இந்தப்பேட்டி 11 ஆண்டுகளுக்கு முன்பு சொல்புதிது சிற்றிதழை நானும் நண்பர்களும் நடத்திய காலகட்டத்தில் எடுக்கப்பட்டது. அசோகமித்திரன் “ஒரு மகத்தான விரிவான வகுப்பு அது. பேட்டி எடுத்தவர்களும் கொடுத்தவரும் மிக உயர்ந்த அறிவார்ந்த தளத்தில் இருக்கும்போது நடந்துள்ளது.”. என்று அசோகமித்திரன் விருட்சம் பிப்ரவரி 2002 இதழில் இதைப்பற்றி சொல்கிறார்.
எண்பத்தி மூன்று வயதை நெருங்கும் பேராசிரியர் ஜேசுதாசன் தமிழ் மரபின் சில உன்னதமான விஷயங்களின் குறியீடு. “பேராசிரியரின் வாழ்க்கை மானுட மேன்மைகள் மீது நம்பிக்கையை உருவாக்குவது” என்று சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார். அவரது எண்பதாம் பிறந்தநாள் விழா குறித்த செய்தி ஏற்கனவே சொல் புதிதில் வந்தது.
ஆசிரியராக மூன்று தலைமுறையினரின் மனதில் ஆழமாக இடம்பிடித்தவர் பேராசிரியர். வையாபுரிப் பிள்ளை முதல் வேதசகாயகுமார் வரை நீளும் ஒரு தமிழறிஞர் மரபின் முக்கியமான கண்ணி. அதிகம் எழுதாவிட்டாலும் தன் இலக்கிய விமர்சனக் கருத்துக்கள் மூலம் எழுத்தாளர்களிடம் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியவர். உதாரணமாக நீல. பத்மநாபனின் ’தலைமுறைகள்’ எனும் நாவல் (அவரது முதல் நாவலும்கூட, அச்சில்) கைப் பிரதியாக பலரிடம் படிக்கத் தரப்பட்டது. சுந்தர ராமசாமி உட்பட பலர் அதைப் படித்தும் அதன் இலக்கிய முக்கியத்துவம் உணரப்படவே இல்லை. பேராசிரியரின் கவனத்துக்கு வந்தபிறகு அவரது முன்னுரையுடன் வெளிவந்தது. அதை க.நா.சு.வும் வெங்கட் சாமிநாதனும் தமிழ் இயல்புவாத எழுத்தின் முக்கியமான திருப்புமுனையாக அடையாளம் கண்டனர். சிறந்த தமிழ் நாவல்களின் மிகச்சிறிய பட்டியல்களில்கூட தொடர்ந்து இன்றும் இடம் பெற்றுவரும் அப்படைப்பு நாவல்களின் போக்கையே மாற்றியமைத்தது. ஆர்.ஷண்முகசுந்தரம் போன்ற பல படைப்பாளிகள் புறக்கணிக்கப்பட்ட அந்நாட்களிலேயே அவர்களைக் கௌரவித்தது பேராசிரியரின் தலைமையிலான திருவனந்தபுரம் பல்கலைக்கல்லூரித் தமிழ்துறைதான். பேராசிரியரின் மாணவர்கள் தமிழின் பலதுறைகளில் அழுத்தமான பங்களிப்பை ஆற்றியிருக்கிறார்கள். அவரது மாணவரான ஏ.சுப்ரமணிய பிள்ளைதான் தமிழின் முதல் நவீன இலக்கிய முனைவர் ஆய்வைச் செய்தவர். புதுமைப்பித்தனைப் பற்றி நவீன இலக்கியங்களைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்த்து முன்னோடியானவரும் பேராசிரியரே. அ.கா. பெருமாள் (நாட்டார் வழக்காற்றியல் அறிஞர்), டாக்டர் பத்மநாபன் (இலக்கிய விமர்சகர்), ப. கிருஷ்ணசாமி (இலக்கிய விமர்சகர்), ராஜமார்த்தாண்டன் (இதழாளர், விமர்சகர்), எம். வேதசகாயகுமார் ஆகியோர் அவரது மாணவர்களில் முக்கியமானவர்கள்.
ஜேசுதாசன் அவர்களின் மனைவி ஹெப்சிபா ஜேசுதாசன் ‘புத்தம் வீடு’ ‘மாநீ’ ‘டாக்டர் செல்லப்பா’ முதலிய நாவல்களை எழுதியவர். தமிழ் இயல்புவாத நாவல்களில் முதல் வரிசையில் அவை வைக்கப்படுகின்றன. பேராசிரியர் தம்பதிகளின் மணவாழ்வு இரு ஆளுமைகள் கரைந்து ஒன்றாவது குறித்த நம் இலட்சியக்கனவு நனவானதன் அடையாளமாகும். அரை நூற்றாண்டுக்கும் மேலாக பேராசிரியரின் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் பேராசிரியர் ஹெப்சிபா அவர்களின் பங்கு உண்டு. முதிர்ந்த வயதில், தன் கணவரின் கனவை நனவாக்கும் பொருட்டு, தமிழிலக்கிய வரலாற்றை எழுத அவர் மேற்கொண்டுள்ள உக்கிரமான உழைப்பு ஒரு வகையில் இதிகாசச் சாயல் கொண்டது. நம் சமீபகால வாழ்வில் எங்கும் ஒரு மனைவி தன் கணவனுக்காக இத்தனை பெரிய பரிசொன்றை உருவாக்கி அளித்ததில்லை.
இறந்தவற்றின் குவியலாக ஆன மரபு பயனற்ற சுமை. ஆனால் உயிர்த்துடிப்பான மரபு எல்லா புதுமைகளுக்கும் வலிமை சேர்க்கும் அடிப்படை உரம் ஆகும். அதை பேராசிரியருடனான உறவே என்னுள் ஆழப்பதிய வைத்தது. எந்த மாபெரும் நூலும் அதை கற்பித்திருக்க முடியாது என்று உணர்கிறேன். ஒரு மனிதர் தன் உச்ச நிலையில் மாபெரும் மதிப்பீடுகளின் வாழும் அடையாளமாக ஆக முடியும். அவர் வழியாக நம் இரண்டாயிரம் வருட அறிவியக்கமே நம்முள் மௌனப்பெரும் பாய்ச்சலாக ஊடுருவ முடியும் என்று அறிகிறேன்.
குமரிமாவட்டம் தெனவிளை கிராமத்தில் 1919-இல் பிறந்த பேராசிரியர் இப்போது தன் மனைவியின் கிராமமாகிய புலிப்புனத்தில் ஓர் ஆங்கில மழலையர் பள்ளி நடத்திவருகிறார்.
பேராசிரியர் ஜேசுதாசன், பேராசிரியர் ஹெப்சி ஜேசுதாசன், புலிப்புனம், தக்கலை (அஞ்சல்), குமரிமாவட்டம்.
(இப்பேட்டி 26, 27-10-2001இல் பேராசிரியரின் வீட்டில் எடுக்கப்பட்டது. முனைவர் அ.கா.பெருமாள், முனைவர் வேதசகாயகுமார், ஆரல்வாய்மொழி அண்ணா கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் சுப்ரமணியம், ஜெயமோகன், ப.சரவணன் ஆகியோர் பங்கு பெற்றனர்)
ஜெயமோகன்: வழக்கமாகத் தமிழ்ப் பேராசிரியர்கள் மரபிலக்கியத்தில் பயிற்சியும் ஆர்வமும் உடையவர்களாக இருப்பார்கள், நவீன இலக்கியம் மீது உதாசீனம் கொண்டிருப்பார்கள் நவீன இலக்கியவாதிகளுக்கு மரபிலக்கியம் ஏதோ தொல்பொருள் என்ற எண்ணம் இருக்கும். இதுதான் தமிழக நிலைமை. இருதளங்களிலும் ஆழ்ந்த வாசிப்பும் ரசனையும் உடையவர் நீங்கள்.
உங்கள் பார்வையில் இலக்கியத்தில் தொல்பழங்காலம் முதல் இந்தக் கணம் வரை தொடர்ந்து வரக்கூடிய பொது அம்சம் ஏதாவது உண்டா? இலக்கியம் என்ற சொல்லால் எப்போதுமே சுட்டப்படுவது என ஏதாவது உண்டா ?
