்திரை பங்குனி. அக்காலத்தில் திடீரென்று மழை பெய்வதென்பது அவர்களுடைய நிகழ்வை அழித்துவிடுவது. அப்படியென்றால் விடாது நாடகம் நட்க்கும் என்று எப்படி அறிவிக்கிறார்கள்?  மொத்த நாடகத்தையும் நீங்கள் மழையில் நனைந்துகொண்டு பார்க்கவேண்டும் என்று பார்வையாளர்களிடம் சொல்வதுதான் அது.

அன்றைய பார்வையாளர்கள் அதற்குத் தயாராக இருந்தார்கள் என்றுதான் தெரிகிறது. ஏனெனில் விடாது மழை பெய்தது, நாங்களும் நாடகத்தை நடித்து முடித்தோம் என்றெல்லாம் பழைய நாடக நினைவுகளில் எழுதியிருக்கிறார்கள். இந்த பனையோலைக்குடைகள் கமுகுப்பாளைக்குடைகள் இன்னும் வெவ்வேறு கவசங்களுடன் மழையில் நாடகத்தைப் பார்த்திருப்பார்கள். அல்லது அது கூட இல்லாமல் ஆர்வமே குடையாக அமர்ந்து பார்த்திருப்பார்கள்.

சென்ற தொற்று நோய்க் காலத்தை எண்ணிப்பார்க்கையில் நான் அடிக்கடி பயன்படுத்தும் சொலவடை அடாது மழை பெய்யினும் விடாது நாடகம் நடக்கும் என்பதுதான். ஏனென்றால் இந்த தொற்றுநோய்க் காலத்தில் எங்கள் விஷ்ணுபுரம் நண்பர் குழுவின் தொடர்ச்செயல்கள் எந்த வகையிலும் நின்றுவிடவில்லை. சட்டம் அனுமதிக்கும் காலம் முழுக்க நாங்கள் தொடர்ந்து பயணங்கள் செய்து கொண்டுதான் இருந்தோம். தொடர்ந்து இலக்கிய சந்திப்புகளை நடத்திக்கொண்டிருந்தோம். பங்கேற்பாளர் எண்ணிக்கையை சட்ட வரையறைகளுக்கேற்ப குறைத்துக் கொண்டோமேயொழிய எந்த நிகழ்வையும் நிறுத்திக்கொள்ளவில்லை. அதற்கேற்ப எங்கள் நண்பர்களும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் திரண்டு வந்துகொண்டுதான் இருந்தார்கள்.

வியப்பூட்டும் விஷயம் இது. தொற்று நோய்க்காலம் முடிந்தவுடன்  முதல் இளம் வாசகர் சந்திப்பை அறிவித்தபோது ஒரு பத்து பேர் விண்ணப்பித்தால்கூட நடத்திவிடலாம் என்று கிருஷ்ணன் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் முப்பது பேர் விண்ணப்பிக்கவே இரண்டு நிகழ்ச்சிகளாக அவற்றை நிகழ்த்தவேண்டியிருந்தது. இது தவிர ஸூம் செயலி வழியாக நாடகங்கள், தனி நடிப்புகள், கதைசொல்லல்கள், உரையாடல்கள் என்று வாரத்தில் இரண்டு நாட்கள் சந்தித்துக்கொண்டிருந்தோம். அச்சந்திப்புகள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு விஷ்ணுபுரம் நண்பர்கள் அனைவரையும் ஒருதிரளாக ஒருவருக்கொருவர் மிக அணுக்கமானவர்களாக மாற்றின. அந்நட்புகள் நோய்க்காலம் முடிந்தபிறகும் அதே தீவிரத்துடன் இன்று தொடர்கின்றன. பல குழுக்கள் அதே வேகத்துடன் இப்போதும் செயல்படுகின்றன.

