நதி – சிறுகதை
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தளத்தில் வெளியிட்ட “நதி” என்ற கதை படிக்கும் போது என் நெஞ்சம் விம்மியது,அப்பா மரணம் நினைவில் நிரம்பியதால்.
இது கதை என்ற பெயரில் வெளியான சொந்த அனுபவம் என்பது படிக்கும்போது உணரலாம்.நமது கிராமங்களில் உள்ள ஹிந்து குடும்பங்களில் இப்போதும் இந்த சடங்குகள் தொடர்ந்து நடைபெறுகிறது.
குடும்பத்தில் மரணம் நடந்து சடங்குகள் குறையின்றி முடித்து கதையில் சொல்லப்பட்டதுபோன்று எரியூட்டியபின் சேமிக்கும் அஸ்தியும் சாம்பலும் நதியில் சமர்ப்பிக்கின்றோம்.
எத்தனையோபேர்களின் அஸ்தியும் சாம்பலும் தாங்கும் நதி அமைதியாக ஒழுகி கொண்டிருக்கிறது,எதுவும் நடக்காதது போல.
எல்லாவிதமான மனித திமிர்களையும் அடக்கிட ஆறு அறிவுள்ள மனிதனை இந்த கதை நினைவூட்டுகிறது.
இயற்கை அதுவே உண்மை,நிரந்தரம்.
அன்புடன்,
பொன்மனை வல்சகுமார்.
அன்புள்ள ஜெ
நதி கதையை வாசித்தேன். பல ஆண்டுகள் பழைய கதை. உங்கள் மொழிநடை மாறியிருக்கிறது. சாராம்சமான பார்வை அப்படியே இருக்கிறது. நீங்கள் இழப்பின் வலியை எழுதவில்லை. கடந்துசெல்வதிலுள்ள நிறைவை எழுதியிருக்கிறீர்கள். உங்கள் கட்டுரைகளில் அடிக்கடிச் சொல்லும் ஒன்று உண்டு. நீங்கள் ஒரு பெரிய அலைச்சலுக்குப் பின் உங்களை மீட்டுக்கொண்டுதான் எழுத வந்தீர்கள். அந்த மீட்பு இந்தக்கதையில் தெரிகிறது
ஆர்.எஸ்.ராம்