காதுகள் விவாதம்- இறுதியாக…

வாசிப்பு மொழியின் அவசரத் தேவை- சக்திவேல்

ஆழங்களில் எல்லாமே விதியாகிறது- விஷால் ராஜா

அன்புள்ள ஆசிரியருக்கு,

காதுகள் நாவலுக்கான என் கடிதத்தின் மீதான விவாதங்களைப் படித்தேன்.நண்பர்கள் அசோகன்,சக்திவேல், விஷால் ராஜா ஆகியோர் தங்களுடைய கருத்துக்களைத் தங்களின் தரப்பாகச் சரியாக முன்வைத்திருந்தனர்.ஆரோக்யமான விவாதம் ஒன்றினைத் அந்தக் கடிதம் துவக்கி வைத்தது மகிழ்வினைத் தந்தது.அதேசமயம் நான் எழுதியதைக் குறித்து நானே விளக்கம் அளிக்கும் சூழலும் அந்த விவாதத்தில் ஏற்பட்டு விட்டது.ஆகவே இக்கடிதம்.

மூவருக்குமான விவாதத்தில் என்னைப் பற்றிய முடிவினையும் என் மொழி பற்றிய முடிவினையும் அவர்களுக்குத் தகுந்தவாறு எடுத்துக் கொண்டுவிட்டனர்.மணி நம்பிக்கைவாதி என்றும் மரபுவாதி என்றுமான முடிவிற்கு அவர்களே வந்துவிட்டனர்.அதை நான் ஏற்பது அல்லது மறுப்பதைத் தவிர எனக்குவேறு வழியில்லாத சூழலினை உருவாக்கிவிட்டனர்.எனவே அவர்களுக்குப் பதிலளிப்பது என் கடமையாகிவிட்டது.

முதலில் நான் எழுதியது இலக்கிய விமர்சனமே அல்ல.நம்பிக்கைவாதியின் நிலையினை எடுத்திருக்கிறார் என்பதற்கான அசோகனின் நிலைப்பாட்டிற்கான பதிலைச் சொல்கிறேன் . அசோகன் அந்தக் கடிதத்தினை இலக்கிய விமர்சனம் என்று எடுத்துக் கொண்டிருக்கிறார்.ஆகவே இலக்கிய விமர்சனம் பயன்படுத்தும் வழிமுறைகள் அதில் இல்லாததால் அது நம்பிக்கைவாதியின் கடிதம் என்ற முடிவுக்கு வருகிறார்.இதில் கூடவே என் மொழியின் அடர்த்தியும் சித்தர் தளத்தின் தரவுகளும் வேறு இணைந்து அதை உறுதியும் செய்துவிடுகிறது.ஆகவே தன் தரப்பாக அக்கருத்திற்கு சென்று சேர்கிறார்.

அதை முதலில் இலக்கிய விமர்சனமாக எடுத்துக் கொண்டது ஆரம்பப் பிழை.என் கடிதம் மதிப்புரை என்ற இலக்கிய வரையறைக்குள்தான் அடங்கும்.இலக்கிய விமர்சனம் என்பது படைப்பினில் இருக்கும் அனைத்தையும் அலசியே ஆகவேண்டும்.கதாபாத்திரங்கள் முதல் தரிசனம் வரையிலான அனைத்தையும் பேசி இலக்கியத்தில் அதற்குரிய இடம் எது என நிறுவப்பட வேண்டும்.மதிப்புரைக்கு இந்தக் கட்டாயங்கள் ஏதும் இல்லை.மதிப்புரையின் நோக்கம் அப்படைப்பு வாசகனில் ஏற்படுத்திய தாக்கத்தினை முன் வைப்பது மட்டுமே.அது மட்டுமே அதன் இலக்கு.வாசகன் அடைந்ததை நிறுவினால் அதன் பணி முடிவடைந்துவிடும். அது சரியாக அக்கடிதத்தில் அமைந்திருக்கிறது என்றே எண்ணுகிறேன்.மதிப்புரைக்கு இலக்கிய விமர்சனத்தின் அளவுகோல்களைக் கொண்டு வந்து ஏன் அவ்வாறு இல்லை என்று கேட்டால் அதன் பணி அது அல்ல என்பதே பதில்.

