வாசிப்பு மொழியின் அவசரத் தேவை- சக்திவேல்

ஆழங்களில் எல்லாமே விதியாகிறது- விஷால் ராஜா

அன்பு ஜெயமோகன்,

அந்தியூர் மணி அவர்கள் ஒரு நல்ல உரையாடலைத் துவக்கி வைத்திருக்கிறார். நாவல் வாசிப்பனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு வாசிப்பின் சாத்தியங்களை இன்னும் அகலப்படுத்துவது சமகாலத்தில் அவசியமானதாகும். இன்றைய சமூக அரசியல் சூழலில் இலக்கியமும் ஒரு அரசியல்கருவியைப் போலவே சொல்லப்படுகிறது. ஆக, இலக்கியத்தின் தனித்துவத்தைத் துலக்கப்படுத்தியாக மண்டை உடைத்தே தீர வேண்டி இருக்கிறது.

உரையாடலைத் தொடர்வதற்கு முன்பு, ஒரு சிறிய விளக்கத்தைத் தந்து விடுகிறேன்(குறிப்பாக, அசோகன் மற்றும் விஷால்ராஜா இருவருக்கும்). உங்கள் தளத்தோடு ஏழு ஆண்டுகளுக்கு மேல் தொடர்பில் இருக்கிறேன். முதலில் சக்திவேல் ஆறுமுகம் எனும் பெயரில் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தேன். தொடர்ந்து முருகவேலன் எனும் பெயரைக் கொண்டிருந்தேன். சமீபகாலமாக சத்திவேல் எனும் பெயரில் எழுதிக் கொண்டிருக்கிறேன். எனது ஊர் கோபிசெட்டிபாளையம். சமீபமாய் கவிஞர் புவியரசு ஆவணப்படத்தில் அவருடன் உரையாடியவனும் நான்தான். எங்கும் என்னை ஒளித்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அடையாளம் இல்லாமல் சமூகவலைதளங்களில் ஜல்லி அடிப்பது போன்ற விஷமச்செயல்களில் ஈடுபட வேண்டிய தேவையும் எனக்கில்லை. இதைக் கோபமாகச் சொல்லவில்லை. ஆதங்கத்தோடுதான் குறிப்பிடுகிறேன். (இரண்டு சக்திவேல்கள் இருப்பதனால் தொடர் குழப்பம்- மன்னிக்கவும். ஜெ)

அசோகன் அவர்களுக்காக ஒன்றைச் சொல்லியாக வேண்டி இருக்கிறது. ஜெயமோகன் தளம் என்பது இலக்கியம் என்றால் என்னவென்றே அறியாத / அறிய முற்படாத வாசிப்புக்குண்டர்கள் வந்து மல்லுக்கட்டும் இடமோ அல்லது வலைதள வம்பாளர்கள் வந்து வாய்க்கு வந்ததைப் பேச வாய்ப்பளிக்கும் இடமோ அல்ல என்பதை எல்லோரும் அறிவர். ஏன், அசோகனே கூட அறிவார்.

அப்படி இருக்க, காதுகள் வாசிப்பனுபவத்தைப் பற்றிய அசோகனது கடிதத்தில் மணி மரபை உள்மெய்யாகக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார். அதனால்தான் மரபுப் பிரசாரகர் அல்ல மணி என உடனே கடிதம் எழுதினேன். அதற்கு பதில் எழுதிய அசோகன், மணி மற்றும் எனது உள்மெய்யைச் சந்தேகிப்பதாகக் கடிதம் எழுதி இருந்தார். இருக்கட்டும். உரையாடலை இங்கிருந்து தொடர்ந்தால் அது அசட்டு கிளுகிளுப்பை வாசகர்களுக்குத் தரலாம். வேறு ஒன்றும் நேர்ந்து விடாது. அதனால் அதைச் செய்வதற்கு நான் விரும்பவில்லை. மேலும், அசோகனின் கடிதங்கள் வழி அவரின் உள்மெய்யைச் சந்தேகிப்பதையோ அல்லது வியப்பதையோ வாய்ப்பு அமையும்போது அவரிடம் தனிப்பட்டுச் செய்து கொள்கிறேன். இப்போது, சமகாலப் புது வாசகர்களுக்குப் பயனுள்ள வகையில் இவ்வுரையாடலைக் கொண்டு செல்ல முயல்கிறேன்.

