கிறிஸ்து கம்பன்,புதுமைப்பித்தன் – பேராசிரியர் ஜேசுதாசனுடன் பேட்டி-2

(பேட்டி தொடர்ச்சி…)

ஜெயமோகன்: நான் பாரதியில் காணும் குறை அவர் இலட்சியவாதத்தில் திளைத்து மனிதனின் இருண்ட தளங்களை காணத் தவறிவிட்டார் என்பதே. கம்பன் அந்த இருட்டின்  விசுவரூபத்தையும் பார்த்தார். யுத்தகாண்டம் அதற்கு ஆதாரம். இருட்டுத்தான் conflict-ஐ உருவாக்குகிறது. அதன்மூலம் ஒரு செவ்வியல் தன்மையை உருவாக்குகிறது. பாரதியின் ஒரு பக்கச் சார்பான ஆவேசம் ஒரு கற்பனாவாத (Romantic) கவிஞனாகவே நிறுத்திவிடுகிறது

பேரா.ஜேசுதாசன்: நான் கூறியதையே நீங்களும் சொல்கிறீர்கள். நான் கறுப்பை வெளுப்பால் சமநிலை செய்து கொள்ளுதலை மட்டும் கூறவில்லை. எல்லா விஷயங்களும் ஒன்றையொன்று சமநிலை செய்துகொள்ளுதலைப் பற்றிச் சொன்னேன். ஒன்றுகூட விடப்படக் கூடாது. எல்லாம் இருக்க வேண்டும். பாரதியிலே வெறும் இனிப்புதான்.

வேதசகாயகுமார்: நீங்கள் இசைப்பிரியர் முறைப்படி இசை படித்தவர். அதற்கான தூண்டுதல் என்ன?

பேரா.ஜேசுதாசன்: சரியாகச் சொன்னால் ஒரு வருடமும் பத்துமாதமும் நான் சங்கீதம் படித்தேன். அண்ணாமலை கழகத்தில் இசைவகுப்புகள் உண்டு. தமிழிசை இயக்கம் காலகட்டம் அது. பணமில்லாததனால் படிக்கவில்லை. பிறகு வேலை கிடைத்தபோது படிக்க விரும்பி வித்வான் இலட்சுமணபிள்ளையிடம் போய் கேட்டேன். தன் மாணவனை அனுப்பினார். என்னைவிட இளையவர். லட்சுமணபிள்ளை அவரை தன் மகனைப் போல வளர்த்து வந்தார். மிகவும் ஏழை. ஒரு விதவையின் ஒரே மகன். நான் தரும் சம்பளமும் அவருக்கு உதவியாக இருந்திருக்கலாம். ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு வந்து சொல்லித்தருவார். வர்ணமும் கீர்த்தனையும் பாடும் இடம்வரை வந்தேன். நான் பாடியதைவிட கையையும் காலையும் ஆட்டியதே அதிகம் என்று இப்போது படுகிறது. அடுத்த வருடம் எனக்கு கல்யாணமாயிற்று. அத்துடன் அது முறிந்தது. நேரம் இல்லை பிறகு நானே படிக்க முயன்றபோது குரல் கெட்டுப் போயிருந்தது. வீணை படிக்க முயன்றேன். ஒரு வருஷமாகியும் சரளவரிசையைத் தாண்ட முடியவில்லை. இப்போதும் பாடுவேன். என் மனைவிதான் மெச்சவேண்டும். ஒரு காசட் கூட போட்டிருக்கிறேன். நாங்கள் இரண்டு பேரும் கேட்டு ரசிப்பதற்காக.

ஆனால் இசை ஆர்வம் இசை வெறி மதுரையில் ஒருமுறை ஒரு பிராமண கல்யாண வீடு. ஜி.என். பாலசுப்ரமணியம் கச்சேரி. பாலக்காடு மணி மிருதங்கம் சௌடய்யா வயலின், அழையா விருந்தாளியாகவே போய் உட்கார்ந்து கேட்டேன். அண்ணாமலையில் பெரிய பெரிய வித்வான்களையெல்லாம் கேட்க முடிந்தது. நானே நிறைய கிறிஸ்தவ கீர்த்தனைகள் எழுதி வைத்திருக்கிறேன்.

