பழைய சுழல்

( 1 )

பழைய நூல்கள் மறுபிரசுரம் ஆகும்போது ஆசிரியர்கள் அளித்துள்ள முன்னுரையைப் படித்து அவற்றின் முதல் பதிப்பிற்கு அவர்கள் அளித்துள்ள முன்னுரையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என்னுடைய வழக்கம். ஜெயகாந்தன் பெரும்பாலும் மறுபதிப்புகளுக்கெல்லாம் புதிய முன்னுரை எழுதியிருக்கிறார். சுந்தர ராமசாமியும் மீண்டும் மீண்டும் முன்னுரை எழுதியிருக்கிறார். சில தருணங்களில் நீண்ட காலங்களுக்குப் பிறகு அந்த முன்னுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அந்த முன்னுரைகளில் வெவ்வேறு வகையான உணர்வுகள் வெளிப்படுகின்றன. அந்நூல் உருவாக்கிய வாசிப்புகளின் மீதான எதிர்வினைகள், விமர்சனங்களுக்கான பதில்கள். ஆனால் பெரும்பாலான முன்னுரைகளில் அந்நூலில் இருந்து அதன் ஆசிரியர் உளம் விலகிவிட்டதன் தடயங்கள் தென்படுகின்றன. மணமுடித்து கணவன் வீட்டிற்கு அனுப்பிய மகளுடன் தந்தைக்கு இருக்கும் உணர்வு போல. மகள் தான், ஆனால் பிறிதொருத்தி.

என்னுடைய உணர்வுகள் எப்போதும் அவ்வாறுதான். ஒவ்வொரு நூலிலிருந்தும் நான் வெளியேறிச் சென்றுகொண்டே இருக்கிறேன். ஒரு நூலை எழுதி, அதன் வழியாக அந்நூலை எழுதத் தூண்டிய காரணங்களை கடந்துவிட்டிருக்கிறேன். அந்நூலில் எழுப்பிய வினாக்களுக்கு விடை கண்டு அவ்விடைகளையும் கடந்து புதிய வினாக்களுடன் புதிய படைப்புகளை நோக்கிச் சென்றுவிட்டிருக்கிறேன். மீண்டும் திரும்பி அந்நாவலுக்குச் செல்லும்போது அது முற்றிலும் புதியதாக இருக்கிறது. நான் சற்றே அறிந்த பிறிதெவரோ எழுதியது போலிருக்கிறது. அந்த நூலின் பக்கங்களைப் புரட்டுகையில் ஆங்காங்கே என் உள்ளம் தொட்டுச் சென்று நினைவுகள் மின்னி மின்னி அந்தப்படைப்பு மங்கலாக நினைவிலெழுகிறது.

இது விந்தைதான். எனக்கு நான் படித்த நூல்கள் மிக அரிதாகத்தான் மறக்கின்றன.அவற்றின் நிகழ்வுகள் கதாபாத்திரங்கள் மட்டுமல்ல சமயங்களில் அவற்றின் அட்டை, உள்ளே அச்சு கோக்கப்பட்டிருக்கும் முறை, பக்கங்களில் ஏதேனும் கறைகளோ அடையாளங்களோ இருந்தால் அவை கூட என் நினைவில் நின்றிருக்கின்றன. அந்நினைவின் மீதான அதீத நம்பிக்கையில் அவ்வப்போது சில நினைவுப்பிழைகளும் உருவாவதுண்டு. ஆனால் நூலின் ஆசிரியர் என நான் நின்றிருக்கும் படைப்புகள் உள்ளத்தில் எஞ்சவே இல்லை.  இந்த விலக்கம் இயல்பானது. இல்லையேல் அடுத்த படைப்புக்கு நம்மால் செல்ல முடியாது.

அத்துடன் வேண்டுமென்றே இந்த விலக்கத்தை உருவாக்கிக்கொள்வதும் உண்டு. இல்லையேல் முன் நகர முடியாது. விஷ்ணுபுரம் எழுதுவதற்காக பத்தாண்டுகளாக வெவ்வேறு நூல்களிலிருந்து தரவுகள் சேகரித்தேன். வெவ்வேறு இடங்களுக்குச் சென்று குறிப்புகள் எடுத்தேன். உரையாடல்கள் வழியாகவே அந்நூலின் பெரும்பாலான தரவுகள் சேகரிக்கப்பட்டன. மரபார்ந்த கல்வி கொண்டவர்கள், குறிப்பாக நியாயம், யோகம் ஆகிய தளங்களில் தேர்ச்சி கொண்டவர்களை நேரில் சந்தித்துக் குறிப்பெடுத்தேன். அந்நாவல் எழுதும் பத்தாண்டுக் காலத்திற்குள் பெரும்பாலானவர்கள் உயிர் துறந்தனர். நாவல் முடிந்ததும் அந்த மொத்த கைப்பிரதிகளையும் என் அறையிலிருந்து அகற்றாமல் என்னால் எழுதமுடியாமல் ஆயிற்று. அவற்றை வெளியே தூக்கிப் போட்டதுமே என் உள்ளமும் ஒழிந்து வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுத்தது ஆகவே அது ஒரு நல்ல வழி என்று கண்டு கொண்டேன்.

