ஓணத்தில் புட்டு வியாபாரம்

Trader is a painting by Sal Marino

சென்ற நாட்களில் இணையத்தில் செய்திகளைத் தேடிக்கொண்டிருந்தேன். ஆச்சரியமாக  ஒன்றைக்கவனித்தேன். பல  இணையதளங்கள் வலப்பக்க சொடுக்கை தடை செய்துவிட்டிருக்கின்றன, நகல் எடுக்கவோ வெட்டி பயன்படுத்தவோ முடியாதபடி. ஆங்கில இணையதளங்களில் இவ்வாறு செய்வதை கண்டிருக்கிறேன். சில வணிக இணையதளங்களும் இப்படிச் செய்வதுண்டு. நான் சொல்வது நவீன இலக்கியம், ஆய்வுகள் சார்ந்து செயல்படும் தளங்கள் பற்றி.

இவ்வாறு இவர்கள் வெளியிடும் செய்திகள் பெரும்பாலும் அசல் செய்திகள் கிடையாது. வெவ்வேறு பேரறிஞர்கள் தங்கள் வாழ்நாள் உழைப்பை செலவழித்து நூல்களில் எழுதித் தொகுத்தவை. அவற்றை இலவசமாக எடுத்து அளிக்கிறார்கள். சுருக்கியும் மறுதொகுப்பு செய்தும் அளிக்கிறார்கள். அவற்றை இப்படி இன்னொருவர் பகிரமுடியாதபடி தடுக்கிறார்கள். வெவ்வேறு புகைப்படக் கலைஞர்கள் எடுத்த புகைப்படங்களை இணைய தளங்களில் பிரசுரிக்கும்போது அவற்றை பிறர் பயன்படுத்த முடியாதபடி தடை செய்து வைத்திருக்கிறார்கள்.

இந்த மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. என்னுடைய இணையதளத்தில் நானே எழுதிய நூல்கள் முழுமையாகவே அனைவரும் பகிரும்படித்தான் அளிக்கப்பட்டுள்ளன. புகைப்படங்கள் செய்திகள் அனைத்துமே அவ்வாறு அளிக்கப்பட்டுள்ளன. பதிப்புரிமை உள்ள எனது நூல்கள் கூட இணையப் பகிர்வுக்கு தடை இல்லை என்ற அளவிலேயே  அளிக்கப்பட்டுள்ளன.

இது ஒரு மதிப்பீடை முன்வைக்கிறது. நாம் இங்கு வணிகம் செய்யவில்லை. ஓர் அறிவியக்கத்தில் இருக்கிறோம். பிரம்மாண்டமான ஓர் அறிவுப்பகிர்வை செய்து கொண்டிருக்கிறோம். அறிவு ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு தன்னை விரித்துக்கொண்டே செல்லும் ஒரு  வலை போன்றது. ஏதேனும் ஓரிடத்தில் அறிவை தளையிடுவதென்பது அந்த வலையை நடுவே அறுப்பது. வணிக நோக்கோடு செயல்படும் ஒரு நிறுவனம் அதை செய்வதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் தமிழில்  தீவிர இலக்கியங்களை வெளியிடும் இணையதளங்கள் ஏன் இதைச் செய்கின்றன?

இந்த விழுமியங்களை திரும்பத் திரும்ப நமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. உலக இலக்கிய சிந்தனைச் சூழலை இன்று பார்த்தால் அது மிக விரைவாக அறிவுச்சேவை என்ற இடத்திலிருந்து சொல்வணிகம் என்ற இடத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது என்பதை காணலாம். எழுத்து என்பது வணிகமாக ஆகி நூறாண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் சிந்தனையும் வணிகம் என்றானது சென்ற இருபது ஆண்டுகளில்தான்.

சில ஆண்டுகளுக்கு முன் தெரிதா எழுதிய ஒரு நூலை புத்தகக் கடையில் பார்த்தேன். தாளில் ஒரு பக்கத்தில் மட்டும் பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருந்தது. நூறு பக்கங்கள் இந்திய ரூபாயில் ஏழாயிரம் ரூபாய்க்கும் மேல் விலை போடப்பட்டிருந்தது. உண்மையில் அது சரியானபடி அச்சிடப்பட்டிருந்தால் முப்பது பக்கங்களுக்குள் வரக்கூடிய ஒரு கட்டுரை மட்டும்தான். அப்பதிப்பகம்  அவருடைய  புகழை, அவருடைய நூல் ஒரு ஆய்வு நூலகத்தில் இருந்தாகவேண்டுமென்ற கட்டாயத்தை பணமாக ஆக்குகிறது.

