வெண்முரசு நாவல்நிரையின் மூன்றாவது நூல் “வண்ணக்கடல்”
இந்நூல் மூன்று இழைகளால் ஆனது. ஒன்று இளநாகன் என்னும் பாணனின் பயணக்கதை . இரண்டு பாரதக்கதை. மூன்றாவது தொன்மக்கதைகள்.
முதலாவதாக, மிக முக்கியமானதாக, அனைத்தும் நிகழும் பாரதப்பெருநிலத்தின் நிலவியல் மற்றும் பண்பாட்டுக் கூறுகள். இவை அனைத்தையும் திருவிடத்தைச் சேர்த்த இளநாகன் செய்கின்ற பெரும் பயணத்தின் ஊடாக நாம் அறிகிறோம். மாமதுரையில் ஏழ்பனைநாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன், பழையோன் (பாண்டியன்) அவையில் ஞானச்செருக்கு வெளிப்படப் பாடும் முதல் பாடலிலேயே இளநாகன் என்பது நூலாசிரியரே என நமக்குச் சொல்கிறார். “நிறைபொலி”யில் இடம்பெறும் ஓவியமும் அதையே சொல்கிறது. “கொற்றக் குடையோய்” எனத் தொடங்கும் கவிச்சுவையும், செருக்கும் தன்னகத்தே கொண்ட அப்பாடலை மிக எளிமையாக சங்க இலக்கியங்களுள் செருகி விடலாம். ஐம்பது ஆண்டுகளுக்கு பின் ஆய்வு செய்யும் எவரும் பிரித்தறிய இயலாது.
இரண்டாவதாக பாரதக்கதை, மகாபாரதத்தின் நாயகர்கள் நாயகர்களாக ஆகும் கதை. உலகோடு தாங்கள் எதன் மூலம் உரையாட வேண்டும் என்றும், தங்கள் ஊழ்கம் எதில் அமைய வேண்டும் என செருக்களத்தில் மோத இருக்கும் நாயகர்கள் தங்களை யார் என அறிந்து கொள்ளும் பருவத்தில் நிகழ்கிறது. கர்ணன், பார்த்தன், ஏகலவ்யன் ஆகியோருக்கு வில். கூடுதலாக ஒருவருக்கொருவர். தருமனுக்கு சொல். பீமனுக்கு அடுமனை. பெருந்தோள் கொண்ட துரியோதனனுக்கு கதை, யானை, பீமன் என பேருருவங்கள். கௌரவர்களுக்கு அவர்களின் முதல்வன் துரியோதனன். நகுலனும் சகதேவனும் மட்டுமே குரல் உடையாக் குழவிகள்.
மூன்றாவதான மற்றொன்று, ஞான மரபுகள் குறித்தும், பக்தி மரபுகள் குறித்தும் நிகழும் தத்துவ/தரிசன விவாதங்கள் சூதர்கள், பாணர்கள் ஞானிகளுக்குளே நடைபெறுகின்றது. பெரும்பான்மையான தொன்மக்கதைகள் வாய்வழியே சொல்லப்பட்டு வந்தவையே என சூதர்களும் பாணர்களும் நினைவுறுத்துகிறார்கள்.. ஒரு கதை அது நிகழும் காலத்திலேயே பாடப்படும் எனும் நாட்டாரியலின் அடிப்படைக்கூறை நிறுவுகின்றன சூதர்/பாணர் பாடல்கள். நாட்டாரியலிருந்தே செவ்விலக்கியங்கள் மேலெழுகின்றன. அஸ்தினபுரியின் நிகழ்வுகள் குறித்த பாடல்கள், அவை நிகழும்போதே பாரதமெங்கும் பாடப்படுகின்றன. “வண்ணக்கடல்” அந்த இலக்கணத்தை ஒற்றி அமைக்கப்பட்ட சமகால இலக்கியப்படைப்பு.
வண்ணக்கடல் என்பது “பாரதம்”. பெருநகரங்களே வண்ணங்கள். ஒவ்வொரு நகரும் ஒவ்வொரு வண்ணம், அனைத்தும் சென்று அமையும் வண்ணக்கடல் “பாரதம்”. பாரதம் எனும் வண்ணக்கடலினை அதன் வண்ணங்களான பெருநகரங்களைத் தாண்டி கடல் என உணர்த்துவது அக்கடனினுள் எல்லைகளின்றி நீந்தித் திரியும் மீன்களான சூதர்களும், பாணர்களும், ஞானிகளும் வணிகர்களும். எந்தக் கடலும் அர்த்தபடுவது அதன் மீன்களால் மட்டுமே. இவ் வண்ணக்கடலும் அவ்வண்ணமே.
