சடம் கடிதம்-6

சடம் [சிறுகதை] ஜெயமோகன்

அன்பு ஜெ,

சுடலை அவன் வன்புணர்வு அனுபவத்தைப் பற்றிக் கூறுவதும், இறுதியாக அவன் புணரும் சித்திரமும் எனக்கு திகைப்பையே ஏற்படுத்தியது.

வன்புணர்ச்சி சம்பவங்களை இளவயதில் கேள்விப்படுகையில் நடுக்கமாக இருக்கும். எனக்கே உடல் கூசி அன்றைய நாள் முழுவதும் செயலற்று கூட உட்கார்ந்திருக்கிறேன்.  நிர்பயா வழக்கு பலவாறாக விவரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது கல்லூரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தேன். அந்த சம்பவம் எப்படி நடைபெற்றது என்று வாசிக்க வாசிக்கவே என்னுள் வலி பரவியது. அன்று முழுவதுமாக செயலற்று இருந்தேன். அப்படிச் செய்பவர்களின் மன நிலையை என்னால் புரிந்து கொள்ளமுடிந்ததில்லை. அது எத்தகைய மன நிலை என்று வியந்திருக்கிறேன். வெறுமே அவன் வாழ்ந்த சூழ் நிலை என்று சொல்லி விட முடியுமா?

நீண்ட வருடங்கள் கழித்து இன்று அத்தகையவர்களின் மனதை சுடலையின் வழி கண்டேன். “…து ஒரு அனுபவம்டே… அவ அலறிகிட்டே இருந்தா. அறுக்கப்போற கோளி சிறகடிச்சு கத்துறது மாதிரி… அப்ப ஒரு நாலஞ்சு நாளு அதை நினைக்கிறப்ப ஒருமாதிரி இருந்தது. பிறவு பழகிப்போச்சு. பிறவு அது ஒரு சொகமா ஆச்சுடே… குட்டி நல்லா பயந்து கதறி அழுது கூப்பாடுபோட்டு துள்ளிச்சாடி மறிஞ்சாத்தான் ஒரு ரெசம். சும்மா செத்த சவம் மாதிரி கிடக்குத பொட்டைகளை வச்சு என்ன செய்ய?” இப்படிச் செய்யக்கூடிய அனைவரின் மனதின் ஆழத்தையும் சென்று கண்டேன். வெறுமே வன்புணர்ச்சியாளர்கள் மட்டுமல்ல, கொலை செய்பவர்கள், துன்புறுத்துபவர்கள், அறப்பிழை செய்பவர்கள் என யாவரின் ஆழத்தின் மூலத்தையும் அது சென்றடைந்தது.

வெண்முரசின் இந்த வரிகளை நினைத்துக் கொண்டேன்.“தீயவை செய்வதற்கு முன் கடக்கவேண்டிய ஒரு கணம் உண்டு என்று ஒருமுறை என் ஆசிரியர் சொன்னார். நூற்றியெட்டு தெய்வங்களால் காக்கப்படும் பெரும் அகழி அது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு முகம் கொண்டு எழுந்து வந்து நம்மை விலக்கும். மூதாதையென, குல தெய்வங்களென, அறநெறிகளென, அயலென, உறவென, குலமென, குடியென, கல்வியென,அகச்சான்று என உருக்கொண்டு சினந்தும் அழுதும் நயந்தும் பேருரு காட்டியும் பேதையென நின்றும் சொல்லெடுக்கும்.ஒரு கணத்தில் அவற்றை தாண்டிச் சென்றுதான் தீயவை எவற்றையும் நாம் ஆற்றுகிறோம்.” இதைப் படித்த அன்று உளம்பொங்கி அழுதேன். அப்படியான எத்துனை தருணத்தை இந்த வாழ்க்கைப் பயணம் நம் கண்முன் கொணர்ந்து நிறுத்துகிறது. இந்த வரிகளில் சொல்லப்பட்ட அத்தனையையும் கடந்து போய் நான் செய்த தவறுகளை நினைத்துக் கொண்டேன்.

”நாலஞ்சு நாள் ஒரு மாதிரி இருந்தது” என்று சுடலை சொல்வது இவைகளாகத்தானே இருக்க முடியும் என்று தோன்றியது. ஒரு முறை இந்த அறமீறலைச் செய்து மீண்டும் மீண்டும் அதில் திழைக்கும் போது அந்த நாலஞ்சு நாள் என்பது நான்கு நொடிகளாகவும் பின் அதை பழக்கமாகவும் செய்ய ஆரம்பிக்கிறோம். அதன் பின் திரும்புதலில்லாத பாதை. அதனால் தான் காவல்துறையில் குற்றம் நடக்கும்போது வழக்கமான குற்றவாளிகளை (Habitual offenders) முதலில் சந்தேகப்படுகின்றனர் என்று நினைத்தேன்.