அதன் வழியாக அவருக்கு நிதி செல்கிறது, அவர் தன் ஆய்வுக்கான ஊதியமாக அதை எடுத்துக்கொள்ளலாம் என்பது உண்மைதான். ஆனால் இச்செயலில் ஓர் அறமின்மை உள்ளது. முன்பும் ஆய்வாளர்கள் நிதி உதவிகளால்தான் வாழ்ந்திருக்கிறார்கள். அரசர்கள், சிற்றரசர்கள், செல்வந்தர்களின் நிதி உதவிகள் அவர்களுக்கு இருந்திருக்கின்றன. சைவ ஆதீனங்களோ, பாண்டித்துரைத் தேவரோ, தமிழ்வேள் உமாமகேஸ்வரனாரோ இல்லையேல் தமிழில் ஆய்வுகள் நிகழ்ந்திருக்காது. ஆனால் அவ்வகையில் நிகழும்போது அதிலொரு இயல்புத் தன்மை இருக்கிறது. அறிவுக்கொடை ஒருவர் செய்கிறர்,  இன்னொருவர் நிதிக்கொடை செய்கிறார். இரண்டுமே பங்களிப்புதான். அதுவே முறையானதென்று தோன்றுகிறது.

மாறாக, இன்னொரு ஆய்வாளர் அந்நூலை வாங்கும்போது, அல்லது ஒரு மாணவர் அதை வாங்கும்போது அவர் அதற்கு ஒன்றுக்கு பத்து மடங்கு பணம் கொடுக்க வேண்டும் என்பது ஆய்வும் அறிவும் பரவும் விதத்துக்கு உகந்த நெறியே அல்ல. அறிவுச்செயல்பாட்டில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் தின்று உயிர்வாழவேண்டும் என்று சொல்வது அது.

ஒரு நூல் மிகக்குறைந்த விலையில், அல்லது இலவசமாக கிடைக்கும்போது மட்டும் தான் அறிவுப்பரவல் நிகழ்கிறது. நூலகம் என்பது அவ்வகையிலேயே பல ஆயிரம் ஆண்டுகளாக இங்கே நிலவி வருகிறது. அறிவுக்குமேல் வணிகக் கட்டுப்பாடென்பது நீண்ட கால நோக்கில் அறிவுச் செயல்பாடை அழிக்கும்.

எவ்வகையிலும் உடன்பட முடியாத ஒன்று அது. நம்மை அறியாமலேயே இந்த மனநிலைகளுக்கு நாம் சென்றுகொண்டிருக்கிறோம். தமிழ்ப்பேராசிரியர்கள்  (எழுத்தாளர்கள் என்று அறியப்பட்டவர்கள் கூட) அவர்கள் செய்த சர்வ சாதாரணமான ஆய்வுகளை பல ஆண்டுகள் தவமிருந்து செய்தது போல பாவலா காட்டுகிறார்கள். அந்த ஆய்வுகளுக்கு தங்களுக்கு அள்ள அள்ள பணம் அளிக்கப்படவேண்டுமென்று கோருகிறார்கள். எத்தனை பணம் அளிக்கப்பட்டாலும் அவர்களுக்கு அது நிறைவளிப்பதில்லை. அதில் ஒரு துளி சிந்தினாலும் வெறிகொள்கிறார்கள். அழுது புலம்புகிறார்கள். அவர்கள் செய்வது ஆய்வல்ல, ஆய்வு வணிகம்தான். தாங்கள் செய்த ஆய்வுகள்  இன்னொருவரால் மேலதிக ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டாலே தங்களுக்கு வரவேண்டிய பணம் வராமலாகிறது என்று அவர்கள்  எண்ணுகிறார்கள்.

சென்ற நூற்றாண்டில் எந்த தமிழ் ஆய்வாளனாவது அவ்வாறு எண்ணியிருப்பாரா? வி.கனகசபைப் பிள்ளை அரும்பாடுபட்டு சேர்த்த சுவடிகளை உ.வே.சாமிநாத ஐயர் வந்து கேட்டபோது, ஐயர் முறையாக ஆய்வு செய்யக்கூடியவர் என்ற ஒரே காரணத்தினால் அள்ளிக்கொடுத்துவிட்டார் என்று நாம் படிக்கிறோம். இத்தனைக்கும் வி.கனகசபைப் பிள்ளை உ.வே.சாமிநாதையருக்கு நேர் எதிரான திராவிட இயக்கப் பார்வை கொண்டவர்.