இலக்கியத்தைப் பற்றி புரிந்து கொள்வதற்கான தீர்மானமான கோட்பாட்டையோ அல்லது தர்க்கரீதியான வரைபடத்தையோ இங்கு நான் தரவில்லை. ஆகவே, நான் சொல்ல வருபவனவற்றை நம் அறிதலுக்குத் துணை சேர்க்கும் தூண்டுகையாகக் கொள்ள வேண்டுகிறேன். வாசிப்பு என்பதை ஒரு அரசியல் நிகழ்வாகக் கொள்வதில் இருக்கும் ஆகப்பெருஞ்சிக்கலை விளங்கிக் கொள்வதற்கான சிறுமுயற்சியையே நான் மேற்கொள்கிறேன்.

சமூக வாழ்வில் ஒரு மனிதன் மூன்று வெளிகளுக்கு ஊடாக ஊசலாடிக் கொண்டே இருக்கிறான். அதை ஒருபோதும் தவிர்த்து விடவே முடியாது. ஆனால், தவிர்ப்பதற்கு முயற்சி செய்கிறான். தொடர்ந்து அவை பற்றி அல்லாடுகிறான். விளைவாய், அவனின் ஊடாட்டம் மூன்று கருத்துருக்களாய்த் துலக்கம் பெறுகிறது. அவை மரபு, நவீனம் மற்றும் இலக்கியம்(கலை). மூன்றையும் கொஞ்சம் அணுக்கமாக அலசுவோம்.

மரபு என்பது…

ஒரு மனிதன் தனது ஊடாட்டம் அல்லது அலைக்கழிப்புக்கான தீர்வை ’சமூகம் கடந்த வெளியில்’ தேட எத்தனித்த போது உரு கொண்டதே மரபு. இங்கு தனது அலைக்கழிப்புக்கான காரணத்தைக் கடவுள் அல்லது தனக்கு மீறிய ஒன்றாக முடிவு செய்து அதற்குச் சில விளக்கங்களை அளித்தான். அவையே மரபுத்தத்துவங்களாக இன்று நம்மிடையே இருக்கின்றன.

தனது அலைக்கழிப்புக்கான காரணத்தை மரபில் தேடும் ஒருவர் கடவுளிடம் பக்தி கொண்டோ(அவரிடம் ஒப்படைத்து) அல்லது கடவுளை விசாரிப்பதன்(ஞானம்) வழியாகவோ அதைப் பெற்று விடுவதாக உறுதியுடன் நம்புகிறார். அவரைப் பொறுத்த அளவில் தனது வாழ்க்கை ’இன்றைய நாள்’ மற்றும் ’நாளைய நாளில்’ இல்லை. அது ’நேற்றே’ முடிவு செய்யப்பட்டு விட்டது. இனி அவர் செய்வதற்கு எதுவுமில்லை. எல்லாம் கடவுள் சித்தப்படி அல்லது ஊழின் நெறியின்படியே நடக்கும். அவ்வகையில், மரபின்படி செய்வதற்கு எதுவுமில்லை.

மரபைத் தனது தளமாகக் கொண்டவர்கள் வாழ்வின் எப்பிரச்சினையானாலும் அதை ஒற்றைப்படையாய்க் கொண்டு போய் கடவுளின் தலையிலோ அல்லது ஊழின் கரத்திலோ ஒப்படைத்து விடுவார்கள். என்ன நேர்ந்தாலும் அதைப் பற்றிய மேலதிக விசாரணைக்குத் தயாராக மாட்டார்கள். எல்லாம் அவன் செயல் என்றோ அல்லது எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்றோ தங்களைச் சமாதானம் செய்து கொள்வார்கள். அதை ஒட்டியே தங்கள் வியாக்கியாங்களை அமைத்துக் கொள்வார்கள். இவர்களை நாம் மரபுவாதிகள் என்று கொள்ளலாம்(வாதத்திற்கு).