இப்போது எல்லாம் ஒரு இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகத் தோன்றுகிறது. அந்த எண்ணம் வந்ததுமே புதிய வாசகர் சந்திப்பை அறிவிக்க வேண்டும் என்று கிருஷ்ணன் துடிக்கத் தொடங்கினார். அறிவிப்பு வெளியிட்ட ஒன்றரை மணிநேரத்தில் பங்கேற்பாளர் எண்ணிக்கை எங்கள் கணிப்பை தாண்டிவிட்டதால் அதை எடுத்துவிட்டோம். ஆயினும் முப்பத்தி ஐந்து பேருக்குமேல் விண்ணப்பம் வந்தது. இருபத்தைந்து பேரை மட்டுமே கோவையில் சந்திக்க ஏற்பாடு செய்தோம். எஞ்சியவர்களுக்காக ஈரோட்டில் இன்னொரு சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கிறோம். அவ்வறிவிப்பு வெளிவந்த சில நிமிடங்களிலேயே தேவையானவர்கள் வந்துவிடுவார்கள் என்று தோன்றுகிறது.

இம்முறையும் பாலு தோட்டத்தில் சந்திப்பு. கோவையில் வெயில் காலம் தொடங்கிவிட்டது. பகலில் வெக்கை எழுகிறது.  மண் காய்ந்துபுழுதி பறக்கிறது. ஆயினும் விடியற்காலையில் கொஞ்சம் குளிர் உள்ளது. நண்பர் சந்திப்புகளுக்கு உகந்தது இதுதான். இச்சந்திப்புகள் பற்றிய பகிர்வுகளில் இருக்கும் உற்சாகத்தை நம்பி இதெல்லாம் வசதியான இடங்கள் வசதியாக நடத்தப்படுவன என எண்ணவேண்டியதில்லை. இருபது பேர் ஒரே கட்டிடத்தில் என்பது நெருக்கி அடித்துக்கொண்டு படுக்க வேண்டிய தேவை கொண்டது. ஆயினும் நெருக்கி அடித்தல்கள் இந்தியர்களாகிய நமக்கு ஒரு அண்மையைக்கொடுக்கின்றன. நம்முடைய நல்ல நினைவுகள் எல்லாமே கல்யாணத்திற்கோ பிற விழாக்களுக்காகவோ எங்கோ ஒரு வீட்டில் அனைவரும் உறவினர்களுடன்  ஒரு கூடத்தில் நெருக்கி அடித்துக்கொண்டு படுத்த அனுபவங்களாகத்தான் இருக்கும். மனிதர்களின் மிகச்சிறந்த இன்பம் என்பது கூடி இருத்தல் தான்.

2015ல் முதலில் இந்த இளம் வாசகர் சந்திப்புநிகழ்வுகளைத் தொடங்கும்போது விஷ்ணுபுரம் அமைப்பு வழக்கமான நண்பர்களின் வழக்கமான கூடுகைகளாக மாறிக்கொண்டிருக்கிறதோ என்ற சிறு ஐயம் எனக்கு ஏற்பட்டிருந்தது. திரும்ப திரும்ப ஒரே முகங்கள். ஓரிருவர் தற்செயலாக உள்ளே வருவதோடு சரி. பெருந்திரளாக  இளைஞர்கள் உள்ளே வரவேண்டும் என்பதற்காக இதைத் தொடங்கினோம். ஏழாண்டுகளில் இருபது சந்திப்புகள் வரை ஆகிவிட்டிருக்கிறது. தொடக்க காலத்தில் இச்சந்திப்புகளுக்கு வந்தவர்கள் பலர் இன்று மிக அறியப்பட்ட எழுத்தாளர்களாக மாறிவிட்டிருக்கிறார்கள். இது ஒரு கல்வி நிலையம் போல மாறிவிட்டிருக்கிறது இன்று. ஆண்டுக்கு மூன்று நான்கு சந்திப்புகள்.

எனக்குத்தெரிந்து தமிழில் இவ்வாறு இளம் வாசகர்களுக்காக ஒரு தொடர் சந்திப்பு நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நிகழ்ந்ததில்லை. சுந்தர ராமசாமிக்கு அவ்வாறு ஒன்று நிகழ்த்தவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. பாம்பன் விளை என்னுமிடத்தில் அவர் பெருஞ்செலவிலேயே  சில நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார் அதற்கு முன்பு காகங்கள் அவர் தன் வீட்டிலேயே ஒருங்கிணைத்த சந்திப்பு நிகழ்ச்சியாக இருந்தது. பாம்பன் விளை நிகழ்ச்சியை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டிருக்க முடியும். மிகச்சிறப்பான தொடக்கமும் அதற்கு இருந்தது. ஆனால் பங்கேற்பாளர்கள் அதை வெறும் குடிநிகழ்வாக மாற்ற முயன்றனர். ஆகவே அது நிறுத்தப்பட்டுவிட்டது.