பேரா.ஜேசுதாசன்: உண்டு. கண்டிப்பாக உண்டு. இன்றைய இலக்கியம் நேற்றைய இலக்கியம் என்பதெல்லாம் மிக மேலோட்டமான பிரிவினைகள்தான். எல்லா எழுத்துமே உடனடியாக நேற்றைய இலக்கியம் ஆனபடித்தானே இருக்கிறது? ஆழமாகப் பார்த்தால் இலக்கியம் ஒன்றுதான். ஏனென்றால் இலக்கிய அனுபவம் என்பது ஒன்றுதான். இலக்கிய அனுபவம்தான் இலக்கியம். பழைய இலக்கியமோ புதிய இலக்கியமோ அதில் சில நித்யமான விஷயங்கள் மையமாக உள்ளன. அதேபோல தமிழிலக்கியம் பிறமொழி இலக்கியம் என்ற பிரிவினையும் மேலோட்டமானதுதான். நமது பண்டிதர்கள் பழைய இலக்கியங்களைப் படிப்பவர்களல்ல; தமிழில் உள்ள குறிப்பிட்ட சில பழைய இலக்கியங்களை மட்டுமே படிப்பவர்கள். அவர்களுக்கு வெளியே ஆர்வமில்லை. ஏனெனில் வெளியே எதுவும் தெரியாது. ஏன் என்று கேட்டால் என்னால் தெளிவாகக் கூறமுடியாது. இலக்கியத்தின் நித்யமான அம்சம் அவர்களுக்கு பிடி பிடிகிடைக்காமல் இருக்கலாம் என்று மட்டும் சொல்வேன்.
என்னைப் பொருத்தவரை நான் தொடங்கியது மரபிலக்கியத்தில் தான். என் ஆசிரியர் கோட்டாறு குமாரசாமிப்பிள்ளை. குளச்சல் நடுநிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்தார். அவர்தான் எனக்குக் கம்பராமாயணத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தினார். என் மனதில் நுழைந்த முதல் இலக்கியம் கம்பராமாயணம்தான். அவர் கூறிய ஒரு பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.
ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனே ஆள நீபோய்
தாழிரும் சடைகள் தாங்கி, தாங்கரும் தவம் மேற்கொண்டு
பூழிவெங்கானம் நண்ணி புண்ணிய நதிகள் ஆடி
ஏழிரண்டு ஆண்டில் வா என்று ஓதினன் அரசன் என்றாள்
இந்தப் பாடலில் உள்ள அழகிய ஓசைதான் என்னை மிகவும் கவர்ந்தது. பிறகுதான் அதில் உள்ள உணர்ச்சியும் கருத்தும் மனதுக்குள் வந்தன. என் ஆசிரியருக்கும் நவீன இலக்கியம் மீது நம்பிக்கையெல்லாம் இடையாது. அப்போது ஆனந்த போதினி இதழ் வந்துகொண்டிருந்தது. அதைத்தான் எனக்குத்தந்து படிக்கச் சொல்வார். கடுமையான தமிழில் எழுதப்பட்ட கட்டுரைகளும் கவிதைகளும் அதில் இருக்கும். எனக்கு அது புரியவில்லை. நான் ஆனந்த விகடன்தான் விரும்பிப் படித்தேன். கல்கி பிரபலமாக இருந்த காலம். கள்வனின் காதலி அப்போது தொடராக வந்தது. அதில் திருடனாக மாறிய முத்தையன் தன் காதலி வீட்டிலேயே திருடப்போக அவள் ‘முத்தையா நீயா’ என்று கேட்குமிடம் என்னை பெரிதும் கவர்ந்ததை இப்போது நினைவுகூர்கிறேன். மேலும் பல வருடங்கள் கழித்து திருவனந்தபுரம் நண்பர்களின் வழியாகவே தீவிர இலக்கியம் எனக்கு அறிமுகமாயிற்று. வெறும் உணர்ச்சி வெளிப்பாடு இலக்கியத்துக்குப் போதாது என்றும், உண்மையே மேலும் முக்கியமானது என்றும் புரிந்து கொண்டேன். இலக்கியத்தின் சாஸ்வதமான மதிப்பு என்ன என்று அப்போது தெளிவாகத் தெரிந்தது.
ஜெயமோகன்: கம்பராமாயணத்தை வைத்து இந்த சாஸ்வத அம்சம் என்ன என்று கூற முடியுமா?
பேரா.ஜேசுதாசன்: மானுட அனுபவம்தான். அது மாறவே இல்லை. அது நிகழும் சூழல் சந்தர்ப்பம் இதெல்லாம்தான் மாறிக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றங்கள் மிகவும் மேம்போக்கானவை மட்டுமே.
ஏற்கனவே சொன்ன கவிதை, கைகேயி ராமனிடம் கூறியது. எத்தனை குரூரம், எவ்வளவு சுயநலம்! ராமன் எப்படிப்பட்டவன். மிக மிக மென்மையானவன், அறம் தவறாதவன். கைகேயி மீது ஏராளமான பிரியம் வைத்திருப்பவன். கைகேயியும் நல்லவள்தான். ராமனிடம் உயிரையே வைத்திருப்பவள் தான். ஆனால் எப்படி வஞ்சகமாகச் சொல்கிறாள் ‘புண்ணியந்திகள் ஆடி’ வாழ்வதற்குப் போ என்கிறாள். அப்படி சொல்லும்படி ஆகிறது. அப்படித்தான் வாழ்க்கையில் எல்லாம் நடந்துவிடுகிறது. அதுதான் மனித அனுபவம். அதைத் தெளிவாகப் புரிந்து கொண்டுவிட முடியாது. இதைத்தானே இலக்கியம் அன்றும் இன்றும் பேசுகிறது?
அடுத்தபடியாக அடிப்படை மதிப்பீடுகளைச் சொல்லலாம். அவையும் ஒருபோதும் மாறிவிடுவதில்லை.
ஜெயமோகன்: கம்பராமாயணம்தான் இருக்கிறதே. அதில் இந்த மானுட அனுபவம் இருக்கிறது. பிறகு ஏன் நவீன இலக்கியம் தேவையாகிறது?
பேரா.ஜேசுதாசன்: மனிதனுக்கு போதும் என்பது உண்டா என்ன? இந்தக்கால வாழ்க்கையிலே இந்த சாஸ்வத அம்சம் வெளிப்படுகிறது என்று பார்க்க வேண்டுமில்லையா?
வேதசகாயகுமார்: நீங்கள் மிகச்சிறிய கிராமத்தில் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் இலக்கியம் படித்தீர்கள். இசை கற்றீர்கள். என்ன தூண்டுதல் இதற்கெல்லாம்?
பேரா.ஜேசுதாசன்: சின்ன ஊராக இருந்தாலும் அங்கு வாழ்ந்த மனிதர்கள் பெரியவர்கள். எது முக்கியம் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. உதாரணமாக என் தந்தை ஒரு சாதாரண கொத்தனார். அவர் என்னை மிகவும் நேசித்தவர். நான் கேட்கும் புத்தகங்களை யெல்லாம் வாங்கித் தருவார். ஆனந்த விகடன் வாங்கிக் கொண்டுவந்து தருவார். ஒருமுறை வில்லிபாரதம் வசனம் நூல் கேட்டபோது கஷ்டப்பட்டு பணம் திரட்டி, தேடி வாங்கிக்கொண்டு வந்து தந்தார். அவர்தான் எனக்கு தமிழைக் கற்கத் தூண்டுதலாக அமைந்தவர். பிறகு என் ஆசிரியர்கள். குளச்சல் உயர்நிலைப் பள்ளியில் கோட்டாறு குமாரசாமி பிள்ளை, திருவனந்தபுரம் கல்லூரியில் பன்னிருகைப் பெருமாள் அவர்கள்.
நவீன இலக்கியத்தில் என் ஆர்வம் வளர சுந்தர ராமசாமியின் நட்பு மிகவும் உதவியது. அதேபோல நகுலனுடன் உள்ள நீண்டநாள் நட்பு. அன்றைக்கு நாங்கள் திருவனந்தபுரத்தில் ஒரு குழுவாக இருந்தோம். நகுலன், நீல.பத்மநாபன், ஷண்முக சுப்பையா, ஆ.மாதவன் டி.எஸ்.நாராயணன் எல்லோரும், டி.எஸ்.நாராயணன் வீட்டில் கூடி இரவுவரை பேசுவோம். திருவனந்தபுரம் தமிழ் மாணவர் சங்கம் என்று ஒன்று வைத்திருந்தோம். மலர்கள் கூட வெளியிட்டோம். நகுலன் அவரது பழைய சைக்கிளில் வருவார். பாதிநேரம் அதைத் தள்ளிய படியே வருவார். அதை அவரிடமிருந்து பிரிக்க முடியாது. ஊன்றுகோல் மாதிரி பேசியபடியே போய் டீகுடித்துவிட்டு நானும் அவருமாகத் திரும்பிச் செல்வோம். அந்த நாட்கள் என் நவீன இலக்கிய ஆர்வம் வளர மிகவும் உதவியாக இருந்தன.