சமூகவெளி கடந்தவை குறித்த ஆக்கங்களைப் புராணங்களின் வழியாக மரபு வழங்கி இருக்கிறது. புராணங்களின் கருப்பொருளைக் கவனித்தீர்களானால் அது கடவுளை மையப்படுத்தியதாகவே இருக்கும். எச்சமயத்தைச் சேர்ந்த புராணமானாலும் அது கடவுளை அல்லது ஊழை வலியுறுத்தும் முன்முடிவோடே எழுதப்பட்டிருக்கும். பெரும்பாலும் புராணங்கள் சமூகவெளி மீறிய நிலையில் இருந்தே சமூகச்சிக்கல்களை எதிர்கொள்ளும்

மரபுவாதிகள் நிச்சயம் நம்பிக்கைவாதிகள். அவர்கள் சமூகவெளி கடந்திருக்கும் கடவுள் அல்லது ஊழினை மிகத்தீவிரமாக நம்புபவர்கள். அந்நம்பிக்கையின் வழியாகவே தங்கள் வாழ்நாளைக் கடத்துபவர்கள். எது நடந்தாலும் அதை கடவுளின் திருவிளையாடல் அல்லது ஊழின் களியாட்டம் என்றே நிறுவி ஓய்வார்கள்.

மரபுவாதிகளைப் பொறுத்தவரை, அவர்களின் பொற்காலம் ‘நேற்றில்’தான் இருக்கிறது. அதனால்தான் அவர்கள் ”அந்தக்காலம் போல வருமா?” என அடிக்கடி அங்கலாய்ப்பார்கள்.

மரபு மனிதன் தனக்கு நேரும் இன்னல்களுக்குச் சமூகவெளி கடந்த மீவியல்பையே மையமாகக் கொள்வான். அதனால்தான் சமூகத்தில் தன் பங்கு என எதுவும் இல்லை என்பதான கருத்தில் ஆழமான நம்பிக்கை கொண்டிருப்பான்.

மரபுமனிதனை நாம் மீமனிதன்(சமூகவெளி கடந்திருப்பதை நம்புவதால்) எனப் புரிதலுக்காக அழைக்கலாம்.

 

நவீனம் என்பது…

ஒரு மனிதன் தனது மனக்குழப்பங்களுக்கான காரணத்தை சமூகவெளியில் தேட முயலும்போது அவன் கண்டுகொள்வதே  நவீனம். இவ்விடத்தில் அவன் தன் அலைக்கழிப்புக்கான காரணத்தை இருமைகளின் முரண்பாடாக விளங்கிக் கொள்கிறான். அதாவது நேற்றைய மற்றும் இன்றைய சமூக அமைப்பின் முரண்பாடுகளாலேயே தங்களுக்கு நிறைவின்மை வருவதாக ஊகிக்கிறான்.  அவ்வூகத்தைத் தருக்கங்கள் வழி கோட்பாடாக வரிக்கிறான். அதன் அடிப்படையில் அன்று எதிர் இன்று என்பதன் முரண்பாடே நம் சிக்கல்களின் மூலம் எனும் இருமைக்கு வந்தும் சேர்கிறான்.

நினைவில் கொள்வோம். மரபில் ஒற்றைப்படையாய்(நேற்று) இருந்த காரணம் நவீனத்தில் இருமைகளின்(நேற்று எதிர் இன்று) மோதலாக அடையாளம் கொள்கிறது.

’நேற்றையை’ வரலாறும் ‘இன்றைய’ நிகழ்வுகளும் முரண்பட்டு நகர்ந்து செல்லும் ‘நாளையில்’ நமக்கான பொற்காலம் இருக்கிறது. ஆக, நேற்றைய வரலாற்றை ஆராய்ந்தறிந்து அதன் வழியில் இன்றைய சமூகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு, இன்றைய அவலத்தைப் போக்குவதற்கு நாம் பாடுபட வேண்டும். இவ்வாறு செய்யும்போது நமக்கான சிக்கலில்லா சமூகத்தை ’நாளை’ நாம் நிச்சயம் பெற்று விடலாம்.