பின்தொடரும் நிழலின் குரல் நான் 1998-99-ல் பத்மநாபபுரத்தில் குடியிருந்தபோது எழுதப்பட்டது. இன்றைக்கு 23 ஆண்டுகள் கடந்துவிட்டிருக்கின்றன. அது என் வாழ்க்கையின் இனிய பருவங்களில் ஒன்று. நான் என் சொந்த ஊருக்குத் திரும்பி வந்திருந்தேன். பத்மநாபபுரம் எனது சொந்த ஊர்களில் ஒன்று என்று சொல்லத்தக்கது. என் சித்தப்பா அங்கே குடியிருந்தார். எங்கள் பூர்வீகர்களுடைய வீடுகள் அங்கிருந்தன. கோட்டைக்குள் அமைந்த பழமையான அமைதியான சிற்றூர். நிறைந்து பளபளக்கும் குளங்கள் பின்னணியில் வேளி மலையின் பசுமை எழுந்த தோற்றம். ஊர் முழுக்க நிரம்பியிருக்கும் ஆழ்ந்த அமைதி.

நான் குடியிருந்த வீடு மிகப்பெரியது. ஓட்டுக்கூரை கொண்ட பழைய பாணி கேரளக்கட்டிடம். முதல் முறையாக நான் எழுதுவதற்கு என்று மட்டும் ஓர் அறை அமைந்தது. இரண்டு சன்னல்கள் கொண்ட சிறிய அறை. அந்த அறை எனக்களித்த அவ்வுளக்கிளர்ச்சியை இப்போதும் நினைவு கூர்கிறேன். என் குழந்தைகள் வளர்ந்துகொண்டிருந்தார்கள் ஒருவயதான சைதன்யா தவழ்ந்து வந்து மேஜையைப் பிடித்துக்கொண்டு நான் எழுதுவதை பார்த்து நிற்பாள். அவளுடைய அழகிய குட்டி மண்டை மேஜையின் விளிம்பில் இருப்பதைப் பார்ப்பேன். அவளுக்கு என்னென்னவோ கேட்கவேண்டும் என்று தோன்றும் ஆனால் சொற்கள் திரளாத வயதென்பதால்   “அப்பா…” என்பாள். சற்று இடைவெளிவிட்டு மீண்டும்   “அப்பா…”, மீண்டும்   “அப்பா…” ஒவ்வொரு முறையும் நான்   “உம்” கொட்டுவேன். அந்த இரு ஒலிகள் வழியாக ஒரு உரையாடல் சென்று கொண்டே இருக்கும். நான் எழுதிக்கொண்டிருப்பதற்கு இணையாக பிறிதொன்று.

துயரமும், அவநம்பிக்கையும், கைவிடப்படுதலும் நிறைந்த ஒரு நாவலை எழுதும்போது இனிய அழகிய ஓர் உரையாடல் நடந்துகொண்டிருந்தது. ஆகாய ஊஞ்சலில் ஆடுபவனின் பிடி போல அது என்னை இவ்வுலகத்திற்குள் நிறுத்தி வைத்தது. சைதன்யா என்ன கேட்டிருப்பாள் என்று இப்போது எண்ணிப்பார்க்கிறேன். ‘என்ன எழுதுகிறாய்?’ என்று கேட்டிருப்பாள். ‘ஏன் அத்தனை உணர்ச்சிகள்?’ என்று கேட்டிருப்பாள். ‘இத்தனை துயரம் எதற்கு உனக்கு?’ என்று கேட்டிருக்கலாம். ‘இத்தனை பொருளின்மையை ஏன் உருவாக்குகிறாய்? வாழ்வின் விழுப்பொருள் என நான் நின்றிருக்கிறேனே…’ என்று சொல்லியிருக்கலாம். என் குட்டிச் செல்லத்தின் அந்த அழகிய முகம், வசந்தகுமார் எடுத்த சிறந்த புகைப்படங்கள் வழியாக இன்றும் என் இல்லத்தில் இருக்கிறது. பெரும்பிரியத்துடன் அவ்வப்போது அதை எடுத்துப் பார்த்துக்கொள்வேன்.

நான் எழுதிய நாவல்களில் எதிர்மறை முடிவுகளே இல்லை என்பது தான் எனது எண்ணம். என் இயல்பு அது அல்ல. ஏனெனில் வாழ்வை நம்பவும் அதில் செயலாற்றவும் தேவையான அடிப்படையான நம்பிக்கைக்குப் பிறகு எழுத வந்தவன் நான். எனது அவநம்பிக்கையின் கொந்தளிப்பின் அலைச்சலின் காலங்கள் இலக்கியத்திற்குள் நான் வரும்போதே முடிந்துவிட்டிருந்தன. அந்த எரியும் காலத்தின் நினைவுகளையே பின்னர் என் நாவல்களில் எழுதியிருக்கிறேன். எழுதும்போது அவற்றை மிக அகன்று நின்று பார்த்திருக்கிறேன். ஆகவே எத்தனை கொடும் கொந்தளிப்புகள் வழியாகச் சென்றாலும் அறுதியாக வெளிவந்து நின்றிருக்கும் ஒரு தருணத்தை எழுதியிருக்கிறேன்.