ஆனால் எனக்கு நவீனக் கவிதைகளில் சில புரியவில்லை. மொழி புரிகிறது. கூறுமுறை பிடிகிடைக்கவில்லை. ஆனால் இந்த மர்மமெல்லாம் தேவைதான் என்றுதான் படுகிறது.
ஜெயமோகன்: அப்பட்டமாக இருப்பது?
பேரா.ஜேசுதாசன்: ஷண்முக சுப்பையாவின் கவிதை ஒன்று இப்படி வரும்.
சுடுகாடு ஒன்று
சுற்றித் திரிந்தது….
முதலில் அதிர்ச்சி தந்த வரிகள் இவை. பிறகு ரசித்தேன். விதனை சுடுகாடாகச் சொல்லியிருப்பதில் கவிதையின் அமைதி இருக்கிறது என்றே பட்டது.
ஜெயமோகன்: நீங்கள் முதல் பதிலிலேயே கம்பனுக்கு வந்து விட்டீர்கள். கம்பனில் மூழ்கி உங்கள் முதுமை கழிகிறது என்பதை நாங்கள் அறிவோம்.
தமிழில் மறுமலர்ச்சிக்காலம் தொடங்கிய போது சங்க இலக்கியம் மீது விழுந்த வெளிச்சம் கம்பன்மீது விழவில்லை. காரணம் மதச்சார்பற்ற (secular) இலக்கியமே தேவை என்ற தேடல்தான். மத இலக்கியம் என்று கம்பராமாயணம் எதிர்க்கவும் புறக்கணிக்கவும் பட்டது. நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தபோதும் கம்பராமாயணம் எப்படி இந்த முக்கியத்துவத்தை உங்கள் மனதில் பிடித்தது?
பேரா.ஜேசுதாசன்: நான் சொன்னேனே, என் முதல் கவிதையனுபவமே கம்பராமாயணம்தான். சிறுவயதிலேயே கம்பனின் ஓசையொழுக்கு என் மனதில் பதிந்துவிட்டது. மனம் அர்த்தத்தை வாங்கிக்கொள்வதற்கு முன்னரே, அந்த ஓசை நயம் அதை அளித்து விடுகிறது. ஓசையும் உணர்வுகளும் கம்பனில் கடல் மடை திறந்தது போலக் கொட்டியபடியே இருக்கிறது.
‘நாழிகை கங்குலின் நல்லடைந்த பின்றே
யாழிசை அன்றிய அன்சொல் ஏழைகோயில்
வாழியென்று அயில் மன்னர் துன்ன வந்தான்
ஆழி நெடுங்கை மடங்கலாழியன்னான்’
இந்த வரிகள் எத்தனை சரளமாக ஒழுகிச் செல்கின்றன. ஒரு கடுமையான சொல்கூட இல்லை. மற்ற கலைஞர்களில் எல்லாம் தவிர்க்க முடியாமல் உரைநடைத் தன்மையும், பிற சிதைவுகளும் தலை காட்டிவிடும். கம்பனில் அது வரவே வராது. அவருக்குக் கவிதையின் பெருக்கில் ஒருபோதும் தடை கிடையாது. இசைத்தன்மை பற்றிச் சொன்னேன், எனக்கு இசை ரொம்ப முக்கியம். எனக்கு இசை தெரியும். மிக ஆர்வம் உண்டு. கம்பனை அந்த ஓசையழகுடன் படிக்க வேண்டும். சொல்ல வேண்டும். அது பாட்டு அல்ல. கவிதைக்குரிய இசை.
ஜெயமோகன்: Music அல்ல, Musicality என்று சொல்லலாமா?
பேரா.ஜேசுதாசன்: ஆம், அது சரியான வார்த்தைதான்.
ஜெயமோகன்: அது குமரகுருபரரிலும் இருக்கிறதே?
பேரா.ஜேசுதாசன்: ஆம். ஆனால் கம்பனில் உணர்ச்சி வேகங்கள்தான் அப்படிப்பட்ட ஓசையழகாக மாறியுள்ளன. உணர்வுகளுக்கு சாரமாக தர்மம் பற்றிய பிரக்ஞை உள்ளது. ’தர்மம்’ என்று மீண்டும் மீண்டும் கூறுகிறான் கம்பன். பிற அனைத்திலிருந்தும் பிரிந்து தர்மம் தன்னளவில் இயங்குவதுபோலச் சொல்கிறான். ‘தர்மம் பின் இரங்கி ஏக’ என்று கூறுகிறான். தர்மத்தை தனியாக ஒரு ஆளுமை போலவே காட்டுகிறான். ‘மானுடம் வென்றதம்மா’ என்று உலகு தழுவியதாக உருவகித்துக் கொள்கிறான். கம்பனில் கொஞ்சமும் குறைவுபடாத அந்த தர்மபோதம் தான் எனக்கு மிகவும் பிடித்தமானதாக உள்ளது. அதன் பல்வேறு முகங்களை கம்பராமாயணம் முழுக்க மீண்டும் மீண்டும் பார்க்க முடிகிறது.
‘பின்னவன் பெற்ற செல்வம்
அடியனேன் பெற்றதன்றோ ‘
என்கிறான் ராமன். அந்த மன உயர்வு என்னை நெகிழச் செய்கிறது. சகோதரபாசம் மட்டுமல்ல அது. அவன் நான்தான் என்று பேதமின்றி உணரக்கூடிய ஒரு நிலையல்லவா?
ஜெயமோகன்: பெரிய காவியங்கள் மானுடத் தீமையின் பேருருவங்களை தீட்டிக் காட்டுபவை என்று நவீன விமரிசனம் கூறுகிறது. கம்பராமாயணத்தில் கூட யுத்தகாண்டமே மிகவும் பெரியதும் உக்கிரமானதுமாகும் என்று கூறப்படுகிறது. கம்பனில் அந்த பிரம்மாண்டமான தீமைச் சித்தரிப்பு உள்ளதா?
பேரா.ஜேசுதாசன்: அறம் வெல்லும் என்பதே காவியத்தின் மையமான செய்தி. ஆனால் அறம் வென்றேயாகும் என்று சொல்ல மனிதனின் இருட்டையெல்லாம் சொல்லியாக வேண்டுமே. கம்பராமாயணம் ஒரு இலட்சியவாத காவியம், எல்லாம் இலட்சியப்படுத்தப்படுவது தன் தன்மை என்று பரவலாகச் சொல்லப்படுவதுண்டு. அது உண்மை என்று நான் கருதவில்லை. ராமனை கம்பன் ‘அறத்தின் மூர்த்தியான்’ என்கிறான். ஆனால் அவனது பலவீனங்களையும் தவறுகளையும் சொல்லத்தயங்கவில்லை. தர்மமும் அதர்மமும் அவனுள் மோதுவதைச் சொல்லுகிறான். ஒன்று வாலிவதைப் படலம். இன்னொரு முக்கியமான இடம் சீதையைத் துறக்கும் தருணம். எத்தனை குரூரமாக நடந்துகொள்கிறான். ஏன்? அவன் கடைபிடித்த அறமே அதற்குக் காரணமாகிவிடுகிறது. அதே போலத்தான் சீதையும். அவளை ‘கற்பின்கனலி’ என்றுதான் கம்பன் சொல்கிறான். ஆனால் மாயமானின் குரல் கேட்டு சீதை லட்சுமணனை தேடிப்போகச் சொல்லி அனுப்பும்போது எத்தனை மூர்க்கமாக நடந்து கொள்கிறாள். அவளுடைய கற்பே அப்படி பேச வைக்கிறது. மனிதர்கள் குறையுள்ளவர்கள். இலட்சியக் கதாபாத்திரங்களுக்குள்ளேயே இத்தனை தீமை குடியிருப்பதை கம்பன் காட்டுகிறான். அறமும் கற்பும் எல்லாம் தீமைக்குக் காரணமாக ஆவதை சுட்டிக் காட்டுகிறான். அதேபோல தீமையேகூட உயர்வான உணர்வுகளில் இருந்து பிறக்கலாம் என்று கம்பராமாயணம் காட்டுகிறது. தீயவன் என்று கூறப்படும் கதாபாத்திரங்களின் உள்ளே கூட எந்த அளவுக்கு நல்லியல்புகள் உள்ளன என்று கூறுகிறது.