வேதசகாயகுமார்: ராஜரத்தினம் பிள்ளையை கேட்டது உண்டா?

பேரா.ஜேசுதாசன்: நிறைய, ஆனால் குடிக்காமல் வரவேண்டும். குடித்தால் எல்லாமே தலைகீழ். ஆனால் மேதை. ஒரு சம்பவம் கேள்விப்பட்டேன். அண்ணாமலையில் இசையியல் பாடத்திட்டக் குழு கூட்டம். அதில் டைகர் வரதாச்சாரி தலைவர். பாடமாக எல்லா பாட்டுமே தெலுங்கு சமஸ்கிருதம் என்று வைத்தார்கள்.

ராஜரத்தினம் பிள்ளை குடித்துவிட்டு வந்தார் ‘ஏண்டா பாப்பாரப் பசங்களா தமிழ்க் காலேஜிலே தமிழ்ப்பாட்டு தமிழ் பாட்டு கிடையாதா? நான் பாடுகிறேன் முத்துத்தாண்டவர் பாட்டு, நீயும் உன்பாட்டைப் பாடு, எதுமேல் என்று பார்ப்போம் என்று கலாட்டா செய்தார். டைகர் பதறிப்போய் ‘சரி சரி விடும் பிள்ளை’ என்று சமாதானம் செய்து முத்துத்தாண்டவர் பாட்டை பாடமாக வைத்தார். அது ராஜரத்தினத்தின் மேதையை மட்டுமல்ல சுபாவத்தையும் காட்டுகிற சம்பவம், டைகர் அன்று பெரிய அதிகார மையம். ராஜரத்தினம் பிள்ளை எவருக்கும் பயப்படமாட்டார்.

ஆனால் எனக்கு ராஜரத்தினம் பிள்ளையைவிட திருவெண்காடு சுப்ரமணியம் வாசிப்புதான் பிடிக்கும். தம்பூரா சுருதிக்கு வாசிப்பார். ஆர்ப்பாட்டமில்லாத அடக்கமான வாசிப்பு. ராஜரத்தினத்திடம் சங்கதிகள் அதிகம். அப்படியே கொட்டிக் கொண்டே இருக்கும். கற்பனையே செய்யமுடியாது. திருவெண்காடு அப்படியல்ல. சுகபாவம் அதிகம். மகுடி மிக நன்றாக வாசிப்பார். எனக்குப் பொதுவாக நாதசுரம் பிடிக்காது. அது ரொம்ப ஓசைபோடும் வாத்தியம். அதையே வயலின் போல வாசிப்பார் திருவெண்காடு.

ஆனால் எனக்கு மிகப் பிடித்தமான, என்னுடைய இசை மாஸ்டர் கிட்டப்பாதான். மத்திமம், உச்சம், மந்தாரம் மூன்றிலும் சரளமாக சஞ்சாரம் செய்கிற குரல் அவருக்கு. முறையாக சங்கீதம் படித்தவரே அல்ல. எல்லாம் பயிற்சியும் கற்பனையும்தான்.

திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளை

வேதசகாயகுமார்: இப்போது இசை கேட்பதுண்டா?

பேரா.ஜேசுதாசன்: வீணை விரும்பிக் கேட்பேன். காயத்ரி வாசிப்பு பிடிக்கும்.

வேதசகாயகுமார்: லட்சுமண பிள்ளையிடம் பழக்கம் உண்டா ?

பேரா.ஜேசுதாசன்: அறிமுகம் உண்டு. அருமையான கீர்த்தனைகள் எழுதியவர் (பாடுகிறார்)

‘நீயே துணை என்று
நாயேன் அடுத்து வந்தால்
தாயே ரட்சிக்க வேண்டுமே’

வேதசகாயகுமார்: ஆனால் அவர் சரியாக கவனிக்கப்படவில்லை இல்லையா?

பேரா.ஜேசுதாசன்: ஆமாம் அதற்குக் காரணம் முக்கியமாக பிராமண ஆதிக்கம். ஏழை சொல் அம்பலமேறுமா?

வேதசகாயகுமார்: தஞ்சை ஆபிரகாம் பிரகாம் பண்டிதரும் புறக்கணிக்கப்பட்டவர்தானே?

