வெள்ளையானை-கடிதம்

நாவலின் பெயரை நண்பர் ஒருவரின் பதிவில் முதலில் பார்த்ததும் “அடர்ந்தகாடு… அதில் நிறைய யானைகள்.. ஒன்று மட்டும் கொம்பன் போல வெள்ளை யானை…” இப்படியாக என் கற்பனை குதிரையை ஓட்டிக்கொண்டேன்.

சில நாட்களுக்குப் பிறகு நம்  கதைசொல்லி பவா செல்லதுரை’யின் பெருங்கதையாடலில் எதேச்சையாக வெள்ளை யானை காதில் விழ கவனம் சிதறாமல் கேட்கத் தூண்டியது. அப்போது நம் கற்பனை குதிரை தவறான பாதையில் ஓடியிருப்பது தெரிந்துவிட்டது. ஏனெனில் நாவலின் கரு நம் கற்பனைக்கு அப்பாற்பட்டது.

ஆர்வ மிகுதியால்  முதலில் சொன்ன அதே நண்பரிடம் புத்தகத்தை இரவல் பெற்று படிக்கத்தொடங்கினேன்.

424 பக்கங்கள்.. அதிகபட்சம் 3 நாட்களில் படித்து முடித்திருக்கலாம். ஆனால், முதன்முறையாக என் மகன்களோடு இந்த புத்தகத்தை படித்ததால் இதை படித்து முடிக்க ஒரு மாதமாகிவிட்டது. என் மகன்களுக்கு கதை புரியவில்லை. ஆனாலும் வெள்ளை யானை என்ற நாவலின் பெயர் பரிச்சயமாகிவிட்டது.

இங்கே வெள்ளை யானை என்பது சிங்காரச் சென்னையின் முக்கிய பகுதியாம் ஐஸ் ஹவுஸின் இருண்டகதை.. வெள்ளை நிறப் பனிக்கட்டிகளின் கதை… அங்கே முக்கால் நிர்வாணத்துடனும், உடலில் புண்களுடனும் வேலை செய்த அடிமைக்கூட்டத்தின் கதை… அந்த வெள்ளைப்பனியில் உறைந்து அழிந்த பல கூலிகளின் கதை…

வெள்ளையர்கள் நம்மை அடிமைப்படுத்தியதால் அவர்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்லர். அவர்களில் மேம்பட்ட மனசாட்சியும், பண்பாடும் நிறைந்தவர்கள் இருந்திருக்கின்றனர் என்பதற்கு சாட்சி தான்  “ஏய்டன்”.

ஏய்டன் என்ற அயர்லாந்தைச் சேர்ந்த இளைஞன் வசதி குறைவான குடும்பச் சூழலிலிருந்து வளர்ந்து படிப்படியாக உயர்ந்து பிரிட்டிஷ் அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பாளராகப் பதவி வகிக்கிறான். அப்படி அவன் பொறுப்பில் இருக்கும் மதராசின் ஒரு பகுதியில் தாழ்ந்த சாதியைச் சார்ந்த ஒரு தம்பதியினரை நீலமேகம் என்ற உயர் சாதியை சார்ந்தவன் சவுக்கால் அடித்து வெளுக்கிறான். பிரிட்டிஷ் வழக்கப்படி யாரையும் சவுக்கால் அடிப்பது தவறான செயல். ஆனால் அப்படிப்பட்ட செயலை குதிரையில் வலம் வரும்போது நேரடியாக பார்த்ததும் ஏய்டன் நீலமேகத்தை கண்டிக்கிறான். உன்னிடம் அடி வாங்கிய அந்த ஏழைகளை தொட்டு தூக்கு என்கிறான். ஆனால் நீலமேகம் ஏய்டனின் ஆணையை மீறி தன்னுடைய சாதி கௌரவமே முக்கியம் என்று தொட மறுக்கிறான். இங்கிருந்து தொடங்குகிறது நாவல்.

அந்த தம்பதியினர் சவரி ராயனும், அவன் மனைவியும் தான்… எதேச்சையாக நம் வீட்டின் ஃப்ரிட்ஜை திறக்கும் போது கூட சட்டென்று வீசும் குளிர் காற்றில் சவரியும், அவன் மனைவியும் ஐஸ்ஹவுஸ் கூலிகளும் கண்முன் வந்து செல்கின்றார்கள்.

அவர்களுக்கு நீதி கிடைத்ததா? அவர்கள் என்ன ஆனார்கள்? இதில் ஏய்டனின் பங்கு எத்தகையது? இதுவே நாவலின் மிச்சக்கதை.