நவீனவாதிகளைப் பொறுத்தவரை அவர்களின் நம்பிக்கை நாளைதான். இன்றைய நாள் என்பது அதற்காகக் களமாடுதற்கே. மற்றபடி, இன்றைய நாள் வாழ்வதற்கானதல்ல.

நவீனத்தைத் தளமாகக் கொண்டவர்கள் எப்பிரச்சினை என்றாலும் அதை இருமையாய்க் கொண்டு போய் நேற்று எதிர் இன்று என்பதாய்ச் சொல்வார்கள். வாழ்வின் எச்சிக்கலானாலும் அதை அக்கோணத்திலேயே வியாக்கியானம் செய்வார்கள். கூடுதலாக, இன்றின் பக்கம் நின்று நேற்றையை அடியோடு வீழ்த்த வேண்டும் என்பார்கள். நேற்று வீழாதவரை நமக்கு மீட்சியே இல்லை என்பது இவர்களின் தீர்மானம்.

வாழ்க்கைச்சிக்கல்களைக் களைவதற்கான முறைமைகளைச் சமூகவெளியில் நிறுவ முனையும் மனிதர்களை நவீனவாதிகள் எனத் தாராளமாகச் சொல்லலாம். அவர்கள் தங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தாமாகவே தேடிக் கொள்ள வேண்டும் என்பதில் அசைக்க இயலா நம்பிக்கை கொண்டவர்கள். என்றாலும், அவர்களின் கனவு ‘நாளை’க்கே பலிக்கும் என்பதிலும் உறுதி கொண்டவர்கள்.

சமூகவெளி தொடர்பான ஆக்கங்களைக் கோட்பாடுகளில் தெளிவாகக் காணலாம். கோட்பாடுகள் ‘நேற்றையை’ அலசி அதன் வழியாக ‘இன்றையை’ப் புரிந்து அதற்கான செயல்பாடுகளை வரையறுக்கும். அதன் விளைவாக ‘நாளை’ சிறப்பாக இருக்கும் எனத் திடநம்பிக்கையைத் தர்க்கங்களால் நம்மில் விதைக்கும். கோட்பாடுகள் சமூகவெளிப் பரப்புக்குள் இருந்தே மனிதனின் அலைக்கழிப்புகளை வியாக்கியானம் செய்யும்.

நவீனவாதிகளும் உறுதியாக நம்பிக்கைவாதிகள். அவர்கள் சமூகவெளியில் கோட்பாட்டு அடிப்படையில் மேற்கொள்ளும் செயல்பாடுகளை மிகத்தீவிரமாக நம்புபவர்கள். அந்நம்பிக்கையின் வழியாகவே தங்கள் செயல்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்பவர்கள். எது நடந்தாலும் அதைச் சமூகவெளிக்குள் நிகழும் இருமைகளின் முரன்பாடுகளே என்றே நிறுவி ஓய்வார்கள்.

நவீனவாதிகளைப் பொறுத்தவரை, அவர்களின் பொற்காலம் ‘நாளையில்’ இருக்கிறது. அதனால்தான் அவர்கள் ”வருங்காலத்தில் எல்லாம் மாறிடும்” என அடிக்கடி முழங்குவார்கள். அதற்காகத் தங்களை ஒப்புக்கொடுக்கவும் தயங்க மாட்டார்கள்.

நவீன மனிதன் தனக்கு நேரும் துன்பங்களைச் சமூக அமைப்பை மையப்படுத்தியே புரிந்து கொள்வான். அதனால்தான் சமூக அமைப்பு மாறும்போது எல்லாம் மாறிவிடும் என்பதில் அதிதீவிர முனைப்பு காட்டுகிறான்.

நவீனமனிதனை நாம் சமூகமனிதன் எனப் புரிதலுக்காக விளிக்கலாம்.