நீர்க்கோல வாழ்வை நச்சி
நெடிதுநாள் வளர்த்து பின்னை
போர்க்கோலம் செய்து விட்டார்க்கு
உயிர் கொடாது அங்கு போகேன்
என்று கும்பகர்ணன் கூறுமிடம் உதாரணம். உயிர்கொடாது போகமாட்டேன் என்று சொல்கிறான். அங்கே அவன் இலட்சியக் கதாபாத்திரமாக ஆகிவிடுகிறான்.
வேதசகாயகுமார்: இலக்கியத்தில் நீங்கள் வலியுறுத்தும் இந்தத் தர உணர்வு உங்கள் ஆசிரியர்களிடம் இருந்ததா?
பேரா.ஜேசுதாசன்: இல்லை. அவர்களுக்கு எல்லாமே உயர்வுதான். தேவாரமும் உயர்வு. கம்பராமாயணமும் உயர்வு. என் ரசனை நான் என் அனுபவங்களிலிருந்து பெற்றது. ஒரு நல்ல வாசக அனுபவம் மற்ற தரமற்ற படைப்புகளை அடையாளம் காட்டுகிறது. உதாரணமாக, கம்பனைப் படித்தபிறகு வில்லிபாரதம் படித்தேன். கொஞ்சம்கூட நாடக உக்கிரம் இல்லை. எத்தனை எத்தனை உக்கிரமான சந்தர்ப்பங்கள், எவ்வளவு குணச்சித்திர மோதல்கள் உள்ள கதை. அதுவும் இதிஹாசம்தானே? கெடுத்துட்டானே? தமிழாசிரியர்களுக்கு கம்பனும் ஒன்றுதான் வில்லிபுத்தூராரும் ஒன்றுதான்.
ஜெயமோகன்: ஓடும் செம்பொன்னும் ஒப்பவே நோக்குவார்…
(பேராசிரியர் வெகுநேரமாக சிரித்துக்கொண்டே இருக்கிறார்.)
ஜெயமோகன்: இது சமீபத்தில் நடந்தது. ஓர் இளம் தமிழ் ஆய்வாளரிடம் இளம் கவிஞர் ஒருவர், சங்கப் பாடல்களில் சில பாடல்களைத் தன்னால் சிறந்த கவிதை என்று ஏற்க முடியவில்லை என்று சொன்னார். ஆய்வாளரால் அதை ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. தாங்க முடியாதபடி கோபம் வந்துவிட்டது. சங்க இலக்கியத்தில் தரம் பிரிக்க நீயார் என்று கேட்டாராம்….
பேரா.ஜேசுதாசன்: நமது வாழ்க்கையும், அதிலிருந்து வரும் ரசனையும்தான் நமது அடிப்படைகள். அதுதான் தகுதி. வேறு என்ன? சங்க இலக்கியத்தில் தரம் பார்ப்பது என்ன, காலத்தைச் சற்று பின்னால் கொண்டு வந்து விட்டார் என்பதற்காகவே வையாபுரிப்பிள்ளையை துரத்திவிட்டார்களே. தப்பி திருவனந்தபுரம் வந்துவிட்டார். ஆனால் எனக்கு வையாபுரிப்பிள்ளைதான் காலநிர்ணயத்துக்கு ஆதாரமானவர்.
கவிதையை வழிபாட்டுப் பொருளாக்கக் கூடாது. அதன்பிறகு ரசனையே இல்லை. சங்க இலக்கியத்தில் கணிசமான அளவு தரமற்ற பாடல்கள் உள்ளன. மொத்த சங்க இலக்கியம்கூட கம்பராமாயணத்தைவிட மேலானது அல்ல. இன்னும் யதார்த்தமான எழுத்து; இன்னும் இயற்கை அனுபவங்கள் உள்ளது; அவ்வா தமிழிலக்கியத்தின் உச்சம் கம்பன்தான்.
ஜெயமோகன்: கம்பனில் காவியகுணம் – ஒட்டுமொத்தமான தத்துவதரிசனம்- உள்ளது. சங்ககாலத்தில் அது இல்லை என்பதுதான் உங்கள் விமர்சனமா?
பேரா.ஜேசுதாசன்: ஆமாம். சங்கப்பாடல்களில் உள்ள நீதிகள் ஒட்டுமொத்தமாக வாழ்க்கையை கணக்கில் கொண்டவை என்று கூறலாம். ஆனால் அதில் வாழ்வின் முழுமையான சித்திரம் இல்லை. வாழ்க்கையின் எல்லாத் தளங்களையும் தொட்டுப் பேசும் விரிவு இல்லை . வெறும் நீதி போதாது.
ஜெயமோகன்: நீதி அனுபவமாக மாறவேண்டுமா?
பேரா.ஜேசுதாசன்: அனுபவம் நீதியாக வேண்டும். எல்லாமே அனுபவமாக மாறிவிட வேண்டும். அதுதான் முக்கியம்.
ஜெயமோகன்: நவீன இலக்கியத்தில் கம்பனுக்கு எவரையாவது கூறுவீர்களா?
பேரா.ஜேசுதாசன்: நவீன இலக்கியத்தில் என் படிப்பு குறைவுதான். படித்தவரையில் எவருமில்லை.
ஜெயமோகன்: தல்ஸ்தோய் படித்திருக்கிறீர்களா?
பேரா.ஜேசுதாசன்: போரும் அமைதியும் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். படித்ததில்லை.
ஜெயமோகன்: சிலப்பதிகாரத்தை ஒருபடி கீழேதான் வைப்பீர்கள். ஏன் அப்படி?
பேரா.ஜேசுதாசன்: முன்பே சொன்னது போல மனித அனுபவத்தை அணுகும் முறை, அதற்கேற்ப உருவாக்கிக் கொள்ளும் வடிவம் இதெல்லாம்தான் முக்கியமான காரணங்கள். சிலப்பதிகாரத் வஞ்சிக்காண்டம் நமது அனுபவமாக மாறவில்லை. பத்தினியைக் கடவுளாகக் காட்டும் பொருட்டு சேரன் செங்குட்டுவனைக் கொண்டு வந்து வடவரை கல்சுமக்க வைத்து, ஏராளமாக எழுதி வைக்கிறார். சுவாரஸியமாகத்தான் இருக்கிறது. ஆனால் காவிய ஒருமை சிதறி விடுகிறது.
ஜெயமோகன்: கம்பராமாயணத்தில் மதிப்பீடுகளின் மோதல் இருக்கிறது, சிலப்பதிகாரத்தில் அது இல்லை என்று கூறலாமா?
பேரா.ஜேசுதாசன்: வழக்குரை காதையில் அந்த மோதல் இருக்கிறது. அதன் நாடகீயத் தன்மை சிறப்பாக உள்ளது. ஆனால் மற்ற இடங்களில் மோதல்களோ, அதன்மூலம் உருவாகும் நாடகீயமோ இல்லை. இது முன்பே பலரால் கூறப்பட்ட விஷயம்தான்.
ஜெயமோகன்: சம்ஸ்கிருதத்தில் மகா காவியங்களுக்கு என்று சில இலக்கணங்களைக் கூறுகிறார்களே. அந்தக் காவிய இலக்கணங்களை கம்பனிலும் இளங்கோவிலும் பார்க்க முடியுமா?
பேரா.ஜேசுதாசன்: எனக்கு சம்ஸ்கிருத இலக்கணம் தெரியாது.
அ.கா. பெருமாள்: தண்டியலங்காரம் அதுதானே? அதில் காவிய இலக்கணம் கூறப்பட்டுள்ளதே.
பேரா.ஜேசுதாசன்: தண்டியலங்காரம் காவியத்தில் இருக்க வேண்டிய உறுப்புகள், அதன் மொழியம்சங்கள் முதலியவற்றைப் பட்டியல் போடுகிறது. பண்டிதர்கள் அதைக் காவியங்கள் மீது போட்டுப் பார்ப்பார்கள். ஆனால் தண்டியலங்காரம் காவிய இயல்பு என்றால் என்ன என்று சொல்கிறது.
‘பாவிகம் என்பது காவியப் பண்பு’ அதுதான் முக்கியம். ஒட்டு மொத்தமான பார்வை, வாழ்வின் சாராம்சம். அதுதான் காவியத்தின் அடிப்படைப் பண்பு. அது கம்பனில் கண்டிப்பாக உள்ளது. அப்பண்பு உருவாவதற்குத் தேவையான அளவுக்கு வாழ்க்கைச் சித்தரிப்புகள் உள்ளன. வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகவும், தனித்தனியாகவும் கூர்ந்து பார்த்து எழுதும் பண்பு அது. வ.வே.சு அய்யர் இதைத்தான் கம்பனின் கலைச்சிறப்பு என்கிறார். ‘Archetectronics’ என்று இதை வ.வேசு அய்யர் குறிப்பிடுகிறார். கட்டுமானமே கலை நுட்பமாக ஆதல் என்று விளக்கிச் சொல்கிறார்.