விஷ்ணுபுரம் மெய்த்தேடல்களின் தகிப்பையும், பாவனைகளையும், கைவிடல்களையும், அர்த்தமின்மையையும் சொன்ன நாவல். ஆனால் கள்ளமற்ற எளிமையையும், அழியாத தாய்மையையும், அறிவின் தவிர்க்க முடியாத தொடர்ச்சியையும், கண்டடையும் முடிவே அதற்கு அமைந்தது. ஏழாம் உலகம் இருளுலகங்களினூடாக செல்லும் ஒரு பயணம். ஆனால் அது அவ்வுலகத்தின் மனிதர்களிலும் வாழும் கருணை, மாங்காடு சாமியிலெழும் மெய்தரிசனத்தை சுட்டியே முடிந்தது. காடு வீழ்ச்சியின் அலைகளினூடாக இயற்கை அளிக்கும் மீட்பு நோக்கிச் செல்கிறது. வெவ்வேறு கட்டங்களில் இவை அனைத்துமே எனது அனுபவங்கள்தான். பின்தொடரும் நிழலின் குரலும் தேடலின் தவிப்பை,பற்றி நின்று எரிதலை சொன்ன நாவல் மட்டுமல்ல, அதில் பெரும் கண்டடைதலே உச்சமென அமைந்துள்ளது. என் சொற்கள் கிறிஸ்துவின் நாவில் இருந்து வந்தன. அன்று அதை எழுதுகையில் என் அருகே மெய்யான இருப்பென கிறிஸ்துவை உணர்ந்தேன். என் சொற்களின் மேல் கண்ணீர்த்துளிகள் சொட்ட அதை எழுதினேன்.

( 2 )

பின்தொடரும் நிழலின் குரலும் என்னுடைய அனுபவம்தான்.நான் என் மிக இளமைப்பருவத்திலேயே அரசியல் நோக்கி இழுக்கப்பட்டவன். எங்கள் காலகட்டத்தின் இயல்பு அது. எனக்குப் பிந்தைய தலைமுறை அரசியலற்று இருப்பதைக் காண்கிறேன். அவர்கள் தொழில் நுட்ப யுகத்தில் பிறந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தொழில்நுட்பமே திகைப்பூட்டி ஈர்த்து எடுத்துச் சென்றிருக்கிறது. இன்று ஒரு இளைஞனிடம் பேசினால் அவனுடைய பத்து வயதில் நோக்கியா செல்பேசி அறிமுகமானதை, பதினைந்து வயதில் ஆண்ட்ராய்டு போன் வந்ததை, இருபது வயதில் சமூக வலைத்தளங்கள் அறிமுகமானதை இருபத்தைந்து வயதில் ஓடிடி பிளாட்பாரங்களில் உலகத்தின் திரைப்படங்கள் அனைத்தும் வந்து கண்முன் நின்றதை அவன் சொல்லக்கூடும். எனது தலைமுறையில் மொழி தெளிந்ததும் அரசியல் வந்து சேர்ந்தது

என் பதினைந்து வயதில் கம்யூனிசம் அறிமுகமாகியது. சில நாட்களிலேயே வலதுசாரி அரசியல் அறிமுகமாகிறது. முதலில் எனது தாய்மாமனிடமிருந்து கம்யூனிசம். அவசரநிலை பிரகடனத்தின்போது ரகசியமாக துண்டுபிரசுரங்களை ஏந்திச் சென்றுகொண்டிருந்தவன் நான். புறா போல. அவை என்னவென்றே தெரியாது. அதன்பிறகு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் ஈடுபாடு. அவற்றுக்கான காரணம் என் ஊரில் இருந்தது. கிறிஸ்தவப் பெரும்பான்மையாகிவிட்ட எனது ஊரில் அன்று இந்து ஆலயங்களில் திருவிழாக்கள் நடத்த கிறிஸ்தவர்களின் எதிர்ப்பும் தடையும் இருந்தது. ஆலயமணிகளே ஒலிக்க தடை இருந்தது. ஆலயங்களுக்குச் செல்பவர்களும் வருபவர்களும் நெற்றியில் மதக்குறியீடுகளை அணிந்துகொள்வதற்கு தடை இருந்தது. பல ஆலயங்களுக்குச் செல்வதை முழுக்கவே வேலிகட்டித் தடுத்து வைத்திருந்தார்கள்.

