மழைப்பாடல் வாசிப்பனுபவம்

ஆசானுக்கு வணக்கம்,

காலத்தின் விரிவு, சிவநடனத்தின் சாரமாக சொல்லப்படும் தொன்மத்தில் இருந்து விரியத் தொடங்குகிறது “மழைப்பாடல்”.

தாயானவள், தன் கனவை தனது குழந்தை மீது சுமத்தும் பழக்கம் இராமாயணம், மகாபாரதம் காலம் தொட்டு இன்றும் நீடிப்பது இனிய தண்டனை. அதற்காக அனைத்து தாய்மார்களும் கூறும் காரணங்கள் கொண்டு, எத்தனை காவியங்கள் இன்னும் தோன்றுமோ! பேராற்றல்களும் வணங்கி அடங்கும் ஒற்றைச்சொல் “அன்னை”. மழைப்பாடலில் சத்யவதி மட்டும் அல்ல, எல்லா அன்னையரும் அவ்வண்ணமே. பீஷ்மர் செய்ய இருக்கும் ஒரு அறமீறலுக்கான ஆணை, “அன்னை” சத்யவதியால் அவர் முன் வைக்கப்படுகிறது. ஒரு பெரும்போரை தவிர்க்கும் பொருட்டு, அஸ்தினபுரியின் குருதி மண்ணில் வீழுவதை தவிக்கும் பொருட்டு அவர் விருப்பமில்லாத  அனைத்தையும் சகிக்கிறார். இம்முறை அவரது மகனான விதுரனும், சத்யவதியுடன் சேர்ந்து கொள்கிறான். சத்யவதியின் ஆண் வடிவமாகிறான் விதுரன். அவனின் மதிசூழ்கை, பீஷ்மரின் முடிவுகளை அவரே மறுபரிசீலனை செய்யும் இடத்திற்கு தள்ளுகிறது. பீஷ்மரின் நாடு திரும்புதலை நாடறிவிக்க விதுரன் செய்யும் சூழ்ச்சி, அவன் நினைத்த பலனையே அருள்கிறது.

வெண்முரசு நூல்வரிசையில்,இந்நூலுக்கு மற்றொரு பொருத்தமான தலைப்பு “சூழ்மதிச் சதுரங்கம்”. இதில் முக்கிய பங்காற்றும் அனைவருமே தனக்கென ஒரு இலக்கை வைத்துக்கொண்டு எதிர்வரும் அனைவரையும், இலக்கை அடையும் யுக்தியில் ஒரு முன்னகர்வாகவே பார்க்கின்றனர். விதுரனையும் பீஷ்மரையும் தவிர. அவர்கள் இருவரும் “நேர்ச்சை” என அஸ்தினாபுரிக்காக நேர்ந்து விடப்பட்டவர்கள். ஆனால் அவர்களுள் ஒருவருக்கு போர் நிகழ்ந்து அஸ்தினபுரி காக்கப்படவேண்டும், மற்றொருவருக்கு தன் வாழ்நாளில் அப்போர் நிகழவே கூடாது. யாதவர்களுக்கு சத்ரியர்களாக வேண்டும். சத்ரியர்களுக்கு நாடு நிலையாகி, பெருகவேண்டும். காந்தாரத்திற்கு மகதம் வேண்டும். மகதத்திற்கு அஸ்தினபுரியை விழுங்க வேண்டும். இளவரசிகளுக்கு பேரரசியாக வேண்டும். பேரரசிக்கோ அஸ்தினபுரியை நாடாளும் குருதி வேண்டும். இவற்றை அடைய எல்லோர் முன்னும் ஒரு பெருந்தடை உள்ளது. இத்தகைய மாபெரும் பின்னல்களுக்குள் விதுரரின் மதிசூழ்கை அஸ்தினபுரியின் பக்கம். சிலிர்ப்பு.

அன்றும், இன்றும் அதிகாரத்திலும், அதன் பசியிலும் உழலுபவர்களுக்கான தேவையுள்ள பல கூற்றுகள் இந்த பாகத்தில் இடம்பெற்றுள்ளது. வாசித்துத் தெளிபவர்கள் பாக்கியவான்கள். அதிகாரத் திமிரில், அறிஞர்களையும், துறையியல் மேதைகளையும்  இழிவு செய்யும் பழக்கம் (இன்றும் கூட) பாரத வருஷத்தின் தலையாய தன்னியல்புகளுள் ஒன்று போலும். அஸ்தினபுரியின் இளவரசர் ஆகச்சிறந்த “மதியூகி”யான விதுரனை சொல்லுக்குச் சொல், விளிக்குவிளி “மூடா” என்கிறார். அவனும் புன்னகையால் அவற்றை கடக்கிறான். அதுவே இன்றும் நிகழும் நிதர்சனம். எக்காலத்திற்கும் பொருந்துவதுதானோ அதிகாரம் எனும் “போதை”?

