புழுக்கச் சோறு- கடிதங்கள்

கதைத் திருவிழா-28, புழுக்கச்சோறு [சிறுகதை]

விஷ்ணுபுரம் பதிப்பகம்

அன்புள்ள ஜெயமோகன்,

புழுக்கச்சோறு சிறுகதையை வாசித்தேன். கதையின் சாராம்சமாய்  நான் உணர்ந்துகொண்டது : நான் என்னும் ஆணவம் அழியும் போது கிடைக்கும் பெரும் இன்பம் மற்றும் எளிதில் உடையும் நான் என்ற ஆணவத்தின் பலவீனம். நான் என்னும் ஆணவம் தேவையா இல்லையா? இங்கு நான் எண்ணம் ஆணவம் இரண்டு விதமாக வெளிப்படுகிறது. ஒன்று நமக்கு கவசம் மற்றொன்று தளை. நம்மை சிதறாமல் ஒருமுகப்படுத்துவது நான் என்ற ஆணவம். அது நம்மையே அறியாமல் தளையாக மாறிவிடுகிறது. அதை பிரக்ஞை பூர்வமாக களையும் போது நம் வல்லமையின் உச்சத்தை அடைய முடிகிறது.

நேற்று நண்பர்களுடன் வெளியே சென்றிருந்தேன். ஒரு நண்பனின் குழந்தை Jems மிட்டாயை செம்பா என்றழைத்து வாங்கிக்கொண்டது. நண்பன் அதைப் பிரித்துத் தரும்பொழுது இரண்டு வயதிருக்கும் வேறொரு குழந்தை கையை நீட்டிக் கொண்டு அவனை நோக்கி வந்தது. அக்குழந்தைக்கு நான் என்ற ஆணவம்/பிரக்ஞை இன்னும் உருவாகவில்லை. உடலையே நானாக உணர்கிறது. எந்த தடையும் இல்லாமல் ஆசையோடு கையை நீட்டிக் கொண்டு வருகிறது. மிட்டாயை வாங்குவதற்குள் பத்து வயதிருக்கும் அக்குழந்தையின் அக்கா அவனை இழுத்துச் சென்று விட்டாள்.

குழந்தைக்கு மட்டுமே சுவை பேரின்பம். மற்றவர்க்கெல்லாம் சுவை என்பது சிற்றின்பம். அதை பேரின்பமாய் மாற்றுவது பசி. அந்த பசி ஒரு உச்ச வாழ்க்கை அனுபவத்தில் நிகழும் போது வாழ்க்கை தரிசனமாகிறது. கதைசொல்லி அடைந்த வாழ்க்கை தரிசனம் என்ன? நான் என்ற உணர்வு விலகல். இந்த தரிசனத்திற்குப் பிறகு அவர் நான் செய்தேன் என்று சொல்வதைவிட நானும் பங்காற்றினேன் என்று சொல்வதில் நிறைவு கொள்வார் என நினைக்கிறேன்.

சிறுவயது முதல் வரும் உடல்தான் நான் என்ற பிரக்ஞை ஒரு வயதில் உடலல்ல நான் என்று உணர்கிறது அன்று முதல் நான் என்பது வலுக்கொள்கிறது. உடலின் முக்கியத்துவத்தை மறந்துவிடுகிறது. உடல் தன் இருப்பை வலுவாக காட்டும் ஒரு நிகழ்வு பசி.அதன் உச்சத்தில் நாம் அடைவது உடலும் சேர்ந்ததுதான் நாம். உடலை பேணி, அதைக் கருவியாகக் கொண்டே உடலை மீறமுடியும்.காந்தி உணர்ந்தது, திருமூலர் உணர்ந்தது. இவரும் உணர்ந்திருப்பார்.

வீடு திரும்பும் வழியில் ஒரு உணவக போர்டில் கண்டது. அன்னபூரணி குழந்தையாக வீற்றிருக்கிறாள், அவள் தலைக்கு மேல “உயிருக்கு உணவே சமர்ப்பணம்” என்று எழுதப்பட்டிருந்தது.இந்த உயிருக்கு நாம் வேறெதை காணிக்கையாக தரமுடியும்?

அன்புடன்

மோகன் நடராஜ்

***

அன்புள்ள ஜெ

உணவு ஒரு எலிமெண்டல் ஃபினாமினன் என்று ஓஷோ சொல்வதுண்டு. எல்லா எலிமெண்டல் செயல்பாடுகளும் குறியீடுகளாகவும் ஆகிவிடும். உண்பது என்ற செயல் ஒரேசமயம் உயிர்ச்செயல்பாடு. கூடவே குறியீட்டுச் செயல்பாடு. அந்த இரண்டு நிலைகளையும் தொட்டு விரியும் கதைகள் நீங்கள் எழுதுபவை. சோற்றுக்கணக்கு முதல் புழுக்கச் சோறு வரை. குறிப்பாக அதில் பன்றிகள் வரும் இடம். பன்றி போல சாப்பிடவேண்டும் என்பார்கள். புழுக்களைப்போல சாப்பிடவேண்டும் என்பார்கள். சோறு அந்தக்கதையில் என்னென்னவோ ஆக மாறிக்கொண்டே செல்கிறது

ரமேஷ்குமார்

***

முந்தைய கட்டுரைஅருண்மொழி நூல் வெளியீடு -கடிதங்கள்
அடுத்த கட்டுரைமரவள்ளி -லோகமாதேவி