தமிழ்ச் சூழலில் இது ஒரு சிக்கலான விஷயம் .’சிற்றிதழ் நுரைகள்’ என நான் அழைக்கும் ஒரு கூட்டம் தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருக்கிறது.  சிற்றிதழ்ச்சூழல் என்பது ஒருவகையான உள்வட்டம் .அங்கு தீவிர  இலக்கியம் மீது அர்ப்பணிப்பும் படைப்புத்திறனும் செயலூக்கமும் கொண்டவர்கள் உண்டு . அவர்களால் தான் அது வாழ்கிறது. ஆனால் ஒரு ரகசியக் கேளிக்கைச் சந்திப்புக் குழுவாக மட்டுமே அதை பார்க்கக்கூடிய சிறு துணைவட்டத்தையும் அது உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. அவர்களே சிற்றிதழ் உருவாக்கும் நுரை

அவர்கள் எவரும் பெரிதாக படிப்பவர்கள் அல்ல. புரட்டிப் பார்த்திருப்பார்கள். சிற்றிதழ்கள், எழுத்தாளர்கள் படைப்புகள் பெயர்கள் தெரிந்திருக்கும். அங்கங்கே ஒன்றிரண்டு பார்த்து வைத்திருப்பார்கள். ஆனால் எல்லாச் சிற்றிதழ்கள் சார்ந்த நிகழ்வுகளுக்கும் சென்றுவிடுவார்கள். அங்கே குடிப்பதும், அரட்டை அடிப்பதும், அவ்வம்புகளை எஞ்சிய நாட்கள் பேசிக்கொண்டே இருப்பது மட்டுமே அவர்களது இலக்காக இருக்கும். இப்படியே இருபது ஆண்டுகள் முப்பது ஆண்டுகள் கடந்து வந்திருப்பார்கள். இருபதாண்டுகளில் அவர்கள் நெடுங்காலம் சிற்றிதழ் சூழலில் புழங்கிய ஒரு இலக்கியச் செயல்பாட்டாளர் அல்லது மூத்த படைப்பாளி போன்ற சில பாவனைகளை அடைந்திருப்பார்கள். சிலர் அவ்வப்போது ‘விமர்சகர்’ ‘சிற்றிதழாளர்’ போன்ற பட்டங்களுடன் இதழ்களில் பேட்டியெல்லாம் கொடுப்பதைக்கூட பார்க்கிறேன்.

இந்தியா முழுக்கவே மூப்பு என்பது ஒரு தகுதி. எத்துறையிலும் இங்கே நான் எத்தனை காலமாக இருக்கிறேன் தெரியுமா என்பதே ஓர் அடையாளமாகவும் தகுதியாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இந்த ஒரே தகுதியால் எந்த நிகழ்வுக்கும் வந்து அங்கே தீவிரமாக எதுவும் நிகழாமல் செய்துவிடுகிறார்கள். பாம்பன்விளை கூட்டத்திற்கு நடந்தது அதுதான். இவர்கள் தவிர்க்கப்படும்போது மட்டுமே சிற்றிதழ் சூழல் ஆரோக்கியமாக இருக்க முடியும் மாமரத்திற்கு முற்றிய கிளைகளை ஒடித்து வீசுவது போல சிற்றிதழ் சூழலில் ஒரு புரூனிங் நடந்துகொண்டே இருக்கவேண்டியிருக்கிறது.

இவர்களுக்கு மெய்யாகவே இலக்கியம் மேல் ஆர்வம் கிடையாது. ஆகவே இலக்கியச் செயல்பாடுகள் அனைத்தையுமே ஒருவகையில் பின்னிழுப்பவர்களாக, உருப்படியாக எந்த விவாதமும் நடக்க விடாதவர்களாக, இவர்கள் மாறிவிடுவார்கள். நெடுங்காலமாக இருப்பதனால் இவர்களே உருவாக்கிக்கொண்ட சில பாவனைகள் அடுத்த தலைமுறைக்கு இவர்கள் முக்கியமானவர்கள் என்னும் எண்ணத்தை உருவாக்கி, இவர்களின் இயல்புகள் சிற்றிதழ்ச்சூழலின் இயல்புகள் என எண்ணச்செய்து ஒவ்வாமையை உருவாக்கிவிடுகிறது. நெடுங்காலமாக வம்புகளைப் பேசி பேசி, எப்போதுமே கசப்புகளை கக்கி, ஒட்டுமொத்தமாக ஒரு சூழலில் எப்போதும் இருக்கவேண்டிய நம்பிக்கை துடிப்பு ஆகியவற்றை இல்லாமல் ஆக்கிவிடுகிவார்கள். சலிப்பு எதிர்மறை மனநிலை ஆகியவற்றை நிலைநிறுத்திக் கொண்டிருப்பார்கள்.