வெண்முரசு நூல்வரிசையின் முதல் நூலான முதற்கனலில், பாரத வருஷத்தின் தொன்மக்கதைகள் அணிபோல மிக அழகாக ஒருங்கே அமைந்திருந்தது. இந்நூலிலும் அவ்வாறே மிகச்சரியான இடங்களில் பொருந்திவருகிறது. தூரத்துசூரியன் பகுதியில், கர்ணனின் பிறப்பு இருவேறு விதமாக, சொல்லப்பட்டிருப்பது மேலும் சிறப்பு. ஒன்று தருவது தொன்மத்தின் சாரம். மற்றொன்று தருவது பெண்ணியத்தின் அகங்களுள் ஒன்று. பெண்ணியத்தின் அகத்தினுள் விரியும், கர்ணன் பிறப்பின் இரண்டாம் கதையானது அனகை, பிருதை, தேவகி என  பெண்களுக்குள் மட்டுமே நடைபெற்று, பெண்களுக்குள் மட்டும் உலாவுவது/பகிரப்படுவது போல சித்தரிக்கப் பட்டுள்ளதால் உருவகத்தன்மை (Metaphor) /குறியீட்டுத்தன்மையை அடைகிறது. இலக்கியத்தில், தர்க்க நோக்கு கொண்டு அலையும் நவீனத்துவ  இளைய தலைமுறைக்கும், தொன்மத்திற்குமான பாலமாக கர்ணபிறப்பு அமைத்துள்ளது. தொன்மத்தில் பேதையாக வரும் குந்தி, மழைப்பாடலில் அரசியல் சூழ் வினைஞர்/மதியூகி. இந்த யுகத்தின் பெண்ணுக்கானவள்.

பிறப்பு, இந்நூலில் நெடுக நாம் அறிவது. அவற்றில் தலையாயது,  “கலியுகத்தின் பிறப்பு”. கலி தன்னைத்தானே உண்டு இறுதியில் ஏதுமில்லாதது. கலியுக பிறப்பின் போதே அதற்கான யுகபுருஷர்களும் பிறக்கிறார்கள். அவர்களுடன் அவர் கதைகளும். கலியுகம் தன்னை அழிக்கவே பிறந்து கொள்வதால், கலியுக புருஷர்களும் கலியுடன் பிறந்து, அதனுடன் வளர்ந்து தங்களுக்குள் பொருதி, இறுதியில்ஏதுமற்றதாகின்றனர். ஒரு பிறப்பின் பின்னால் பல நோக்கங்களைக் கொண்டு காய் நகர்த்தும் அனைவருக்கும் முன்னால்,  தன் குழந்தைகளின் பிறப்பை, தன் தமையனின் குழந்தைகளின் பிறப்பை, அவர்கள் தன்னை அருகாமையில் இருப்பதை மட்டும் விரும்பும் பாண்டு, மனதளவிலும்  “வெள்ளை”யன் ஆகிறான். தோள்வலியற்ற அவன் பிள்ளைகளை தொடர்ந்து தோளில் சுமப்பதிலேயே வலிமை கொண்டவனாகிறான். பாண்டுவின் இறப்பு விவரிக்கப்பட்ட விதம் அழகானது. எந்தவித புனிதமும், அதற்கான சப்பைக்கட்டுகளும் இன்றி மிக எளிமையாக, அதே நேரம் கவித்துவமாக சொல்லப்பட்ட இறப்பு அது. பாண்டுவின் இறப்பிற்கு பின்னர் மாத்ரி எடுக்கும் முடிவில், காதல் முன்வைக்கப்பட்டு, குற்றவுணர்வு இலைமறைகாயாக வைக்கப்பட்டது சிறப்பு.

