பூர்த்தியூ- விவேக்

அன்பிற்குரிய ஆசிரியர் ஜே சார் அவர்களுக்கு,

சமீபத்தில் வாசித்து முடித்த ஒரு முக்கியமான புத்தகத்தை பற்றிய என்னுடைய ரசனை கட்டுரையைத் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் எப்பொழுதும் சலிக்காமல் சொல்லிக்கொண்டிருக்கும் நவீன இலக்கியம் எதிர்கொள்ளும் சவால்கள் சிலவற்றை ஒரு சமூகவியலாராக பியர் பூர்தியு (Pierre Bourdieu) எடுத்துக்காட்டுகிறார். இலக்கியம் மட்டுமல்லாமல் பண்பாட்டு தயாரிப்பு களங்களாக (cultural producers) விளங்கும் கலை, அறிவியல், தத்துவம் போன்ற அனைத்து துறைகளில் எவ்வாறு இதழியலாளர்கள் (journalists) மற்றும் தொலைக்காட்சியின் (TV) தாக்கம் இருக்கிறது என்பதை தனது ஆய்வறிக்கையில் மூலம் விளக்கியுள்ளார்.

ஆசிரியர் & புத்தகத்தின் பின்புலம்:

  • இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான சமூகவியல் சிந்தனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் பியர் பூர்தியு, எமில் துர்கம், மார்ஸ் வெபர் ஆகியோரின் வரிசையில் வைத்து மதிக்கப்படுகிறார். இவருடைய நூல்கள் உலகின் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன என்பதை விட, குறைந்த எண்ணிக்கை மக்கள் பேசும் காடலானிய, துருக்கிய, எஸ்டோனியா, நார்வீஜிய, ரோமானிய மொழிகள் போன்றவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பது இவருடைய சிந்தனையின் தாக்கத்தைக் காட்டும். சிந்தனையாளர்களின் பணி மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் இவர் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தார்.
  • 1996 பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட Sur la Television இக்கட்டுரை தொகுப்பு இவ்வாசிரியர் college de france இல் பேராசியராக பணிபுரிந்த பொழுது பாடத்திட்டமாக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. College de france grants no degrees and gives professors (who are elected by other members) exceptional freedom to pursue their research and an especially public venue to present that research, all research are free and open to public. Prominent scholars of this institute include Louis Pasteur, Henri Bergson and Marcel Mauss and closer to present, Raymond Aron, Michel Foucault, Roland Barthes and Claude Levi Strauss.
  • இப்புத்தகம் ஆங்கில மொழிபெயர்ப்பாக “On television”, translated from the french by Priscilla Parkburst Ferguson கிடைக்கிறது. இப்புத்தகத்தை பிரெஞ்சு இல் இருந்து நேரடியாக தமிழில் வே.ஸ்ரீராம் அவர்கள் மொழிபெயர்த்து Cre-A வெளியீடாக கிடைக்கிறது. நான் வாசித்தது தமிழ் மற்றும் ஆங்கிலம்.

உள்ளடக்கம்:

  • செய்திகள், அறிவுபூர்வமான தகவல்கள், விவரங்கள் அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை தயாரித்து பரப்பும் கருவி என்றளவில் தொலைக்காட்சி பற்றி பேசுவது இந்த புத்தகத்தின் நோக்கம் இல்லை. மாறாக, தொலைக்காட்சியின் முக்கியமான பணிகளில் ஒன்றான (சொல்லாடல் மூலமாக) விவரிப்பதை விட (காட்சிகளின் துணைகொண்டு) காட்டுவதன் மூலம் எவ்வாறு பிற அறிவுத்துறைகளில் இக்கருவி ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை கூறுவதே நோக்கம்.
  • இந்த ஆய்வின் மூலமாக pierre வலியுறுத்தும் இரண்டு முக்கியமான உண்மைகள், முதலாவதாக – எல்லாவற்றையும் எப்படி அளிப்பது, எப்படி விவரிப்பது என்பது குறித்து இந்த உலகத்தில் மேலோங்கி இருக்கும் வழக்கமான வழிமுறைகளை உறுதிப்படுத்துவதன் மூலம் தொலைக்காட்சியின் அடையாள செயல்பாடு இந்த உலகம் இருக்கும் நிலையை அப்படியே வைத்திருக்க முயல்கிறது. வரலாறு கண்டிராத அளவுக்கு பெருவாரியான மக்களை சென்றடையும் எல்லா எல்லாச் சாதனைகளையும் (தொழில்நுட்ப, பொருளாதார, அரசியல்) பெற்றிருக்கும் தொலைக்காட்சி, மக்களில் பெரும் பகுதியினரின் சிந்தனையை உருவாக்கும் ஏகபோக அதிகாரத்தை தானாகவே அபகரித்துக் கொண்டு விட்டது. இரண்டாவதாக – எல்லாருக்கும் இசைவுடையதாக இருக்கும் தகவலை கொடுப்பதற்காக யதார்த்தத்திலிருந்து விலகி இருக்கும் வடிவத்தை பின்பற்றி, ஏராளமான மக்களை சென்றடையும் தொலைக்காட்சி கருவி ஒருவிதமான அடையாளச் செல்வாக்கை செலுத்துகிறது.
  • பரபரப்பை நம்பியிருக்கும் பத்திரிக்கைகளின் பிரதான மேய்ச்சல் நிலமான துணுக்கு செய்திகளும், இரத்தமும், பாலியலும், திடுக்கிடும் நிகழ்வுகளும் எப்போதுமே நன்றாக விலைபோகின்றன. ஆகவே பத்திரிக்கைகளுடன் போட்டிக்கு இறங்கிய தொலைக்காட்சி எவ்வாறு இச்செய்திகளை மிகைப்படுத்தி, அசாதாரணமாக்கி, விஷேஷத்தமையை தங்களுக்கு தகுந்தமாதிரி உருவாக்கியது என்பதை தர்க்கபூர்வமாக தொகுத்துள்ளார். நிகழ்ச்சிகளை பதிவு செய்யும் ஒரு கருவியாக தன்னை அருவித்துக்கொள்ளும் தொலைக்காட்சி சிறிதுசிறிதாக யதார்த்தத்தை உருவாக்கும் கருவியாக ஆகிவிட்டது. சமூக வாழ்க்கை தொலைக்காட்சியால்தான் விவரிக்கப்பட்டு – பரிந்துரைக்கப்படுகிறது. தொலைக்காட்சியின் பரந்த வீச்சினாலும் முற்றிலும் அதனுடைய செல்வாக்கினாலும் தொலைக்காட்சி ஏற்படுத்துகிற விளைவுகள், அவற்றுக்கு முன்னுதாரணங்கள் இல்லாமல் இல்லை என்றாலும் கூட, இதுவரை முற்றிலும் அறிந்திராதவை.

