தே- ஒரு கடிதம்

தே ஓர் இலையின் வரலாறு வாங்க
வரலாறு எனும் குற்றக்கதை- சௌந்தர்
ஓர் இலை, ஒரு வரலாறு- லோகமாதேவி
ஜெ,

ராய் மாக்ஸமின் மூன்று நூல்கள் குறித்த அறிமுகத்திற்கு நன்றி. ‘தே – ஒரு இலையின் வரலாறு’ உப்பு வேலி வெளியீட்டுக்கு அடுத்து உடனடியாக மொழிபெயர்க்க ஆரம்பித்து இப்போதுதான் முடித்திருக்கிறேன். துண்டுக்குறிப்பைப் படித்துவிட்டு அதை நாடுகடந்து தேடிச் சென்ற ராயின் உத்வேகம் எனக்கில்லை என்பதுதான் உண்மை.

இரு புத்தகங்களையும் சேர்த்து ராயை ஒரு மக்களின் வரலாற்றாசிரியன் என அழைக்கத் தோன்றுகிறது. பொதுவாக வரலாறு பேரரசுகளையும் சாதனையாளர்களையும் பெரும் நிகழ்வுகளையும் முன்வைத்துப் பேசப்படும் ஒன்றாக இருக்கும்போது, ராய் அந்நிகழ்வுகளில், அவ்வரசுகளின் கீழ் மக்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்பதில் அதிக கவனம் செலுத்துகிறார். அதற்கான தகவல்களைத் தேடிச் செல்கிறார் அவற்றையே முன்னிறுத்தவும் செய்கிறார்.

‘தே’ புத்தகத்தை அவர் துவங்குவதே ஒரு கொள்ளைக்காட்சியிலிருந்துதான் ஒரு பொருள் எத்தனை முக்கியமாக இருந்தது என்பதற்கு அது எத்தனை தூரம் கொள்ளையடிக்கப்பட்டது அல்லது கடத்தப்பட்டது என்பது அருமையான சான்று. ஒரு வெஸ்டர்ன் சண்டைப்படத்தைப்போல விறுவிறுப்பாக அக்காட்சிகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

நீங்கள் ரசிக்கும் ராயின் நுட்பமான, ஆங்கிலேய நகைச்சுவை உணர்வு தொடர்ந்து புத்தகத்தில் வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. அதுவும் வலிந்து திணிக்கப்பட்ட கேலி போலல்லாமல் வரலாற்றுத் தகவல்களாகவே வருகின்றது. ராய் மக்களின் வரலாற்றாசிரியன் என்று சொல்வதற்கு அதுவும் ஒரு காரணம். உதாரணமாய் போர்ச்சுகீசிய மணப்பெண்   காத்தரின் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லெஸை மணந்துகொள்ள துறைமுகத்துக்கு வந்திறங்குகிறாள். செய்தி நாடெங்கும் பரவுகிறது. மக்கள் வீட்டின்முன் பான்ட் ஃபையர் (கொண்டாட்ட நெருப்பு) மூட்டிக் கொண்டாடுகிறார்கள். சார்லஸ் நிறைமாதக் கர்ப்பிணியாயிருக்கும் தன் வைப்பாட்டியின் வீட்டில் இருக்கிறார். ‘அவள் வீட்டின் முன் பான்ட் ஃபயர் ஏற்றப்படவில்லை’ என்கிறார்.

காத்தரின் கொண்டு வந்த வரதட்சணைகளின் ஒன்று ஒரு பெட்டித் தேயிலை. அவர் தேயிலைக்கு ஏற்கனவே அடிமையாயிருந்தார். அவர் மூலம் இங்கிலாந்தின் மேட்டுக்குடிகளுக்குத் தேயிலை பயன்பாடு பரவியது. காத்தரின் கொண்டு வந்த இன்னொரு வரதட்சணை ‘பாம்பே’. இப்படி சிறுசிறு தகவல்களின் வழியே ஒரு பெரும் சித்திரத்தை, மாபெரும் மொசைக் ஒன்றை உருவாக்குவதுபோல உருவாக்கியுள்ளார் ராய்.

தேயிலை பொதுமக்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதித்தது என்பதே புத்தகத்தின் மைய நோக்காக எடுத்துக்கொள்ளலாம், குறிப்பாகத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் எப்படி கொடுந்துயரங்களால் வாடி மடிந்து போனார்கள் என்பதைக் குறித்த வரலாறுகள் மனதை வாட்டுபவை. அசாம் தோட்டங்களுக்காக ஆங்கிலேயர்த் தலைமையில் வட இந்தியக் ‘கூலிகள்’ வேட்டையாடப்பட்டுள்ளனர். ஆப்ரிக்கர்களை வேட்டையாடிச்செல்ல ஒரு வணிக அமைப்பு உருவாகியிருந்ததைப்போல இங்கும் ஒரு அமைப்பு இயங்கியிருக்கிறது என்பது அதிர்ச்சி தரும் தகவல்.

தமிழகத்திலிருந்து இலங்கைத் தோட்டங்களுக்கு கடுமையான வழித்தடங்களைத் தாண்டிச் சென்று சேர்ந்த தமிழர்களைப் பற்றியும் அவர்கள் பாதையெங்கும் மடிந்து பெயரற்ற கல்லறைகளில் புதைக்கப்பட்ட வரலாற்றையும் பின்னர் இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போருக்கும் இதற்கும் என்ன தொடர்புகள் இருந்தன என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். இதனாலேயே இப்புத்தகம் தமிழில் வாசிக்கப்படவேண்டும் என அவரது முன்னுரையிலும் குறிப்பிட்டுள்ளார்.

பாஸ்டன் டீ பார்ட்டி, ஈஸ்ட் இந்தியா கம்பெனி, ஓப்பியப் போர்கள், சிப்பாய்க்கலகம், ஹாங்காங் உருவான கதை  என நாம் அறிந்த  பல வரலாற்று நிகழ்வுகளையும் மேற்சொன்னது போன்ற சின்னஞ்சிறு தகவல்களின் வழியே நம் கண்முன்னே விவரிக்கிறார்.

அதேபோல தோட்ட மேலாளராகத் தான் கண்ட அன்பவங்களைப் பகிர்ந்துகொள்ளும்போதும் அப்பெரும் வரலாற்றின் நேரடி சாட்சியாக நம்முன் நிற்கிறார். ஆப்ரிக்காவின் புரட்சி வரலாற்றின் பக்கங்களையும் தொட்டுச் செல்கிறார்.

பல்துறைகளைச் சார்ந்த, நுண்தகவல்களுடன் எழுதப்பட்டிருக்கும் தே – ஒரு இலையின் வரலாற்றை தமிழ் வாசகர்களுக்கு சற்றுப் பிந்தியேனும் தர முடிந்ததில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

அன்புடன்
சிறில் அலெக்ஸ்

முந்தைய கட்டுரைமுப்பது வருட சிந்தனை   -மஞ்சுநாத்
அடுத்த கட்டுரைஇல்லாத நயம் கூறல்