களிற்றுநிரையில், துரியோதனனின் பிறப்பை காந்தாரியும், சகுனியும் கனவில் அறியும் விதம், முதல், இரண்டாம் மூன்றாம் அலையெனத் தாண்டி முடிவில் எழும் பேரலை போல, மிக நுணுக்கமாக, சிறுகச்சிறுக சென்று உச்சம் தொடுவது சிலிர்ப்பூட்டுவதாக இருந்தது. தூரத்தில் புள்ளியாக தெரியும் கோபுரம், நெருங்க நெருங்க, கண்ணிலடங்கா பேருருக்கொள்வதுபோல துரியோதனனை கலியின் பிறப்பாக சித்தரிக்கும் விதம் தனது உச்சத்தை மெல்ல மெல்ல, அதே நேரத்தில் மிக இயல்பாக அடைகிறது. அவ்வாறு மிக இயல்பாக மிகையை அடைவதனாலேயே அப்பிறப்பு நம்மையும், அஸ்தினபுரியையும் பின்வருவனவற்றிற்கு தயார் செய்கிறது. துரியோதனின் முதன்மைப்பண்புகளாக தந்திரம், வலிமை, நிறைகொண்ட இருள் போன்றவற்றை சித்தரிக்கும் உருவகங்கள் புல்லரிக்கச்செய்பவை. இப்பண்புகள் அனைத்தையும் தனித்தனியே தன்னுள்கொண்ட உச்சபடைப்புகளாக நாம் முன்னமே  அறிந்த சகுனி, பிதாமகரின் தோழனாக வரும் உபாலன் என்னும் யானை, தன் கணவனுக்காக தான் ஏற்ற இருளை, இனிமேல் தன் மகனுக்காக அளிக்கத்துடிக்கும்  காந்தாரி ஆகியோர் பேரதிர்வு கொள்ள தன் இருப்பை உலகுக்குச் சொல்கிறது துரியோதனனின் “பார்த்திவ பரமணு”. கலியின் களிறு கொள்ளும் களியாட்டம் மற்றவரை கொஞ்சமேனும் அதிரச்செய்ய வேண்டாமோ! துரியோதனின் பிறப்பின் போது கிடைக்கும் “கதை”க்கு தீர்க்கஷ்யாமரின் விளக்கம் அருமையானது. அந்நிகழ்வு அனிச்சையாகவே, இந்நாவலில் எங்கும் முன்னர் குறிப்பிடப்படாத  பீமனையும், அவன் பிறப்பையும் சேர்த்தே வாசிப்போருக்கு நினைவூட்டுகிறது. இதுவே, இந்திய தொன்மத்தின் பலம்.

மழைப்பாடலில் என் விருப்ப நாயகன் “திருதிராஷ்டரன்”. மழைப்பாடல் முழுவதும் திருதிராஷ்டரன் மிக எளிய, உணர்ச்சிவசப்படக் கூடிய ஒரு மாபெரும் களிறு போல் தெரிகிறான். பீஷ்மரை யுத்தத்திற்காக அறைகூவல் விடும் போது காட்டு யானையாகவும், அவரால் அடக்கப்பட்ட பின்னர் பாகனுடன் கொஞ்சிக் குலாவும் கோயில்யானையை போலவும் இருக்கிறான். காந்தாரியின் மணவிழவில் மதங்கொண்டு திரியும் போர்யானை. அவனுக்கும், அவன் இளவலுக்கு நிரைநிரையாக  பிறக்கும் குழந்தைகளால் முற்றம் நிறையும் என பூரிக்கும் போதும், பாண்டுவுக்கு நாடளிக்க  சித்தமாகும் போதும், அன்பில் மகவை வருடும் “தாய் யானை”. தீர்க்கசியாமருக்காக, மிகவும் உணர்வெழுச்சி கொண்டு, அவரில் தன்னைக்கண்டு, அரசநெறியை மீறி அவரின் சிதையைக் காணச்செல்லும் போது, சகயானைக்காக (யானை டாக்டரில் வருவதுபோல) கண்ணீர் சுரக்கும் தோழமை கொண்ட யானை. பாண்டு வனம்புகும் பொருட்டு தன்னை பிரியும் போது கலங்கும் போதும், பாண்டுவின் இறப்பின் போதும் உருகும் போதும், இரயில் தண்டவாளங்களில் சிக்கி  தனது நிரையில் உள்ள ஒரு யானை குறையும் போது கண்ணீர் சிந்தும் தலைமை-யானை. இறுதியாக, துரியோதனின் பிறப்பின் போது, பிறந்ததே யானையாதலால்  அவன் தந்தை-யானை. ஒவ்வொரு முறையும் அவனும் சஞ்சயனும், யானை-பாகன் உறவை நினைவூட்டுகின்றனர். யானை நினைத்தால் எதுவும் செய்யலாம். ஆனால், பாகன் சொல்வதை மட்டும் கேட்கும் யானையாகிறான் “திருதிராஷ்டரன்”. தான் கண்டதோடு, தன் யானை உணருவதையும், மொழியாக்கி யானைக்கே மீண்டும் சொல்லும் பாகனாகிறான் “சஞ்சயன்”. இருவருக்குமிடையே இனியமுரணாக இருப்பது இசை மட்டுமே.

