மார்ட்டின் விக்ரமசிங்ஹ- கடிதம், கதை

மார்ட்டின் விக்ரமசிங்கேயின் கலை-ஜிஃப்ரி ஹாசன்

அன்புள்ள ஜெ

வணக்கம் .அகழில் வெளிவந்த மார்ட்டின் விக்ரமசிங்ஹ பற்றி ஜிஃப்ரி ஹாஸன் எழுதிய கட்டுரை முதலில் வாசித்துவிட்டு அது சார்ந்து அவருடன் உரையாடினேன். சிங்கள இலக்கியத்திலிருந்து முதலில் யாரை மொழிபெயர்க்கலாம் என்று என்னிடம் பலபேர் கேட்கையில் மார்ட்டினைத்தவிர வேற யாரையும் நான் சொன்னது கிடையாது.  நான் உயர்தரம் படித்துவிட்டு முதன் முதலில் பல்கலைக்கழகம் நுழைந்தபோது சிங்களம் எனக்கு பேசத்தெரியாது. வாசிக்க, எழுத தெரிந்த போதிலும் பெரும்பாலான சொற்களுக்கு பொருள் தெரியாது. முதல் ஆண்டில்  batch trip செல்வது வழமை. ஏதாவது ஒரு மலையில் ஹைக்கிங் செல்ல கூட்டிச்செல்வார்கள்.  அதற்கு  batch fit ஐ அதிகரிக்க உதவும் என்ற வதந்தியும் பரவலான காலப்பகுதி. அனாடமி படிக்காவிடினும் சிங்களம் படித்துவிட வேண்டிய கட்டாயம் எனக்கு இருந்தது காரணம் என் batch ல் இருந்த இரண்டே இரண்டு தமிழ் பேசும் மாணவர்கள். ஒன்று நான் மற்றையது என் அறை நண்பன். அவன் படித்தது நாட்டில் புகழ் பெற்ற சிங்களப்பாடசாலையில் என்பதால் அவனுக்கு சிங்களமும் அத்துப்படி. விரிவுரையாளர்கள் சிங்களத்தில் குறிப்பிடும் சில பகடிகளுக்கு கூட ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க கேட்டு சகபாடிகளை நச்சரிப்பதை விட்டுவிட வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது.

மார்ட்டின் விக்ரமசிங்ஹ நினைவில்லம் கொக்கல

அப்படியான ஒரு ஹைக்கிங்கில் தான் மார்ட்டின் எனக்கு அறிமுகமானார். சிங்கள நாவல்கள் ஏதும் வாசித்ததுண்டா என்ற ஒரு தோழியின் கேள்விக்கு இல்லை என்று பதிலளிக்க, மார்டின் விக்ரமசிங்ஹ எனக்கு அறிமுகமாகிறார். இலங்கை சிங்கள மக்கள் வாழ்வியலில் வாசிப்புக்கென்று ஒரு நேரம் உண்டு. பாடசாலை முடிந்ததும் பெற்றோருடன் சரசவி(புத்தக நிலையம்)  சென்று சிறார்கதை நூல்களாவது வாங்கிச்செல்லும் பழக்கம் இங்குண்டு. வீட்டில் சமைப்பது, தூங்குவது போல வாசிப்பதற்காகவே பெண்கள் நேரம் ஒதுக்குவர். நான் வாங்கிவரும் புத்தகங்களை வைக்க இடமில்லாமல் இருந்து என்வீட்டை ஒப்பிடுகையில் இது அபூர்வமான கலாசாரமாகத்தான் இருந்தது. கம்பெரலிய, மடொல்துவ வாசிக்காத வீடுகளே இல்லை. மார்ட்டினை எழுதப்படிக்கத்தெரியாதவர்கள் கூட அறிந்து வைத்திருந்தனர். இப்படியெல்லாம் சிங்கள மக்கள் வாழ்வியலை பேசிய எழுத்துகள் உண்டா என மார்ட்டின் விக்ரமசிங்ஹவின் நூல்களை வாசித்து வியந்திருக்கிறேன். அப்பாவின் நூல்களிடையில் மாடொல் துவ என்ற மார்டினின் இன்னொரு புகழ்பெற்ற நாவலை கண்டிருக்கிறேன்.

மார்ட்டின் எழுதிய காலம் தொட்டு இன்றுவரை சிங்களத்தில் தீவிர இலக்கியங்களும் தினசரி பத்திரிகைகளிலேயே வெளிவருகின்ற ஒரு நடைமுறை இருக்கிறது. அதனாலேயே என்னவோ மார்ட்டின் அதிகம் அறியப்பட வாய்ப்பிருக்கிறது. கம்பெரலிய, கலியுக, யுகான்தய எனும் மூன்று தொகுப்புகளும் triple gems of Sinhala literature என்று பலரும் கூறக்கேட்டிருக்கிறேன். என்னைப்பொறுத்தமட்டில் சிங்களத்தில் ஒரு புதுமைப்பித்தன் அவர். அவரது நினைவு இல்லம் கொக்கல எனும் இடத்தில் உள்ளது. அவரது நூல்கள் சிலவற்றை தமிழில் கொண்டுவர இப்போது தான் முயற்சிகள் நடந்தவண்ணம் உள்ளன.மார்ட்டின் பற்றி நீங்கள் கவனப்படுத்தியதற்கு மிக்க நன்றி. மார்ட்டின் விக்ரமசிங்ஹ பற்றி ஜிஃப்ரி ஹாஸன் எழுதும் தொடர் இந்த மாத்த்திலிருந்து வனம் இதழில் தொடர்ச்சியாக வெளிவரும் என்ற அறிவிப்பையும் விட்டிருந்தேன்.

இத்தோடு ரிஷான் ஷெரீப் மொழிபெயர்த்த மார்ட்டினின் முனகிய சடலம் என்ற சிறுகதையின் மொழிபெயர்ப்பையும் இணைத்துள்ளேன்.

நன்றி

ஷாதிர்

முனகிய சடலம் மார்ட்டின் விக்ரமசிங்ஹ

முந்தைய கட்டுரைநிமிர்தல் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைசோர்பா