இலக்கியம் என்பது…

ஆறறிவுள்ள மனிதன் தனக்கு நேரும் சிக்கல்களைத் தன்னின் கோணத்தில் இருந்து பார்க்க எத்தனிக்கும்போது இலக்கியம் பிறக்கிறது. மரபும் நவீனமும் அவனின் பார்வைக் கோணத்தை அவனுக்கு வெளியே(புறம்) இருத்தி வைக்கிறது. இலக்கியமோ அவனுக்குள் இருந்தே(அகம்) யோசிக்கத் தூண்டுகிறது.

இலக்கியம் வாழ்க்கைச் சிக்கல்களுக்கான காரணத்தை ஆராய்ந்து தீர்வுகள் தரும் போதனைப் பணியை மேற்கொள்வதில்லை. அப்படி அதற்கு நோக்கம் இருப்பின் அதைக் கோட்பாடுகள்தான் ஏற்கனவே செய்து கொண்டிருக்கின்றனவே.. பிறகெதற்கு, இலக்கியம்?

வாழ்க்கையை சமூகவெளி கடந்து ஒப்படைத்து விடுவதில் நிம்மதி இருப்பின், மரபை நேர்ந்து கொள்ளலாம். சமூகப்பரப்பில் செயல்படுவதைத் தேர்வதானால் நவீனத்தின் பக்கம் நிற்கலாம். என்ன செய்தாலும், வாழ்வின் புதிர்களை மனிதனால் எதிர்கொண்டு விட முடிவதேயில்லை. இங்குதான் இலக்கியம் அவனின் மீட்சிக்கான தூண்டுகையாய் அமைகிறது.

வாழ்வை ஒற்றைப்படையாகவோ அல்லது இருமைகளின் முரண்களாகவோ மட்டும் பார்க்கும் கோணத்தின் அவலத்தைச் சுட்டி வாழ்வின் விசாலத்தை அறிந்து கொள்ள ‘பன்முகச் சாத்தியப்பாடுகளை’த் திறந்து வைக்கிறது. அதுவும் ‘இன்றின்’ நிகழ்வுகளைக் கவனப்படுத்துவதன் வழியாக வாழ்வின் விசித்திரப்புதிர்களை நமக்கு அறியச் செய்தபடியே இருக்கின்றன இலக்கியங்கள்.

மரபு அல்லது நவீனத்தைத் தளமாகக் கொண்டவர்கள் துவக்கத்திலேயே தேங்கிப்போய் தன் தேடலை நிறுத்தி விடுவார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதாயின் அவர்களின் ‘இன்று’ அவர்களுக்கு எவ்விதத் தனிப்பட்ட அர்த்தமும் இல்லாதது. இலக்கியத்துக்கோ ‘இன்று’தான் முக்கியமானது; அர்த்தமுள்ளது.

உண்மையான இலக்கியம் ஒருபோதும் வாழ்வுச்சிக்கல்கள் குறித்த தீர்வுகளை ஆசிரியத்தொனியில் வாசகர்களுக்கு அளிக்காது. வாழ்க்கையை அதன் சகலவிதமான சாத்தியப்பாடுகளோடு தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருப்பதே அதன் இயல்பு. கணக்கில் அடங்கா வருடங்கள் வாழ்ந்தாலும் வாழ்வின் தீராப்புதிர்களை மனிதனால் விடுவித்து விடவே முடியாது. அப்படி இருக்க அவனின் ‘இன்றைய’ நாளின் மதிப்பு முன்முடிவுளில் சிக்குண்டு கலங்கலாமா? இலக்கியம் இக்கேள்வியைப் பலமாக எழுப்புகிறது.

மரபும் நவீனமும் கருத்து அடிமைகளை உற்பத்தி செய்வதற்குத் தயாராகும்போது, இலக்கியம் விழிப்புணர்வு மனிதனைக் கனவு காண்கிறது. ஒவ்வொரு கணத்தின் நிகழ்வையும் குறுகலாக்கிச் சலிப்பாக்காமல் அதன் அத்தனைச் சாத்தியப்பாடுகளையும் அறிந்து கொள்ளத் தூண்டுகிறது. வாழ்வை இன்னும் விசாலக்குவதற்கான கதவுகளைத் திறந்து பார்க்க ஆர்வமூட்டுகிறது.