வனத்திலிருந்து அஸ்தினபுரியை நோக்கிய பயணத்தினுடாக நம்மையும் இணைத்துக்கொள்கிறது “வண்ணக்கடல்”. பாண்டவர் ஐவருக்கும் வெவ்வேறு பாதைகள். தருமனுக்கு ஒலிகள்/சந்தங்கள். பீமனுக்கு மிருகங்கள். பார்த்தனுக்கு பறவைகள். நகுலனுக்கு மலர்கள். சகதேவனுக்கு ஒளிரும் மின்மினிகள். அனைவரின் பாதைகளும் வெவ்வேறானாலும் அனைத்தும் செம்பாதை. குருதிக்கொடை கேட்கும் வழிகள் அவை. உப்புச்சப்பற்ற, தோள் வலிமை இருந்தால், மனவலிமை இல்லாத, மனவலிமை இருந்தால் தோள்வலி இல்லாத ஒரு தலைமுறையில் இருந்து பாரதவர்ஷத்திற்கும், அதன் ஜனபதங்களுக்கும் சிம்மசொப்பனமாகவும், பாடுபொருளாகவும் மாற இருக்கின்ற சர்வ வல்லமையும் கொண்ட தலைமுறையின் கைகளுக்குள் சென்று அலைபாய்கிறது ஊழ் எனும் பெருந்தெய்வம். பீமனும் துரியனும் தங்கள் அகத்தினைஅறியும் தருணங்கள், அவர்கள் மோதும் தருணங்கள், கர்ணனும் பார்த்தனும் மோதும் தருணங்கள், கர்ணனின் முடியேற்பு என் உச்ச தருணங்களால் நிறைகிறது வண்ணக்கடல்.
வண்ணக்கடலின் மாமதுரையில், மூக்கை சிந்திகொள்ளும் பாற்கடலோன், பாற்கடலனோடு ஊடல் செய்யும் சோம்பேறியான ஆதிசேடன், மறுத்துரைப்பதற்கென்றே வடிவுகொண்ட மனையாளாகவும், ஆலோசனை சொல்லும்போது கண்விரிந்து மகிழும் மனைவியாகவும் திருமகள், பிரம்மத்தை பிரமித்துப் பார்க்கின்ற, அதனை விளக்க இயலாத பிரம்மன், பிரம்மத்தின் எதிர்த்திசையில் இயங்கும் பொருட்டு பணிக்கப்பட்டு, அது என்னவென்று தெரியாமல் பேந்தப் பேந்த விழிக்கும் சிவன், இவர்கள் மூவரையும் எள்ளும் சக்தி என அங்கத நடையில் சொல்லப்பட்ட தத்துவம் தொடர்பான தொன்மக்கதை, அவ்வடிவிற்கே உடைய நேர்த்தியுடன் அலாதியான அனுபவத்தை அளிக்கிறது. இவர்களிடையே நடக்கும் அளந்தறிய முடியாத அலகிலா ஆடல் இவ்வுலகு.
இக்கதை அங்கதத்தின் உச்சம் என்று வைத்துக் கொண்டால், அதற்கு எதிர் திசையில் உச்சமாக இருக்கும் மற்றொரு தொன்மக்கதை நரசிம்ம அவதாரம் தொடர்பானது. இக்கதையில் ஹிரண்யகசிபு-பிரகலாத அவையில் நடக்கும் விவாதம், பொருள்முதல்வாதம், அதற்கு எதிராக கருத்துமுதல்வாதம், தன்னியல்பு வாதம் அதற்கு எதிராக தற்செயல் வாதம் என கருத்தியல் தளத்தில் அமைந்து தந்தையும் மகனும் விவாதிக்கும் தருணமாக இருப்பது சிறப்பு. வருங்காலங்களில் நரசிம்ம அவதாரக் கதை இந்தக் கோணத்தையும் கருத்தில் நிறுத்தி போதிக்கப்படும் என்று நினைக்கிறேன். கலிங்கத்தில் நிகழும் சூரியக்கதை படிக்கும் எவருக்கும் மன எழுச்சியை கொடுக்கும். சூரியன் ஏன் சூரியனாக இருக்கிறான்? ஏனென்றால் அவன் சூரியன். கர்ணன் சூரிய புத்திரன், கதிர் எழுகின்ற நகரில் பிறந்ததாலும் அவன் கதிர்மைந்தன். அவனும் ஒரு சூரியன். சூரியனிடம் இருந்து பெற மட்டுமே முடியும். அவன் மகனிடமும்தான்.