பேரா.ஜேசுதாசன்: பெரியமேதை. சுருதி 22 என்பது வழக்கம். பண்டிதர் 24 என்பார், வாசித்தும் காட்டுவார். கர்ணாமிர்த சாகரம். ஒரு பெரிய கலைக்களஞ்சியம் மாதிரி. நான் முழுக்கப் படித்ததில்லை. அவர் கிறிஸ்தவர். உதாசீனம் செய்யப்பட்டார். ஆனால் ஜேசுதாஸ் வந்திருக்கிறார். எல்லாருமே பாராட்டுகிறார்களே….

ஜெயமோகன்: அவர் பிரபலமான பிறகுதான் கர்நாடக இசைக்குள் வந்தார். நெய்யாற்றின் கரை வாசுதேவன் ஈழவர். பெரிய பாடகர். யார் அவரை கவனித்தார்கள்?

பேரா.ஜேசுதாசன்: ஆமாம் அது ஒரு பெரிய சிக்கல்தான். கலையின் அதிகாரம். இசை இலக்கியம் மாதிரி இல்லை . உடனடியாக ரசிக்கப்பட வேண்டும்.

வேதசகாயகுமார்: உங்களுக்குப் பிடித்தமான இசைப் பாடலாசிரியர் யார்?

பேரா.ஜேசுதாசன்: கோபால கிருஷ்ணபாரதியார்தான். மன உருகிப் பாடியவர். ‘மார்கழி மாதம் திருவாதிரை நாள் போகுதையே’ என்று எஸ்.ஜி. கிட்டப்பா பாடக்கேட்டு நான் அழுதிருக்கிறேன். கடவுளைப் பார்க்கவேண்டும் என்ற ஏக்கம் அதிலே எப்படி வந்திருக்கிறது! எத்தனை ஆழமான வரிகள். கிட்டப்பா நிறைய சுவரப்பிரஸ்தாரமெல்லாம் செய்பவர். சற்று அதிகமாகவும் சற்று அதிகமாகவும் போய்விடுபவர். இந்தப் பாடலை மட்டும் ரசித்து ஒன்றிப் பாடினார். இதை அன்று என் சித்தப்பா (வேத சகாயகுமாரின் தாத்தா) கிராம போனில் காலையில் போடுவார்.

அதைக் கேட்டுத்தான் தூங்கி விழிப்பது. அருமையான பாட்டு. இப்போதும்  காதில் ஒலிக்கிறது  அது (முனகலாக பாடுகிறார்).

வேதசகாயகுமார்: பிறகு?

பேரா.ஜேசுதாசன்: பிறகு அருணாசலக் கவிராயர் ராமநாடகத்தை மிகவும் ஈடுபாட்டுடன் எழுதியவர். ‘ராமனைக் கண்ணாரக் கண்டானே விபீஷணன் கை மாமுடிமேல் வைத்துக் கொண்டானே?’ அற்புதமான பாட்டு அது. பிறகு முத்துத் தாண்டவர் பாட்டு.

வேதசகாயகுமார்: இன்று பாடுகிறவர்களின் வித்வத் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பேரா.ஜேசுதாசன்: இந்த வித்வத் பற்றியே எனக்கு ஒரு விஷயம் சொல்வதற்கு இருக்கிறது. வித்தை தேவைதான். அது முக்கியம்  அல்ல. ராஜரத்தினம் பிள்ளையின் வித்வத் கடல்போல. திருவெண்காடு சாதாரணம்தான். ஆனால் தன்னுடைய ஆளுமையை (personality) இசையில் கொண்டு வந்தார். தன்னுடைய தனிப்பட்ட இசையை உருவாக்கினார். இதுதான் முக்கியம். வீணை தனம்மாளின் வாசிப்பு கேட்டிருக்கிறேன். அப்படியே உள்ளூர குடைந்து போகும். அது ஞானம் அல்ல, அதற்கும் மேலானது.

அ.கா. பெருமாள்: சித்தர் பாடல்கள் பற்றி என்ன எண்ணுகிறீர்கள். அவை கவிதைகள் அல்ல, புரட்சியாளர்களின் குரல்கள் மட்டும்தான் என்று சொல்லப்படுவதுண்டே?