புதிதாக மதம் மாறுபவர்கள் உருவாக்கும் அதிதீவிரமான உளவிலக்கம் அது. அவர்களுக்கு இந்து தெய்வங்கள் அனைத்துமே சாத்தான்கள் என்று சொல்லப்பட்டிருந்தது. அவற்றை வழிபடுபவர்களும் சாத்தானின் செய்தியைப் பரப்புபவர்கள். தங்கள் ஊருக்குள் ஒரு இந்து ஆலயம் இருப்பதனால் சாத்தானுடைய இருப்பு அங்கு இருப்பதாகவும் ஆகவே தங்களுடைய குடும்பங்களும் தாங்களும் வளம் பெற முடியாது தவிப்பதாகவும் மெய்யாகவே அன்றைய கிறிஸ்தவர்கள் பெரும்பாலானவர்கள் நம்பினார்கள். அவர்களுடைய எதிர்ப்பு அன்று ஆத்திரமூட்டினாலும் இன்று எண்ணுகையில் புரிந்துகொள்ளக்கூடியதாகவே இருக்கிறது. ஒருவர் மாற்று மதத்தின் தெய்வம் சாத்தான் என்றும் அழிவு சக்தி என்றும், தனக்குத் தீங்கு கொண்டு வரும் என்றும் உண்மையிலேயே நம்பினாரென்றால் அவரிடம் மத ஒற்றுமையைப்பற்றியும் சகிப்புத்தன்மையைப் பற்றியும் பேசிப் பயனுண்டா என்ன?

அந்தக் கசப்புகளிலிருந்து இந்துத்துவ அரசியல். பின்னர் அதிலிருந்து வெளியேறி மீண்டும் இடதுசாரி அரசியல், தொழிற்சங்கப் பணிகள். பின்னர் தொழிற்சங்க செயல்பாடுகள் மட்டுமாக நிறுத்திக்கொண்டு கட்சிச் செயல்பாடுகளிலிருந்து முழுக்க விலகினேன். ஆனால் அரசியலை கவனித்துக் கொண்டிருந்தேன். என்ன நிகழ்கிறதென்று அறிந்திருந்தேன்.நான் அரசியலை விட்டு அகல சுந்தர ராமசாமியும், ஆற்றூர் ரவி வர்மாவும் காரணம். அவர்கள் தனிநபர்வாதிகள், அரசின்மைவாதிகள். அதன்பின் நித்ய சைதன்ய யதி. அரசின்மைவாதத்தின் உச்சப்புள்ளியில் இருந்தே ஆன்மிகம் தொடங்குகிறது.

அரசியல் வழியாகச் செல்லும்போது எப்போதுமே நான் முழுக்க தீவிரமான உணர்வுகளை அடைந்ததில்லை. என்னவென்று பார்ப்போம் என்று ஆர்வமிருந்தது. அதற்கப்பால் ஒரு தனிமனிதனின் சிந்தனைக்குப் பெரிய மதிப்பொன்றுமில்லை என்றும், அது பிறருடைய சிந்தனைகளைத் திரட்டி ஒன்று திரண்டு பெரிய விசையென்றாக மாறினாலொழிய அதனால் எந்த செயலையும் ஆற்றமுடியாது என்றும் ஒரு நம்பிக்கை அன்று இருந்தது. அமைப்பு மேல் கொண்ட நம்பிக்கை அது. அதற்கப்பால் அமைப்பை வழிநடத்த முடியும், என் சிந்தனைகளை அமைப்பை எதிரொலிக்க வைக்க முடியும் என்று கொண்ட அதீத நம்பிக்கை.

இந்நாவல் எழுதும் காலத்தில் சுந்தர ராமசாமியிடம் கேட்டேன். இந்நாவலில் ஓர் இடம் வருகிறது. அரசியல் அமைப்புகளுக்குள் செல்லும் எவரும் அங்கு தொண்டனாக வாழும் பொருட்டு செல்வதில்லை, ஒருநாள் அதற்கு தலைமை தாங்க முடியும் என்றுதான் நம்புகிறார்கள். தன்னுடைய வரலாற்றுப் பாத்திரத்தை ஆற்ற நினைக்கும் ஒருவர் தான் ஒரு வரலாற்றுநாயகன் என்றுதான் நினைக்கிறார். வரலாறெனும் பெரும் பெருக்கில் தான் ஒரு துளியினும் துளி என அவன் உணர்வதில்லை. வரலாறென்பது ஒரு மாபெரும் மந்தை என்றும் தான் அதன் தலைவன் என்றும் நினைக்கிறான். சுந்தர ராமசாமியிடம்  “நீங்கள் அவ்வாறு எண்ணியதுண்டா?” என்றேன்.  “அவ்வாறு சொல்ல முடியாது” என்றபின் கண்களின் புன்னகையுடன் “ஒரு புதிய இந்தியாவை உருவாக்கும் கனவிருந்தது” என்றார்.

கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் ஒவ்வொருவரும் தங்களை ஸ்டாலின் என்று எண்ணிக்கொள்கிறார்கள். அதற்கப்பால் அங்கு நம்மைப்பிடித்து வைக்கக்கூடிய ஒன்று தோழமை என்பது. எந்த தீவிர செயல்பாடு கொண்ட அமைப்பிலும் அதன் பெருங்கவர்ச்சி என்பது அங்குள்ள தோழமைதான். வேறெங்கும் இல்லாத அளவுக்கு இறுக்கமான நட்புகள் அமைகின்றன. இரவுபகலாக நாம் ஒருவரிடம் பேசுகிறோம் என்றால் ஒத்த கருத்துள்ள ஓர் அமைப்பிலுள்ள நண்பர்களிடம் தான். மேலும் பேச நட்புகொள்ள விழையும் பருவத்தில் அதற்குள் நுழைகிறோம். பின்தொடரும் நிழலின் குரலில் தன்னை கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நிறுத்தி வைத்தது அந்த நட்புக்கொண்டாட்டம் தான் என்று வீரபத்ரபிள்ளை சொல்கிறார்.

ஆனால் அந்த நட்பு கூட ஒரு பாவனை தான் ஒரொரு மனிதனும் இன்னொரு மனிதனுடன் ஆழ்ந்த உறவை உருவாக்குவது அவர்கள் இருவரும் நின்றிருக்கும் பொதுத்தளம். அப்பொதுத்தளமாக இருக்கும் ஓர் அமைப்பு.குடும்பம் மதம் அரசியல் அமைப்புகள் அலுவலகம் சங்கம் அவ்வாறு ஏதோ ஒன்று அந்த அமைப்பின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் இருக்கும்போது மட்டும் தான் அந்த நட்பு தொடருகிறது. அதில் ஏதேனும் ஒரு விதி தவறுமென்றால் அப்போதே அந்நட்பு அழிந்துவிடுகிறது. குடும்பம் சில நெறிகளை அதன் உறுப்பினர்களுக்குச் சொல்கிறது. அந்நெறிகளை மீறும் கணமே குடும்பம் சார்ந்த அத்தனை உணர்வுகளும் வற்றிப்போய் அவர் அந்நியராகி வெளியே தள்ளப்பட்டுவிடுகிறார். அதைப்போன்றது தான் அரசியல் இயக்கம், தொழிற்சங்கம் போன்றவை.

இந்த நாவலினூடாக செல்லுகையில் அந்த இனிய மயக்கங்கள் நினைவில் எழுகின்றன. அவற்றுக்கும் அப்பால் ஒன்று உண்டு. அது கருத்தியல் நமக்களிக்கும் பெரும் நம்பிக்கை. இருகூர் கொண்ட வாள் கருத்தியல் அளிக்கும் நம்பிக்கை என்பது. நாம் வாழும் இந்த உலகம் கொண்டுள்ள பிழைகள் பிசிறுகள் போதாமைகள் அனைத்தையுமே நம்மால் சீர்த்திருத்த முடியும் என்ற நம்பிக்கையை கருத்தியல் அளிக்கிறது. உலகைச் சீர்திருத்தும்பொருட்டு நாம் உருவாக்கிக்கொள்ளும் சிந்தனையை முழுமையான நிலைபாடாக ஆக்கிக்கொள்கிறோம். அதன்பின் நம் தரப்பு முற்றிலும் சரியானது, முழுமையாக முன்வைக்கத்தக்கது, அதன்பொருட்டு வாழவும் உயிர்விடவும் உகந்தது என்ற நம்பிக்கையை கருத்தியல் நமக்கு அளிக்கிறது. அந்நம்பிக்கை அக்கருத்தியலுக்கு எதிரான அனைவரும் இவ்வுலகம் மாறுவதற்கு எதிரானவர்கள், திருத்திக்கொள்வதற்கு எதிரானவர்கள், மேம்படுவதற்கு எதிரானவர்கள் என்ற எண்ணத்தை அளிக்கிறது.

எதிரிகளை உருவாக்காத கருத்தியல் என எதுவுமில்லை. காழ்ப்பை அடிப்படையாகக் கொள்ளாமல் எந்தக் கருத்தியலும் செயல்பட முடியாது. கருத்தியல் நம்பிக்கை கொண்ட ஒருவர், அது எந்த கருத்தியலாக இருந்தாலும், எதிர்மறைப்பண்பு கொண்டவராக உளம் கசந்தவராக மட்டுமே இருப்பார் கருத்தியல் நீண்டகால அளவில் மெல்ல மெல்ல நிறம் மங்குகிறது. அதன் நடைமுறைச் சிக்கல்களில் லட்சியவாதச் சாயங்கள் வெளுக்கின்றன.நீண்ட காலம் ஒரு கருத்தியலில் வாழ மனிதர்களால் இயலாது. பெரும்பாலானவர்கள் கருத்தியலில் இருந்து அகம் விலகிவிடுவார்கள். ஆனால் அதை ஒட்டியே வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள், உறவுகள் அனைத்தையும் அதிலேயே அமைத்துக்கொண்டவர்கள், அதிலிருந்து நலன் பெறுபவர்கள் அதைக் கைவிடமாட்டார்கள். ஏனென்றால் அது அவர்களுக்கு பெரிய இழப்பு. அதை விடுவது ஒருவகைச் சாவு. ஆகவே அவர்கள் அதை ஓர் அடையாளமாக, ஒரு எளிய சார்பு நிலையாக மட்டும் வைத்துக்கொள்வார்கள் அதற்கு உரிய கப்பத்தைக் கட்டி அதனுள் இருப்பார்கள். இன்னொரு சாரார் அதிலிருந்து உளம் கசந்து விலகிவிடுகிறார்கள்.

