அருண்மொழி விழா -கடிதம்

அருண்மொழி நங்கை விழா- உரைகள்

அருண்மொழியின் நூல் வெளியீடு

அன்பு ஜெயமோகன்,

பனி உருகுவதில்லை நூல் வெளியீட்டு விழாவில் யுவன் மற்றும் சாருவின் உரைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இருவரும் அருண்மொழி அக்காவின் எழுத்து தொடர்பான தங்கள் வாசிப்பனுபவத்தை நேரடியாகப் பகிர்ந்து கொண்டிருந்தனர். அவ்வாசிப்பனுபவங்களின் வழி படைப்புமொழி பற்றிய விளக்கமும் தன்னியல்பாய் மேலெழும்பி வந்திருந்தது. அதைப் பல வாசகர்கள் கவனித்திருக்கக் கூடும். கவனிக்கத் தவற விட்டவர்கள், மீண்டும் அவ்வுரைகளைக் கேட்டுப் பாருங்கள்.

மிகச்சமீபமாய் வாசிப்பு மொழி தொடர்பான ஒரு கடிதத்தை எழுதி இருந்தேன். வாசிப்பு குறுகலாக்கப்பட்டதாய் நான் உணர்ந்த காரணத்தினாலேயே, அதை எழுத வேண்டியதாயிற்று. ஒரு வாசகன் வாசிப்பு மொழியோடு, படைப்பு மொழியையும் புரிந்து கொண்டவனாகும் போது இலக்கியப் படைப்புத் தேர்வு எளிமையானதாகி விடும்.

அனுபவப்பகிர்வு எங்கே படைப்பாக மாறுகிறது என்பதைச் சாரு தனது உரையில் சில காட்டுகளோடு சொல்ல முயற்சித்தார். மேலும், படைப்பின் உள்ளடக்கத்தைப் போன்றே அதன் மொழியும்(உருவம்) முக்கியமானது என்பதை வலிமையாய் அவர் சொன்னதை வாசகர்கள் விளங்கிக்கொள்ள முற்பட வேண்டும். சமகாலப் புது எழுத்தாளர்களைத் தான் படிப்பதில்லை என வெளிப்படையாய்ப் பகிர்ந்து கொண்ட சாரு, அவர்கள் தன்னை வாசிக்கத் தூண்டும்படி எழுதவில்லை எனக்குற்றஞ் சாட்டினார். அக்கருத்தில் எனக்கு விமர்சனம் உண்டென்றாலும், அதில் உள்ளார்ந்து இருக்கும் படைப்பக்கறை கூர்ந்து கவனத்தில் கொள்ள வேண்டியது.

பனி உருகுவதில்லை நூலை வாசிக்கப்போய் சாரு நிறைய உருகி இருக்கிறார். அந்த அளவில், நான் அதிகம் மகிழ்கிறேன்.

எழுதுவதற்குப் பிற ஆக்கங்களை வாசித்தாக வேண்டும் எனும் நிபந்தனை இல்லைதான். ஆயினும், முன்னோடிகளை வாசிப்பதன் வழியாகவே ஒரு வாசகன் இலக்கியப்படைப்பின் ஆகிருதியை ஓரளவேனும் நெருங்க இயலும். சாரு அதையே குறிப்பிட்டுச் சொல்கிறார்.

கடந்த இரு வருடங்களாக வலைக்காட்சிகளில் பலர் இலக்கியப்படைப்புகளைக் ’கதைகளாகச்’ சொல்லி வருகிறார்கள். சமகால அவசரச்சூழலில் இருக்கும் மனித வாழ்க்கைக்கு அது பயனுள்ளதுதான் என்றாலும், ‘கதை சொல்லல்’ ஒரு படைப்பைக் குறுகலாக்கி மலினப்படுத்தி விடுகிறது. கதைசொல்லிகள் இதைக் காலந்தாழ்ந்தாவது உணர வேண்டும்.

நவீன இலக்கியத்தைக் கதை சொல்லல் வடிவில் கொண்டு செல்வதை வீண் முயற்சி என நான் மட்டந் தட்டவில்லை. கதை வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதே சரியானதாக இருக்கும் என ஒரு மாற்றுப்பார்வையை முன்வைக்கிறேன்.

வாழ்வின் நெருக்கடியான சூழலில் வெளிப்படும் மாந்த உணர்வுகளின் விசித்திரங்களை ஒரு சாதாரண மனிதன் அச்சத்தோடு நோக்குகிறான்; அரற்றுகிறான்; திமிறுகிறான்; வெளியே வரத் தவிக்கிறான். ஒரு இலக்கிய வாசகனோ அதிலிருந்து கொஞ்சம் விலகி நின்று கவனிக்க ஆரம்பிக்கிறான்; தன் அறிவுக்கு இதுவரை கிடைத்திராத வாழ்வுக்காட்சி என்பதாக அதைப் புரிந்து கொள்ள யோசிக்கிறான்; பிறருக்கு அது போல நடந்திருக்க வாய்ப்பு இருக்கலாமோ என்பது போன்ற திறப்புகளைச் சாத்தியப்படுத்துகிறான்.

தெளிவாகவே சொல்கிறேன். இலக்கியப் படைப்பு வாழ்வின் மர்மங்களுக்கான காரணங்களை ஆராய்ந்து தீர்ப்பளிக்கும் நீதிச்சாசனம் அன்று. இதுகாறும் வெளிப்பட்டிராத அல்லது வெளிப்பட்டும் நாம் கண்டுகொள்ளாத மர்மங்களை அதன் அசல் தன்மையோடு நமக்குச் சொல்ல முயல்வதோடு இலக்கியப் படைப்பின் பணி நிறைவடைந்து விடுகிறது. அதை மேலதிகமான யோசிப்புக்குக் கொண்டு செல்வது வாசகனின் பொறுப்பு. அதனால்தான் இலக்கியப்படைப்பை வாசகனின் பிரதி என்று உறுதிபடச் சொல்கிறோம்.

முருகவேலன்

கோபிசெட்டிபாளையம்

முந்தைய கட்டுரைகிறிஸ்து, கம்பன், புதுமைப்பித்தன்…பேராசிரியர் ஜேசுதாசனுடன் ஒரு பேட்டி
அடுத்த கட்டுரைஇட்ட முத்தமும், நிறைந்த நடையும்