ஜெயமோகன்: இன்றும் பரவலாகக் கேட்கப்pஅடும் ஒரு கேள்வி உண்டு. கம்பன் வடமொழியில் இருந்துதானே எடுக்கிறான்? தமிழ்க் கலாசாரத்திற்கு அவன் பங்களிப்பு என்ன? தமிழிலிருந்து அவன் எடுத்துக்கொண்டது என்ன?
பேரா.ஜேசுதாசன்: கம்பன் வால்மீகியின் கதையை எடுத்துக் கொண்டான். அப்படிக் கதைகளை எடுப்பது காவியங்களின் மரபுதான். ஆனால் அக்காவியத்தின் சாராம்சமான காவியப் பண்புகள் தமிழ்க் கலாசாரத்திலிருந்து வந்தவை. வால்மீகியின் சீதை தீயில் குதிக்கச் சொன்னபோது அழுது புலம்புகிறாள். அவள் சாதாரணப்பெண். கம்பனின் சீதை அப்படியல்ல. புன்னகை மாறாமுகத்துடன் எரியில் இறங்குகிறாள். இவள் பத்தினித் தெய்வம். வால்மீகியில் நாடகத்தன்மையே இல்லை. நீண்ட நேரப் பேச்சுகள் தான் உள்ளன மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை எழுதி எழுதி வைப்பாரே அதுபோல.
ஜெயமோகன்: வால்மீகியின் கதாபாத்திரங்கள் மனிதர்கள். கம்பன் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஒரு மதிப்பீடின் பிரதிநிதியாக ஆக்கிவிடுகிறான். ஆகவே, எந்தக் கதாபாத்திரங்கள் பேசினாலும் மதிப்பீட்டு மோதல், நாடகம் உருவாகிவிடுகிறது என்று கூறலாமா?
பேரா.ஜேசுதாசன்: ஆம். அதைவிட மனித சுபாவத்தை கம்பன் ரொம்ப உக்கிரமாக, முரண்பாடுகள் நிரம்பியதாகச் சித்தரிக்கிறான் என்பது முக்கியமானது.
ஜெயமோகன்: எந்த மொழியிலும் அந்த மொழியில் உள்ள மிகச்சிறந்த காவியம் மீது இத்தனை கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்காது என்று படுகிறது. கம்பனுக்கு ஏற்பட்ட எதிர்ப்புக்கு என்ன காரணம்? ஏற்கனவே மதவாதிகளும் கம்பனைப் அளவில் ஏற்றது இல்லையே?
பேரா.ஜேசுதாசன்: கம்பன் மதத்தையோ பக்தியையோ பாடிய கவிஞன் அல்ல. அவன் பாடியது தர்மத்தைத்தான். இன்று உள்ள எதிர்ப்புக்கு முக்கியமாக இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று கம்பனை எதிர்ப்பவர்கள் அவனை முழுக்க படித்ததில்லை. படிப்பது அத்தனை எளிய விஷயமும் இல்லை. தொடர்ந்து முயன்று கற்கவேண்டிய விஷயம் அது. இரண்டாவதாக கம்பனுக்கு ஏராளமான பாடபேதங்கள் உண்டு. மர்ரே ராஜம் பதிப்பில் சொல்லப்பட்ட தவறான பாடங்களை வையாபுரிப்பிள்ளை தன் பதிப்பில் ஒதுக்கித் தனியாக எடுத்துத் தந்திருப்பதைக் காணலாம். இடைக்கால கட்டத்தைச் சேர்ந்த மதிப்பீடுகள் பல கம்பன்மீது பிற்காலத்தவரால் ஏற்றி வைக்கப்பட்டன.
அதேபோல கம்பனில் இடைச்செருகல்களும் ஏராளம். பல இடைச்செருகல்கள் அழகான தமிழில் சிறப்பாக எழுதப்பட்டவை என்பது ஒரு பெரியதடை. ஆனால் காவிய அமைதியை வைத்து எது இடைச்செருகல் என்று எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். உதாரணமாக சீதையின் அங்க வர்ணணையை ராமன் அனுமனிடம் கூறுவதாக ஒரு இடம் கம்பராமாயணத்தில் வருகிறது. இதைப் பிடித்துக் கொண்டு தான் கடுமையாக எதிர்த்தார்கள். கம்பன் மற்ற இடங்களில் சீதை ராமன் உறவைப் பற்றிப் பேசும்போதெல்லாம் மிக மிக நாசூக்காகவே பேசுகிறான். மிகுந்த கையடக்கத்துடன் அவர்கள் உறவைப்பற்றிச் சொல்கிறான். உடல் ரீதியான காமமாக அவர்கள் உறவைச் சொல்லவே இல்லை. ஆகவே இந்தப் பகுதி இடைச் செருகல்தான் என்றே சொல்ல வேண்டியுள்ளது.
ஜெயமோகன்: பொதுவாக கம்பராமாயணம் திருநெல்வேலி சைவர்களிடம்தான் பிரபலமாக இருந்தது. ஆனால் அது வைணவ நூல்! என்ன காரணம்?
பேரா.ஜேசுதாசன்: எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை வைணவர். பிறகு கிறிஸ்தவராக ஆனார். ஆனால், அவருக்கு தேவாரம் மீதுதான் பெரிய ஈர்ப்பு இருந்தது. தேவாரம் மாதிரியே எழுதினார். ஏன்? இந்தப் பிரிவினைகளுக்கு இலக்கியத்தில் இடம் இல்லை.
ஜெயமோகன்: இரட்சண்ய யாத்ரீகம், தேம்பாவணி பற்றி யெல்லாம் உங்கள் கருத்து என்ன?
பேரா.ஜேசுதாசன்: தேம்பாவணியில் மொழியழகே இல்லை. மிகவும் வலிந்து உருவாக்கப்பட்ட கவிதை நடை. அது ஓர் அசலான படைப்புமல்ல.
ஜெயமோகன்: இரட்சண்ய யாத்ரீகம்?
பேரா.ஜேசுதாசன்: பில்கிரிம்ஸ் பிராக்ரஸ் ஒரு மேலான நூல். இரட்சண்ய யாத்ரீகத்தில் உள்ள அத்தனை கருத்துக்களுடனும் எனக்கு முழு உடன்பாடு. தேம்பாவணியைப் பற்றியும் அப்படித்தான் சொல்வேன். ஆனால் அதெல்லாம் இலக்கியமாக ஆகவில்லை.
ஜெயமோகன்: கம்பனுக்கு அடுத்தபடியாக தமிழ் மரபின் பெரிய கவிஞர் யார்?
பேரா.ஜேசுதாசன்: இளங்கோவை சொல்வதா வள்ளுவரைச் சொல்வதா? வள்ளுவர் பெரிய கவிஞர்தான் சந்தேகமில்லை. எப்போதைக்குமான நீதியை சுருக்கமாகச் சொன்னவர். ஆனால் நீதியைச் சொல்வது கவிதையாகுமா? நீதியை கறாராகச் சொல்ல வேண்டும். கவிதையில் அது சாத்தியமே இல்லை. கவிதை ஓர் அனுபவம். அனுபவம் விதவிதமாக அர்த்தமாகலாம். சிலப்பதிகாரத்தைத்தான் சொல்ல வேண்டும்.
ஜெயமோகன்: எனக்குப் பல குறட்பாக்கள் உன்னதமான கவிதைகள் என்று தோன்றியிருக்கிறது.
பேரா.ஜேசுதாசன்: அப்படி நிறைய கவிதைகள் உள்ளன. சில இடங்களில் குறளில் நல்ல சித்தரிப்புகள் வருகின்றன. அழகான நேரடிப்பேச்சுகளும் உள்ளன. அவையெல்லாம் கவிதைகள் தான். ’கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க’ என்ற கவிதை வள்ளுவரே நேரில் கூறுவது போல உள்ளது. அந்த உணர்ச்சிப்பாங்கு சிறந்த கவித்துவம்தான்.
ஜெயமோகன்: கவிதை என்பது கூறப்பட்ட வரிகளிலிருந்து கவிதையனுபவம் விரிவடைந்தபடியே செல்வதுதானே? அது பல குறட்பாக்களில் உள்ளதே?
பேரா.ஜேசுதாசன்: அது நல்ல பார்வைதான் விரிவடைவது அனுபவமாக இருக்கவேண்டும். சிந்தனையாக இருக்கக்கூடாது.