பேரா.ஜேசுதாசன்: சித்தர்களில் எனக்குப் பிடித்த கவிஞர் சிவவாக்கியர். பிறகு பாம்பாட்டி சித்தர், அழுகுணிச்சித்தர். அவை கண்டிப்பாக உயர்வான கவிதைகள்தான். வேறுவகையான கவிதைகள். அவற்றின் அடிப்படைகள் வேறு, அவ்வளவுதான். பட்டினத்தாரும் எல்லாவகையிலும் சித்தர்தானே? மற்ற சித்தர்கள் மரபை பின்பற்றாமல் மக்களிடமிருந்து வடிவங்களை எடுத்துக் கொண்டார்கள். பட்டினத்தார் மரபான வடிவங்களில் எழுதினார். ஆனாலும் அவர் பாட்டு சித்தர் பாடலாகத்தானே இருக்கிறது? சித்தர் பாடல்களுக்கு தனியான மனோபாவமும் அழகியலும் உண்டு. வடிவம் முக்கியமல்ல.

ஜெயமோகன்: அந்த மன நிலையும் அழகியலும் கம்பராமாயணத்துக்கு நேர் எதிரானவையல்லவா? அணிகளில்லை. அப்பட்டமாக உள்ளன. பல சமயம் அதிர்ச்சியும் அருவருப்பும்கூட தருபவை அவை.

பேரா.ஜேசுதாசன்: அந்த ஆதாரமான உந்துதல் என்ன? அது கம்பனில் உள்ள அதே அறவுணர்ச்சிதானே? அந்த மன எழுச்சி ஒன்றுதானே? இரண்டும் இரண்டு கோணங்களில் பார்க்கின்றன, அவ்வளவுதான், கம்பன் எப்போதுமே பண்பட்டவன். அப்படி எப்போதுமே கவிதை இருந்தாக வேண்டுமென்பதில்லை. அந்த அக்கறை (concern)-தான் முக்கியமானது.

ஜெயமோகன்: சித்தர் பாடல்களில் கூட செவ்வியல் அம்சங்கள் உண்டு. ‘செய்ய தெங்கின் காயிலே நீர் வந்து உறைந்தது போல தன்னுள் ஈசன் வந்து உறைந்தான் என்பது போன்ற வரிகள்.

பேரா.ஜேசுதாசன்: கவிதையை எப்போதுமே முழுமையாக வகுத்துவிட முடியாதுதான்.

வேதசகாயகுமார்: உங்கள் ரசனையின் அடிப்படையே அறம் தானா?

பேரா.ஜேசுதாசன்: ஆம். அதுதான். கம்பனில்தான் அறம் என்ற குரல் ஓயாது ஒலிக்கிறது. கம்பனின் அறம் என்று சொன்னாலே எனக்கு மயிர் சிலிர்க்கிறது. எப்படிச் சொல்கிறான். அதை நீதி ஒழுக்கம் எல்லாவற்றையும்விட மேலானதாக மேலே தூக்கிவிடுகிறான். இந்தக் குரல் வேறு எந்தத் தமிழ்க் கவிஞனிடமும் இல்லை.

வேதசகாயகுமார்: உங்கள் தமிழிலக்கிய வரலாறு மிக முக்கியமான நூல், சுயரசனையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட வரலாறு அது. ஏன் அதை ஆங்கிலத்தில் எழுதினீர்கள்?

பேரா.ஜேசுதாசன்: தமிழில் எழுதினால் யார் படிப்பார்கள்? யாரும் கவனிக்க மாட்டார்கள். அப்படியே எழுதலாம் என் எண்ணினால்கூட யார் பிரசுரிப்பார்கள்? நாங்கள் எங்கள் புத்தகத்தை சொந்தப்பணத்தில் அச்சிட்டோம். 10 பிரதிகள் அதுகூட விற்கவில்லை. பாரதியின் குயில்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் போட்டோம். அப்போதுதான் ஓய்.எம்.சி.ஏயில் இருந்து S.P.அப்பசாமி அவர்கள் ஆங்கிலத்தில் ஒரு இலக்கிய வரலாறு எழுதும்படி சொன்னார்கள். பிரசுர வசதி கிடைத்தால் வேறு என்ன யோசனை? தமிழிலக்கிய வரலாறு என் ஆய்வுத் தலைப்பும்கூட ஏற்கனவே குறிப்புகளும் இருந்தன. எழுதிவிட்டோம். இப்போது அதன் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கிறோம். இரண்டு பகுதி வந்துவிட்டது. அடுத்தபகுதி எழுதிக்கொண்டிருக்கிறோம். இது கம்பனைப்பற்றியது. கம்பனைப்பற்றி எழுதி எழுதித் தீரவில்லை. எழுதுவதெல்லாம் இவள்தான்.

