நதி – சிறுகதை
அன்புள்ள ஆசிரியருக்கு,
நலம் தானே..
சாம்பலைக் கரைத்த கையோடு நீரொழுக்கில் துக்கங்களையும் கழுவிடத்தானே இந்த நதியினூடான சம்பிரதாயங்கள்.
சாவு வீட்டின் சாங்கியங்கள் சத்தமில்லாமல் நடைபெறும்போது பறையின் மெல்லிய கார்வை நம் இதயத்தை பிரதிபலிப்பதுதானே. எங்கிருந்துதான் வருகிறதோ செவ்வந்திப் பூக்களுக்கு அத்தனை சாவு வாசனை.
கதைசொல்லிக்கு அந்த சுடப்படாத மண்பானை சென்று கரையும் காட்சி அவனின் ஆழ்மனதில் படிந்தே இருக்கிறது. அதன்பொருட்டே அவன் மனம் எந்தவித சலனமுமின்றி வெற்றுடம்பைப்போல் வெறித்தே இருக்கிறது. சாவு அத்தனை நிர்ச்சலமானதா?
“வைத்தியர் ஓர் ஓட்டுத்துண்டால் குழியின் உள்ளிருந்து எரிந்து வெண்மையான எலும்புகளை லாவகமாக இடுக்கி எடுத்து, தயாராக வைத்திருந்த புதிய மண்பானைக்குள் போடுகிறார்“
நன்கு எரிந்த எலும்புத் துண்டுகள் ஓட்டுச் சட்டியில் எடுக்கும்போது மாவுபோல குழைவு கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். இறையை நோக்கிய மானுடத்தின் குழைவு அல்லவா மரணம்.
கதைசொல்லியின் மனம் பால்யத்தை அசைபோட்டவாறு பால்யத்தைக் கடந்து கொண்டிருப்பதை உணர முடிகிறது. தன்னோடு துள்ளிக் குதித்திட்ட ஆறு அந்நியமாகிப் போயிருந்தது. அம்மா இல்லாத வீடு வீடாகவே இருப்பதில்லை அகத்திலும், புறத்திலும்.
இனியொரு பால்யம் மீள தன் பிள்ளைகளின் வழியாகவே , அவ்வண்ணமே அந்த ஆற்று நீரை மீட்டெடுக்க முடியும் அவனால். எவராலும்.
அம்மாவைக் கிடத்தியிருந்த இரவு அப்படியொரு எடை கொண்டிருந்தது சமீபத்தில். சாக்கட்டிகளோடவே வாழ்ந்து தீர்ந்த ஆசிரியை. முற்றத்தை மூன்று முறை பெருக்கிடும் அவளுக்கு இன்று ஒழுங்கில்லா காலணிகளைக் கண்டால் கண்டிப்பாக கோபம் வந்திருக்கும். அப்பா தன்னையறியாமல் சொல்லிக்கொண்டே இருந்தார் ‘ இவ்ளோ நேரம் உறங்கிக்கிட மாட்டாளே’.
இரவின் எடை
நெடிய வாசலில்
ஓயாமாறி ஊதுவத்திகளோடு
வீடே மணத்துக்கிடந்தாள் அம்மா.
கிர்ரென்ற மௌனமான முனகலோடு
அந்த இளைப்பாறுதல் படுக்கை கண்ணாடிகளால்
அமைக்கப்பட்டதாய் சில்லிட்டுக்கிடந்தது.
தூதனின் வரவை முந்தாநாளே கட்டியங்கூறியிருந்தது
அழுதுகொண்டே இருந்த பிரவுனி.
வாசலில் ஒழுங்கில்லா கலைவுகளோடு
காலணிகள்.
சிறு தூசியையும் பொறுக்காத
அம்மாவைச் சுற்றி
சாவுப்பூக்களின் உதிர்ந்த இதழ்கள்.
நட்சத்திர மீன்களோடு
சண்டையிட்டுக்கொண்டிருப்பாள் இந்நேரம். இங்கே
சுவரோரம் உயிரற்று சிலைத்துப் போயிருந்தது
அம்மாவின் தையல் மிசின் சக்கரம்.
இந்த இரவு கடந்துவிட வேண்டும்;
எடை தாளமுடியாத இரவின் அகால
நிலவுகள் வாயுமிழத் தூண்டுகின்றன.
அன்புடன்,
இ. பிரதீப் ராஜ்குமார்