சென்னை செனட்டோரியம் சித்த மருத்துவ மனையின் உள்நோயாளிகள் பிரிவில் பகவத்கீதையின் எளிய உரை ஒன்றை வாசித்து கொண்டிருந்த பதினான்கு வயது பையனிடம், “ இதை ஏன் படிக்கிறாய் ? நீ படிக்க வேண்டியது கந்த சஷ்டி கவசத்தை தான்.” என முதியவரின் குரலை நினைத்து கொள்கிறேன். இன்று மேலும் அர்த்தம் தருவதாகவே உள்ளது அந்த வரி. அன்று வாழ்க்கையை துறக்க சொல்லும் எளிய நூலாக தென்பட்டது கீதை. அங்கிருந்து வாழ்க்கையில் எனக்கான தன்னறத்தை மூழு வீச்சில் ஆற்றி கடந்து செல்ல சொல்லும் நூலாக மாறியுள்ளது இன்று.
வெண்முரசை வாசிக்க தொடங்கிய பின் எனக்கு ஏன் அறிவின், ஆன்மீகத்தின் மேல் ஆர்வம் எழுந்தது என்ற வினாவையே கேட்டு கொண்டேன். இன்றுள்ள பொதுவான இந்திய மனத்திற்கு அறிவு என்பது அதிகாரத்தின் அடையாளம், ஆன்மீகம் என்பது மாயாச்சக்திகளை கைக்கொள்ளுதல். உடலால் என்னால் இவற்றை அடைய முடியாதெனில் உளத்தால் அடைய முயல்கிறேன் என்ற விழைவே. அது அந்த குழந்தைத்தனமான புரிதலில் தொடங்கியிருந்தாலும் வளர வளர எத்தனை விரிவும் ஆழமும் மிக்கவை என்பதை உணர்கிறேன்.
இப்போது களிற்றியானை வாசித்து வருகிறேன். இன்று சுரதனை கண்டேன். ஒருகணம் நெஞ்சம் நடுங்கியது என்றே சொல்ல வேண்டும். எரியும் பிணம் எழுந்து அருகணைந்தால் வரும் அச்சம் அது. இந்த நாவல் ஒரு புது நகரம் உருவாகி கொண்டிருப்பதை காட்டுகிறது. ஆனால் எழுச்சியை அல்ல, முழுமையாக நிகழ்ந்து முடிந்த ஒன்று உருவாக்கும் வெறுமையை தருகிறது. ஏன் என்று நினைத்தால் தோன்றுவது, ஏற்கெனவே வீழ்ந்த நகரோன்றின் பிரதிநிதிகளே இந்நகரின் உருவாக்குநர்கள். அவர்களது கனவுகள் வீழ்ந்து முற்றிலும் அறியாத புதிதான ஒன்று முளைத்தெழுகிறது. அந்த புதுத்தளிரே இனி தாங்கள் என்றாலும் அவர்களின் பழைய அகம் ஏதோ நிறைவின்மையை அடைகிறது. பழையவற்றில் புதியவற்றுடன் இணைபவற்றை பொருத்தி நிறைவு கொள்கிறது.
இந்த நாவலை வாசித்து கொண்டிருக்கையிலேயே மழைப்பாடலின் நினைவு அவ்வப்போது தலை தூக்குகிறது. அங்கே தான் சத்தியவதி அஸ்தினபுரியை வல்லமைமிக்க அரசாக நிறுவிவிட்டு செல்கிறாள். இங்கேயும் வல்லமைமிக்க புதிய அரசொன்றே எழுகிறது. மழைப்பாடல் இனிமையையும் களிற்றியானை நிரை நிறைவின் வெறுமையையும் தருவது எதனால் ? கனவுகளால் தான்.
மழைப்பாடல் வருங்காலமெனும் கனவில் ஆழவேரூன்றி உள்ளது. நிகழில் எந்த கனவுகளும் இல்லை. மானுடருக்கு ஏதோ ஒரு கனவு தேவை. அது கடந்தகாலம் எனில் இனிய சோர்வெனும் மயக்கம். வருங்காலமென்றால் செயலூக்கம். களிற்றியானை நிரை பழைய கனவுகள் தாளமுடியா துயரத்தை அளிப்பவையாக மாறிய பின் வருங்காலத்தை நோக்கும் அளவுக்கு ஓய்வு இல்லாத நிகழ்காலத்தையே நின்று நிலைபெற செய்யும் முயற்சிகளின் காலக்கட்டம். அங்கே ஒவ்வொன்றும் முழுமையடைந்ததாக வேண்டும். ஒவ்வொரு முழுமையும் விட்டு செல்லும் வினா, எஞ்சுவது என்ன ? அதையே வெறுமை என உணர்கிறோம்.
அந்த வினா சுரதனை போல ஒரு விடையை காட்டுகையில் நெஞ்சம் நிலைகுலைகிறது. எத்தனை தீமை! அதேபோல் நமது தன் நடிப்புகள் தோலுரிக்கப்படும் போது வரும் வேதனையும் திகைப்பும் சொல்லில் எழுமுடியுமா! இதனோடு நினைத்து கொள்கிறேன், இத்தனையையும் கடந்து சென்றவனே அந்த மெய்மையை அறிகிறான். அப்படியெனில் எத்தனை அரியது அது. கோடிகோடிகளில் ஒருவனே சென்றடைய கூடிய இடம். அப்படி கிளம்பியவர்களில் நானும் ஒருவன். இவற்றையெல்லாம் அறிந்த பின் மீளும் வழியே அல்ல, தலையை முட்ட வேண்டும். வீழ்ந்தாலும் நன்றே. என்னில் எழுந்தது அரியதொன்றிற்கான ஆர்வம் ஒருசேர ஆணவத்தையும் வியப்பையும் ஊக்கத்தையும் தருகிறது.
இவற்றை பார்த்துகொண்டு வருகையில் இத்தனை இருள்வழி பாதைகளில் சென்று மீண்ட பின்னர் ஒவ்வொரு முறையும் சந்திக்கையிலும் நான் காணும் உங்களது கனிவு முகம் வியப்புறவே செய்கிறது. எத்தனை அரிய மனிதரொருவரின் அன்பை பெற்றிருக்கிறேன். இங்கிருந்து சொற்கள் உள்ளத்தை ஊடுருவ விட்டு சென்றால் என் இருள் தெரிந்தபடியே போகும். அதனை எனக்குரிய வேறு களங்களில் செயலாற்றியே அறிய வேண்டும். கடக்க வேண்டும்.
அன்புடன்
சக்திவேல்