விகாஸ் எதிராஜ்

இவர் விகாஸ் எதிராஜ். சுமார் 3 மாதங்களுக்கு முன் “சென்னை முதல் ஆஸ்திரேலியா வரை சைக்கிளில்” என்கிற பயணத்தை துவங்கி உள்ளார். இவர் ஒரு 25 வயதான கட்டிட பொறியாளர். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக இந்த பயணத்திற்காக சேமித்து உள்ளார், திட்டமிட்ட படி கிளம்பி விட்டார். வியட்நாம் வரை சாலை மார்க்கமாகவும் அங்கிருந்து கடல் மார்க்கமாகவும் செல்ல திட்டமிட்டு உள்ளார், மொத்தம் 22000 கிமீ ஆகும் என எண்ணுகிறார், ஒரு நாளைக்கு சுமார் 80 கிமீ என செல்கிறார். ஒரு ஆண்டில் இதை செய்யப் போகிறார். குறைந்த செலவில் உண்டு கூடாரத்தில் தங்கி எளிமையாக இப் பயணத்தை மேற்கொள்கிறார். பண உதவிகளை ஏற்பதில்லை.

இவர் நேர் வழியில் செல்லவில்லை, நேபாள், பூட்டான், மியான்மார் என சுற்றிப் பார்த்துவிட்டு மலேசியா சிங்கப்பூர் என செல்கிறார். டார்ஜீலிங் சென்று  ஒரு பனிமலை ஏற்றமும் செய்துள்ளார். இப்போது மொத்தம் 3500 கிமீ பயணித்து அஸ்ஸாமில் குவாஹத்தி அருகே உள்ளார். இவர் நடத்தும் யூ ட்யூப் சேனல் அதற்குள் நல்ல வரவேற்பு பெற்றுவிட்டது.

பயணத்தில் ஒருவரின் ஆளுமை மோடுவதை நான் பார்த்துள்ளேன். இந்த மூன்று மாத அனுபவச் செறிவால் இவர் பரிணமித்து உள்ளார். இவரின் முதல் பதிவிற்கும் இப்போது உள்ளதற்கும் உள்ள இவரது மொழியும் மேம்பாட்டு இருப்பதை நாம் காணலாம். வெவ்வேறு மாநிலத்தில் இவர் சந்தித்த மனிதர்கள் அவர்கள் அளித்த உதவிகள் எல்லாம் அற்புதமானவை. சாமான்ய இந்தியா தன்னை ஒருதாய் மக்கள் என்று தான் இன்றும் உணர்கிறது. சக பயணிகளையும் சந்தித்துக் கொண்டே இருக்கிறார், உடன் பயணிக்கிறார். இந்த காணொளிகளை பார்க்கையில் இந்தியாவே பயணப் பித்தில் இருக்கிறது என்கிற எண்ணம் நமக்கு வருகிறது.

அச்சமின்மை, தயக்கமின்மை, பயண உறுதி ஆகிய குணங்கள் இவரது பலம். இவர் சேனலில் அதீத அக்கறையால் வழங்கப்படும் எதிர்மறை அதி  ஜாக்கிரதை அறிவுரைகளை முதிர்ச்சியுடன் கையாள்கிறார். இன்னும் முதல் நாள் உற்சாகத்தை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார், வலுவாகவே உள்ளார். விகாசுக்கு வாழ்த்துக்கள்.

முந்தைய கட்டுரைபேசும் புதிய சக்தி- ஒரு மலர்
அடுத்த கட்டுரைவேதசகாயகுமாரின் இலக்கியவிமர்சனக் குறுங்கலைக்களஞ்சியம்