வாசிப்பனுபவம்:

  • ஜெ நீங்கள் எப்பொழுதும் வலியுறுத்தும் இலக்கியத்திற்கும் வணிக எழுத்துக்கும் உள்ள வேறுபாடு, மற்றும் உங்கள் தளத்தில் வெளிவந்த பரப்பியும், மின்பரப்பியம் போன்ற கட்டுரைகளை வாசித்த ஒருவர் இப்புத்தகத்தின் வாயிலாக ஒரு முழுமையான உரையாடலை, சிந்தனைக்கும்-பொழுதுபோக்கிற்கும் உள்ள வேறுபாட்டை கண்டடைய முடியும். பியர் பூர்தியு ஒரு சமூகவியலாளர் என்பதால் அவரின் ஆய்வின் மூலமாக வரலாற்று ரீதியாக கணிதம், இலக்கியம், கவிதை, தத்துவ சிந்தனை போன்ற மனிதகுலத்தின் மிக உன்னத படைப்புகளாக பலரும் கருதும் படைப்புகள் எல்லாமே தொலைக்காட்சி பார்வையாளர் கணிப்பு போன்றவற்றிற்கு எதிராக, வர்த்தக உலகின் நியதிகளுக்கு எதிராகத்தான் படைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
  • மிக முக்கியமானதும் எதிர்பாத்திருக்க முடியாததுமான நிகழ்வு என்னவென்றால், எல்லாவிதமான பண்பாட்டுத் தயாரிப்புச் செயல்பாடுகளிலும் avant garde ஆன இலக்கியம், கலை தயாரிப்பு உட்பட தொலைக்காட்சியின் ஆதிக்கம் அசாதாரண முறையில் பரவியிருக்கிறது என்பது தான். வர்த்தக தளைகளிலிருந்து விடுபட்டுச் சுயேச்சையாக இருக்கும் படைப்புகளை உருவாக்குவதற்கு ஒருவருக்கு இருக்கவேண்டிய பொருளாதார, சமூக சூழ்நிலைகளுக்கும், அப்படிப் பெறப்பட்ட படைப்புகளை எல்லாருக்கும் எடுத்துசெல்லத் தேவையான சமூக சூழ்நிலைகளுக்கும் உள்ள முரண்பாட்டை தொலைக்காட்சி அதீத அளவுக்கு எதுசென்றுவிட்டதை வருத்தத்துடன் பதிவுசெய்கிறார்.
  • இப்புத்தகத்தில் உள்ள தொலைக்காட்சி பற்றிய அனைத்து விஷயத்தையும் நாம் இப்பொழுது எதிர்கொண்டிருக்கும் எல்லா காட்சி ஊடகத்திற்கும் (collective enterprise) பொருத்திப் பார்க்க முடிகிறது. ஒரு சின்ன குறை என்னவென்றால், இப்புத்தகம் பிரெஞ்சு பண்பாட்டு பின்புலத்தில் பிரான்ஸ் நாட்டு ஊடகவியலை அலசி ஆராய்ந்து அதன் வாயிலாக சமூகவியல் பிரச்சனைகளை முன்வைக்கிறது. எனவே வாசிக்கும் பொழுது இக்கருத்துகளை இந்திய/தமிழ் சூழ்நிலைக்கு பொருத்திப்பார்ப்பது சற்று சிரமமாக உள்ளது, மொழிபெயர்ப்பு ஆசிரியர் வே.ஸ்ரீராம் அவர்கள் முன்னுரையில் கொடுத்துள்ள கலைச்சொற்கள், மற்றும் இந்திய தொலைக்காட்சி பற்றிய ஒரு எளிய சித்திரத்தை பற்றிய கருத்துக்கள் போன்றவை இச்சவாலை எதிகொள்ள உதவியாக உள்ளது.
  • இப்படிப்பட்ட ஒரு படைப்பை வாசித்து முடித்தவுடன் உங்களை தொடரும் என்னைப்போன்ற வாசகர்கள் வந்தடையும் இன்னொரு முக்கியமான இடம் தமிழ் சூழலில் உள்ள அறிவுசார் வெற்றிடமும் அதை நிரப்ப இங்குள்ள சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களின் தேவையும்…ஒரு வேலை மஹாபாரதத்தை வெண்முரசாக மாற்றிய அந்த உழைப்பு இதற்கெல்லாம் ஒரு அறைகூவலாக அமையலாம்.

அன்புடன்,

விவேக்

***

முந்தைய கட்டுரைஅருண்மொழியின் நூல் வெளியீடு
அடுத்த கட்டுரைஏழாம் உலகம்- கடிதங்கள்