ஏய்டன், துரை சாமி,  நீலமேகம், காத்தவராயன், ட்யூக், ஃபாதர் ப்ரெண்ணன், மரிஸா, மக்கின்ஸி, சாமி, ஜோசப், நாராயணன், பார்மர், ரஸ்ஸல், சவரி ராயன், கருப்பன், மாக், ஆண்ட்ரூஸ், என்று பல தரப்பட்ட கதாபாத்திரங்கள் இந்த நாவலை நச்சென்று நகர்த்திச் செல்கின்றனர்.

என் போன்ற பலதரப்பட்ட மனிதர்களின் மனநிலையை ஆங்காங்கே தட்டி எழுப்பிவிடுவது நாவலின் தனி அம்சம்.

  • “நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் உறுப்பினனாகிய நான் இதோ ஒடுக்குமுறையாளன் வேடமிட்டு வந்து அமர்ந்திருக்கிறேன்.” – அயர்லாந்தில் அடிமைப்பட்டு வளர்ந்த ஏய்டனின் மனநிலை.
  • “ஒரு தீண்டப்படாத தொழிலாளி கொல்லப்பட்டதற்கு விசாரணை வரும் என்றால் என்னுடைய நிர்வாக ஊழியர்கள் மனம் தளர்வார்கள்.” – ஐஸ்ஹவுஸில் பொறுப்பாளராக இருக்கும் பார்மரின் மனநிலை.
  • “ஒரு மனிதன் இன்னொருவன் முன் அந்த அளவு சிறுமையும், தாழ்மையும் கொண்டு நிற்பதை அவன் கண்டதே இல்லை.” – காத்தவராயன் அய்யங்காரிடம் கெஞ்சுவதைப் பார்க்கும்போது ஏய்டனின் மனநிலை.
  • “அச்சத்தால் மட்டும்தான் இந்தப் பெரும் கூட்டத்தை நாங்கள் ஆட்சி செய்கிறோம். அந்த அச்சம் அகன்றால் நாங்கள் இதன்மேல் அமர்ந்திருக்க முடியாது. இதோ இந்த எதிர்ப்பு சாதாரண விஷயம் அல்ல. மேல்சாதியையும் அரசாங்கத்தையும் எதிர்க்க முடியும் என்று இவர்கள் முதல்முறையாக கற்றுக்கொண்டிருக்கிறார்கள். இது வனவிலங்குக்கு முதல் ரத்த ருசியைக் காட்டுவது போல. இதை இப்படியே விட்டால் பின் எவராலும் கட்டுப்படுத்த முடியாது. இது உடனடியாக நசுக்கப்பட வேண்டும்.” – மனிதர்களை மனிதர்களாக எண்ணாமல் விலங்குகளாக எண்ணி வேலை வாங்கிவிட்டு கசக்கி எரியும் அய்யங்காரின் மனநிலை.

பாலா படம் போல இந்த நாவலுக்கும் பாஸிட்டிவ் க்ளைமாக்ஸ் இல்லை.

ஆனாலும், ஆங்கிலேயனாக இருந்தாலும் சரி, நம்ம ஆளாக இருந்தாலும் சரி,  பதவியில் இருக்கும் ஒருவன் தன்னுடைய மேலதிகாரிகளுக்கு கட்டுப்படாமல் நேர்மை தான் முக்கியம் என்று மனசாட்சியோடு பணியாற்றினால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்/விமர்சிக்கப்படுவார்கள் என்பதை இந்த நாவலின் வழியாக நாம் அறிந்து கொள்ளலாம்.

-ப. மோகனா அய்யாதுரை.

வெள்ளை யானை, கடிதங்கள்

வெள்ளை யானை – சில வருடங்களுக்கு பின்- சுனில் கிருஷ்ணன்

கிறிஸ்து ஒரு போதும் தனியாக இருப்பதில்லை-வெள்ளை யானை பற்றி…

வெள்ளை யானையை ஏன் எழுதவேண்டும்?

வெள்ளை யானையும் வரலாறும்

கைவிடப்பட்டவர்களின் கதை – வெள்ளை யானை

கொல்லும் வெள்ளை யானை

வெள்ளை யானை -மனசாட்சியைக் காத்துகொள்ளும் பயணம்

தடுமாறும் அறம்: வெள்ளை யானை

முந்தைய கட்டுரைநதி –கடிதம்
அடுத்த கட்டுரைகிறிஸ்து கம்பன்,புதுமைப்பித்தன் – பேராசிரியர் ஜேசுதாசனுடன் பேட்டி-2