அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம். தாங்கள் நலம் தானே ?
நேற்று இரவு இருட்கனியின் கடைசி அத்தியாயம் வாசித்து முடித்தேன். வெண்முரசு நாவல் நிரையில் இதுவரை நான் வாசித்தவற்றில் தனித்துவ அனுபவத்தை தந்தது இருட்கனி.
பெரும்பாலானவர்களுக்கு கர்ணன் என்ற பெயரை கேட்டவுடன் “அவனா , பெரிய வள்ளலாச்சே !” என்பது முதலில் நினைவிற்கு வரும். அதன் பின்னர் “உள்ளத்தில் நல்ல உள்ளம்” பாடல். சரி அவன் வள்ளல் என்பது நாம் அனைவரும் அறிந்தது. எதனால் அவன் வள்ளலாக இருக்கிறான். தன் ஆணவத்தாலா, தனக்கு அளிக்கப்பட்ட சிறுமைகளில் இருந்து வெளிவரும் உந்துதலாலா அல்ல தெய்வத்துடன் நிகர் நிற்கும் விழைவாலா என பல்வேறான கோணங்களில் அக்கேள்வியை அணுகியிருப்போமா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். இவ்வனைத்து கேள்விகளும் அதற்கான விடைகளும் போக , அவனது வாழ்க்கை, அதன் சவால்கள், அரசனாய் நின்றும் அவன் அடைந்த சிறுமைகள், அதனைத்தையும் கடந்து நிற்கும் அவனது ஒளிர்விடும் ஆளுமை என அவனது முழு சித்திரத்தை வெய்யோன், கார்கடல் மற்றும் இருட்கனி நாவல்களில் அளித்திருக்கிறீர்கள்.
கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக வெண்முரசு வாசித்து வருகிறேன். எண்ணிலடங்கா உணர்வுநிலைகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது வெண்முரசு, பலவற்றை புதிதாக கற்றிருக்கிறேன், மனதளவில் மாறியிருக்கிறேன். ஆனால் இதுவரையில் ஒரு அத்தியாயம் வாசிக்க துவங்கிய பின் எந்த ஒரு இடத்திலும் வாசிக்காமல் இடையில் நிறுத்தியதில்லை. ஒரு அத்தியாயம் தன் ஒழுங்கில் என்னை அழைத்துச் செல்லும். அது கரை சேர்த்து விட்டபின் என்னை தொகுத்துக்கொள்வேன். ஆனால் நான் சொல்லும் இந்த தொடர்ச்சி பலசமயம் தடைபட்டது இருட்கனியில், அதன் முதல் அத்தியாயத்தில் இருந்தே. பல முறை நான் வாசிப்பதை இடையில் நிறுத்திவிட்டேன் தொடர்ச்சியாக வாசிக்க முடிந்ததே இல்லை.
நினைவிருக்கிறது வெய்யோன் வாசிக்கையில் அறைக் கதவை சாத்திவிட்டு வெண்முரசின் வரிகளை உரக்கச் சொல்லி கத்தியிருக்கிறேன் ‘வெய்யோன் மைந்தன் வாழ்க! கொள்வதறியா கொடையன் வாழ்க! வெல்வோர் இல்லா வெம்மையன் வாழ்க!’ என. அதுவொரு கொண்டாட்டமான மனநிலை. ஆனால் இம்முறை இருட்கனி வாசிக்கும்போது அறைக் கதவை சாத்திவிட்டு கண்ணீர் விட்டேன்.‘அக்குழவி உதைத்திருக்கிறது’ என்ற வரியை படித்தவுடன் யாராக இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பர். மலை ஏறுகையில் சட்டென மேகம் விலக அதன் சிகரத்தை பார்க்கும் ஒரு உட்சதருணம் போல அமைந்தது இவ்வரி. சிகரத்தை போலவே இந்நிகழ்வும் அங்கேயேதான் காலகாலமாக இருக்கிறது. வெண்முரசு வாசிப்பால் நான் இதை அடைந்திருக்கிறேன். மேலும் கொடையில் துவங்கி கொடையில் முடியும் கர்ணனின் வாழ்வை மிக நேர்த்தியாக காட்டியிருக்கிறீர்கள்.