அடுத்து நான் கூறும் மரபார்ந்த தரவுகளும் என் நிலைப்பாடுகளும் என்னைப் பழமைவாதிகளின் நம்பிக்கையாளர்களின் தரப்பில் கொண்டு போய் சேர்க்கின்றன என்பதை நான் நன்கு அறிவேன்.அதன் விளைவுகளையும் அறிந்தே அவற்றினை முன் வைக்கிறேன்.அறிவு நேர்மை எனக்கு கட்டாயம் வேண்டும் என நான் எண்ணுவதால் எனக்குச் சரியெனத் தோன்றும் என் கருத்தினை அவ்வாறே வைக்கிறேன்.அது மரபினை ஒதுக்கும் இன்றைய பொதுப் போக்குக்கு எதிராக இருப்பதால் அதனை மரபின் பழமையின் குரல் என எண்ணிவிடுகிறார்கள்.அதை வைத்து என் சிந்தனையும் பழமையானதென நண்பர்கள் தவறாக முடிவெடுத்து விடுகிறார்கள்.அவர்களுக்கான என் பதில்.பொதுப்போக்குக்கு எதிராக இருக்கும் சிந்தனைகள் அனைத்தையும் பழமையின் குரல் என எண்ணி விடாதீர்கள்.அவை இன்றைய சிந்தனையின் போதாமையினைச் சுட்டிக் காட்டும் மரபினைப் போன்ற தோற்றம் கொண்ட புதியவையாகவும் இருக்கக் கூடும்.ஆகவே அவை முற்றிலும் இன்றைய சூழலின் பேசுபொருளாகவும் இருக்கக்கூடும் என்பதை கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள்.இன்று பொதுவெளியில் இருக்கும் மரபின் மீதான ஒதுக்கம் அவற்றினை நீங்கள் அறியாத அளவு செய்து விடுகின்றன என்பதைச் சற்றே உணர முற்படுங்கள் என்பதே.

அதற்கு உதாரணமாகக் கூறவேண்டும் என்றால் நான் எழுதிய அக்கடிதத்தின் காதுகளில் ஏன் அது நிகழ்ந்தது என்பதற்கான பதிலினை நான் அடைந்த வழியினைச் சொல்லலாம்.அந்தப் பதில்தான் அந்தக் கடிதம் அடைந்ததன் உச்சம்.என்னை மறுக்க முடியாத இடத்திற்கு கொண்டு சென்ற அதை தத்துவப்படுத்தல்(philosophizing) என்ற கலைச்சொல்லால் நீங்கள் குறிப்பிடுவீர்கள்.அது எவ்வாறு அடையப்பட்டது?.சொற்பொருட் பேதம் எனும் கருத்துருவால்.

காதுகள் நாவலை வாழ்பனுபவமாக எடுத்துக் கொண்டு அதன் மீதான என் வாழ்பனுபவத்தினையும் ஒன்றாக்கி புதிய சிந்தனையாக சொற்பொருட் பேதம் எனும் கருத்துருவினை அடைந்தேன்.அதையே அக்கடித்தின் ஆரம்பத்தில் சொல்கிறேன்.இந்தக் கருத்துரு முற்றிலும் புதியது.கூடவே இந்த சொற்பொருட் பேதம் என்பது புதிய சொல்லிணைவும் கூட இதற்கு முன் இச் சொல்லும் இல்லை.இது குறித்தான சிந்தனையும் கருத்துருவும் இங்கு தோன்றவே இல்லை.அதைப் போன்றது எழுதப்படுவதற்கு முன்பு வரை இல்லாத காரணத்தால் ஏற்கனவே இருக்கும் பாடபேத்தினைப் போன்றது என்று சொல்வதற்கு முயன்று ஈரோடு கிருஷ்ணனிடமும் மணவாளனிடம் விவாதித்தே இக்கருத்துரு மற்றும் சொல்லிணைவினை உருவாக்கினேன். முற்றிலும் புதிதான கருத்துரு மற்றும் சொல்லிணைவு.அதனை நண்பர்கள் உணராத வண்ணம் அது புதிய வார்த்தை மற்றும் புதிய கருத்துரு என்பதை விளக்கும் பொருட்டு கூறப்பட்ட பாடபேதம் எனும் மரபான கருத்துருவும் சொற் பொருளினைத் தொடரும் பேதம் எனும் மரபுச் சொல்லும் தடுத்து விடுகின்றன.அதற்கு நான் என்ன செய்ய முடியும்?.

