அருண்மொழி விழா, யோகேஸ்வரன் ராமநாதன்

அருண்மொழியின் நூல் வெளியீடு

அருண்மொழி நங்கை விழா- உரைகள்

பனி உருகுவதில்லை- அருண்மொழி நங்கை- வாங்க

குருஜி சௌந்தரும், காளி பிரசாத்தும் அனங்கனும் விழா பேனரை, மேடையில் கட்டிக்கொண்டு இருக்கையில் நாலாவது ஆளாக அரங்கினுள் நுழைந்தேன். “முங்கிக்குளி 2.0” வாழ்முறையில் கிராமத்தில் இருப்பதால், தலைச்சங்காட்டில் இருந்து காலை ஆறு மணிக்கு கிளம்பி, மதியம் மூன்றரைக்கு அரங்கடைந்த முன்பதிவில்லா பயணம். சற்றைக்கெல்லாம் ராஜகோபாலனும், விக்னேஷும் வந்து இணைந்தனர். பிறகு முத்துச் சிதறல் முத்து.

விழா அரங்கத்தில் உள்ள எல்லா நாற்காலியும் வெள்ளை சட்டை போட்டு, பின்புறம் ஜரிகை துண்டு கட்டி இருக்கிறதா என்பதை உறுதிசெய்து கொண்டு, விழா வளாகத்தின் எதிர்புறம் தங்கும் அறையில் இருந்த எழுத்தாளர் கோபாலகிருஷ்ணன் கதவைத் தட்டினோம். பான்ஸ் பவுடர் அடித்து முடித்த கையோடு ரெடியாக இருந்தார்.

சென்ற முறை, விஷ்ணுபுர குழும நண்பர்களின் பத்து புத்தகங்கள் வெளியீட்டை முன்னிட்டு நண்பர்கள் இதே வளாகத்தில் தங்கியிருந்ததும், எதிர்புறம் இருந்த டீக்கடையில் மொத்தமாய் முப்பத்தாறு டீ சொல்லி, கிலியூட்டிய சம்பவம் நினைவில் வந்தது. அதே கடையை தேடினோம். கடைக்காரருக்கு நல்ல நேரம், பூட்டி இருந்தது.

மீண்டும் அரங்கிற்கு திரும்புகையில் கணிசமான வாசகர்கள் திரண்டிருந்தார்கள். பல்லாவரம் டி.ஆர்.டி.ஓ. கெஸ்ட் அவுஸில் இருந்து, எழுத்தாளர் அருண்மொழி நங்கையின் கார் புறப்பட்டு விட்டது என்ற வாட்சப் செய்தி வந்து விழுந்தது.

பதிப்பாளர் ராம்ஜியும், பதிப்பாள எழுத்தாளர் காயத்ரியும் வந்திறங்கினார்கள். ராம்ஜி வாசுமுருகவேலுடன் பேசத்தொடங்க, வாசலின் இடப்புறம் வைக்கப்பட்டு இருந்த பறவைக்கூண்டின் அருகே சென்று பேச ஆரம்பித்தார் காயத்ரி.

இந்த கோழி, நாட்டு கோழி முட்டையில இருந்து வந்தது. அதோ அதுஒயிட்லக்கான் முட்டைலேருந்து வந்தது. கலர் வித்தியாசமா இருக்கு பார்...”  சின்சியராய் பார்த்துக்கொண்டிருந்த காயத்ரிக்கு வர்ணனை செய்ய ஆரம்பித்தார் ராம்ஜி.

திடீரென அரங்க வாசலில் தோன்றிய ஜெயமோகனை நண்பர்கள் சூழ ஆரம்பித்தார்கள், செல்பிக்கள் சென்று கொண்டே இருக்க, அருண்மொழியும், எழுத்தாளர் யுவன் சந்திரசேகரும்  அமர்ந்திருந்த சண்முகத்தின் கார் உள்ளே நுழைந்தது.