தமிழில் நிகழ்ந்த சிற்றிதழ் சார்ந்த இலக்கிய கூட்டங்கள் அனைத்தும் ஏன் தோல்வியுற்றன என்று நானே திரும்பி கூர்ந்து பார்த்து அறிந்தது இது. மிக கறாராக அவர்களை விலக்குவதன் வழியாகவே இத்தனை ஆண்டுகளாக இந்தச் சந்திப்புகள் மற்றும் இலக்கிய நிகழ்வுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம். இப்படி தமிழில் முன்பு நிகழ்ந்ததே இல்லை. ஒவ்வொரு  சந்திப்பிலும் முந்தைய நிகழ்வுகளைவிட ஒருபடி மேலானது என்று சொல்லக்கூடிய அளவுக்கு நிகழ்த்துகிறோம். ஒவ்வொரு சந்திப்பிலும் முந்தைய நிகழ்வுகளைவிட மேலும் இளைஞர்கள் மேலும் படைப்பூக்கம் கொண்டவர்கள் வந்தார்கள் என்று சொல்லும்படியாக நினைவுகள் நிறைவூட்டுகின்றன.

இம்முறை நிகழ்ந்த இளம் வாசகர் சந்திப்பு நண்பர் கிருஷ்ணனின் கணிப்பில் இதுவரை நிகழ்ந்த சந்திப்புகளிலேயே மிகத்தீவிரமானது. சராசரி வயதென்பதே இருபத்தைந்தாக இருந்ததென்பது ஒரு காரணம் உரையாடல்கள் எல்லாமே கூர்ந்த கவனமும் தீவிரமும் கொண்டிருந்தன. எழுந்து பேசுவதற்கான ஊக்கமும் பெரும்பாலானவர்களிடம் இருந்தது. இந்த சந்திப்புகளில் பேசுபொருள் என்பது ஒருமாதிரி பேசிப்பேசி வரையறுக்கப்பட்டு விட்டிருக்கிறது. தமிழ் இலக்கியச் சூழலில் செயல்படுவதற்கான அடிப்படை மனநிலைகள், அடிப்படை வினாக்கள், அடிப்படை அறிதல்கள் ஆகியவை சார்ந்து உரையாடல் நடக்கும் பங்கேற்பாளர்கள் எழுதிக்கொண்டு வந்த புதிய படைப்புகள் மீதான விவாதங்கள் நிகழும். இவ்விவாதங்கள் அவர்களுக்கு எழுதுவதற்கான பயிற்சியாக அமையும்போது அவற்றின்மீதான விமர்சனங்கள் வழியாக பிறருக்கு வாசிப்பதற்கான ஒரு பயிற்சியாகவும் அமையும்.

அனைத்திற்கும் மேலாக பலர் முதல் முறையாக தங்களைப்போன்ற இன்னொரு இலக்கிய வேட்கை கொண்டவரை நேரில் சந்தித்து அளவளாவுவது இங்குதான். தமிழகத்தின் பல சிற்றூர்களில் இலக்கியம் அறிந்த இன்னொரு நபரை  கண்ணில் பார்ப்பதற்கே வாய்ப்பில்லாதவர்கள் உண்டு. பலருடைய வேலைச்சூழலிலும் அவ்வாறுதான். அவர்கள் இங்கு வந்து ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடி இரண்டு நாட்கள் தங்கி செல்வது என்பது தங்கள் இருப்பை மறு உறுதி செய்வது போல. தங்கள் கனவுகள் தங்களுக்குத் தாங்களே இன்னொரு மூறை சொல்லிக்கொள்வது போல.