அடுத்து அக்கருத்துருவின் தத்துவப்படுத்தலே அப்பதிலுக்கு நான் சென்றடையக் காரணமாக இருந்தது.சொற்பொருட் பேதம் என்ற புதிய கருத்துருவினைத் தத்துவப்படுத்தலுக்கு உட்படுத்தும்போது அக்கருத்துரு ஏன் எவ்வாறு எக்காரணியால் உருவாக்கப்பட்டது என்பதையும் அதன் விளைவுகள் என்ன என்பதற்கான பதிலைக் கொடுத்து விடுகிறது.நான் அடைந்து உரைத்தது அப்பதிலையே.ஆனால் அதை மரபு நூல்களின் தனித்தன்மை என்பதான தரவாக நண்பர்கள் எண்ணிவிடுகிறார்கள்.அந்த நூலில் இருந்து இந்த இடத்திற்கு வந்ததால் இலக்கிய நுண்ணுணர்வு மணிக்கு இருக்கிறது.ஆனால் மரபினைப் பற்றிப் பேசுவதால் நவீன சிந்தனைகளைப் பற்றி பேசாதது மணியின் குறை என்ற தவறனான முடிவுகளுக்கு நண்பர்கள் வந்துவிடுகிறார்கள்.

அதற்கடுத்து நானும் மகாலிங்கமும் ஒன்று என்று நண்பர் அசோகன் சொன்னதும் இம்மாதிரியானதே.அந்நாவலில் நடந்தது போன்ற நிலை என் வாழ்விலும் நடந்தது.அதையே நான் குறிப்பிட்டிருந்தேன்.சற்று வாழ்வினைக் கவனித்துப் பார்க்கும் யாரும் நம் மனத்தின் செல்திசை மாறிக்கொண்டே இருப்பதை காணலாம்.அதன் செல்திசை எப்போதும் அகங்காரத்தின் உச்ச நிலையினை நோக்கியே என்பதை கூர்ந்து கவனித்தால் உணரவும் முடியும்.அது உள்முரண் கொண்ட சூழலினை உருவாக்குகிறது என்பதே நான் சொல்ல வருவது.அதற்கான என் வாழ்வு அனுபவத்தினையே கூறுகிறேன்.

என் இருபதுகளில் ஞானத்தினை நோக்கி என் ஆர்வம் சென்றது.அதன் உச்சமென நான் எண்ணியது பிறப்பறுத்தல்.இயல்பிலேயே பக்தி நிலவும் வீட்டுச் சூழலில் இருந்தவன் என்பதால் என் கோரிக்கையாக நான் முன் வைத்தது பிறப்பறுத்தலையே.அதை முழுமனதோடே வைத்தேன்.பின்னர் வாழக்கையின் சிக்கலுக்கான பல்வேறு கோரிக்கைகள் சூழலால் எழுந்தன. பின்னர் ஓர் நாளில் அதில் நான் சென்ற திசை என்ன இனிச் செல்வதென்ன என்று யோசிக்கும்போது முதல் கோரிக்கையினை மறுக்கும் கோரிக்கைகளையே பின்னர் எழுப்பியது புரிய வந்தது.பிறப்பறுத்துச் செல்ல விரும்புபவனுக்கு இங்கு இருக்கும் அனைத்தும் தளைகள் தானே!.தளைகளை அறுத்து விடு என்று சொல்லிக் கொண்டே மேலும் மேலும் தளைகளைச் சேர்ப்பவனை என்ன சொல்வது?.இன்னும் வந்து சேராத தளைகள் மீது ஆவலும், அதை அடையாத காரணத்தால் நம்பிக்கையின்மையும் அடைபவன் அதிலிருந்து விலகுவது சாத்தியமா என்ன?.கவனித்து உணர்ந்தாலன்றி அது சாத்தியம் அல்லவே.அந்த அனுபவத்தினையே நான் அங்கு சொன்னேன்.