“குட்டி நல்லா பயந்து கதறி அழுது கூப்பாடுபோட்டு துள்ளிச்சாடி மறிஞ்சாத்தான் ஒரு ரெசம்.” என்று அவன் ரசித்துச் சொல்லும்போது அந்த விலங்கு மன நிலையின் திரும்புதலில்லாத பயணத்தைச் சென்று அடைந்துவிட்டான் என்று கண்டேன். இந்த விலங்கு  மனநிலையை ஒருவன் வந்தடைய எத்துனை கீழ்மையின் பாதையைக் கடந்து வந்திருக்க வேண்டும் என்று வியக்கிறேன். உடனே இதைக் கீழ்மை என்று நினைக்கும் என் ஆணவத்தை நினைத்தும் நொந்தேன். வெண்முரசு காண்டீபத்தின் வரிகள் நினைவுக்கு வந்தது

”விளைவுகள் எவ்வகையிலும் ஆகுக! நிகழ்வுகள் எவையாயினும் அவை அறிதலை உள்ளடக்கியவையே. நன்றெனினும் தீதெனினும் அந்நிகழ்வு அளிக்கும் அறிதல் தூயதே. சந்தனத்திலும் மலத்திலும் எரியும் தழல் என்பது அவிகொள்ளும் தேவனே அல்லவா?”

என்ற வரிகள். இவைகளையெல்லாம் மலம் என்று வரையறை செய்து கொள்வேனாயின் அதில் உரைவதும் தெய்வம் தானே. அந்த திரும்புதலில்லாத பயணத்தின் முடிவில், சூன்யத்தில் அவன் கண்டடைவதும் தெய்வமாகத்தானே இருக்கும். யாவரும் செல்வது மூலத்தை நோக்கியே என்று கண்டேன்.

ஏனோ எனக்கு இயேசு நாற்பது நாள் தவமிருந்தபோது அலகையால் சோதிக்கப்பட்ட இடம் நினைவிற்கு வந்தது. இயேசு அந்த ஒரு கணத்தை கடந்த இடத்தை வெண்முரசின் வரிகள் கொண்டு விரித்துக் கொண்டிருந்தேன். அலகையைப் பற்றி எனது பிரியத்திற்குரிய சிஸ்டர் மார்செலின் சொல்லும்போது ”அலகையும் கடவுளின் அணுக்கமான குழந்தையாக இருந்தது தான். அது வேறுபாதையை தேர்வு செய்து கொண்டது” என்பார். இன்று நினைத்துப் பார்த்தால் சாத்தான் கடவுளிடமிருந்து விலக எடுத்துக் கொண்டதும் அந்த ஒரு கணமாகவும் தான் இருக்கும் என்று நினைத்தேன். இரண்டும் சென்று சேரும் இடம் ஒன்றாகத்தானே இருக்க முடியும். பிரம்மமே தன்னை இரண்டாகப் பகுத்துக் கொண்டு ஆட்டக்களத்தில் ஆடினால் திரும்ப அவை சென்று இணையும் புள்ளியும் பிரம்மமாகத்தானே இருக்க முடியும் என்று நினைத்தேன்.

நன்மை/அறம் என்ற பாதையின் வழி சென்றடையும் பாதை ஒன்று இருப்பதுபோல… இத்தகைய கீழ்மையும்(கருதினால்) சென்றடையும் பாதை ஒன்று இருக்கும் என்று கண்டேன்.

நீண்ட தொலைவு சென்று விட்டேன் என்று நினைத்து சிறுகதையின் சித்தரின் வரிகளுக்குள் புகுந்தேன் ”சிஜ்ஜடம்னாக்க சித் கூட்டல் ஜடம்… ரெண்டும் சேந்தா சிஜ்ஜடம்னு ஒரே சொல்லு. சித்னா நம்ம சித்தம். அதாவது நமக்கு உள்ள இருக்கப்பட்டது. ஜடம்னா வெளியே இருக்கப்பட்ட இந்த அன்னமய லோகம்… அதுக்க சமன்வயமாக்கும் இந்த உலகம்”

“அவருக்குள் அவரே திகைப்புடன் விலகி நின்று அவர் செய்வதை பார்த்துக்கொண்டிருந்தார்.” என்ற சுடலையைப் பற்றிய வரிகள்.. அவரே விலகி நிற்பது ”சித்” விலகி நிற்பது தானே. அப்படியானால் தொடர்ந்து இவ்வாறு வன்புணர்ச்சி செய்யும் சுடலையின் செயல் ஜடமாக மாறும்போது அதை சமன்வயப்படுத்த அவளின் சித்தம் விழித்துக் கொள்கிறது. “உலகம் சமன்வயம் கொள்கிறது.”

ஆ. ஞானசம்பந்தன், செல்வக்குமரன் பழனிவேல் ஆகிய இருவர் சொன்ன சைவ சித்தாந்தத்தின் வழியான புரிதலுடன் மேலும் கதையை நிறைவு செய்து கொண்டேன்.

அருமையான கதை ஜெ. நன்றி.

பிரேமையுடன்

இரம்யா.

சடம் கடிதங்கள் -6

முந்தைய கட்டுரைவள்ளுவர் ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஆழத்தில் விதிகள் இல்லை- அசோகன்