வேதசகாயகுமார்: இன்று தமிழ்க்கல்வி மிக மோசமாக உள்ளது. மாணவர்களுக்கு இலக்கிய அனுபவம் வகுப்பில் கற்பிக்கப்படுவதே இல்லை. மாணவராக இருந்தபோது உங்கள் அனுபவம் எப்படிப்பட்டதாக இருந்தது?
பேரா.ஜேசுதாசன்: நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேரும்போது தமிழ் ருசி இருந்தது. ஆனால் குளச்சலிலும் திருவனந்தபுரத்திலும் கிடைத்த கல்வி அடிப்படையானது மட்டும் தான். அண்ணாமலையில் ஏசி. செட்டியார் தமிழ் எடுத்தார். அவருக்கு ரசனை உண்டு. மற்றவர்கள் வாசித்து அர்த்தம் சொல்வார்கள். அறம்- அறத்தை, செய-செய்வதற்கு, விரும்பு- விரும்புவாயாக என்ற மாதிரி இலக்கியத்தை ரசிக்க அங்கு இடமே இல்லை . டி.கெசி. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு வருவதாக இருந்தார். பண்டிதமணி அவரைக் கல்லூரி வளாகத்தில் நுழைய விடமாட்டேன் என்று சொல்லிவிட்டார். நாங்கள் மாணவர்கள் டி.கெ.சி. பேச்சைக் கேட்க சிதம்பரம் போனோம். ஒரு வீட்டு ரேழியில் டி.கெ.சி உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். கேட்பதற்குக் கொஞ்சம் பேர் வந்திருந்தார்கள். டி.கெ.சி ஒரு உலகத்தையே உருவாக்கிக் காட்டுவார். ஆனால் அவருடையது கவிதையின் ஆழத்துக்குப் போகும் ரசனை அல்ல. நயம் பாராட்டல் மட்டும்தான்.
பண்டிதமணியின் ரசனை வேறு மாதிரி. சாதாரணமாகப் பொருள் தான் கூறுவார். சில சொற்களுக்கு விசேஷ அர்த்தம் சொல்வார். அது முக்கியமான அனுபவமாக இருக்கும். ஆனால் பல்கலைக் கல்வியால் பெரிய பலனில்லை. ‘செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது நலம் எற்றுணையும் கண்டிலேன்…’
அ.கா. பெருமாள்: கா.சு. பிள்ளை எப்படி?
பேரா.ஜேசுதாசன்: அங்கு வரும்போதே அவருக்கு அறுபது வயதாகிவிட்டது. சைவசித்தாந்தம் நன்றாக எடுப்பார். தமிழ் ரசனை எல்லாம் அப்படி அப்படித்தான்.
அ.கா. பெருமாள்: கோ.சுப்ரமணியம்?
பேரா.ஜேசுதாசன்: அவர் நன்றாகப் பாடுவார். ஆனந்த பைரவியிலோ சங்கராபரணத்திலோ கவிதையைப் பாடி, அவரே ரசிப்பார். எனக்கு அது மனதைக் கவரவில்லை.
வேதசகாயகுமார்: அண்ணாமலை பல்கலையில் உங்களைக் கவர்ந்த ஆசிரியர் யார்?
பேரா.ஜேசுதாசன்: ஏ.சி. செட்டியார் நன்றாக எடுப்பார். அனால் மிகவும் கவர்ந்தவர் எஸ்.கெ. கோவிந்தசாமிப்பிள்ளை. அவர் தமிழாசிரியரல்ல, வரலாற்றுப் பேராசிரியர். வரலாற்றாய்வுக்கு உதாரணமாக வரும் தமிழ்ப் பாடல்களை விரிவாக அர்த்தம் சொல்லி ரசித்துச் சொல்லித்தருவார். கவிதையின் அகத்தைத் தொட்டுக் காட்டுவார். அவர் தமிழாசிரியராக வரவில்லையே என்று வருத்தப்படுவேன். அண்ணாமலையில் நான் கற்றது மொழியைதான், இலக்கியத்தை அல்ல.
வேதசகாயகுமார்: நீங்கள் இலக்கியத்தை எப்படிக் கற்பித்தீர்கள்?
பேரா.ஜேசுதாசன்: நான் ரசித்த கவிதையை எப்படி ரசித்தேன் என்று சொல்லுவேன். நாம் ரசிப்பதுதான் முக்கியம்.
ஜெயமோகன்: அது. கவிதை விளக்குவதில் கொண்டு போய் விடுமே? கவிதையை எப்படி அனுபவமாக விரித்தெடுப்பது என்பதைத்தானே கற்றுத்தர வேண்டும்.
பேரா.ஜேசுதாசன்: நான் எப்படி அதைச் செய்தேன் என்று மாணவன் கவனிப்பானே? அதை அவனும் செய்யலாமே? அது போதும். அது உதவியாக இருந்தது என்று பல மாணவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
வேதசாகயகுமார்: அன்று ஆசிரியர் மாணவர் உறவு எப்படி இருந்தது?
பேரா.ஜேசுதாசன்: பொதுவான நிலைமை தெரியாது. என் ஆசிரியர்கள் என்னிடம் தந்தைபோலப் பழகினார்கள். பன்னிருகை பெருமாள் என் முதல் ஆசிரியர். அவரது சொந்த விஷயங்களை யெல்லாம் கூட வகுப்பில் மாணவர்களிடம் பகிர்ந்து கொள்வார். இதோ நான் வீட்டில் அவரது படத்தை வைத்திருக்கிறேன். அவரது மாணவர்கள் எல்லோருமே அவரது நினைவைப் போற்றுகிறார்கள்.
சாசு பிள்ளை என்னிடம் மிகவும் பிரியமாய் இருப்பார். அவருக்கு சைவமதமே உயர்வு என்று விடாப்பிடியான எண்ணம். நான் துடுக்காகக் கேள்விகள் கேட்பேன். ‘கிறிஸ்தவப் பயலே உட்காருடா’ என்பார். ஆனால் என்னை மகன்போல நினைப்பார். வீட்டில் விருந்து என்றால், ஆள் அனுப்பி என்னைக் கூட்டிவரச் செய்வார். என் சொந்த விஷயங்களில் அக்கறை காட்டுவார். ஓய்வு பெற்றபோது திருவாவடுதுறை மடத்தில் கூப்பிட்டிருக்கிறார்கள், சில பதிப்பிக்கலாம் வருகிறாயா என்று என்னையும் கூப்பிட்டார். என் ஆசிரியர்களை நான் பெற்றது பெரிய பாக்கியம்.
வேதசகாயகுமார்: இன்று ஆசிரிய மாணவ உறவு ஏன் சீரழிந்துவிட்டது?
பேரா.ஜேசுதாசன்: படிப்பிப்பவர்களுக்கு வேலையில் அக்கறை கிடையாது. பிள்ளைகளை நேசித்தால் நம்மையும் நேசிப்பார்கள். அந்த பிராயம் அப்படிப்பட்டது.
அ.கா. பெருமாள்: இன்று வரும் மாணவர்கள் வேறுவழியே இல்லாமல் தமிழ் படிக்க வருபவர்கள், ஆர்வமே இல்லாதவர்கள். அன்று எப்படி?
பேரா.ஜேசுதாசன்: என்னுடைய காலகட்டம் அ.ச.ஞா, நான் எல்லாம் படித்த காலகட்டம். ஆனால் அன்றும் தமிழ் படிப்புக்கு மதிப்பு இல்லை. வேலை வாய்ப்பு குறைவு. சம்பளமும் குறைவு.
வேதசகாயகுமார்: நவீன இலக்கியத்தை பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சேர்ப்பதில் நீங்களே முன்னோடியாகச் செயல்பட்டீர்கள். நவீன இலக்கியம் சார்ந்த முதல் பல்கலைக்கழக முனைவர் ஆய்வு (புதுமைப்பித்தன் படைப்புகள் குறித்து பிள்ளை அவர்கள் செய்தது) நீங்கள் செய்த முயற்சியினால் உங்கள் கீழ் செய்யப்பட்டது. இதற்கான தூண்டுதல் என்ன?