கருத்தியல் நம்பிக்கை கொண்டவர்கள் அவர்கள் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் அத்தனை கசந்தவர்களாக, தனித்தவர்களாக ஏன் இருக்கிறார்கள் என்று வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர்களுடைய இளமைக்காலத்தை அவர்கள் இழந்ததைக் குறித்த ஏக்கம் அவர்களுக்கு இருக்கிறது. அதைவிட அன்றிருந்த நம்பிக்கைகள் எத்தனை விரைவாக அழிந்தன என்ற திகைப்பும் துயரும் இருக்கிறது. -உண்மையில் அக்கருத்தியல் தன்னியல்பான எல்லைகளால் அடைந்த போதாமையால் பொருளிழந்து விலகியது என்று உணர்வார் என்றால் அவர் தப்பித்தார். எக்கருத்தியலும் இவ்வாழ்க்கையை விளக்கிவிட முடியாதென்றும் எந்தக் கருத்தியலைக் கொண்டும் இப்பிரபஞ்சத்தையும் வாழும் உலகத்தையும் முற்றிலும் மாற்றிவிட முடியாதென்று உணர்ந்தவர் ஒரு மெல்லிய புன்னகையுடன் தன் பழையகால நம்பிக்கைகளை திரும்பிப்பார்க்கவும் அவ்விடுதலையில் இறுதிக்காலத்தை கழிக்கவும் முடியும்.

மாறாக அப்போதும் தன் கருத்தியல் சரியானது என்றும், அது எதிரிகளால் தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்றும் உண்மையிலேயே ஒருவர் எண்ணுவாரென்றால் அவருக்கு மீட்பில்லை. உண்மைகளை சந்திக்கும் திராணியற்றவர்கள் அவ்வாறு பொய்களை உண்மையென்று தங்களையே நம்ப வைத்துக்கொள்ள முடியும். மானுட உள்ளம் பொய்யை உணமை என ஏற்பதில் நம்ப முடியாத அளவுக்கு உடன்பாடு காட்டுவது. நான் இன்று அவ்வப்போது சந்திக்கும் பல முதிய வயது நண்பர்கள் அவ்வாறு கருத்தியலை கவ்விக்கொண்டு கசந்து துயருற்று இருப்பவர்களாக காண்கிறேன். கசப்பே உருவான எட்டி மரத்திலிருந்து கசப்பு கனிந்து உதிர்கிறது. கசப்பின் விதைகளை மண்ணுக்கு விடுகிறது. கசப்பு முளைத்து கசப்பு மரமென ஆகி கசந்த காடென ஆகிறது

கருத்தியலின் எல்லை என்ன என்று தேடும் நாவல் இது. மூன்று வெவ்வேறு காலங்களை அக்கேள்வியில் நான் எதிர்கொண்டேன். ஒன்று எனது தனி வாழ்க்கையில் கருத்தியல்கள் வழியாக சென்றது. முற்றிலும் மாறுபட்ட இரு கருத்தியல்கள் அவை. ஆனால் அடிப்படையில் அவை ஒன்றே. அவற்றின் மனநிலைகள், அவற்றை நம்புபவர்களின் இயல்புகள், அவற்றின் அமைப்பு முறைகள் அனைத்தும் முற்றிலும் ஒன்றே. அவற்றின் உள்ளிருக்கையில் உங்களுக்கு கிடைக்கும் நட்பும் வெளியிலிருக்கையில் உங்களுக்குக் கிடைக்கும் பகைமையும் ஒன்றே. நம்பும்போது நீங்கள் கொள்ளும் வேகமும் எதிரிகளை உருவாக்கிக்கொள்ளும் வெறியும் ஒருகணத்தில் அதிலிருந்து வெளிவரும்போது அவ்விரு உணர்வுகளும் அளிக்கும் திகைப்பும் ஒன்றே.

இன்னொன்று அக்காலகட்டத்தில் விடுதலைப்புலி அமைப்பிலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு காரணங்களுக்காக வெளிவந்தவர்கள் என்னிடம் தொடர்பு கொண்டு பேசிய அனுபவங்கள், பலர் இந்தியா விட்டு செல்வதற்கு நான் உதவியிருக்கிறேன். பலருடன் எனக்கு நெருக்கமான நட்பு இருந்தது. அவர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை. அவர்கள் ஒரு மந்திரவாதியின் மாயவலையத்திற்கு உள்ளிருந்து அவன் ஏவிய பூதம் போல அனைத்தையும் செய்தவர்களாகத்தான் பின்னர் தங்களை உணர்ந்தார்கள். இருபது வயதுவரை தன் குடும்பத்திலிருந்தும் தன் மரபிலிருந்தும் பெற்ற அனைத்து அறச்சார்புகளையும் உதறிவிட்டு தங்களால் எப்படி பெருங்கொடுஞ்செயல்களைச் செய்ய முடிந்தது என்று எஞ்சிய வாழ்நாள் முழுக்க எண்ணி எண்ணி துயருற்று வாழ்ந்தவர்கள் பலர். பலர் குடித்து குடித்து உயிர் துறந்தனர். தங்களைக் கொல்லும் தெய்வங்களுக்காக தவமிருந்து நோய்களைப் பெற்றுக்கொண்டு உலகிலிருந்து மறைந்தனர்.