மனிதர்கள் ஒரு களத்தில் மட்டும் வாழமுடியாது எந்த மனிதனுமே ஒரே களத்தில் வாழ்வதுமில்லை. ஏனெனில் மனிதன் கற்பனை கொண்ட விலங்கு.  அக உலகம் என்று ஒன்றை தனியாக உருவாக்கிக்கொள்ள இயன்றவன். ஒரு தொழிற்களத்தில் குடும்பக்களத்தில் வாழ்பவன் பிறிதொரு அகக்களத்தை உருவாக்கிக்கொண்டிருப்பான். பெரும்பாலானவர்களுக்கு குடி தேவைப்படுவதே அப்படி இன்னொரு களம் தேவை என்பதற்காகத்தான். அங்கு அவர்கள் பிறிதொருவராக ஆக முடிகிறது. இங்கிலாத சில இயல்புகளை அங்கு சூடிக்கொள்ள முடிகிறது. தங்களது ஆழத்திலிருந்து ஒளித்து வைத்த சிலவற்றை, மறைந்திருக்கும் சிலவற்றை வெளியே எடுத்து அணிந்துகொள்ள முடிகிறது.

பக்தி, ஆன்மீக இயக்கங்கள்,சேவை என மனிதர்கள் பிறிதொரு வாழ்க்கையை வாழ்வதற்கான களங்கள் இங்கு நிறைய உள்ளன. இலக்கியத்தை அதிலொன்றாக கருதுவது பிழையல்ல.  இலக்கியம் மேலும் தீவிரமானது. அது ஒரு தவிர்த்தலோ தப்பித்தலோ அல்ல. அங்கு இயற்றலுக்கும் வெல்வதற்கும் வேறு அறைகூவல்கள் உள்ளன. திகழ்வதற்கு இன்னும் அழகிய ,ஆழமான இடங்கள் உள்ளன. எய்துவதற்கு வாழ்நாள் முழுக்கத் தொடர்ந்து வரும் அடையாளங்கள் உள்ளன. இச்சந்திப்புகள் அதை உறுதி செய்கின்றன. நட்புகள், பிறிதெங்குமிலாத தீவிரங்கள், வேறெங்கும் பேசாத சொற்கள், ஒருபோதும் எய்தியிராத தீவிரங்களும் பரவசங்களும். இத்தகைய சந்திப்புகளை அவ்வண்ணம் பயன்படுத்திக்கொள்பவர்களே இவற்றுக்கு உரியவர்கள்

வாழ்க்கையில் மகிழ்வதற்கான ஒருதருணங்களையும் விடாதவர்களே வாழ்கிறார்கள். வாழ்க்கையில் அதன் ஆயிரம் சதுரங்க களங்களுக்குள், வணிகங்களுக்குள், கொடுக்கல் வாங்கல்களுக்குள், வெற்றி தோல்விகளுக்குள் ஒரு தனி உலகை உருவாக்கிக்கொள்பவர்களே உண்மையில் நிறைவடைகிறார்கள். இத் தனிஉலகு வாழ்க்கை அல்ல, செறிவூட்டப்பட்ட இன்னொரு வாழ்க்கை. நம்முடைய திறன்களுக்கு விழைவுகளுக்கு அகத்தேடலுக்கு ஏற்ப நாம் உருவாக்கிக்கொள்ளக்கூடிய ஒன்று. இங்கு நாம் நமது முழுமையை நோக்கி சென்றுகொண்டே இருக்கமுடியும். திரும்பதிரும்ப இலக்கியத்தை இவ்வாறே அடுத்த தலைமுறைமுன் வைக்க விரும்புகிறேன். இந்த இளையோர் சந்திப்பும் அந்நோக்கத்துடன்தான்.

இந்நிகழ்வை கதிர் முருகன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து ஒருங்கிணைத்தார். இணையத்தொடர்புகளை அழகிய மணவாளன் செய்தார். பாலு மற்றும் அவருடைய ஊழியர்கள் உதவினர்.  வழக்கத்திற்கு மாறாக இம்முறை சு.வேணுகோபால் வந்து கலந்துகொண்டு உடன் தங்கி நண்பர்களுடன் உரையாடினார்.மீண்டும் ஒரு நினைவு நிறையும் நிகழ்வு.

முந்தைய கட்டுரைமேடைவதை – கடிதங்கள்
அடுத்த கட்டுரைசிகண்டி -அறிமுக விழா