அடுத்து சித்தர் மரபின் மீதான நம்பிக்கையினை ஊட்டுவதாக அக்கடிதம் அமைந்திருக்கிறது.அனைத்திற்குமான தீர்வு சித்தர் மரபில் இருப்பதான நம்பிக்கையினை உருவாக்குகிறது என்ற தவறான புரிதலுக்கு நண்பர் ஏனோ வந்துவிட்டார்.சொல்லுக்கான பொருள் மாறும் சிறு காரணியால் மட்டுமே மகாலிங்கம் அடைந்த துயரே நாவல்.அச் சிறு காரணிக்கே விளைவு அவ்வளவு மோசமாக இருந்தால் அனைத்தையும் தனக்கு அளிக்கும் தன் கடவுளையும் துறந்து சுத்த சூன்யத்துக்குள் நுழையும்வரை இருக்கும் உண்மையான இடர்கள் எவ்வளவு என்பதை அவ்வழியில் இருக்கும் மூல நூல்கள் எவற்றையேனும் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.அவைகள் தாம் அம்மரபின் உண்மையான இடர்கள்.அதற்கு பதிலாக நான் நண்பருக்குச் சொல்வது யார் என்ன சொன்னாலும் அந்தப் பக்கமே தலையைக்கூட காட்டி விடாதீர்கள் என்பதே.அதே சமயம் நண்பரினைப் போல யாராவது சித்த மரபில் என் எழுத்தால் ஆர்வம் கொண்டு சென்றுவிட்டால் அதற்கான காரணமாக நான்அமைந்து விடுவேன் என்பதால் வேறுவழியின்றி அம்மரபுக்குள் எளியவர்கள் நுழையவே வேண்டாம் என்பதற்கான நான் அறிந்த காரணங்களைச் சொல்லிவிடுகிறேன்.

(இந்த கடிதத்தில் சித்தராகும் தகுதி குறித்த இப்பகுதி தேவையில்லாததது என்றே இப்போதும் எண்ணுகிறேன்.இது குறித்து மணவாளன் ஈரோடு கிருஷ்ணன் இருவரிடமும் ஆலோசித்து அறிவு சேகரத் தொகுப்பில் இது இருக்கட்டும் என்று கிருஷ்ணன் சொன்னதாலேயே இவற்றையும் சேர்த்துப் பதிவு செய்கிறேன்.ஆகவே இவ்விவாதத்திற்குச் சம்பந்தம் இல்லாத இப்பகுதியினை நண்பர்கள் பொறுத்துக் கொள்க).

நான்கு விதமான தகுதிகள் உடையவராக இருந்தால் மட்டுமே சித்த மரபுக்குள் ஒருவன் நுழைந்து சாதிக்க முடியும் என்பதை நான் படித்த நூல்களில் இருந்து புரிந்து கொண்டிருக்கிறேன்.இது என் புரிதல் மட்டுமே.இந்த விவாதமும் சித்த மரபின் மீதான நம்பிக்கையும் இங்கு பேசப்பட்டு விட்டதால் வேறுவழியின்றி அந்த நான்கினையும் சொல்கிறேன். இதை எந்த சித்த மரபினைச் சேர்ந்தவர்களும் சொல்வதற்கான வாய்ப்பே இல்லை என்பதையும் நண்பர்கள் புரிந்து கொள்க.ஏனென்றால் வந்தவரை தக்க வைக்கும் நிலையிலேயே அந்தத் தரப்பு இன்று இருப்பதால் இதை எக்காரணம் கொண்டும் வெளியே சொல்ல மாட்டார்கள்.

 

1.சரியான குரு பரம்பரை.