சார்வாகன் வரும் இடங்களிலெல்லாம் தத்துவ தெறிப்புகள் நிகழ்கின்றன. அது, எழுத்தாளரை எழுத்தின் மூலம் மட்டும் முன்னமே அறிந்தோருக்கு, எழுத்தாளரின் குரலாகவே ஒலிப்பது தவிர்க்க முடியாததாக ஆகிறது. திருதிராஷ்டரனின் மணிசூட்டு விழாவிலும் சரி, துரியோதனின் பிறப்பிலும் சரி, முடி சூட்டப்பட்ட பின், விதுரனுக்கும் அவருக்கும் நிகழும் உரையாடலில் காமம் என்பது என்ன? தான் துறந்தது என்ன? இன்னும் பற்றிக் கொண்டிருப்பது என்ன? என விதுரனை சினப்பதும் சரி, சார்வாகனின் தர்க்கங்கள், தத்துவ நிலையை அடியாகக்கொண்டு, அதன் மேல் நடமிடும் முனியின் ஆட்டமாக  நிகழ்கின்றன.

“சத்ரியர்கள் அனைவருமே விழியில்லாதவர்கள்”, “எதிர்த்தபின், பணிவென்பது மாபெரும் இழிவு”, “அனைத்துமறிந்தவன் வரலாற்றின் இளிவரலாக எஞ்சுகிறான்”, “ஏதும் இயலாதவர்களே பேரரசு கனவை காண்கின்றனர்”, “தன்னை கலக்காமல் தன்னைச் சார்ந்தவர்கள் அடையும் நிறைவை ஏற்றுக்கொள்வது எளிதல்ல” “கையறுநிலை போல அமைதி தருவது வேறொன்றுமில்லை”, “கொலைவேழத்தின் பெருங்கருணையை அறியும் காலடிப்பாகன்”, “சுவை என்றால் அது வெறும் மனப்பழக்கம்”, “உண்மை என ஒன்று இருந்தால் அது அனைவரும் அறியக்கூடியதாக இருக்காது, அவ்வாறு இருந்திருந்தால் அனைவருமே அதை அறிந்திருப்பார்கள்”, “உண்மை கரும்பாறை போன்றது.” “அழகிய சொற்கள் அழகிய பொய். மகத்தான சொற்கள், மகத்தான பொய்.” போன்ற வரிகள் இப்பகுதியில் இருக்கும் தத்துவமுத்துக்கள். பெருமழையில் சிப்பியை அடையும் மழைச்சிதர் போல அமைந்த துளிமுத்துக்கள். வாசிப்போர் புன்முறுவலுதிர்ப்பது இயல்பாக நிகழும்.

மழைப்பாடலின் முடிவில், எல்லாவற்றையும் விட தன் அகங்காரம் முற்றிலும் ஒழிந்து, எஞ்சி நிற்பது என்ன? என பேரரசி சத்யவதியும்,  தான் யார்? என இளவரசிகளான அம்பிகையும் அம்பாலிகையும் உணரும் தருணங்களின் தொகுப்பு மிக உணர்வுபூர்வமானது. ஒருவர் எல்லா கசப்புகளையும் ஒரு கணத்தில் மறக்க முடியுமா? முடியும். அவர்களின் முடிவு மனதினுள் கசப்பு கொண்டு வாழும் அனைவருக்கும் விடுதலை அளிக்கும் அருமருந்து. இம்மூன்று கதாபாத்திரங்களின் பயணம், (Character’s Arc) மிகவும் உணர்வுப் பூர்வமாகவும், அதே நேரத்தில் அவர்களின் ஆரம்ப நிலைக்கும், இறுதி நிலைக்கும் இடையே நிகழும் விரிவு அழகாவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மழைப்பாடலை வாசித்து முடித்தபின் தோன்றுவதை ஒற்றைச் சொல்லில் சொல்ல வேண்டும் என்றால், அந்தச் சொல் “மாஸ்டர்”.

தீ.நாராயணன்

முந்தைய கட்டுரைவேதசகாயகுமாரின் இலக்கியவிமர்சனக் குறுங்கலைக்களஞ்சியம்
அடுத்த கட்டுரைTHE STORY OF EKOLU