பேரா.ஜேசுதாசன்: தமிழ்ப்பற்றுதான். நான் எதையும் இன்று உரிமை கொண்டாடவில்லை. பொதுவாக அன்று பல்கலைக்கழகங்களில் நவீன இலக்கியம் ஒதுக்கப்பட்டது. நவீன இலக்கியம் மீது மாணவர்களின் கவனம் விழவேண்டும் என்று விரும்பினேன். நான் புதமைப்பித்தனை முன்வைத்தபோது ரா.பி.சேதுப்பிள்ளை ஏளனம் செய்து ஒதுக்கிவிட்டார். அ. ஸ்ரீனிவாச ராகவனின் ஒரு நூலை முன்வைத்தபோது தெ.பொ.மீ. எதிர்த்தார். அவர்களெல்லாம் பெரிய ஆட்கள், நான் சாமானியன். ஒன்றும் செய்ய முடியவில்லை. மு. வரதராசனாரின் ஒரு படுமட்டமான நூலை தூக்கி வைத்துக்கொண்டு ரா.பி. சேதுப்பிள்ளை பேசினார். எல்லாமே பல்கலைக்கழக அரசியல். யாரோ ஒரு காவன்னா சுப்ரமணியபிள்ளையின் சுயசரிதையைப் பாடமாக வைத்தார்கள் இருவருமாக சேர்ந்து. எப்பேற்பட்ட சுயசரிதை. அம்மா கர்ப்பமானது, விரதம் இருந்தது, தொட்டிலில் போட்டு ஆட்டியது, தாலாட்டுப் பாடியது எல்லாம். பிறப்பதற்கு முன்பே ஆரம்பமான சுயசரிதை
நான் பொறுப்புக்கு வந்தபோது எனக்கு முக்கியம் என்று தோன்றிய சில விஷயங்களைச் சேர்த்தேன். நகுலனின் குருஷேத்ரம் தொகுப்பைகூட பாடபுத்தகமாக வைத்தேன்.
ஜெயமோகன்: வையாபுரிப்பிள்ளையுடன் அறிமுகம் உண்டா?
பேரா.ஜேசுதாசன்: நன்றாகத் தெரியும். திருவனந்தபுரத்தில் தானே வேலை செய்தார். அடிக்கடிப் போய்ப்பார்த்து பேசிக் கொண்டிருப்பேன். அவரது கருத்துகள் என்னை மிகவும் பாதித்துள்ளன. ஆனால் தனிப்பட்ட நெருக்கம் இல்லை.
ஜெயமோகன்: ஏன்?
பேரா.ஜேசுதாசன்: அதற்கு காரணம் சொல்ல முடியாது.
அ.கா.பெருமாள்: அவருக்கு நவீன இலக்கிய ஆர்வம் உண்டு. மஞ்சரியில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். ராஜி என்று ஒரு நாவல்கூட எழுதியிருக்கிறார்.
பேரா.ஜேசுதாசன்: அந்தச் சிறுகதைகளை அவர்தான் படிக்கவேண்டும். ஆனால் அவருக்கு இலக்கியத்தின் நிரந்தமான அம்சம் பிடிகிடைத்திருந்தது. ஆகவே பண்டிதத்தனம் இல்லை. புது இலக்கியம் பழைய இலக்கியம் என்ற பேதமும் இல்லை.
வேதசகாயகுமார்: அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பாரதியின் இடம் என்னவாக இருந்தது?
பேரா.ஜேசுதாசன்: பையன்கள் பாரதி விழா கொண்டாடுவார்கள். பெரும்பாலான பேராசிரியர்களுக்கு ஈடுபாடு கிடையாது. பாரதியை ஒரு கவிஞராக பண்டிதமணி ஏற்கவில்லை.
வேதசகாயகுமார்: தமிழ் பண்டிதர்களுக்குத் தற்கால இலக்கியம் பற்றி ஏன் இத்தனை வெறுப்பு ?
பேரா.ஜேசுதாசன்: முதல் விஷயம் அர்த்தம் சொல்ல நச்சினார்க்கினியரோ இளம்பூரணரோ இல்லை என்பதுதான். பொழிப்புரை இல்லாமல் என்ன பெரிய இலக்கியம் உரையாசிரியர் எதையாவது சொன்னால்தானே அதைவைத்து ஆராய்ச்சியெல்லாம் செய்ய முடியம்?
ஜெயமோகன்: இன்றுள்ள பல எழுத்துக்கள் கூட நச்சினார்க்கினியர்களின் பலத்தில்தான் நிற்கின்றன.
(பேராசிரியர் சிரிக்கிறார்)
ஜெயமோகன்: நமது மரபில் இலக்கியத் திறனாய்வும் சித்தாந்தமும் உண்டா ? நமக்கு உரையாசிரிய மரபு மட்டும் தானே உள்ளது?
பேரா.ஜேசுதாசன்: திறனாய்வுப் பண்பு கண்டிப்பாக இருந்தது. இல்லையேல் இத்தனை ரசனையும் தேர்வும் நடந்திருக்காதே. மேலான இலக்கியங்கள் அழியாமல் காக்கப்பட்டிருக்காதே? ஆனால் திறனாய்வை எழுத்தில் விவாதிக்கும் வழக்கம் இல்லை. உரைக்குறிப்பு எழுதும் பழக்கம் மட்டுமே இருக்கிறது.
சங்க இலக்கியத்தில் மீண்டும் மீண்டும் இலக்கியத்தரம் பற்றிய பேச்சு வருகிறது. ஒளவையார் பல இடங்களில் சொல்கிறார். தரமற்ற கவிதைகளுடன் தன் கவிதை சமானமாக கருதப்படுவதைக் கண்டிருக்கிறார். கம்பன்கூட கவிதைபற்றி நிறைய சொல்லி யிருக்கிறான். ‘சீரிய கூரிய செஞ்சொல்’ என்கிறான். உயர்ந்த தரம் உடைய, கனகச்சிதமான, அழகான சொல்லே கவிதை என்கிறான். ஆக அழகியல் பிரக்ஞையும் இருந்திருக்கிறது. எழுத்தில் இல்லை அவ்வளவுதான்.
ஜெயமோகன்: நம் உரையாசிரியர்களிடம் தர உணர்வு உண்டா ?
பேரா.ஜேசுதாசன்: அது அவர்களின் வேலை அல்ல. ஆனால் நச்சினார்க்கினியர் கவிதையை ஆழ்ந்து ரசிப்பவர் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. பொதுவாக நமக்கு கவிதை அழகியல் இல்லை. நமது கவிதையியல் (poetics) சம்ஸ்கிருத கடன் கொண்டதுதான். ஆனால் நாம் நமது தேவைக்கு ஏற்பத்தான் எடுத்துக்கொண்டோம். மெய்ப்பாட்டியலையும் அணியியலையும் எடுத்தோம். ஆனால் மீமாஞ்சையை விட்டுவிட்டோம்.
அ.கா.பெருமாள்: நாம் வடமொழியிலிருந்து இலக்கணங்களைத்தான் அதிகமும் எடுத்துக்கொண்டோம். வேற்றுமை உருபு காவிய இலக்கணம் எல்லாம். திறனாய்வுக் கொள்கைகளை விட்டுவிட்டோம். உதாரணமாக த்வனி சித்தாந்தம் போல
பேரா.ஜேசுதாசன்: இங்கே குறிப்பு இறைச்சி என்கிறோம்.
ஜெயமோகன்: த்வனி சித்தாந்தம் சொல்லின் உட்குறிப்புப் பற்றிய பார்வை அல்ல. அது மிக விரிவான அழகியல் கொள்கை மொத்த அறிவியக்கத்தையே வகுத்துவிட முயல்வது அது. எந்த அழகியல் சித்தாந்தத்தையும் போலவே அது ஒரு வாழ்க்கைப் பார்வையும்கூட. அது போலவே வக்ரோக்தி ஒரு முக்கியமான சித்தாந்தம். அது போல தமிழில் ஏதாவது உள்ளதா?
பேரா.ஜேசுதாசன்: இல்லைதான்.
வேதசகாயகுமார்: இப்போது தமிழின் தனிப்பட்ட அழகியல் சித்தாந்தமாக திணைக்கோட்பாடு டாக்டர் ஐயப்பப் பணிக்கர், முதலியோரால் உலக அரங்கில் முன்வைக்கப்படுகிறது.
பேரா.ஜேசுதாசன்: ஆம். திணை துறை என்று பார்க்கும் பார்வை நமக்கென உண்டு. அதில் ஒரு சித்தாந்த உள்ளடக்கமும் உண்டு. ஆனால் மரபில் அது ஒரு சித்தாந்தமாக முன்வைக்கப் படவில்லை. படைப்புகளை வகைப்படுத்தும் சட்டகமாக, அடிக்குறிப்புகளாக, உதிரி உதிரியாகத்தான் அது உள்ளது. ஆங்காங்கே கவிதைகள் மீது வெளிச்சம் விழச்செய்கிறது. சித்தாந்தம் என்பது வகைப்படுத்தல் மட்டுமல்ல, அது இலக்கிய ஆக்கம், வடிவம், வாசிப்பு எல்லாவற்றைப் பற்றியும் பேசக்கூடிய ஒரு முழுமையான பார்வையாகும்.