இந்நூலில் குறிப்பிட்டே ஆகவேண்டிய மற்றொன்று, பாரதம் எனும் வண்ணக்கடலுள் அதற்கே உரித்தான பிரத்யேகமான ஒன்று அதன் குருமரபு எனலாம். இந்நூல் நெடுக அம்மரபு குறித்த கதைகள் சுட்ட பட்டுக்கொண்டே வருகின்றன. ஜமத்கனி – பரசுராமர், அக்னிவேசர்- துரோணர், துரோணர் – கர்ணன் , துரோணர் – அர்ஜுனன் என பல குரு-சிஷ்ய உறவுகள் நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளது. ஆங்காங்கே, இலைமறைகாயாக யதியும், ஜெயமோகனும் தெரிகிறார்கள். உச்ச குருவான துரோணரின் வாழ்க்கைப் பயணம் எளிய மனிதர்களைப் போலானது. வீழ்ச்சி, உச்சம் என்ற இருவேறியற்கை அவரை எங்கும் தொடருகிறது. வீழ்ச்சி நிகழும் போது உச்சமும், உச்சம் நிகழும் போது வீழ்ச்சியும் நினைவிலாடுகிறது. துரோணர் கூறும் புல் குறித்தான விவரணைகள் அனைத்தும் மெய்யியலுக்கான திறவுகோல். ஏக்கம் மிகுந்த சிறுகுழந்தையின் விசும்பலில் இருந்து, அவர் “காயத்ரி”யை அடைந்து, அனல் கொள்ளும் தருணம் என உச்சம் அடைந்து, எளியவனாக ஒடுங்கி வாழ்ந்து பிதாமகரால் “குருநிலை”யை அடைகிறார்.
நான் அடைந்த இடத்தில் இருந்து நீ தொடங்கியிருக்கிறாய் எனில் எவ்வளவு தூரம் செல்வாய்? என குரு வியக்கும் சிஷ்யனாக இருக்கும் துரோணர், தன்னைத் தவிர பிறர் எவரையும் முதல் மாணவனாக எண்ணக்கூடாது என குருவை ஒட்டிக்கொண்டு, உருகித் தவிக்கும் சிஷ்யனாக வரும் அர்ஜுனன், குருவின் நிழல் கூட படாமல், வித்தை கற்று குரு காணிக்கை எதுவானாலும் தந்து குருவை வெல்லும் ஏகலவ்யன், எதற்கும் பணியாமல், குருவின் ஒற்றைச்சொல் கேட்டுப் பணிந்து வில்லை கீழிறக்கும் கர்ணன் என குருவை விட உயர்ந்து நிற்கும் சிஷ்யர்கள் வண்ணக்கடல் நெடுக நீந்துகிறார்கள்.
பாரதம் குறித்த நிலவியல், தத்துவங்கள், தரிசனங்கள், ஞான மரபுகள், பக்திமரபுகள், வேத மந்தணங்களின் தமிழ் வடிவங்கள் போன்ற பண்பாட்டுக் கூறுகளையும், இந்நிலத்தில் நிலவிய வரலாற்று சித்திரத்தையும், அந்தந்த நிலங்களில் இருந்து எழுந்து வந்த தொன்மக்கதைகளையும் கவித்தன்மையுடன் வெளிப்படுத்தும் ஓர் அறிமுக நூலாக “வண்ணக்கடலை” இளையோருக்கு பரிந்துரைக்கலாம். அவர்கள் இந்நூலிலிருந்து தொற்றி மேலெழுவார்கள் என்ற நம்பிக்கையோடு. மேலும், சுவைமுதல்வாதம் கொண்ட எளிய இலக்கிய வாசகர்கள் போல அல்லாமல், இந்நூலின் உள்ள புனைவுகளை கழித்து, ஆய்வுமுதல்வாதம் கொண்ட துறையியல் மேதைகள் (லோகமாதேவி அவர்களைப்போல) மூலம் ஆய்வு நோக்கில் அணுகப்பட்டால் “வண்ணக்கடலில்” இருந்து நறு”முத்து”கள் கிடைப்பது சாத்தியமே.
லெட்சுமிநாராயணன்
கீழநத்தம், திருநெல்வேலி.