அருண்மொழி நூல் வெளியீடு -கடிதங்கள்

அருண்மொழி நங்கை விழா- உரைகள்

அருண்மொழியின் நூல் வெளியீடு

பனி உருகுவதில்லை- அருண்மொழி நங்கை- வாங்க

பேரன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். நீண்ட நாட்கள் ஆகிவிட்டது உங்களுக்கு எழுதி. கொஞ்சம் உள்முகப் போக்கு அதனால் அதிகம் எழுத முடிவதில்லை.

அருண்மொழி அவர்களின் நூல் வெளியீட்டு விழா நிகழ்வுகளை காணொளியில் கண்டு மகிழ்ந்தேன். யுவன் சந்திரசேகர் அவர்களின் உரை வெகு அற்புதம். அந்த உரையை கேட்டு விட்டு சரியாகத்தானே சொல்கிறார் என நினைத்துக்கொண்டேன். உங்கள் நடையை, சிந்தனை போக்கை அடியொற்றி எழுதுகின்ற விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் இனி வெகுகவனமாக இருப்பார்களாக!. ஆசிரியரை பின்பற்ற வேண்டும் அதே நேரத்தில் தனது தனித்துவத்தை இழக்காமலும் இருக்க வேண்டும். கொஞ்சம் கடினமான விஷயம்தான்.

சாரு அருண்மொழி அவர்களைப் புகழ்ந்து தள்ளிவிட்டார். ஊர்காரர் பாசம் பொங்கி விட்டது போலும். ஆனாலும் அதற்கு அருண்மொழி தகுதியானவரே.

அருண்மொழி அவர்களின் உரை அவரின் இயல்பான போக்கிலேயே அமைந்திருந்ததும் ஒருவகையில் ஏற்றுக் கொள்ளத்தக்கதே. அவரவர் அவரவர் இயல்பில் இருத்தல் நல்லது தானே?

இன்று தளத்தில் அருண்மொழி அவர்களின் நூல் வெளியீட்டு விழா குறித்து நீங்கள் எழுதிய கட்டுரையை படித்துவிட்டு எங்கள் சுக்கிரி இலக்கிய குழுமத்தில் கீழுள்ளவாறு பதிவிட்டேன்.

“சரியான MCP தாம்பா இந்த ஆள். மனைவியை புகழ்கின்ற மாதிரி பொடி வைத்தும் எழுதுகிறார், புலம்புகிறார், கொஞ்சம் அன்பில் பொங்குகிறார். அது சரி மனைவியின் புகழை முற்றாக ஏற்றுக்கொள்கின்ற உபேட்சை மனப்பக்குவம் வந்துவிட்டால் அடுத்த கட்டம் சாமித்துவம் அல்லவா??”

உள்ளதை உள்ளவாறு சொல்லி வைப்போம் என்று உங்களுக்கும் எழுதிவிட்டேன்! எப்போதும் போல் நகைச்சுவை உணர்வுடன் எடுத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்.

எதிர்வரும் அறுபது நிறைவு உங்களை வாழ்வின் அடுத்த உயர் மெய்மை நிலைக்கு எல்லா வகையிலும் விரைவில் நகர்த்தட்டும் என்ற பெரு வேட்டலை அந்தப் பேரியற்கையிடம் இறைஞ்சி முன்வைக்கிறேன்.

அருண்மொழி நங்கை அவர்களுக்கு என் உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்!. அவர் இலக்கியப் பணி மென்மேலும் வளரட்டும்!

 

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

திருவண்ணாமலை.

அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு,

அருணா அவர்களின் ‘பனி உருகுவதில்லை’ புத்தக வெளியீட்டு விழா உரையின் காணொளியைக் காணும் வாய்ப்பு அமைந்தது. நாளை நலம்படத் துவங்கிய நிறைவு தோன்றுகிறது. நன்றி.

அருணாவின் உரை ஓர் அகப்பயணத்தின் சித்தரிப்பைக் கண் முன் நிறுத்துகிறது. அவரது கட்டுரைகள் போலவே  எளிமையும் செறிவும் ஒருங்கே அமையப் பெற்ற உரை. கட்டுரைகளுக்கு அவர் தேர்ந்துகொண்ட வரைவும் கட்டமைப்பும்   குறித்த விளக்கமும், விலகி நின்று அதே சமயம் உற்று நோக்கி, ஒருவரே இருவராகி, தானே தன்னைக் கண்டு, காலம் வடிகட்டித் தந்த நிகழ்வுகளை அதே காலம் அவருள் தந்த அனுபவம் + அறிவு கொண்டு எழுத்தில்  பெய்யும் அந்த எழுத்து அனுபவத்தை விளக்கியது வெகு அருமை.

கட்டுரைக்கு அவர் அமைத்துக் கொண்ட சொல்முறையே பேச்சிலும் மிளிர்கிறது. (அல்லது இப்படியும் சொல்லலாம்  – அவர் கைக்கொள்ளும் உரையாடல் தன்மையே அவரது எழுத்திலும் பேச்சிலும் முத்திரையாக வெளிப்படுகிறது).

மேலும், தனக்கு முன்னோடிகளான, இது போன்ற கூறுமுறையைக் கைக்கொண்ட இந்திய மற்றும் சர்வதேச எழுத்தாளர்களைக் குறித்து தொட்டுச் சென்ற விதம் அழகு. இளமைப் பதிவுகளின் உள்ளடக்கம் இனியதாக இருக்கட்டும் என்று தோன்றியதால் சில தீவிர உணர்வெழுச்சிகளை/அனுபவங்களை இக்கட்டுரைகளில் குறிப்பிடவில்லை என்று கூறினார். உருகாப் பனி இனிமையைத் தாங்கி உறைந்து நிற்கறது!

தனித்துவ மொழியின் அவசியம், கலையும் கிராஃப்டும் தொழிற்பட வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி அருணா கூறிய  போது, வாவ் என்று சொல்லத் தோன்றியது. (இலக்கிய வகுப்பெடுக்கும் ஆசிரியையின் கூற்று  வெகு இயல்பாக, போகிற போக்கில் வந்து நம் செவியில் விழுந்த உணர்வு)

உடன் அமர்ந்திருந்த எழுத்தாளர்களைப் பற்றிய அனுபவங்களின் விவரணைகளுடன் தொடங்கி, எழுத்துலக முன்னோடிகளைத் தொட்டு, ‘பனி உருகுவதில்லை’ எழுத்து நிகழ்ந்த  செயல்முறையை விவரித்து, ஊடே எழுத்துக்கலையின் முக்கியக்கூறுகளையம் (நட்சத்திர ஒளி போல) தெறிக்கச் செய்து, அருணா அவர்களின் உரை, கேட்பவருள்ளே இனிமையைத் தூவிச் செல்கிறது.

அன்புடன்
அமுதா

முந்தைய கட்டுரைஆமையும் விசையும் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுழுக்கச் சோறு- கடிதங்கள்