வள்ளுவர் ஒரு கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன்  அவர்களுக்கு,

வணக்கம்!

இரண்டு நாட்களுக்கு முன்பு வாட்ஸாப் ஸ்டேடஸில் நண்பர் காளி பிரசாத் திருவள்ளுவர் தினத்தையொட்டி அவரை நினைவுகூரும் வகையில்

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்’

குறளைப் பதிவிட்டிருந்தார். திருவள்ளுவரை சாதி, இன அடையாளங்களுக்குள் அடைக்கப்பார்க்கும் தற்போதைய பொதுவான சமூக நிலையை எள்ளுவதாக இருந்தது. வள்ளுவரின் கோபம் சிரிக்கத் தூண்டியது. பிறகு குறிப்பிட்ட குறளுக்கும் அதன் வழியான குறிப்புணர்த்தலுக்கும் உள்ள உறவு என்ன என்று சற்றே குழம்பி மெல்ல அக்குறளைப்பற்றிய உரைகளைத் தேடினேன், என்னிடமிருந்த இரு விளக்க உரை நூல்களையும் சேர்த்து. அப்போது எதேச்சையாக உங்களது வலைதளத்தில் சௌம்யா அவர்களுடனான உங்களது உரையாடல்களை (16, செப்டம்பர் 2011) வாசிக்க நேர்ந்தது.வள்ளுவரும் சாதியும்- ஓர் உரையாடல்

கீதையில் குறிப்பிட்டிருந்த நால் வர்ணங்களின் படைப்பு என்பதுடன் பிறப்பொக்கும் குறளை ஒரே அர்த்தம் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டபட்டிருந்தது.

இரண்டு நாட்களாக மீண்டும் மீண்டும் வாசித்து அர்த்தங்களைப் புரிந்துணர முயன்றேன். ஒருவித பஸ்ஸ்ல் போலத்தான் இருந்தது கீதை  வரிகளுக்கும் இக்குறளுக்குமான தொடர்பு. ஒருவிதத்தில் அப்படியான அர்த்தப்பாட்டில் இரண்டிற்குமான பொதுப் பொருத்தம் கொள்ள முடிந்தாலும் எனது சூழலியல், மரபணுவில் சார்ந்த மெய்யியல் நோக்கு அவற்றுக்கான தொடர்பு தாண்டி ஒரேயொரு வேறுபாட்டைக் கொண்டதாய் இருந்தது.

கீதையில் ‘நால் வருணங்கள்’ அக்கால இந்தியாவில் மனித பிறப்பின் அடிப்படையிலான இனப் பேதத்தால் பலமுள்ளதொரு இனக்குழு அதையொரு மனித சமூகக் கட்டமைப்பை ‘மானுட தர்மமாக’ முன்வைக்கிறது என்று தோன்றுகிறது. அதையே பிறப்பொக்கும் குறளைப் பார்க்கையில் அதன் மிக முக்கிய  வார்த்தையான ‘எல்லா உயிர்க்கும்’ என்பது மனிதர்களையும் தாண்டி அடுத்த வார்த்தையான, ‘எல்லா உயிர்களுக்கும்’ என்று பொதுவாகக் குறிக்கப்படுகிறது. இதையொரு ‘சூழலியல் தர்மம்’ எனலாம் என்றே தோன்றுகிறது.

விலங்குகளில் உயிர்கள் பிறப்பால் ஒத்ததாகின்றன. ஆனால் தொழிற்படும் விதத்தில் சிங்கம்  பிரிடேடர் எனும் ஓர் அடித்துண்ணியாகிறது; மான் ஒரு தாவரவுண்ணியாகிறது; காகம் அனைத்துண்ணியாகிறது. அதேசமயம் மனிதகுல இன, பிறப்புசார், தொழில்சார் பேதங்கள் போல சில சமூக உயிர்களெனக் கொள்ளப்படும் தேனீக்களிலும் எறும்புகளிலும் காணப்படுகின்றன. என்றாலும் அது சில உயிரினங்களில் அரிதாகக் காணப்படுவது, அல்லது ஆர்டர் ஆஃப் லைஃப்; இயற்கையின் படைப்பாக்கமும் கூட. அந்த சமூக ஹேரார்கி என்பது வேறு, ஒரே விலங்கினத்திற்குள் நிகழும் அதிகாரம் சார்ந்த டாமினன்ஸ் என்பது வேறு. அது எல்லா உயிரினங்களிலும் காணப்படுவது. அதன் அடிப்படையில் இக்குறள் நால் வருணங்களோடு ஒப்புமை கொள்ளத்தக்கதல்ல என்று தோன்றுகிறது.

என்றாலும் இறுதியாக இப்படியொரு தேடலை ஏற்படுத்திய காளிக்கும் உங்களுக்கும் எனது நன்றிகள்.

அன்புடன்,

வி.அமலன் ஸ்டேன்லி

திருக்குறள் ஜமீன்தாரிணி உரை 

முந்தைய கட்டுரைஅந்த தாடியும் காவியும்…
அடுத்த கட்டுரைசடம் கடிதம்-6