அந்த மனநிலைகள் இன்றைய வணிகச்சூழலில் அபத்தமாகத் தென்படலாம். ஆனால் அவையே உண்மையில் அறிவியக்கத்தின் மனநிலைகள். அறிவுச்செயல்பாட்டில் செல்வத்தை நாடுவது இழிவானது. புகழை நாடுவது பிழையன்று, ஆனால் அதைக்கடந்தும் எண்ணுவதே சிறப்பு.

இன்றைய மனநிலைகளை நம்மை நாமே கண்காணிக்க வேண்டுமென்று நினைக்கிறேன். ஒவ்வொருவரும் தாங்கள் எழுதியதை முழுக்க பொதுவெளியில் இலவசமாக அளிக்கவேண்டும் என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் தங்களுக்குத் தாங்களே ஒரு வரையறையை வைத்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

தமிழ் போன்ற ஒரு சூழலில் ஒருபோதும் எழுத்தும் வாசிப்பும்  வணிகமென தொழிலென ஆகப்போவதில்லை, எவரும் அதைக் கொண்டு செல்வந்தராகப் போவதுமில்லை. ஆய்வுகளைக்கொண்டு செல்வந்தராகிறவர்கள் அவற்றின் வணிகமதிப்பால் அதை ஈட்டுவதில்லை, பல்கலைக்கழகங்களை நிதிக்கொடைகளை சுரண்டுவதன் வழியாகவே அடைகிறார்கள். சிறிய உழைப்புகளுக்கு மிகப்பெரிய கால அட்டவணைகளையும் உழைப்பையும் காட்டி வெளிநாட்டு நிதிக்கொடைகள் மற்றும் பல்கலைக்கழக நிதியமைப்பின் நல்கைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். நூறாண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு, ஏற்கனவே தொண்ணூற்றொன்பது சதவீதம் ஆய்வு செய்யப்பட்ட ஒரு நூலில் மூல பாடங்களை ஒரே ஒரு நூலகத்திலிருந்து எடுத்து காலவரிசைப்படி அட்டவணையிட்டதற்கு அந்த முழு நூலையும் உரிமை கொண்டாடும் கீழ்மையை நாம் இன்று காண்கிறோம்.

நவீன இலக்கியவாதிகளும் இலக்கிய ஆய்வாளர்களுமான நாம் தமிழ்ப் பொதுச்சூழலில் இருந்து நாம் நம்மை விலக்கிக்கொள்வதின் வழியாகவே அறிவியக்கத்தின் ஆன்மிகத்தை இதுகாறும் பாதுகாத்து வந்திருக்கிறோம். நம்மை வணிக எழுத்திலிருந்து விலக்கிக்கொண்டிருக்கிறோம். அதே போன்று கல்வித்துறையின் அதிகார அடுக்குகள் மற்றும் நிதிமோசடிகளிலிருந்து நம்மை விலக்கிக் கொண்டிருக்கிறோம். இன்று எங்கும் பரவி வளர்ந்திருக்கும் இந்த வணிக எண்ணங்களிலிருந்து விலக்கிக் கொள்ளவேண்டும். நம் செயல்களின் நோக்கம் சார்ந்த அறத்தை உருவாக்கிக்கொண்டு, அதன் அடிப்படையில் நம்மை நாமே ஒருங்கிணைத்துக் கொள்ளவேண்டிய காலம் இது.

அவ்வாறன்றி இதை  ஒவ்வொருவரும் தங்கள் போக்கில் வணிகமாக உரிமை கொண்டாடத் தொடங்கினால் என்ன ஆகும்? ஒரு சிற்றிதழ் அது பிரசுரிக்கும் ஒரு கவிஞனின் புகைப்படத்தை பிறர் பகிரமுடியாமல் தடை செய்கிறது. ஓர் இணையதளம் தான் வெளியிட்ட ஒரு கவிதையை இன்னொருவர் வெட்டி ஒட்ட முடியாதபடி தடை செய்கிறது. எளிமையான ஒரு உரிமை கொண்டாடல். ஆனால் அதனுள்ளிருக்கும் மனநிலை ஆபத்தானது. அது மேலும் மேலும் நம்மை இத்தளத்தில் செயல்பட முடியாதவர்களாக்குகிறது. அது வணிக எதிர்பார்ப்புகளை நமக்கு உருவாக்கும். அவ்வெதிர்பார்ப்புகள் இங்குள்ள சூழலால் முறியடிக்கப்படுகையில் கசப்பும் எதிர்மனநிலையும் கொண்டவர்களாக்கும்.

