சபரிமலை, கடிதம்

ஜோசப் இடமறுகு

விந்தைகளுக்கு அப்பால்

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம். விந்தை உலகம் பற்றிய  “விந்தைகளுக்கு அப்பால்” பதிவு படித்தேன்.  சபரிமலை பற்றிய மகர ஜோதி விஷயத்தை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மகிழ்ச்சி.

ஜோசப் இடமருகு என்ற நாத்திகவாதி சபரிமலை மகரவிளக்கு குறித்து எழுதப்பட்டிருந்தாலும் செயற்கை ஜோதி தரிசனம் கண்டவர்களில் ஒருவன் நான்.

1977. அப்போது சபரிமலைக்கு எனது ஊரிலிருந்து துணிகள் துவைத்து தரும் சுடலையாண்டி குருசாமி தலைமையில் 40க்கும் மேற்பட்டவர்கள் சபரிமலைக்கு எருமேலியிலிருந்து கால்நடையாக  சென்றோம். நான் ஒன்பதாவது வகுப்பில் படிக்கும் காலம். சபரிமலை செல்ல மாலை போட்ட பின்பு எல்லோரும் சமம் என்ற நிலையில்தான் தலித் சாமியை  குருசாமி ஆக மற்றவர்களும் ஏற்றுக்கொண்டு அவர் வழியில் நடந்தது.

மகரஜோதி தரிசனத்திற்காக மார்கழி மாதக் கடைசியில் எருமேலி சென்று மூன்று நான்கு நாட்களாக மலைப்பாதை வழியில் சன்னிதானம் அடைகிறோம். மகர ஜோதியை தரிசிக்க கண் பார்க்கும் தொலைவில் எல்லாம் அப்போதும் பெரும் கூட்டம். மகர ஜோதியை தரிசிக்க பக்திப் பரவசத்தோடு நானும் ஒரு காட்டு  மரத்தின் சுவட்டில் கிழக்கு நோக்கி ஆர்வத்தோடு சரணகோஷத்தோடு நிற்கிறேன். தடைகள் இல்லாமல் ஜோதியை தரிசிக்க பலர் மரக் கிளைகளிலும் தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

உரிய நேரத்தில் அந்த ஜோதி கண்ணில் பட்டது.மூன்று சுற்று முடிந்ததும் கிளம்ப தயாராகும் பக்தர்கள் முன்னால் மீண்டும் ஜோதி காண தொடங்கியது. மூன்றாவது முறையும் ஜோதி கண்ணில் படுகிறது. அதோ அதோ மீண்டும் மீண்டும் ஜோதி தெரிகிறது என்று சொன்னாலும் நம்புவதற்கு இதை பார்ப்பவர்கள்கூட தயாராக இல்லை. இடங்கள் மாறி மாறி மூன்று முறை மீண்டும் மீண்டும் ஜோதி தெரிந்தது. உடன் வந்தவர்கள் இதைச் சொல்வதற்கு தயங்குகிறார்கள். நான் ஜோதிகள் பல முறை பார்த்தேன் என்று சொல்லும்பொழுது ஏதோ விரதத்தில் தவறு இருக்கிறது என்ற குறை தான் சொன்னார்கள்.

அடுத்த நாள் திருவனந்தபுரத்தில் பேருந்து இறங்கிய உடனே மலையாள பத்திரிகைகள் வாங்கி சேமித்து கொண்டு படிக்கும்போதுதான் அங்கு பல முறை ஜோதி காண்பிக்கப்பட்டது என்ற செய்தி உண்மையில் தெரிந்தது. அந்த செய்திகளை கூட வீடுகளில் இருக்கும் தாத்தா, பாட்டிகள் நம்புவதற்கு தயாராக இல்லை.

பின்னர் மாத்ருபூமி வார இதழில் காவல் துறை தலைவர் பொறுப்பில் இருந்த கிருஷ்ணன் நாயர் ஐபிஎஸ் அவர்கள் எழுதிய சுயசரிதை (விலங்குகளில் வராதே, விலங்குகளில்லாதே)யில் சபரிமலை பணிக்காலத்தில் பழைய கொல்லம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வேலை செய்யும்போது பொன்னம்பலமேட்டிற்கு  திருக்கோயில் ஊழியர்களுக்கு பாதுகாப்பாக காவலர்களை அனுப்ப வேண்டும் என்ற அறிவிப்பு வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டு மகர ஜோதி என்று செயற்கையாக காண்பிப்பது என்பதை தெரிவித்தார். பலர் நம்ப தயாராகவில்லை. நாத்திக வாதியான தனுவச்சபுரம் சுகுமாரன் தலைமையில் பொன்னம்பல மேடு செல்லும்போது தாக்கி  துவம்சம் செய்தவை எல்லாம் நினைவுக்கு வருகிறது.

இப்போது மகரஜோதி செயற்கையாக காண்பிப்பது என்பது கூட பெரிய செய்தியாக இல்லை. அது திருவிழாவாக மட்டும் கண்டு தரிசனம் நடத்தி செல்வது பெரிய வருவாய் தரும் நிகழ்வாக மாறிவிட்டது. இப்பொழுது நாத்திகவாதிகள் அதை பெரிதாக கண்டுகொள்வதில்லை. நீதிமன்றமும் அரசும் அதை அங்கீகரித்து விட்டது.

தங்களது பதிவை படித்து வாசகர்களுக்கு இது உண்மைதானா என்ற கேள்வி எழாமல் இருப்பதற்காக தான் அன்றைய அந்த நிகழ்வை நேரில் கண்ட நான் இந்த பதிவினை செய்கிறேன்.

அன்புடன்,

பொன்மனை வல்சகுமார்

முந்தைய கட்டுரைமகிழ்ச்சியான முடிவு?
அடுத்த கட்டுரைசடம் -ஒரு வினா