சடம் [சிறுகதை] ஜெயமோகன்
ஜெ,
சடம் கதை முதலில் நீங்கள் எழுதியதை பற்றி சொல்லிய பின் ஒரு கடிதமும் வராதது சிறு ஆச்சர்ய அதிர்ச்சி. உங்களின் தளத்தின் பின் இப்போது வரும் கடிதங்களில், ஆழமானவை என பட்டவை ஒரு தத்துவ பார்வையின் கோணத்தில் வந்தவை என பட்டது.
மிக மெல்லியதாக, நுட்பமாக வந்த ரஜ்ஜனியின் கடிதம் கடிதம் பார்த்தபோது சட்டென ஒரு ஆசுவாசம் போல. அக்கடிதம் சொன்னது போல, ஆசிரியனின் பார்வை வேறு. அது தெரியாது,. மேலும் கதைகளில் ஒரு கதாபாத்திரத்தின் அதன் உலகில் செல்லும் போது அனைத்தையும் தொட்டு விளக்கி செல்வது உத்தி அல்ல என சொல்லி கொள்கிறேன். ஆனால், வாழ்வு அப்படி அல்லவே. ஒரு நாளில் தானே ஒவ்வொருவரின் பல நூறு உலகின் ஆட்டங்கள்.
”அந்த மேகம்” கதை ஆகட்டும், “கை விஷம்” கதை ஆகட்டும் மறக்கப்பட்ட, சொல்லாமல் விடப்பட்ட, என சொல்ல தக்கவை அந்த கதைகளில் வரும் பெண்களின் அக உலகம். “அந்த மேகம்” கதையில் அந்த பெண் தன் தொழிலால் உடலின் எல்லைகளை கடந்து, அவனை எப்போதும் வேறு இடத்தில், மனதின் ஒரு உயரிய இட்த்தில் வைத்து இருக்கும் போது, அதனாலயே அடையாளம் காணும் போது, அவளின் பாத்திரம் பெரிதாக பத்திகளில் கூட தெரியவில்லை. அலையெல்லாம் அவனின் உலகம், கொந்தளிப்பு, தேடல், தவிப்பு, என விரிந்துபடி செல்பவை, ”கை விஷத்தில்” ஒருவள் தான் விரும்பும் ஒருவனை அவள் கைக்குள் அடைக்கிறாள். அவன் மெது மெதுவாக சாவான் என தெரிந்தும். அவளின் அக்காதல் அல்லது அந்த ப்ரியத்தின் உச்சம் பற்றியும், அதை கொண்டே அவளும் மரிப்பதின் கோணம் இல்லையோ என தோன்றும்படி கடிதங்களின் அலை பெரிதும் ஆணின் உலகை உலுக்கி எடுத்து காணித்தவை.
”சடத்தில்” அந்த பெண்ணின் உடலின் பகுதிகளை சுடலை பார்க்க தொடங்குகையிலேயே விழிக்க தொடங்கிய அவனின் மிருகத்தின் கண்களை மிக அருகாமையில் என்னுள் பார்க்க முடிந்தது. எத்தனை பெண்களின் உடல்களை அவன் தன் காக்கி உடையின் காப்பால் தின்றபடி வந்து அந்த சடலம் அருகில் சேர்கிறான். அந்த கடைசி வரி கூட புனைவின் சிறு ஒரு வகை நுட்பம் என எடுத்து கொள்கிறேன்.
அவனின் அந்த காம நெருப்பின் இறப்பை அந்த பிணத்தில் கூட அவனால் அடைய முடியாமல் போனது? எல்லார் ஆழத்தில் இருக்கும் மனிதம் எனும் ஒரு சிறு துளியை வெளியே எடுத்து காணிக்க முடியாமல் போனது என்ற வருத்தம் உண்டானது. மீண்டும் அவனின் புனர்வில் முடிகிறது. முடிந்த பின் அவன் என்னவாகி இருப்பான்?
அறிந்ததை, தெரிந்ததை வைத்து தான் மனித மனம் செயல்படுகிறது எனபது இந்த மாதிரி கதைகளை வாசிக்கும் போது ஒரு தடை என ஆகிறது.ஒவ்வொரு பார்வையும் கடிதங்களும் தன்னின் உள்ளிருக்கும் அறிதலை கொண்டே விரிந்தபடி செல்கிறது. ஆனால் எழுதியவன் எழுதும் முன்னும், பின்னும் உணர்ந்த ஒன்று இருக்கும் அல்லவா? எவர் கண்களிலும் படாமல் போன அந்த பார்வை?அது இக்கதையில் எதுவென்று கொள்வது?
அன்புகளுடன்
லிங்கராஜ்