ஐந்து அல்லது ஆறு ஆண்டுகாலம் அவ்வமைப்பிலிருந்து கொடுஞ்செயல்களைச் சேர்ந்தவர்கள் பிறகு எப்போதும் அதிலிருந்து வெளிவர முடியவில்லை. கொடுஞ்செயல்களை நோக்கிச் செல்லும்போது கருத்தியலின் மாயம் அவர்களின் நீண்ட மரபை அவர்களிடமிருந்து விலக்கி வைத்தது. ஆனால் கருத்தியலை விட்டு வெளிவந்த பிறகு மதமோ, தெய்வ நம்பிக்கையோ, பல்லாயிரம் பிராயச்சித்தங்களோ, போகங்களோ, களியாட்டுகளோ எதுவுமே அவர்களைக் காப்பாற்றவுமில்லை. அவர்களின் குற்ற உணர்விலிருந்து பழி உணர்விலிருந்து அவர்களால் வெளிவர முடியவில்லை.

ஏறத்தாழ அதே காலத்தில் தான் சோவியத் ரஷ்யா உடைந்தது. 1992-ல் ரஷ்யாவின் உடைவென்பது இன்று மிக எளிதாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அது நிகழ்ந்தபோது இன்னும் பல ஆண்டுக் காலத்திற்கு பெருங்கொந்தளிப்புடன் அது பேசப்படப்போகிறது, நூறு ஆண்டுகளுக்கான வரலாற்றூ நிகழ்வு அது, அதிலிருந்து மானுடம் அத்தனை எளிதாக வெளிவர முடியாது என்றெல்லாம் நம்பியவர்களில் நானும் ஒருவன். ஆனால் பத்தாண்டுகளுக்கு கூட அதைப்பற்றிய விவாதங்கள் நீடிக்கவில்லை. சொல்லப்போனால் ஓரிரு ஆண்டுகளிலேயே அந்நிகழ்வே முற்றாக மறக்கப்பட்டது. ஒரு சாதாரண அரசியல் நிகழ்வு நினைவில் நின்றிருக்கும் அளவுக்குக்கூட எழுபத்தைந்து ஆண்டுக்காலம் நீடித்த சோவியத் ரஷ்யாவின் யுகம் நினைவில் நிற்கவில்லை. கம்யூனிஸ்டுகளே அதை உடனடியாக மறந்துவிட்டார்கள். இன்று மேடைகளிலே சோவியத் ரஷ்யாவைப்பற்றி பேசுபவர்கள் அரிதினும் அரிது.

இன்றைய பார்வையில் அது எத்தனை விரைவாக அது கைவிடப்பட்டது என்பது வியப்பளிக்கவில்லை ஏனெனில் ஏற்கனவே அதைப்பற்றி இடதுசாரிகள் அறிந்திருந்தார்கள். அது உதிரும் என்று அவர்களுக்கு உள்ளூர தெரிந்திருந்தது. அத்துயர நிகழ்வு நிகழ்ந்தபோது அது ஒரு அவமானமாக, கசப்பாக அவர்களிடம் எஞ்சியது. எத்தனை விரைவாக அதை உதறிவிடுகிறோமோ அத்தனை விரைவாக விடுதலை பெறலாம் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். பிறகு அவர்கள் செய்ததெல்லாம் சாவுச் சடங்குகள் தான். அத்தனை சாவுச் சடங்குகளும் சாவை மறப்பதற்கும் கடப்பதற்கும் உரியவை.

சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி அதை நம்பி தன் இளமையைத் தொலைத்த முதியவர்களிடம் மட்டுமே ஆழ்ந்த பாதிப்பை உருவாக்கியது. உண்மையில் அவர்களில் பலர் பல ஆண்டுகளுக்கு முன்னரே இடதுசாரி அமைப்புகளிலிருந்து வெளியே வந்தவர்கள் சுந்தர ராமசாமி போன்றவர்கள் சோவியத் ரஷ்யாவிலிருந்த அடக்குமுறை, மானுட அழிவு ஆகியவற்றை நன்கறிந்து அவற்றை எழுதியவர்கள். அதனாலேயே வெறுக்கப்பட்டவர்கள்.ஆயினும் அவர்களுக்கு அந்த வீழ்ச்சி பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. சுந்தர ராமசாமி, கோவை ஞானி, ஆற்றூர் ரவிவர்மா போன்றவர்கள் சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியால் அடைந்த அந்த பெருந்துயரை அருகிருந்து கண்டேன். கருத்தியலின் இன்னொரு முகம் எனக்கு தெரியவந்தது.