சுப்ரமணியம்: பழைய காலத்து தமிழறிஞர்களைப் பார்த்தால் தமிழ் படித்தவர்கள் குறைவு. பெரும்பாலானவர்கள் பி.ஏ.பி.எல். படித்தவர்கள் இது ஏன்?
பேரா.ஜேசுதாசன்: (சிரித்து) அவர்களுக்கு வக்கீல் வேலையில் வாய்ப்பு குறைவோ என்னவோ.
அ.கா. பெருமாள்: பொ. மீனாட்சி சுந்தரனார் எல்லாம் மிக வெற்றிகரமான வக்கீல்கள் தானே?
பேரா.ஜேசுதாசன்: நான் ஒரு வேடிக்கைக்காகச் சொன்னேன்.
வேதசகாயகுமார்: பொதுவாகத் தமிழிலக்கியத்தில் ஒரு புதுக்கருத்தைச் சொன்னவர்கள் எவரும் தமிழறிஞர்கள் அல்ல. வக்கீல்கள், போலிஸ் அதிகாரிகள், தபால்துறை அதிகாரிகள் போன்றவர்கள் தானே?
பேரா.ஜேசுதாசன்: எனக்குக் காரணம் தெரியவில்லை. ஒரு மறைமுகக் காரணம் சொல்லலாம். எந்தக்காலத்தில் தமிழாசிரியர்களுக்கு மரியாதை இருந்திருக்கிறது? அன்றெல்லாம் தமிழாசிரியரை தமிழ் பண்டிட் என்பார்கள். தமிழுக்காக தொடங்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்கூட என்ன வாழ்ந்தது. ஒரே வேலை செய்யும் ஆங்கிலப் பேராசிரியருக்கு 75 ரூபாய் சம்பளம். தமிழ் முன்ஷிக்கு 50 ரூபாய். தமிழுக்கு இழிவு இருந்தது. தரமான மாணவர்கள் படிக்க வரமாட்டார்கள். வந்தவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை வேறு. அவர்களும் நிறைய யோசித்திருக்கலாம். ஆனால் ஏழை சொல் அம்பலம் ஏறுமா என்ன?
அ.கா. பெருமாள்: இன்று கணிப்பொறியியல் தமிழ் படித்தாலும் ஒரே சம்பளம் ஒரே கௌரவம் இப்போது நிலைமை மாறவில்லை?
பேரா.ஜேசுதாசன்: அது ஒரு முக்கியமான கேள்விதான்.
வேதசகாயகுமார்: அவர்கள் படித்துவந்த மரபில் அந்தத் தடை இருக்கிறதா?
பேரா.ஜேசுதாசன்: என்ன தடை?
சுப்ரமணியம்: நாம் மரபில் உள்ள எல்லாக் கவிஞர்களையும் தெய்வத்தன்மை உடையவர்களாகக் கருதிவிடுகிறோம். ஒரு சாதாரணக் கவிஞரான பொய்யாமொழிப் புலவரைப் பற்றிக்கூட காளிதாசன் அளவுக்கு ஐதீகம் இருக்கிறது. முருகனே நேரில் வந்து பேசியிருக்கிறார் அப்படியானால் எப்படி விமர்சனப் பார்வை உருவாகும்?
பேரா.ஜேசுதாசன்: அது நம் மரபிலே உள்ளதுதான். நாம் புத்தகங்களையும் ஏட்டுச்சுவடிகளையும் புனிதமானதாகக் கருதி பூசை செய்கிறோம். என்னென்ன புத்தகங்கள்? மதன காமராசன் கதை நல்லதங்காள் பாட்டு. எல்லாவற்றையுமே மதிப்பாகப் பாதுகாத்து வைப்போம். நாம் பழைமையை வழிபடுகிறவர்கள். எல்லாவற்றையும் சடங்காக ஆக்கி மாற்றமுடியாததாகக் கற்பனைசெய்து கொள்வோம்
அ.கா. பெருமாள்: இதெல்லாம் எல்லா மொழியிலும் உள்ளதுதானே? எல்லா கவிஞர்களைப் பற்றியும் எல்லா மரபிலும் இதே போலத்தானே சொல்லப்பட்டிருக்கிறது? பிற இடங்களில் மட்டும் விமர்சனப் பார்வை எப்படி வந்தது?
பேரா.ஜேசுதாசன்: அங்கெல்லாம்கூட எத்தனை பேர் அப்படிப்பட்ட தெளிவான விமர்சனப்பார்வையுடன் சிந்தனையுடன் இருக்கிறார்கள்? தமிழிலும் அப்படி எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஏன் வேதசகாயகுமார் தமிழ் படித்தவர் தானே? ராஜமார்த்தாண்டன்….
ஜெயமோகன்: சி. மோகன், தமிழவன், பூர்ண சந்திரன், ராஜ் கௌதமன் என்று பலர்… ஆனால் இவர்கள் விதிவிலக்குகள் தானே? ஒருவேளை நம் மரபு பெரிதாக இருப்பது தமிழறிஞர்களை மலைக்க வைத்திருக்குமோ?
பேரா.ஜேசுதாசன்: அப்படி ஒன்றும் நம் மரபு பெரியதுமல்ல, உயர்ந்ததுமல்ல. சடங்கு போலப் பழைமையை வழிபடுவதனாலும், மதத்துடன் சேர்த்து இலக்கியத்தைப் பார்த்ததனாலும் ஏராளமான நூல்கள் நம்மை வந்து சேர்ந்திருக்கின்றன, அவ்வளவுதான். காவியம் என்கிறோம்,கம்பன் மட்டும்தானே இருக்கிறான்? அவனுக்கு நிகராக எத்தனை பேர் இருக்கிறார்கள்? பெரும்பாலான படைப்புகள் சாதாரணமானவைதானே? பிறகு அதைச் சார்ந்த பாண்டித்தியமும் வளர்க்கப்படும் ரசனையும் சாதாரண மானதாக இருப்பதில் என்ன ஆச்சரியம்.
ஜெயமோகன்: நான் இதைப் போன்ற ஒரு கருத்தைச் சொல்லி கனடாவில் கூட நண்பர்களிடையே விவாதமாக ஆகிவிட்டது. பாரதியை ஒரு பெருங்கவிஞனாகக் கொள்ளமுடியாது என்றேன். உங்கள் தரப்பு என்ன?
பேரா.ஜேசுதாசன்: பாரதி பொட்டுப் பொட்டாக சில பாடல்களை எழுதியிருக்கிறார். கண்ணம்மா பாடல்கள் நல்ல கவிதைகள். பிறகு குயில்பாட்டு, பாஞ்சாலி சபதத்தில் சற்று நாடகீயத் தன்மை உண்டு. ஆனால் முழுமை இல்லை. வாழ்க்கை பற்றிய அடிப்படையான பார்வையும் அதிலிருந்து பிறந்த முழுமையான கலித்துவமும் இல்லை. வாசக நிறைவை அவர் படைப்புலகு தரவில்லை. கம்பனைப் பார்த்தால் ஒரு விசுவரூபம் போலிருக்கிறது. நம் வாழ்க்கை முழுக்க பார்த்தபடியே இருக்கலாம் என்று தோன்றுகிறது. எத்தனை பயணம் செய்தாலும் தீராத கவித்துவம் இருக்கிறது. ஒரு விமர்சக நண்பர் இருந்தார். கேரள கையெழுத்துப்பிரதி துறையில் வேலை பார்த்தார். மலையாளத்தில் பெரிய ஆள்- பெயர் மறந்து போய்விட்டது. பாரதி கவிதைகள் படித்தீர்களா எப்படி இருக்கிறது என்று கேட்டேன். பரவாயில்லை மிட்டாய் சப்பியதுபோல இருக்கிறது என்றார். அதுதான் சரி. சிறிய சிறிய இனிமைகள். அவவளவுதான் பாரதி. உண்மையான கவிஞன், ஆனால் பெருங்கவிஞன் அல்ல. ஷேக்ஸ்பியர் எழுதிய மொழியில் இன்னொருவனை கவிஞன் என்று சொல்ல எத்தனை யோசிக்கவேண்டும்! கம்பன் ஷேக்ஸ்பியரை படவும் ஒரு படி மேலான மகாகவிஞன். அவனில் என்னென்னவோ உண்டு. தத்துவம், அறவியல், மனித குணச்சித்திரங்கள், நுட்பங்கள், இயற்கைக் காட்சிகள், தர்ம மோதல்கள், பெரிய துக்கங்கள், மொழி விளையாட்டு… என்னென்னவோ…
(மேலும்)