அறிவியலும், புனைவியலும் – கடிதங்கள்

விந்தைகளுக்கு அப்பால்

அன்புள்ள ஜெ,

மிக அருமையான விளக்கமளித்தற்கு நன்றி.  Unweaving Rainbow புத்தகத்தைப் பற்றிய அறிமுகத்திற்கும்  நன்றி. குறித்துக்கொண்டேன்.

அறிவியல் தர்க்க கண்டுபிடிப்புகள் மென்மேலும் செல்ல செல்ல, அவை மனிதனின் கற்பனையையும் உள்ளுணர்வையுமே மென்மேலும் விரிவடையச்செய்கின்றன. நீங்கள் சொன்னது போல் அவை மேலும் படிமங்களாக  உருவகங்களாக மாறி நம்மில் உறைகின்றன.

நட்சத்திரங்கள், விண்மீன் திரள்கள் போன்ற வானவியல் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு கிரேக்க, ரோம தொன்ம கடவுள்கள்/தேவதைகள் பெயர்கள் வழங்கிவருவதே  இதற்கு ஒரு உதாரணம்தான்.(நாஸா, அடுத்த மனித நிலவு பயணத்திட்டத்தில் இருக்கிறது. 2025 வாக்கில் மறுபடியும் மனிதனின் நடமாட்டம் நிலவில் இருக்கப்போகிறது அதற்கான திட்டத்தின் பெயர் Artemis, கிரேக்க தொன்மம்!)

நீங்கள் நிலவில் மானிடன் கால் வைத்த தருணத்தைப் பற்றி குறிப்பிட்டபோது டென்சிங்கின் சுயசரிதையில் வாசித்த ஒன்று நினைவிற்கு வந்தது.எவெரெஸ்ட் சாதனையை செய்துவிட்டு கீழிறங்கிய டென்சிங்கிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் சில – உச்சி முகடில் விஷ்ணுவைக் கண்டாயா? புத்த பகவானைப் பார்த்தாயா?

டென்சிங்கின் தாயார், அவர்தம் வாழ்நாள் முழுவதும் எவெரெஸ்ட்டின் உச்சியில் தங்க சிட்டுக்குருவி இருந்ததாக நம்பி வந்தார். கூடவே தங்க நிற பிடரி கொண்ட, நீலப்பச்சை வண்ண சிங்கமும் இருந்து வந்ததாக நம்பிக்கை.டென்சிங்கின் இல்லையெனும் பதில் எவெரெஸ்ட்/இமாலயத்தைப் பற்றிய மத நம்பிக்கைகளை, படிமங்களை எந்த விதத்திலும் குறைக்கவில்லை.

இது போன்று புறவய, அறிவியல் தர்க்கங்களை மேலும் எடுத்துச்செல்லவும் அதே சமயம் அவற்றை அகவயமாக, அழகியல் படிமங்களாக கூடவே கொண்டு விரித்துச் செல்வது மானுடன் எனும் உயிரியினால் மட்டுமே சாத்தியமாக இருக்கிறது. வேறு எதையும் விட இதையே  மானுடத்தின் சாதனை என்று பெருமிதத்துடன் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

மேலும், இத்தனை தூரம் விண்வெளி துறையில் முன்னேறி வந்திருக்கிறோம். நமது சூரிய குடும்பத்தைத்தாண்டி, நமது பால்வெளியைத்தாண்டி ஆயிரமாயிரம் பால்வெளிகளும் அதனுள் ஆயிரமாயிரம் கிரகங்களும் துணை கோள்கள் இருப்பதை தெரியவந்திருக்கிறோம். ஆனால், இன்று வரை நாம், மானுடன் எனும் உயிரி மட்டுமே இத்தனை பெரிய பிரபஞ்சத்தில் இருக்கிறோம்…எத்தனை தனியாக இருக்கிறோம்..! அதாவது நாம் இதுவரை அறிந்துள்ள பிரபஞ்சத்தில்…

சிவா கிருஷ்ணமூர்த்தி

***

அன்புள்ள ஜெ

கட்டுரை முக்கியமான ஒன்று. நான் என் கல்லூரியில் பேசிக்கொண்டிருந்தபோது அறிவியல் ஆய்வு மாணவர் ஒருவர் அறிவியல் அணுகுமுறையை உயர்த்தி அது மற்ற அறிதல்முறைகளை அழித்துவிட்டது என்று பேசிக்கொண்டிருந்தார். முதிய பேராசிரியர் கேட்டார். ‘மனிதனின் ஐந்து புலன்களில் ஒன்று மனிதகுலம் முழுமைக்கும் இல்லாமலாகிவிட்டாலும் இங்கே மானுடம் வாழும். ஆனால் அது இழப்பா இல்லையா?” அவரால் பதில் சொல்லமுடியவில்லை. பிறகு ‘இழப்புதான்’ என்றார். ‘அதேபோலத்தான் அறிதல் முறைகளும். இறுதியான முழுமையான அறிதல் முறைகள் என ஏதுமில்லை. மனிதன் தனக்கு கிடைத்துள்ள ஃபேக்கல்டிகளை பயன்படுத்தி உலகை அறிய முயல்கின்றான். எல்லா வகை அறிதல்களும் ஏதோ ஒருவகையில் உலகை வகுக்கின்றன. அவற்றின் ஒட்டுமொத்தம்தான் உலகம் என நாம் அறிவது. ஓர் அறிதல் முறைக்கு இன்னொன்று காம்பிளிமெண்டரி ஆகவேண்டுமே ஒழிய ஒன்று இன்னொன்றை தடுக்கவோ அழிக்கவோ முயன்றால் அது மனிதகுலத்துக்கு இழப்புதான்” என்றார்.

அறிவியலால் கற்பனை சார்ந்த அறிதல் அழியாது. மாறாக அறிவியல் அறிதல் கற்பனையையும் கற்பனை அறிவியலையும் நிரப்பி வளரச்செய்யும். அதுவே மனிதசிந்தனையின் வரலாறு

ஸ்ரீனிவாஸ்

முந்தைய கட்டுரைவெண்முரசின் வரைபடம்
அடுத்த கட்டுரைசடம் – கடிதம்-8