நான் வசிக்கும் கனடாவின் பிராம்ப்டன் நகரில் இப்பொழுது குளிர்காலம். மேலும் இவ்வருடம் பனிப்பொழிவு மிக அதிகம். சூரியனை சற்றும் பொருட்படுத்தாத உக்கிரமான குளிரில் தான் பலநாட்கள் கழிந்தது. அப்பொழுதெல்லாம் பலவாறாக எண்ணிப்ப்பார்த்தேன் கர்ணன் இந்நிலத்தில் எவ்வாறு பொருள்படுவான் என்று. அச்சமயம் ஒன்று தோன்றியது. பொதுவான சந்திப்புகளில் கனடாவில் பலவருடங்களாக வாழ்ந்துவருபவர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் ‘இங்கு குளிர் காலம் மிகக் கடினமானது. சோர்வுறச்செய்வது. சாலைகள் ஆள் நடமாட்டம் அற்று இருக்கும். அனைவரும் வீட்டில் முடங்கிக்கிடப்பர். அதனால் அனைவரையும் போல இக்காலத்தை சகித்துக்கொள். இதுமட்டும் அல்ல கனடா. பொறுத்திரு, வெயில் வரும், அன்று பார். கனடாவின் உற்சாகத்தை காண்பாய்’ என. அதன் மூலம் தெரிந்தது சூரியன் இவர்களுக்கும் மிக உகந்தவன் என்று. இம்மக்களும் அவனை அறிவர். அதனால் கர்ணனும் அணுக்கமானவனாகத்தான் இருப்பான். நிலம் நிறைத்துக்கிடக்கும் பனியை கொண்டு பனிமனிதன் செய்து கடுங்குளிரையும் சற்று இனிமையானதாக ஆக்கிக்கொள்ளும் இம்மக்களுக்கு கர்ணன் அயலவனாக போய்விடமாட்டான் என்றே தோன்றுகிறது.
இருட்கனியின் முடிவில் வெறுமையே எஞ்சுகிறது. இதனைத்தும் எதற்காக , அடையபோவது தான் என்ற கேள்வி பெரும்பாறை போல் கண்முன் நிற்கிறது. உண்மையாக சொல்லவேண்டும் என்றால் பாண்டவர்கள் அல்லவா வெல்லவேண்டும் என்று போரின் வரை அரற்றிய மனம் இதுவரை தான் எண்ணிய அனைத்தையும் இன்று மறுபரிசீலனை செய்கிறது. துச்சாதனனின் மரணம் அனைவரும் அறிந்தது, ஆனால் அது நிகழ்ந்த இடம் அவ்வாரல்ல. துரியனோ, துச்சாதனனோ நினைத்திருந்தால் பாண்டவ மைந்தர்கள் என்றோ போரில் மாண்டிருப்பர். அவர்களை தடுத்து எது வெறும் குருதி உறவு மட்டுமா? திரௌபதியை, குந்தியை எதை எண்ணி அவைச்சிறுமை செய்யத்துணிந்தார்களோ அதை கொண்டே உபபாண்டவர்கள் அழித்திருக்கலாமே? நெறி பேண வேண்டிய இடத்தில் பேணாமல் போர்க்களத்தில் பேணுகிறார்கள். இவர்களுக்கு நேரெதிராக பாண்டவர்கள். முரண்களின் ஓயாத மோதல். இருட்கனியிற்கு பின் எதை எண்ணி ‘தீயின் எடை’யை எடுப்பது என்ற கேள்வியால் அந்நாவலை இன்னும் தொடமால் உள்ளேன்.
ஆனாலும் ஒன்று அறிவேன் வெண்முரசு இதனைத்தையும் கடந்த ஒன்று. வாசகரை ஒருபோதும் நம்பிக்கை இழக்கச் செய்வதல்ல. இன்னும் ஓரிரு நாட்களில் ‘தீயின் எடை’ வாசிக்கத் துவங்கி விடுவேன்.
இப்படிக்கு,
சூர்ய பிரகாஷ்
பிராம்ப்டன்