ஜெயமோகன்: இங்கு ஏற்கனவே பல வரலாறுகள் உள்ளனவே?

பேரா.ஜேசுதாசன்: நான் எழுதுவது வெறும் வரலாறு அல்ல. மதிப்பீட்டு வரலாறு எழுதும் முறை இது value added history.

ஜெயமோகன்: நவீன இலக்கியத்தில் யாரை மிகவும் பிடிக்கும்?

பேரா.ஜேசுதாசன்: சுந்தர ராமசாமி ரொம்பப் பிடிக்கும். அதற்கு அவருடனான நெருக்கமும் காரணமாக இருக்கலாம். அவரது கைக்குழந்தை என்ற கதை ரொம்பப் பிடிக்கும். மனைவி கணவனை கைக்குழந்தைபோல வைத்திருக்கிறாள். அது  என் சொந்த அனுபவமும்கூட! அதில் பார்பரின் கத்திரி ஒலி. கிச்கிச்கிச்! கிளைமாக்ஸ் (சிரிக்கிறார்.)

ஜெயமோகன்: பிறகு?

பேரா.ஜேசுதாசன்: பிறகு புதுமைப்பித்தன், ஜானகிராமன், குப. ராஜகோபாலன்.

ஜெயமோகன்: மௌனி?

பேரா.ஜேசுதாசன்: இல்லை. எனக்கு மௌனியும் லாசராவும் பெரிய எழுத்தாளர்களாகப் படவில்லை. க.நா.சு.வின் ‘ஒரு நாள்’ பிடித்தமான நாவல்.

வேதசகாயகுமார்: புதுக்கவிதையை ஒரு வடிவமாக ஏற்பதில் உங்களுக்கு ஏதேனும் தடை இருந்ததா?

பேரா.ஜேசுதாசன்: இல்லை. மாறாக எனக்கு மாற்றம் தேவையாக இருந்தது. மேலும் சங்கப்பாடல்களின் ஆசிரியப்பா புதுக்கவிதை வடிவுக்கு மிக நெருக்கமானதுதான்.

ஜெயமோகன்: கர்நாடக இசையில் உள்ள முக்கியமான பம்சம் பக்தி (devotion). அதன் மன அமைப்பே பக்தி சார்ந்தது. இன்றைய நவீன காலகட்டத்துக்கு களியாட்டம், உக்கிரம் என்று பல மனநிலைகளுக்கு இசை தேவைப்படுகிறது. இதை அளிக்கும் தன்மை கர்நாடக இசைக்கு உண்டா?

பேரா.ஜேசுதாசன்: நம் இசை அப்படி பக்தி சார்ந்தது அல்ல. ராகங்கள் ஒலியின் அமைப்புகள்தான். அன்று பக்திக்கு ஏற்ப இசையை எடுத்து ஆண்டார்கள். அன்றையத் தேவை அது. இன்றையத் தேவைக்கு ஏற்ப அதை எப்படியும் பயன்படுத்தலாம். ஆனால் ஒன்று, அது கௌரவமானதாக (டீசன்ட்) இருக்க வேண்டும். பாவம் தவறாததாக இருக்க வேண்டும். இது என் ஆசை. உண்மையான தேவையான மாற்றம் என்றால் வரவேற்க வேண்டியதுதான்.