நெற்றி  வியர்வையை ஒற்றியபடி, விழா தொகுப்புரைகளை மீண்டும் படித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் கவிதா… நிகழ்ச்சி நிரலின் படி, முதல் நிகழ்வாக, புத்தக வெளியீடு. சாரு வெளியிட “இளம் எழுத்தாளர்” காளிப் பிரசாத் பெற்றுக்கொண்டார்.

முதல் உரை. எழுத்தாளர் கோபாலகிருஷ்ணன் அவர்களுடையது. புத்தகத்தின் ஒட்டு மொத்த மையச்சுழியாய் இருந்த ஜூனியர் அருண்மொழியின் இன்னோசென்ஸை  குறிப்பிட்டு பேசி அமர்ந்தார்.

இரண்டாவதாக யுவன். இருமல் அனுமதிக்கும் வரை பேச முயல்கிறேன் என்று ஆரம்பித்தவர், மொத்த அரங்கையும்  இலகுவாக்கினார். புத்தகமாக ஆவதற்கு முன், தனக்கும் அருண்மொழிக்கும் இடையே நடைபெற்ற காரசார சம்பாஷணைகளை, சிரிப்பும் புன்னகையுமாய் விவரித்து பேசினார்.

இனிமேல் யுவன் கலந்து கொண்டு பேசும் இலக்கியக் கூட்டங்களில் வெறும் பார்வையாளனாகவே இருந்து விடுவது, பேசக் கூடாது என்று முடிவு செய்து விட்டேன்பார்வையாளர் அத்தனை பேரையும் அள்ளிக் கொண்டு போய் விடுகிறார்இதோடு இரண்டாவது கூட்டம்.”

யுவன் உரை குறித்து சாருவின் முகநூல் குறிப்பு.

இறுதியாக சாருவின் முறை. இவ்விழாவிற்கு முன்பாக வேளச்சேரிக்கு சென்றிருந்த சாருவிடம், அங்கிருந்து நிகழ்வு நடக்கும் வளசரவாக்கத்திற்கு சொற்ப நிமிடங்களில் வந்துவிடலாம் என்று தெரிவித்து இருக்கிறார்கள். விழாவிற்கு சற்று தாமதமாக வந்து சேர நேர்ந்ததற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு ஆரம்பித்தார்.

சமகால படைப்புகள் மீது தனக்கு இருக்கும் ஒவ்வாமை பற்றியும், அந்த ஒவ்வாமையை ஓரங்கட்டி, தன்னுள் கொண்டிருக்கும் ஆர்ட் பார்மின் மூலம் இந்த புத்தகம் எவ்வாறு தன்னை வென்று எடுத்தது என்று விளக்கத்தோடு ஆரம்பித்தவர், கீழத்தஞ்சை மனிதர்களின்”ஹெடோனிஸ்ட் வாழ்க்கை முறை” என தொடர்ந்தார். புத்தகத்தின் பல வரிகளை பலதடவை காயத்ரியிடமும் மற்ற நண்பர்களிடமும் சொல்லி சிலாகித்ததை விவரிக்க, மேடையில் அருகில் அமர்ந்திருந்த அருண்மொழியின் காதில் ரகசியமாய் ஆமோதித்தார் காயத்ரி.

மேடைக்கு எதிரே இடது வலதான  இரு பக்க இருக்கைகள் அனைத்தும் நிரம்பி, சுவரோரம் நண்பர்கள் நின்றபடி கலந்து கொண்டார்கள். எழுத்தாளர்கள் பாஸ்கர் சக்தி, ரமேஷ் வைத்யா, அகர முதல்வன் உள்ளிட்டவர்கள் பின் இருக்கைகளில். கோபாலகிருஷ்ணன் பேசி முடித்த பின். யுவன் பேச ஆரம்பிப்பதற்கு முன், தான் வந்து அமர்ந்ததையும், நன்றியுரைக்கு முன்பாக கிளம்பி சென்றதையும் விவரித்து, சுகா அனுப்பிய வாட்சப் தகவலை, இரவுணவின்போது சொல்லிக்கொண்டு இருந்தார் அருண்மொழி.