இது நம் சூழலின் மையத்தில் நிகழும் ஓர் அறிவியக்கச் செயல்பாடு ஓர் ஆன்மிக அடிப்படை கொண்டதாகவே இருக்க முடியும். உலகில் வேறெங்காவது வேறெப்படியாவது இருக்கலாம், இங்கு இப்படித்தான் இருக்க முடியும். இங்கே நாம் அளிப்பவர்கள் மட்டுமே. எதையும் பெற்றுக்கொள்பவர்கள் அல்ல. எந்நிலையிலும் தமிழ்ச் சமுதாயத்தை நோக்கி கொடையளிப்பவர்களாகவே நாம் நின்று  பேசவேண்டும்.  அந்த மனநிலை நமக்கு நிமிர்வையும், எதையும் எதிர்பார்க்காத பெரும்போக்கையும் அளிக்கும்.அம்மனநிலை கொண்டவர்களே இச்சூழலில் தொடர்ந்து பணியாற்ற முடியும். மற்றவர்கள் சில நாள் சில செய்துவிட்டு அதற்கு பெரும் எதிர்வினைகளை எதிர்பார்த்து ஏமாற்றமுற்று, கசந்து ,அக்கசப்பை பழிச்சொற்களாகக் கொட்டிக்கொண்டிருப்பார்கள். கழிவிரக்கங்களை அள்ளி முன்வைப்பார்கள்

எண்ணிப் பாருங்கள், ஓர் இணையதளம் அதில் பிரசுரமாகும் ஒருவருடைய புகைப்படத்தையோ படைப்பையோ பகிர்வதையோ தடை செய்கிறது. ஆனால் அதில் எழுதுபவர்களுக்கு என்ன அளிக்கிறது? ஊதியமளித்து பெற்றுக்கொள்ளப்பட்டதல்ல.எந்த மனநிலை ஒருகவிஞனிடமிருந்து ஒரு படைப்பாளியிடமிருந்து இலவசமாக படைப்புகளை எதிர்ப்பார்க்கிறது? அந்த உழைப்புக்கு  ஊதியமளிக்கப்படவில்லை என்பதை இயல்பாக எடுத்துக்கொள்கிறது? ஏனெனில் அங்கு இலக்கியமென்பதும் சிந்தனை என்பதும் ஓர் அறிவுப் பங்களிப்பு, சமூகத்துக்கு ஒரு கொடை மட்டுமே என்ற மனநிலை உள்ளது. ஆனால் அதை விற்கும் இடத்தில் வணிகனுடைய மனநிலை வந்தமைகிறது.அப்பட்டமான இரட்டைவேடம்.

மலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு, ”ஓணத்தின் நடுவே புட்டு வியாபாரம்” ஓணம் அனைவரும் அனைத்தையும் பகிர்ந்து மகிழ்ந்திருக்கும் ஒருநாள். அன்று எவருக்கும் எதுவும் இல்லையென்பதில்லை. அது மகாபலி நாடுகாண வரும் நாள். அன்றைக்கும் புட்டுக்கடையை திறந்து வைத்திருக்கும் அற்பனை குறிக்கும் சொலவடை அது.

என்னால் எவ்வகையிலும் இவற்றை ஏற்க முடியவில்லை. அவர்களிடம் அப்படிச் செய்யலாகாது என்று சொல்லும் நிலையில் நான் இல்லை. ஆனால் ஒன்று சொல்லலாம். வலப்பக்கச் சொடுக்கை தடை செய்து பகிர்வைக் கட்டுப்படுத்தியிருக்கும் எந்த ஒரு இணையதளத்தையும் இனி எனது தளத்தில்  இணைப்பளிக்கவோ அவற்றில் வரும் செய்திகளையோ கட்டுரைகளையோ பகிரவோ, அவற்றுக்கு எவ்வகையிலும் பங்களிப்பாற்றவோ போவதில்லை. ஏனெனில் இவர்கள் ஒவ்வொரு இணையதளத்தையும் விட பல மடங்கு வாசக எண்ணிக்கை உடையது எனது இணையதளம். நான் அவற்றுக்கு அளிக்கும் இணைப்பின் வழியாக  அந்த இணையதளங்களை வாசகர்களிடம் கொண்டு செல்கிறேன். சரியாகச் சொன்னால் என் வாசகர்களை அவர்களிடம்  பகிர்ந்துகொள்கிறேன். இவர்கள் தாங்கள் செய்வது வணிகம் என்று அத்தனை தெளிவுடன் இருந்தார்கள் என்றால் என்னிடம் வணிகத்தைத் தான் எதிர்பார்க்கவேண்டும். என் செவையை பெறுவதற்கு அவர்கள் எனக்கேதும் பணம் அளிக்கிறார்களா என்ன?

முந்தைய கட்டுரைநிமித்திகனின் சொற்கள்
அடுத்த கட்டுரைபயணத்தின் நிறைவு- இரா.மகேஷ்