ஜெயமோகன்: பொதுவாக வயதானவர்களிடம் உரையாடும்போது ஒரு சிக்கல் உள்ளது. அவர்கள் அறம், ஒழுக்கம் சடங்குகள், பழைய வாழ்க்கை முறைகள் அனைத்தையும் ஒன்றாகவே பார்க்கிறார்கள். ஆகவே புதிய காலகட்டமே அதர்மம் மிக்கது என்று எண்ணுகிறார்கள்…

பேரா.ஜேசுதாசன்: அறம் மாறாதது. நித்யமான மதிப்பு அது. அதை இலட்சியமாகக் கொண்டு உருவாக்கப்படும் வாழ்க்கை முறைதான் ஒழுக்கம் என்பது. அது மாறக்கூடியது. மாற்றுவது அறத்துக்கும் வாழ்க்கைச் சந்தர்ப்பங்களுக்கும் இடையே உள்ள உறவு தான். அறத்துடன் முரண்படும் ஒழுக்கம் தேவையற்றதுதான். அறம் எப்போதுமே கருணையிலும் அன்பிலும் சமத்துவத்திலும் வேரூன்றியது. அதுபோல நாம் சடங்குகளையும் அறத்துடன் சம்பந்தப்படுத்துகிறோம். அர்த்தமற்று பேணப்படும் ஒழுக்கம்தான் சடங்கு. அவற்றுக்குத் தேவையே இல்லை.

ஜெயமோகன்: உதாரணமாக விதவை மறுமணம், தனிநபர் சுதந்திரம் போன்ற விஷயங்கள். நேற்று அவை பெரும் பாவமாகவோ அதிகப் பிரசங்கித்தனமாகவோ கருதப்பட்டிருக்கலாம். இன்று சகஜமாக ஏற்கப்படுகின்றன.

பேரா.ஜேசுதாசன்: ஒழுக்கங்களை அறம் மீறிச்செல்லும். மீறப்படவே கூடாதது என்று வெகு சிலதான் உள்ளன. அடிப்படையான அறம்தான் முக்கியம். என் மகனுக்கு எங்களைவிட மிகத் தாழ்வாகக் கருதப்பட்ட சாதியிலிருந்துதான் பெண் எடுத்தோம். அதன் விளைவுகளை அவனுக்கு எடுத்துக் கூறினேன். சாதி வித்தியாசம் வெறும் சடங்குதான்.

ஜெயமோகன்: நீங்கள் தீவிர கிறித்தவர். இரண்டு கிறிஸ்துக்கள் உள்ளனர். ஒருவர் பாதிரிமார்களால் முன்வைக்கப்பட்டு பிரசாரம் செய்யப்படும் ஒரு மத அடையாளம். இன்னொருவர் மனிதகுலத்துக்கு மொத்தமாக கருணைக்கும் தியாகத்துக்கும் குறியீடாக ஆகும் தல்ஸ்தோயின் கிறிஸ்து. இடைவெளி அதிகம் தெரியாது; ஆனால் மிக முக்கியமானது அது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பேரா.ஜேசுதாசன்: மதம் எப்போதுமே சடங்குகள் மரபுகள் எல்லாம் கலந்ததுதான். கிறிஸ்து கிறிஸ்தவர்களுக்காக சிலுவையில் ஏறவில்லை. அவர் மனித குலத்துக்காகவே மரித்தார். அவர் மதங்களையெல்லாம் மீறியவர். பரிபூரணமானவர். பாவத்திலிருந்து மனிதனை மீட்பதுதான் கிறிஸ்துவின் பிறப்புக்கும் மரணத்துக்கும் நோக்கம். ஒரே கடவுள்தான். அக்கடவுள்தான் தன் குமாரனை பூமிக்கு அனுப்பி மனிதர்களுக்கு பாவத்திலிருந்து மீளும் வழியை காட்டியது. கிறிஸ்து நமக்காக மரித்தார். அதுதான் என் நம்பிக்கை. பாவத்திலிருந்து கிறிஸ்துவின் வழியாக நாம் மீளமுடியும். நான் சொல்ல நினைக்கும் முக்கியமான செய்தி அதுதான்.

– சொல்புதிது, இதழ் 2002

அஞ்சலி, ஹெப்ஸிபா ஜேசுதாசன்

மத்துறு தயிர்- ஒரு கடிதம்

குரு என்னும் உறவு

முந்தைய கட்டுரைவெள்ளையானை-கடிதம்
அடுத்த கட்டுரைசுவரில் -கடிதங்கள்