இந்தியாவில் இருக்கும் சமஸ்கிருத மற்றும் தமிழ் மந்திரங்கள் இரண்டினையும் சித்தர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். சமஸ்கிருதத்தினை மட்டுமே கொண்ட வேதத்தின் மந்திரங்கள் மீது எந்தச் சாபமும் விழவில்லை.ஆனால் சித்த மரபின் மந்திரங்கள் மீது சிவன் முதல் பல சித்தர்கள் கொடுத்த சாபம் இருக்கிறது.ஒரு சித்தர் தானறிந்ததைச் சொல்ல நூலினை இயற்றினால் அதன் உட்கூறுக்கள் பொதுவெளிக்குச் சென்றால் பெரும் பாதகத்தினை ஏற்படுத்தும் என்று எண்ணும் பிற சித்தர்கள் அந்நூலை படிப்பவன் அந்நூலின் மெய்மையினை அடையாமல் போகட்டுமென சாபம் அளித்திருக்கிறார்கள்.கூடவே அவை நீக்கப்படுவதற்கான சாபநிவர்த்திகளும் அவர்களாலேயே சொல்லப்பட்டு இருக்கின்றன.ஒரு நூலுக்கு ஒன்றன் பின் ஒருவராக சாபமிட்டதும் நடந்திருக்கின்றது.ஒரு நூலில் இருக்கும் மந்திரங்களை மட்டும் அறிந்தால் மட்டும் போதாது.எந்த நூலில் அது சொல்லப்பட்டு இருக்கிறதோ அதன் மீது விழுந்தது யாருடைய சாபம் என்பதையும் அதற்குரிய சாபநிவர்த்தி என்ன என்பதையும் அறிய வேண்டும். இறுதியாக எந்த மந்திரம் மீது எவருடைய சாபம் இருக்கிறது என்பதை அறியாமல் அதற்குரிய சாபநிவர்த்தியினைச் செய்யவே முடியாது.அதைச் செய்யாமல் பயன்படுத்தப்படும் மந்திரம் என்ன விளைவினை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.காதுகள் நாவலில் நிகழ்ந்தது இக்காரணியால் கூட நிகழ்ந்திருக்கலாம்.ஆகவே நீண்ட காலமாகத்தொடரும் சித்த மரபின் குரு பரம்பரைக்கே அவைகளைப் பற்றித் தெரிந்து இருக்கும் வாய்ப்புள்ளது.ஆனால் அமைப்புகளை உருவாக்குவதற்கான ஒவ்வாமை சித்தர் தரப்பின் அடிப்படைக்கூறு.ஆகவே அவர்கள் நெடிய பாரம்பரியம் கொண்ட சீடர் பரம்பரையினை உருவாக்கி பொதுவெளியில் அவற்றினை நிலைநிறுத்துவதில் விருப்பம் இல்லாதவர்கள்.தகுதியுடையவர்கள் எனக்கருதுபவரினை அன்றி பிறருக்குக் கற்றுத்தர விரும்பாதவர்கள்.ஆகவே சரியான குரு பரம்பரையினைக் கண்டறிவது இன்றைய சூழலில் மிக மிகக் கடினம்.பெரும்பாலும் தவறானதினையே தேர்ந்தெடுக்கும் சூழல் இன்றுள்ளது.

2.மந்திரங்களுக்கான காலம்

சரியான குரு கிடைத்தாலும் குறைந்தபட்ச அடிப்படை மந்திர தீட்சை உபதேச காலம் 12ஆண்டுகள்.ஒற்றை மந்திரத்தினை ஒராண்டு உருவேற்ற வேண்டும்.அடிப்படை உபதேச காலம் முடிந்ததும் மீதமுள்ளவைகளை ஒரிரு ஆண்டுகளில் சொல்லிக் கொடுத்து விடுவார்கள். அடிப்படை உபதேச காலத்தில் என்ன உண்ணவேண்டும் எவ்வாறு தங்க வேண்டும் எவ்வாறு உறங்க வேண்டும் என்பதற்கான கட்டுப்பாடுகள் உண்டு.அதில் இருக்கும் கொடூரமான ஒரு விதியினை மட்டும்சொல்கிறேன்.தூங்கும் போதும் விழிப்புடன் இருக்கவேண்டும். இதைப் போன்ற எண்ணற்ற விதிகள் இருக்கின்றன என்பதை மட்டும் நினைவில் கொள்ளவும்.

3.கற்பங்கள் மற்றும் மூச்சுப் பயிற்சிகள்

சித்த மரபு கிட்டத்தட்ட இந்தியாவில் அன்றிருந்த அனைத்து துறைகளைப் பற்றிய அறிவினையும் கொண்டது.அதில் ஒன்றுதான் மருத்துவம்.அதில் கற்பங்கள் எனும் மருந்துப் பொருட்கள் உண்டு.மந்திர உபதேச காலத்தின்போது ஆண்டுக்கான கற்பங்களும் முறையாக உண்ணப்பட்டிருக்க வேண்டும். கூடவே பிரணயாமத்தின் மந்திரங்களுக்கான தனித்த பயிற்சிகளும் செய்யப்படல் வேண்டும்.அதுவும் உடலில் முதல் நரை எழும் முன்னர் கற்பம் உண்ணப்பட்டே ஆகவேண்டும்.நரை எழுந்தபின் கற்பங்கள் உண்பது பயனில்லாததே.

