சடம் [சிறுகதை] ஜெயமோகன்
அன்புள்ள ஜெ,
சடம், நண்பர்களின் கடிதங்கள் வழியாவே துலங்கி வந்தது.
அந்த சிகப்பு ஒற்றையடி தடம் மனிதர்களின் தொப்புள் கொடி பாதை. நாம் எந்த காட்டில் பிறந்தோமோ, எங்கிருந்து வந்தோமோ அதற்க்கு திரும்பி செல்கிறார்கள் இரு காவலர்களும். எனவே வந்த வழியே தங்கள் நாகரீகத்தால் அடைந்த அனைத்தையும், திரும்பிசெல்லும் வழியே ஒவ்வொன்றாக உதறி ஆதி இயல்புக்கு செல்கிறார்கள். அதாவது இதல்லாம் எங்கு துவங்கியதோ அந்த இடத்திற்கு. ஆனால் துவங்கிய இடத்தில் இருப்பதோ ஜடம் என்ற பெண்.
அந்த கீழ்மையில் காட்டின் எல்லைக்கு சற்று முன்தான் துறவிகள், யோகிகள், மகான்கள் இருக்கிறார்கள். அவர்கள் நகரத்திர்க்குள்ளும் இல்லை காட்டுக்குள்ளும் இல்லை. அவர்கள் காவலர்களுக்கும் காட்டு இயல்புக்கும் மேல் உள்ளவர்கள். ஒரு விதத்தில் இரண்டையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்கள்.
தன் சமாதியில் பீடி வைக்க வேண்டும் என்ற வரி கதையில் வந்ததும் எனக்கு நினைவு வந்தது காவல் தெய்வங்களைதான். கதையில் காவலர்கள் அதற்க்கான உருவகங்கள். ஒரு காவலன் ஏன் அவ்வளவு கீழ்மையானவனாக இருக்கிறான். ஒன்று, அவன் தன் கட்டுப்பாட்டுக்குள் உள்ளவர்களில் அச்சத்தை நிறுவியாக வேண்டும். அது, முற்றதிகாரத்தின் வழியாகவே சாத்தியம். முற்றதிகாரம் என்பது அவன் கட்டுப்பாட்டுக்குள் அவனே இல்லாதநிலை-குரூரநிலை. அங்கு அக இருள் விழித்துக் கொள்ளும். இரண்டு, திருடர்களிடம் இருந்து காக்க கூடியவன் மிக பெரிய திருடனாக இருந்தாக வேண்டும். திருடன் என்ற இணையான ஆற்றல் உள்ளவனை எதிர்த்து மக்களை காக்க வருபவன் தான் காவலன். திருடனுக்கு இணையாக ஆற்றல் இருந்தபோதும் அவன் திருடனாகாமல் மக்களை, சமூகஒழுங்கை காக்கிறான் என்பதனால்தான் அவன் தெய்வம். காவல்தெய்வம் என்பது நல்லது தீயது என்ற அடிபடையில் அமையவில்லை.
காவல்×திருட்டு என்ற போட்டியில் காவல் வெல்லும் பொழுதுதான் சமூகத்தில் ஒழுங்கு இருக்கமுடியும். ஆனால் சமூகத்தில் மக்கள் யாரை காவலர்களாக திருடர்களாக கருதுகிறார்கள் என்பதுதான் முக்கியம். மக்களை பொருத்தவரை ராபின்வுட் காவலன். அரசாங்கத்தை பொருத்தவரை ராபின்குட் திருடன். காவல்தெய்வம் என்று நினைவு வரும் பொழுது கூடவே வருவது பயமும்தான். நாக்கை துருத்தி அருவா ஓங்கி நிற்க்கும் தெய்வங்கள். பயபக்தி என்றுதான் நாம் அதை அழைக்கிறோம்.
அந்த பெண் ஏன் கதையில் பைத்தியமாக இருக்கிறாள், அவள் ஏன் காட்டில் வனதுர்கை இருக்கும் இடத்திற்க்கு செல்கிறாள். மனம் குழம்பி, நாகரீகங்கள் பரிணாமங்கள் அகத்தில் கட்டிய ஒழுங்குகள் கட்டவிழும்போதுதான் ஆதி பிறப்பின் மூலத்திற்க்கு செல்ல முடியுமா. முடிவற்ற காட்டின் மையத்தில் அவள் ஏன் ஜடமா கிடக்கிறாள். அப்படிதான் இது அனைத்தும் துவங்குவதற்க்கு முன், ஜடமாக அந்த பாறையாக இருந்ததா. அறங்கள் ஒழுக்கங்கள் அனைத்தும் ஒரு பண்பாட்டு உயிரியல் பயிற்சிமட்டும் என்றாகி சுடலையும் வனதுர்கையும் சந்தித்து கொள்ளும் இடம் அது.
சித்தும் ஜடமும் ஒன்றை ஒன்று ஈர்க்கிறது. சித் வந்து அந்த ஜடத்தை எழுப்புகிறது. ஜடம் சித்தை எடுத்துக்கொள்கிறது. அப்படிதான் அனைத்தும் துவங்குகிறது. இந்த கதை ஒரே நேரம் சமூகம் உருவாக்கம், உளவியல் பரிணாமம் மற்றும் புவியில் உயிரினங்கள் உருவானது, ஆண்பெண்-சிஜ்ஜடம் கொள்ளும் ஆடல் என்ற பிரபஞ்ச உருவகம், என அனைத்தின் கதையாகவும் உள்ளது. சலனமற்ற ஜடத்தின் அழகுதான் சித்தை ஈர்க்கிறதா, அழகுதான் காரணமா என்பதுதான் வினாவாகவும் வியப்பாகவும் எஞ்சியுள்ளது. வரவர கதைகள் மிக பெரிய ஒன்றை விளக்கும் சிறிய வடிவிலான ஃபார்முலாக்களாக ஆகி கொண்டிருக்கின்றன.
நன்றி
பிரதீப் கென்னடி