கருத்தியல் என்பது ஒருவகையான தந்தை என்னும் உணர்வை அப்போது அடைந்தேன்.தந்தை ஒருவகையான தெய்வம். எல்லா தெய்வங்களும் தந்தைதான். தந்தை என்று வந்திருப்பது இதுவரைக்குமான பல்லாயிரம் தந்தைகளின் பொதுத்தொகுப்பு. கருத்தியல் என்று வந்திருப்பது இதுவரைக்கும் பல்லாயிரம் சிந்தனையாளர்கள் கண்ட கனவுகளும் எண்ணங்களும் ஒருங்கிணைந்தது. அதன் ஆற்றல் மிகப்பெரியது. கருத்தியலுடன் மோதி விலகலாம். அது தந்தையுடனான மோதல் மட்டும்தான். விலகும் தோறும் பிறிதொரு இடத்தில் நாம் அணுகிக்கொண்டிருக்கிறோம். அது இல்லாமல் ஆகும்தோறும் அந்த பெரும் வெறுமையை உணர்கிறோம்.

கருத்தியலிலிருந்து எளிதில் விடுதலை பெற முடியாது. ஏனெனில் உண்மையில் நாம் கருத்தியலை நோக்கி புதிதாக சென்றடையவில்லை. கருத்தியலிலேயே நாம் பிறந்து வளர்கிறோம். ஒரு கருத்தியலிலிருந்து இன்னொரு கருத்தியலுக்கு செல்வதையே நாம் இளமையில் செய்கிறோம். மதம் ஒரு மாபெரும் கருத்தியல், அதில் பிறக்கிறோம். அரசியல் கருத்தியல்களுக்குச் செல்கிறோம். அது உதிர்ந்தால் மீண்டும் மதத்திற்கே செல்கிறோம், அல்லது ஒரு புதிய கருத்தியலுக்கு தவிக்கிறோம். கருத்தியல் இல்லாத வெற்றிடம் என்பது ஆன்மீகத்தால் கவிதையால் மட்டுமே நிரப்பத்தக்கது. ஆன்மீகமோ கவிதையோ இன்றி கருத்தியலால் கைவிடப்பட்டவர்கள் மதத்தையே சென்று சேர்கிறார்கள். அவ்வாறு நான் வழிபட்ட பல இடதுசாரிகள் மதத்தின் காலடியில் சென்று அமர்வதைப்பார்த்தேன். கே.ஆர்.கௌரி குருவாயூரப்பன் பக்தையாக வந்து அம்ர்வ்தை பார்ப்பேன் என்று ஒருபோதும் எண்ணியதில்லை. கெ.கெ.எம் சென்ற பாதையும் அதுவே.

மூன்று களங்ளினூடாக கருத்தியல் குறித்த என் உசாவல்கள் உருவாயின. அதன் விளைவே பின் தொடரும் நிழலின் குரல். இன்று அதை திரும்பப் படிக்கையில் அதன் பல்வேறு களங்கள் எனக்குத் திகைப்பூட்டுகின்றன. நான் அதைக் கடந்து வந்துவிட்டேன் என்றே எண்ணுகிறேன். இன்று என்னிடம் விடைகள் இருக்கின்றன. அவ்விடைகளை துல்லியப்படுத்திக்கொள்ளும் பொருட்டு வாழ்க்கையை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆயினும் இந்த வினாக்களை மீண்டும் வாசிப்பது என்பது என்னை தொகுத்துக்கொள்வதாகவே அமைகிறது.

( 3 )

இன்று நினைவுகளை மீட்டுக்கொள்ளும்போது தமிழினி வசந்தகுமாரை மிகநெகிழ்வுடன் எண்ணிக் கொள்கிறேன். இந்நாவலை எழுதும் நாட்களில் ஒவ்வொரு நாளும் அவருடன் உரையாடிக்கொண்டிருந்தேன். பத்மநாபபுரத்தில் என் இல்லத்திற்கு வந்து தங்கியிருந்து இந்நாவலின் பிழைதிருத்தங்களைச் செய்தார். இந்நாவலுக்காக மிகச்சிறந்த வெளியீட்டுவிழாவை ஒருங்கிணைத்தார். எங்கள் என்.எஃப்.டி.இ தொழிற்சங்கத்தலைவர் ஜெகன் வந்திருந்து இந்நூலை வெளியிட்டார். தோழர் பட்டாபிராமன், இராஜேந்திரசோழன் ஆகியோர் பேசினர். மகத்தான நினைவாக நின்றிருக்கிறது அந்த விழா. வசந்தகுமாருக்கு நன்றிகளை சொல்லிக்கொள்கிறேன்.

ஜெயமோகன்

நாகர்கோயில்

17-2-2022

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் பின்தொடரும் நிழலின் குரல் நாவலின் முன்னுரை)

முந்தைய கட்டுரைகதைகள், மனிதர்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு நடனம்