மரபின் பிரதிகள் ‘மாறாததை’ அடிப்படையாகக் கொண்டும், நவீனத்தின் பிரதிகள் ‘மாறுவதை’ அடிநாதமாகக் கொண்டும் உருவாக்கப்படுகின்றன. இலக்கியத்தின் பிரதிகளோ ’அறியாததை’ முதன்மையாகக் கொண்டு உரு கொள்கின்றன.

நினைவில் கொள்வோம். ‘மாறாத அறியாததை’ வலியுறுத்தும் மரபைப் போலவே ‘மாறும் அறிந்ததை’ நவீனம் வற்புறுத்தும். இலக்கியம் ‘அறிந்ததில் இருக்கும் அறியாததையும், அறியாததில் இருக்கும் அறியவேண்டியவற்றையும்’ குறித்த பயணத்தைத் தொடங்கி வைப்பதாக இருக்கும். இன்னும் தீர்மானமாகச் சொல்வதானால், இலக்கியம் வழிகாட்டிப் பலகை கூடக் கிடையாது. ஒருவனுக்கான வழியை, வழித்தடத்தை, பயணத்தை அவனாக மேற்கொள்வதற்கான சுதந்திரத்திறப்பைத் தூண்டுகிறது. எங்கும் அவனின் வாழ்வை ஆக்கிரமித்து அதிகாரம் செய்ய நினையாது.

இலக்கியமனிதனை நாம் தனிமனிதன் எனப் புரிதலுக்காகச் சொல்லலாம்.

மரபு மற்றும் நவீனத்தளங்கள் புறவயமானவை என்பதால் மிக எளிமையானவை. விளக்கங்களின் வழி நிறுவ முடிபவை. அதனால்தான் அவற்றைச் சுலபமாக அரசியலாக்கி விட்டனர். அரசியலாக்கப்படாதவரை மூர்க்கம் கொள்ளாதிருக்கும் மரபும் நவீனமும் அரசியல் என்று வந்தவுடன் புதிய அரிதாரங்களை வரித்துக் கொள்கின்றன. சமகால வாழ்வுச் சூழல் அப்படியான மூர்க்க அரசியல் மண்டிக்கிடக்கும் களமே. அதைக் கடந்து இலக்கியப் பக்கம் வருவதற்கு அகவயமான துணிச்சலும் தொடர்ச்சியான தயார்படுத்தலும் இன்றியமையாதவை.

இலக்கியப் பிரதிகளின் சமகால விமர்சனங்கள் அரசியல் மொழியிலேயே எழுதப்படுகின்றன அல்லது பெரும்பாலும் அப்படி விளங்கிக் கொள்ளப்படுகிறது. அதற்கு நாம் கடந்து வந்திருக்கும் முந்தைய ஐம்பது ஆண்டுகால ‘அரசியல் அக்கறையே’ அடித்தளம். எதைச் சொன்னாலும் அதை அரசியலில் முடிச்சு போட்டு முண்டா தட்டும் நூற்றுக்கணக்கான வாசகர்களைச் சந்தித்திருக்கிறேன்; சந்தித்தும் வருகிறேன். அவர்களுக்கு இலக்கியம் என்பதே அரசியல் பிரதிதான்.

சமூகத்தில் மீமனிதர்களும், சமூக மனிதர்களும் எண்ணிக்கையில் மிகுதி. அதனால்தான் மிகச்சிறு எண்ணிக்கையிலான தனிமனிதர்களின் இலக்கியப் பிரதிகளை வாசிக்கவும் விமர்சிக்கவுமான வாசக மொழியை உருவாக்கி வளர்த்தெடுக்க நாம் உழைத்தாக வேண்டி இருக்கிறது. வாசக மொழி என நான் குறிப்பிடுவது ஒரு பிரதியைக் குறுக்காமல் விசாலப்படுத்துவது. விசாலப்படுத்தா விட்டாலும் பரவாயில்லை.. குறுக்காமல் இருந்தால் சரி.