ஜனவரி இரண்டாம் தேதி திட்டமிடப்பட்டு, பிப்ரவரி பதிமூன்றில் இனிதே நடந்தேறிய வெளியீட்டு விழா. விஷ்ணுபுர குழும நண்பர் சக்திவேலை முதல் முறையாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு. மகன் அடையும் பரவசத்தை அருகில் நின்றபடி பார்த்துக் கொண்டே இருந்தார் சக்திவேலின் தகப்பனார். அருண்மொழி நங்கை, ஆலத்தூரின் சிறுமி ”சின்ன தாட்பூட்”டாய் மாறி கண்கள் படபடக்க, மூச்சி விட இடைவெளி இன்றி, துரித கதியில் பேசிமுடித்த ஏற்புரை.

சாருவுக்கும், யுவனுக்கும், கோபாலகிருஷ்ணனுக்கும் நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் கடந்துவிடாமல், அவர்களுடைய படைப்புகள், தனக்கும் அவர்களின் படைப்புகளுக்கும் இடையேயான பிணைப்பின் பின்னணி என்று விவரித்துவிட்டு, இப்புத்தகம் உருவான விதத்தை விவரித்து சொல்லி, நிறைவு செய்தார்.

மைக்குக்கு நேராக இரண்டாம் வரிசையில் சைதன்யா, நடு வரிசை ஒன்றில் ஜெயமோகன். பின்வரிசை ஒன்றில் அஜிதன்.

தற்செயலாய் அமர்ந்து கொண்ட இருக்கைகள் என்றாலும், எல்லாமே மைக்குக்கு நேர் எதிரே… அருண்மொழி ஏற்புரை ஆரம்பிக்கையில், எதிரே பார்த்து, ஒரு கணம் ஆனந்த அதிர்ச்சியாகி, பின்னர் சகஜமாகி, பேச ஆரம்பித்தார். ஜெயமோகன்  கண்களை அவ்வப்போது பார்த்தபடி அருண்மொழியும், அவருடைய கண்களை தவிர்ப்பதுமாக ஜெயமோகனும் சில நிமிடங்கள் தொடர்ந்தார்கள்.

அடுத்து எழுதப்போகும் நாவலையும் தங்களின் பதிப்பகத்துக்கே தரவேண்டும் என்று துண்டு போட்டு நன்றியுரையை முடித்தார் காயத்ரி.

புத்தகத்தில் மொத்தம் இருபத்தி இரண்டு கட்டுரைகள் இருந்தாலும், ஆக பிடித்தது பதிநாலாம் நம்பர். “அரசி” கட்டுரையை, நிகழ்வில் பேசிய அனைவரும் துல்லியமாக குறிப்பிட்டனர்.

புகைப்படக்காரர் பின்னுக்குப் பின்னுக்கு நகர்ந்து விரிவாகவும் துல்லியமாகவும் படம் எடுப்பது போல அருணாவின் எழுத்து அவர் சொல்ல வந்த காட்சிகளை கண்முன்னே நிறுத்துகிறது

அ.முத்துலிங்கம் அவர்களின் முன்னுரை. ஜெயமோகன் என்ற ஆலமரத்தின் கீழே வேரூன்றுவதென்பது எத்தனை பெரிய சவால்…!

பின்னுக்கு பின் நகர்ந்து, அருண்மொழியில் இருந்து ஆலத்தூர் சிறுமியாக மாறி, எழுத்தில் வேரூன்றி இருக்கிறார் அருண்மொழி.

நட்புடன்,

யோகேஸ்வரன் ராமநாதன்

முந்தைய கட்டுரைமுத்தங்கள் – கடிதம்
அடுத்த கட்டுரைஅளவை – ஒரு சட்ட இதழ்