4.பிறந்த காலமே அடிப்படை

பிறந்த நேரத்தினை அடிப்படையாக வைத்தே அவன் எத்தகைய சித்தனாவான் என்று தீர்மானிக்கபடுவதாக அகத்தியரே கூறியதாகச் சொல்லும் நூலொன்று உள்ளது.குறிப்பிட்ட நட்சத்திரம் மற்றும் கோள் அமைப்பில் இருக்கும் நபர்களினைத் தவிர மீதமுள்ளோர் என்ன முயன்றாலும் சித்த நிலையினை எட்ட முடியாதென்று அந்நூல் திட்டவட்டமாக உரைக்கிறது.

இந்த நான்கு தகுதிகளும் தங்களுக்கு இருப்பதாக எண்ணும் எவரும் முதல்நரை தென்படும் வரை அத்தரப்பில் நுழைவதற்கு முயன்று பார்க்கலாம்.அதன்பின் முயல்வது வீண்.

அடுத்து என் மொழி பழைய மொழி என்னும் கருத்து.நண்பர்கள் யாரும் பழைய நூல்களைப் படிப்பவர்கள் அல்ல என்றே எண்ணுகிறேன்.இருந்தால் நான் எழுதும் என் மொழி முழுக்க உங்களுடைய பாதிப்பால் உருவானது என்பதினை எளிதில் உணர்ந்திருப்பார்கள்.பெரும்பாலும் என் மொழியினை என் நிலைப்பாடுகளும் தரவுகளும் மறைத்துவிடுகின்றன என்றே எண்ணுகிறேன்.மரபின் தரவுகளையும் மரபுசார் நிலைப்பாடுகளையும் எடுப்பவன் எவ்வாறு நவீனமான மொழி கொண்டவனாக இருக்க முடியும் என்ற எண்ணமே என்னைப் பற்றிய தவறான முடிவுகளுக்கு நண்பர்களைக் கொண்டு சென்றுவிடுகிறது என்று எண்ணுகிறேன்.

கடைசியாக நம்பிக்கையினைக் குறித்தும் பேச வேண்டிய அவசியம் நானே விரும்பாமல் ஏற்பட்டு விட்டது.நான் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் அந்த நம்பிக்கை சித்தர் மரபுக்கு மட்டுமானதா என்று பார்த்தால் அது அனைத்துத் தரப்புக்கும் பொருந்தும் என்பதை உணர முடியும்.எந்தத்துறையில் வேண்டுமானாலும் ஈடுபட்டு அதன் மெய்மையின் துளியொன்றினை அடைந்து விட்டால் மீதமுள்ளவைகள் அடைந்தவனைத் தேடி வந்து கொண்டே இருக்கும். அது எவ்வாறு நிகழ்கிறது என்பதைக் கவனித்தால் ஒன்று புரியும்.அந்தத் துளி வந்து சேரும் முன்னர் நடந்த நிகழ்வோ செயலோ எண்ணமோ எதுவும் தராதபோது அவற்றினைப் போன்றவை மீண்டும் நடக்கும்போது அறிதலாக மாறிவிடும்.அந்த மாற்றத்தினை ஏற்படுத்துவது அந்த முதல் மெய்மையின் முதல் துளி எது மெய்மை எனக் காட்டி விடுவதும், கிடைக்கும் அனைத்திலும் அதைப் போன்றதையே தேடித் திரிவதாலும்,ஏற்கனவே இருக்கும் அடைந்தவைகளின் பாதை அதில் தொடர்ந்த மெய்மைகள் வருவதற்கான வழியினை ஏற்படுத்துவமே காரணமாகும்.ஆகவே அந்நம்பிக்கை அனைத்து துறைக்குமானதே.மரபார்ந்த துறைகளுக்கு மட்டுமே அந்த நம்பிக்கை இருப்பதாக எண்ண வேண்டியதில்லை. அதனால் எந்நம்பிக்கை கொண்டோரிடம் இருந்தும் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியமும் இல்லை என்பதே என் கருத்து.

தங்களுக்கு உவப்பில்லாத கருத்துக்களினை ஒதுக்கிச் செல்லும் இன்றைய சூழலில் தங்கள் கருத்தினைப் பதிவு செய்த நண்பர்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.அதை அனுமதித்த உங்களுக்கு என் வணக்கங்கள்.

இப்படிக்கு

அந்தியூர் மணி.

முந்தைய கட்டுரைவண்ணக்கடல் வழியே
அடுத்த கட்டுரைஇசையின் கவிதைகள்- தேவி