மரபும், நவீனத்துக்கும் அரசியல் மொழிப் பிரதிகள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அதைப்போன்றே, இலக்கியத்துக்கும் அரசியல் மொழிப்பிரதிகள் அதிகம் இருக்கின்றன. ஒரு வாசகன் முதலில் அதைக் கண்டுகொள்ளப் பழக வேண்டும்.

காட்டாக, வெண்முரசை வலதுசாரி ஆதரவு அரசியல் மொழிப்பிரதி என்றும் பின் தொடரும் நிழலின் குரலை இடதுசாரி எதிர்ப்பு அரசியல் மொழிப்பிரதி என்றும் எளிதில் நிறுவிவிடலாம். நம்பி விடுவதும் சுலபம். அங்குதான் வாசக மொழியின் தேவை அவசியமாகிறது. அரசியல் மொழி என்பதில் சொல்லுக்கு ஒரே அர்த்தம்தான். வாசக மொழி என்பதில் சொல்லுக்குப் பல அர்த்தங்கள் இருக்கின்றன. ஆக, கவனம் முக்கியம்.

ஒரு இலக்கியப்பிரதியினை அரசியல் மொழியில் வாசிக்கும் வாசகன் அதைக் குறுக்கி விடுகிறான். வாசக மொழியில் வாசிப்பவனோ அப்பிரதியின் பரப்பை விசாலம் ஆக்குகிறான். அரசியல் மொழி ஒரு முன்முடிவை வாசகனுக்கு அளிக்கும். வாசகமொழியோ பிரதியில் அவனுக்கான நிகர்வாழ்வைக் கண்டுகொள்ளத் துணை செய்யும்.

நான் வாசிக்க வரும்போது ஒரு இலக்கியப் பிரதியை அதன் ஆசிரியரின் சாதி அடையாளத்தை வைத்தெல்லாம் மதிப்பிட்டிருக்கிறேன். குறிப்பாகச் சொல்வதானால், பிராமண சாதி எழுத்தாளர்களின் இலக்கிய ஆக்கங்களை ஒருவித ஒவ்வாமையுடன்தான் அணுகினேன். இடைநிலைச் சாதி எழுத்தாளர்கள் என்றால், வாசிப்பே கொண்டாட்டம்தான். அதற்குக் காரணம் படைப்புகளை முன்முடிவுடனான அரசியல் மொழியில் வாசித்திருக்கிறேன் என இப்போது தெரிகிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பே சூழல் அரசியலை மையப்படுத்தியது என்றால், இன்றைக்குச் சொல்லவா வேண்டும்? புதிய வாசகர்களில் பலர் எழுத்தாளர்களைத் தங்கள் அரசியல் பார்வை கொண்டே தேர்ந்தெடுக்கின்றனர், வாசிக்கின்றனர். தங்கள் அரசியல் பார்வைக்கு முரண்பாடு என அவர்கள் கருதும் ஆக்கங்களை அடியோடு ஒதுக்கி விடுகின்றனர்.

சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவலை ஆர்வமாய் வாசித்த தோழர் ஒருவரிடம் விஷ்ணுபுரத்தை வாசிக்கச் சொல்லி நான் வாங்கிக் கட்டிக் கொண்ட வசவுகள் என்னோடு போகட்டும். என் வகையில், காவல்கோட்டம் மற்றும் விஷ்ணுபுரம் இரண்டுமே முக்கியமான இலக்கிய ஆக்கங்கள். ஆனால், வாசகர்கள் அப்படியான பக்குவத்திற்கு வருவதற்கு வாசிப்பு மொழியை நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.

சமகால வாசகர்களுக்கு வாசக மொழி எனும் பதத்தினை அறிமுகம் செய்து அதனை அரசியல் மொழியில் இருந்து பேதப்படுத்திப் பார்க்கும் மனச்சித்தத்தைத் தூண்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லாவிடில், இலக்கிய ஆக்கங்களும் தேங்கிய குட்டைகளாகி பயனற்று விடும்.

 

சத்திவேல்

கோபிசெட்டிபாளையம்.

அறிவியக்கவாதியின் உடல்

முந்தைய கட்டுரைசுவரில்…
அடுத்த கட்டுரைவெண்முரசின் வரைபடம்